புதிய ஆசிரியன் மார்ச் 2015

உயிர்மூச்சாக மாறட்டும்

பொதுவாகவே தமிழர்களுக்கு திருவிழாக்களில் நாட்டம் அதிகம். மாதந்தோறும் திருவிழா, ஊர்தோறும் திருவிழா என்று கால, இட இடைவெளிகளின்றி திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் சார்ந்த திருவிழாக்கள்தான். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால் போ°டர் அல்லது அழைப்பிதழ் அடித்து அழைக்காமலேயே லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது அவர்கள் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். ஆனால், சமீபகாலமாக புத்தகங்களுக்கென்று தமிழகத்தின் பல நகரங்களிலும் திருவிழா எடுக்கப்படுவது தமிழகப் புத்தகப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம். பெருமாள் முருகன் மீது சங் பரிவாரங்கள் தலைமையில் சாதிய மதவாத அமைப்புகள் நடத்திய  அடாவடி அரசியல் தமிழகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ள பின்னணியுடன் சென்னையில் முப்பத்தெட்டாவது புத்தகத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளதை நாம் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பதின்மூன்று நாட்கள் நடந்த இந்த விழாவில் பதினோரு லட்சம் வாசகர்கள் பதினைந்து கோடி ரூபாய் பெறுமான முப்பது லட்சம் புத்தகங்களை வாங்கியுள்ளார்கள் என்ற செய்தி எழுத்துலகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாசகர்களின் வாசிக்கும் பழக்கத்திலும் நல்லதொரு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது மிக அதிகம் விற்பனையாகியுள்ள முதல் ஐந்து புத்தகங்கள் தெளிவாக்கியுள் ளன. பெருமாள் முருகனின் மாதொருபாகன், பூமணியின் அஞ்ஞாடி, இரா.நடராசனின் டார்வின் °கூல், எ°.ராம கிருஷ்ணனின் சஞ்சாரம், சீத்தாராம் யெச்சுரியின் மோடி அரசாங்கம் : வகுப்புவாதத்தின் புதிய அலை ஆகிய ஐந்து புத்தகங்கள் விற்பனையில் முன்னணியில் இருந்துள்ளன என்பது புத்தக ஆர்வலர்களின் வாசிப்பில் ஏற்பட்டுள்ள தேர்ச்சியையும் காட்டுகிறது. 5 நூல்களோடு களம் இறங்கிய `தி இந்து’வுக்கு மக்கள் ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்துள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களிலும் நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் மக்கள் பெருந்திரளில் பங்கேற்பது குறித்து நாம் பெருமைப்படலாம். புத்தகங்களை வாங்கவும், வாசிக்கவும், விமர்சிக்கவும் தமிழர்கள் பழகிக்கொள்வது ஆரோக்கியமான பண்பாடுகள் உருவாவதற்கு அடிப்படையானது. புத்தக வாசிப்புப் பழக்கம் தமிழர்களுடைய உயிர்மூச்சாக மாறட்டும்.
ஆசிரியர் குழு

Related Posts