புதிய ஆசிரியன்

உணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …

ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்வார். அங்குள்ள சர்வரிடம் புகழேந்திப் புலவர் நள வெண்பாவில் தமயந்தியை வர்ணிப்பதுபோல் ஒரு ஐந்து நிமிடம் உவமானம் உவமேயங்களுடன் ஒரு ஊத்தப்பத்தை வர்ணிப்பார். மழைச்சாரல்போல காரட் வெங்காயம் எல்லாம் தூவிப் பொன்னிறமாக எடுத்து வரச் சொல்வார். அவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த சர்வர் ஒரு கரப்பான்பூச்சியைப் பார்க்கும்போது காட்டும் அளவு கூட சுவாரஸ்யம் காட்டாமல் சாருக்கு ஒரு ஊத்தப்பம்! என்பார்.

இது போலத்தான் நிஜவாழ்விலும் நாம் படுசுவாரஸ்யமாகப் பொன்னியின் செல்வன் கதைபோல் உற்சாகமாக ஒரு விஷயத்தைச் சொல்வோம். கேட்டவர் ஞாயிற்றுக் கிழமைகளில் செய்தித்தாள்களோடு இணைக்கப்படும் விளம்பர நோட்டீஸ்களைக் கவனிப்பதுபோல் ஆர்வமே இல்லாமல் கேட்டுக் கொள்வார்.

நைட்ரஸ் ஆக்ஸைடை (சிரிப்பு வாயு) முகர்ந்து பார்த்தால்கூடச் சிரிப்பு வராத நரசிம்மராவிற்குக்கூடச் சிரிப்பு வந்துவிடும் அளவிற்கு ஒரு நகைச்சுவையைக் கேட்டுவிட்டு உணர்ச்சியே இல்லாமல் அப்புறம்? என்று கேட்கும் கொடுமை கள் அடிக்கடி நடக்கும்.
எடிசனின் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு கதையைக் கூறுவார்கள்.

(போன மாதம் இறந்த அப்துல்கலாம் வாழ்க்கையில் நடந்ததாக ஏகப்பட்ட கதைகள் உலவும்போது போன நூற்றாண்டில் வாழ்ந்த எடிசனின் வாழ்க்கை யில் கதைகள் இருக்காதா பின்னே?)

எடிசன் பல வருடங்களாக இரவு பகலாகக் கஷ்டப்பட்டு ஒருநாள் நள்ளிரவில் மின்சார விளக்கைக் கண்டுபிடித் தாராம். ஆர்வமாக மனைவியை எழுப்பி மின்சார விளக்கைக் கண்டுபிடித்து விட்டேன்! என்று உற்சாகமாகச் சொன்னதற்கு சரி சரி! அணைத்து விட்டுப் படுங்கள் என்று அவர் அலுத்துக் கொண்டே சொன்னாராம்!

காவல்நிலையத்திற்கு ஒரு நாள் இரவு ஒரு போன் வந்தது. சார்! எங்க வீட்டில் நான்கு முகமூடிக் கொள்ளைக் காரங்க புகுந்திட் டாங்க. பயங்கர ஆயுதங்களோட இருக்காங்க. எல்லோரையும் கட்டி வச்சிட்டாங்க. நான் யாருக்கும் தெரியாம டாய்லெட்டிலேர்ந்து பேசறேன்! என்று ஒருவர் குலை நடுங்கச் சொல்லிக் கொண்டே போனார். காவல் நிலைய அதிகாரி கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப் ளெய்ண்ட் கொடுத்திடுங்க சார்! என்று பொறுப்பாகப் பதிலளித்துப் போனை வைத்துவிட்டார்.

அதேபோல் ஒரு நண்பர் வெளி யூருக்குச் சென்று ஏ.டி.எம் கார்டைத் தொலைத்துவிட்டுக் கையிலும் பைசா இல்லாமல் ஏ.டி.எம். கஸ்டமர் சர்வீஸை அழைத்துக் கிட்டத்தட்ட பிச்சையெடுக்கும் நிலையில் தான் இருப்பதை அழாத குறையாகக் கூறி னார். பொறுமையாகக் கேட்ட மறு முனையிலிருந்த பெண் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண் வேறு ஒன்று என்று மற்றொரு பதி னான்கு இலக்க எண்ணைத் தந்த தோடல்லாமல் அன்றைய மாலைப் பொழுது இனிமையாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம்.

ஒரு விளம்பரத்தில் வங்கியைக் கொள்ளை அடிக்க ஒரு முகமூடிக் கொள்ளைக்காரன் வருவான். கேஷி யரிடம் துப்பாக்கியைக் காட்டி வங்கி யிலுள்ள பணத்தையெல்லாம் இந்தப் பையில் போடு என்று எழுதியிருக் கும் துண்டு சீட்டைக் கொடுப்பான். அதைப் படிக்கும் கேஷியர் கொஞ்சம் கூட உணர்ச்சியேயில்லாமல் பின் னாடி அக்கவுண்ட் நம்பர் எழுதணும், தேதி போடணும் என்று திருப்பிக் கொடுப்பார்.

மருத்துவத் துறையிலும் இது போன்று நடக்கும். நோயாளிகள் சிலர் காதலிக்க நேரமில்லை திரைப் படத்தில் நாகேஷ் பாலையாவிற்குக் கதை சொல்வதுபோல் திகிலூட்டும் வகையில் தங்களுடைய தொந்தரவு களைப் பற்றி விலாவாரியாகக் கூறு வார்கள். ஆனால் மருத்துவர்கள் ஊத்தப்பம் சொன்ன சர்வரைப்போல் உணர்ச்சியில்லாமல் இந்த மாத்தி ரையைச் சாப்பிடுங்க சரியாகிவிடும் என்பார்கள்.

மருத்துவர்கள் சிலசமயம் பயங் கர சீரியஸாக இருக்கும் நோயாளி களின் உறவினர்களிடம் கிட்னி சட்னி யாகிவிட்டது, ஈரல் இற்றுப் போய் விட்டது, இருதயம் இழுத்துக் கொண் டிருக்கிறது… என்றெல்லாம் உணர்ச்சி பொங்கச் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எந்த உணர்ச்சியுமில்லாமல் அப்ப ஓண்ணும் பிரச்சனையில்லையே? வீட்டுக்குக் கூட்டிப் போகலாமா? என்று கேட்டுத் திகைக்க வைப்பார் கள்.
உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லதுதான். ஆனால் உப்பைப் போல் கொஞ்சமாவது உணர்ச்சி இருந்தால்தான் வாழ்க்கைச் சமையல் ருசிக்கும்.

(9443321004 – ramsych2@gmail.com)

Related Posts