உலக சினிமா சினிமா நிகழ்வுகள்

உலகை உலுக்கிய சமாதான உரை உங்களையும் உலுக்கும்.

 “தி கிரேட் டிக்டேட்Chaplin_Great_Dictator_finalடர் ” சர்வாதிகாரி ஹிட்லர் தனது பேராசையால் உலகை   நசுக்கிக் கொண்டிருந்த போது அவனை பகடி செய்து சார்லி சாப்ளின்  எடுத்த படம். அது வரை தனது படங்களில் பேசியிராத சாப்ளின் முதன்  முதலாக “தி கிரேட் டிக்டேட்டர்” படத்தின் இறுதிக்காட்சியில் பேசுவார்.  சர்வாதிகாரி போலவே இருக்கும் நாடோடியை தவறுதலாக மேடைக்கு  பேச அழைக்கிறார்கள். பல துயரங்களில் அடிபட்ட அவன் ஆற்றிய உரை  மகோன்னதமானது.

 இப்படி தொடங்கிறது அவரின் உரை

“என்னை மன்னித்துவிடுங்கள். நான் ஆட்சியாளனாக இருக்கப் போவதில்லை. அது எனது வேலை இல்லை. யாரையும் அடக்குவதற்கும் ஆள்வதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. வாய்ப்பிருந்தால் அனைவருக்கும் உதவவே நான் விரும்புகிறேன் . யூதர்கள் , யூதர் அல்லாதவர்கள் , கறுப்பினத்தவர்கள், வெள்ளை நிறத்தவர்கள் என அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன் . நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவவேண்டும். அது தான் மனிதனின் இயல்பு. நமது சக மனிதர்களின் மகிழ்ச்சியிலேயே நாம் வாழ வேண்டும் அவர்களின் துயரத்தில் அல்ல. நாம் ஒருவருக்கு ஒருவர் வெறுக்கவோ தூற்றவோ தேவை இல்லை. இந்த உலகத்தில் அனைவருக்கும் ஒரு இடம் உண்டு. அதை வழங்கும் வளம் இவ்வையகத்திற்கு உண்டு.

வாழ்கையின் பாதை சுதந்திரமானது , அழகு நிறைந்தது. ஆனால் நாம் அந்த பாதையைத் தொலைத்துவிட்டோம். பேராசை, மனித மனதில் விஷத்தை விதைக்கிறது. இவ்வுலகில் வெறுப்பினால் ஒரு சுற்றுச் சுவரை எழுப்புகிறது. நம்மை துயரத்திற்குள்ளும் இரத்தச் சகதிக்குள்ளும் தள்ளி விடுகிறது.

நாம் மிக விரைவானவர்கள் ஆகிவிட்டோம் ஆனால் நம்மை நமக்குள்ளேயே புதைத்துக் கொண்டோம். நமது அதிகப்படியான இயந்திரங்கள் நம்மை பற்றாக்குறையில் விட்டுவிட்டன. நமது அறிவு நம்மை பண்பாடு அற்றவர்களாக்கி விட்டது. நமது புத்திசாலித்தனம் நம்மை கடினமானவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் மாற்றி விட்டது. நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம், மிக குறைவாக உணர்கிறோம். நமது தேவை இயந்திரங்கள் அல்ல மனிதம். அறிவுக்கூர்மை அல்ல அன்பும் அரவணைப்பும். இவை இல்லாமல் வாழ்கை ஒரு முரடனைப் போல் எல்லாவற்றையும் இழந்து நிற்கும்.

விமானங்களும் வானொலிகளும் நம்மை நெருக்கமாக்கி உள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் நமக்குள் இருக்கும் மனிதத் தன்மையை கோருகின்றன . நமது ஒற்றுமைக்கான சகோதரத்துவத்தை உலகம் முழுமைக்கும் கோருகின்றன. இப்பொழுது கூட எனது குரல் உலகெங்கும் உள்ள பல லட்சம் மக்களின் காதுகளில் ஒலிக்கிறது. வெறுப்பால் துண்டாடப்பட்டு நம்பிக்கை இழந்த ஆண்கள், பெண்கள் ,சிறு குழந்தைகள் என்று அனைவரையும் சென்று சேர்கிறது. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான் “நம்பிக்கை இழக்காதீர்கள் நண்பர்களே”. இப்போது நம் மேல் துயரம் படர்ந்திருக்கிறது ஆனால் விரைவில் பேராசையும் , மனித முன்னேற்றத்திற்கு தடையான கசப்புணர்வும் நம்மை விட்டு விலகும். சக மனிதர்கள் மீதான வெறுப்பு நம்மை கடந்து போகும். சர்வாதிகாரர்கள் சாவில் விழுவார்கள். அவர்கள் மக்களிடம் இருந்து பறித்த அதிகாரம் மக்களிடமே திரும்பி வரும் . சுதந்திரத்திற்காக மடியும் மக்கள் இருக்கும் வரை அவர்கள் சுதந்திரம் ஒரு போதும் அழியாது.

சிப்பாய்களே ! உங்களை மிருகங்களிடம் ஒப்படைக்காதீர்கள்.

நீங்கள் என்ன நினைக்கவேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன உணரவேண்டும் என்று கட்டளையிட்டும் ; நீங்கள் என்ன உண்ண வேண்டும் என்ன உடுக்க வேண்டும் என்று ஆணையிட்டும் ஒரு மாட்டைப் போல் நடத்தும் செயற்கை மனிதர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். இயந்திர மனமும், இயந்திர மூளையும் கொண்ட ஒரு இயந்திர மனிதனிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள்.
நீங்கள் இயந்திரங்கள் இல்லை.
நீங்கள் மாடுகள் இல்லை.
நீங்கள் மனிதர்கள் !! மனிதர்கள் !!

உங்கள் மனதில் மனிதம் இருக்கிறது. எந்த மனிதனையும் வெறுக்காதீர்கள். வெறுப்பையும், கொடிய இயந்திரதனத்தையும் வெறுங்கள். அதை மட்டுமே வெறுத்து ஒதுக்குங்கள்.

வீரர்களே ! யாரையும் அடிமைப் படுத்துவதற்காக போரிடாதீர்கள். சுதந்திரத்திற்காக போராடுங்கள்.
“இறைவனின் ராஜ்ஜியம் மனிதனுக்குள் இருக்கிறது ” என்று ஒரு வாசகம் உண்டு . கவனியுங்கள் ஒரு தனி மனிதனிடமோ இல்லை ஒரு குறிப்பிட்ட குழுவிடமோ இருக்கிறது என்று சொல்ல வில்லை . எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது என்று சொல்கிறது. சாதாரண மக்களாகிய உங்களிடம் இருக்கிறது என்று சொல்கிறது . உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்று சொல்கிறது.மக்களாகிய உங்களிடம் தான் சக்தி இருக்கிறது. இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி , மகிழ்ச்சியை உருவாக்குவதற்கான சக்தி. இந்த வாழ்வை சுதந்திரமாகவும் , அழகாகவும் , அதிசயங்கள் நிறைந்ததாகவும் மாற்றும் சக்தி. ஜனநாயகத்தின் பெயரால் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம்.அனைவரும் ஒன்று கூடுவோம்.

ஒரு புது உலகுக்காக போரிடுவோம். அனைவருக்கும் வேலை கொடுக்கும் ஒரு பண்பட்ட சமுதாயத்திற்காக போரிடுவோம். நல்ல எதிர்காலத்தையும் , பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக போரிடுவோம். இதே போன்ற முழக்கத்தோடுதான் போலிகள் வருவார்கள். இதை நிறைவேற்றுவோம் என்று சத்தியம் செய்வார்கள். ஆனால் அவர்கள் சொன்னதெல்லாம் பொய். அந்த சத்தியங்களை அவர்கள் எப்பொழுதும் நிறைவேற்ற மாட்டார்கள். இவர்கள் தங்களை மட்டும் விடுவித்துக் கொண்டு மொத்த சமுதாயத்தையும் அடிமைப் படுத்துவார்கள்.

அந்த சத்தியங்களை நிறைவேற்ற நாம் போராடுவோம். இந்த உலகை விடுவிக்க போராடுவோம்.நாடுகளைக் கடந்து நாம் போராடுவோம். பேராசை, வெறுப்பு, சகிப்புத் தன்மை ஆகியவற்றை துறந்துவிட்டு ஒரு உன்னத உலகத்திற்காக போராடுவோம். விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும் பொன் உலகத்திற்காக போராடுவோம்.

வீரர்களே!! ஜனநாயகத்தின் பெயரால் நாம் அனைவரும் ஒன்று கூடி போராடுவோம்.

இன்று 21.9.2013 உலக சமாதான தினம்.

Related Posts