இதழ்கள் இளைஞர் முழக்கம்

உச்சத்தை தொட்ட சாதனைப் பெண்கள் – இரா.சிந்தன்

sindhu2_2978868f

“இந்த உலகத்தில் திருமணம் என்னும் சமூக ஒப்பந்தம் உள்ளது. அதன்படி மனைவி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு கணவனை திருப்திபடுத்த வேண்டும். கணவன் மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவளை பாதுகாக்க வேண்டும். மனைவி தனது கடமைகளை ஒழுங்காக செய்யாவிட்டால் கணவன் அவளை விட்டுப் பிரிகிறான்.” இப்படிச் சொன்னவர், மோகன் பகவத். சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் பேசும்போது, இந்துப் பெண்களை பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரமாக பாவிக்கும் அவர் குரலில் எந்த மாற்றமும் இல்லையென்பது உறுதியானது.

ஆர்.எஸ்.எஸ் பின்பற்றும் சித்தாந்தம், எந்த வகையான சீர்திருத்தங்களுக்கும் எதிரானது. பெண்களைக் குறித்து பிற்போக்கான சித்தாந்தங்களையே கொண்டிருக்கிறது. புராணப் பாத்திரமான ராமனைக் கொண்டாடுவதாகக் காட்டிக் கொள்ளும் அவர்கள், பல தார திருமணத்தை ஆதரித்தே வந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. குழந்தைத் திருமணங்களை தடுக்கும் சாரதா சட்டத்தைக் கூட விமர்சித்திருக்கிறார்கள்.

அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரகரான மோடி, இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் நேரத்தில், பெண்கள் குறித்தான பிற்போக்கு பார்வைகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் இரண்டு பெண்கள். அதுவும், ஒலிம்பிக் என்ற உயர்ந்த மேடையில், இந்தியாவின் கொடியைப் பறக்க விட்டு சாதித்து அவர்களின் பிற்போக்கு கருத்துக்களை வீழ்த்தி வென்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளி வென்றார். அந்த ஆட்டம் பரபரப்பாயிருந்தது. உலகின் முதன்மை வீராங்கனையோடு சரிசமமாக ஆடினார் சிந்து. தொலைக்காட்சி விற்பனையகம் ஒன்றின் முன் நூற்றுக் கணக்கானவர்களோடு நின்றிருந்தேன்.

ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா பதக்கத்தை தவறவிட்டது தொடங்கி, சாக்சி மாலிக் வெற்றிக்கு பின் வெளியான புகைப்படங்கள் ‘இறுதிச் சுற்று’ திரைப்படத்தை நினைவூட்டுவது உள்ளிட்டு ரசிகர்களின் விவாதம் சூடு பறந்தது. அடுத்து கோல்ப் ஆட்டம் மிச்சமிருக்கிறது இறுதி ஆட்டத்தில் அதிதி இருக்கிறார். மாரத்தான் ஓட்டத்தில் தமிழக வீரர் ஒருவர் இருக்கிறார் என்று நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

வெற்றியாளர்களுக்கு கோடிகள் குவிந்தன. அரசும், தனியாரும் போட்டியிட்டு பரிசுகள் அறிவித்தார்கள். பி.வி.சிந்துவின் வெற்றிக்கு தெலங்கானாவும், ஆந்திரமும் என இரண்டு மாநிலங்கள் உரிமை கோரின. சாக்சி மாலிக்கிற்கு பதவி உயர்வும், அவருக்கு பிடித்த வாகனமும் பரிசாகக் கிடைத்தன. வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், திரிபுரா மாநில விளையாட்டுத் துறை உதவி இயக்குனராக, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபாவை அறிவித்தது அந்த அரசு.

அதே சமயம் ரியோ டி ஜெனிரோவில் இருந்து இந்தியா திரும்பிய வீரர்களின் கதைகள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. ஜெய்ஷா மற்றும் கவிதா என்ற இரண்டு வீராங்கனைகள், மாரத்தான் போட்டிகளில் ஓடினார்கள். இந்தியா சார்பில் 2.5 கி.மீ க்களுக்கு ஒரு புத்துணர்வு மையம் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா சார்பில் புத்துணர்வு மையம் அமைக்கப்படவில்லை. ஒலிம்பிக் கமிட்டி சார்பில் 8 கி.மீ தொலைவுக்கு ஒரு மையம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்க, ஒரு வழியாக ஓடி முடித்து. எல்லைக் கோட்டருகே சுருண்டு விழுந்து மயங்கினார் ஜெய்ஷா.
இந்திய விளையாட்டுத் துறை அதிகாரிகளோ, ரியோ ஒலிம்பிக் போட்டிகளை மற்றுமொரு சுற்றுலாவாகவே பாவித்து செயல்பட்டனர். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதல் முறையாக தேர்வாகிச் சென்ற டூட்டி சந்த், 36 மணி நேரங்கள் எகானமி கிளாசில் வீரர்களும், பிசினஸ் கிளாசில் அதிகாரிகளும் செல்ல நேர்ந்ததை கண்ணீரோடு வெளிப்படுத்தினார். சாதனை மங்கையான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபாவுக்கு, பிசியோ தெரப்பிஸ்ட் அழைத்துச் செல்லக் கூட அனுமதியில்லை.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாகவே, தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். தன்னைப் போன்ற பெண்கள் எப்படி உடை, தோற்றம் காரணமாக ஒதுக்கப்பட்டிருக்கிறோம் என்று வெளிப்படுத்தினார். தேசிய கைப்பந்தாட்ட வீரரான பூஜா, போதுமான விடுதி வசதிகள் மறுக்கப்பட்டதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டார், பிரதமருக்கு தன் நிலைமையை விளக்கி ஒரு கடிதமும் எழுதினார். இவற்றிற்கெல்லாம் காரணம், மிக மோசமான விளையாட்டுத் துறை என்பதோடு, பாஜக அரசின் பிற்போக்கான கொள்கைகளும் பாதிப்பை தீவிரமாக்கி வருகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் பாடப் புத்தகங்களிலேயே பல பிற்போக்கு அம்சங்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரபிரதேசத்தில், பெண்ணுரிமை கோருவது தான் குடும்பங்கள் பிளவுபட காரணமாய் அமைகின்றது என்ற விமர்சனம், பாடப்புத்தத்தில் இருந்தது. சத்தீஸ்கரில் தற்போது 10ம் வகுப்புக்கான சமூக விஞ்ஞான பாடத்தில் பெண்கள் வேலைக்கு வருவதால்தான் வேலையில்லா திண்டாட்டம் உருவாகிறது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

இத்தகைய கருத்துகள் கொள்கை உருவாக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே குறைவாக இருந்த பெண்களுக்கான நிதி ஒதுக்கீடு, மேலும் குறைக்கப்பட்டதுடன், ஐசிடிஎஸ் போன்ற சத்துணவுத் திட்டங்கள் 50 சதவீத நிதி வெட்டு, நிர்பயா போன்ற சிறப்புத் திட்டங்களுக்கு கூட அமலாக்க அக்கறையின்மை, தலித் மக்கள் துணைத்திட்ட ஒதுக்கீடு குறைப்பு அதன் வழியாக தலித் பெண்களுக்கு கூடுதல் பாதிப்பு என்றுதான் செயல்படுகிறது.
ஆனால் ஒலிம்பிக் போட்டி முடிவுகள் நமக்கு ஒரு உற்சாகமாய் அமைந்துள்ளன. பதக்கப் பட்டியலில் இடம் கிடைத்தது மட்டுமல்லாமல், அந்தச் சாதனையைச் செய்திருக்கும் பெண்கள் ஆணாதிக்க பார்வைகளை எதிர்த்துப் போராடியவர்கள். ஆண்கள் மட்டுமே மல்யுத்தம் பயில முடிந்த பிற்போக்கான கிராமத்தில் இன்று சாக்ஷி மாலிக் முன்னுதாரணமாகியிருக்கிறார். தன் தந்தையின் ஆதரவோடு, உறவுக்காரர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டு வீழ்த்திய சாக்ஷி, ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்னுதாரணமாகும்.

பி.வி.சிந்து, விளையாட்டுப் பின் புலம் உள்ள குடும்பத்திலேயே பிறந்திருந்த போதிலும், 17 மாதங்களுக்கு முன் விபத்தால் தன் கால்கள் பாதிக்கப்பட்ட ஒரு பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பயிற்சியில் ஈடுபட்டார் என்பதும், அனைத்து வகையிலான சவால்களையும் சந்தித்து – உச்சத்தை எட்ட முடியும் என்ற முன்னுதாரணமாகியிருக்கிறார்.

0.15 புள்ளிகளில் தன் வெற்றியைத் தவறவிட்ட திபாவும் கூட, சாதாரண பயிற்சி மையத்தில், உரிய கட்டமைப்புக் கூட இல்லாத சூழலில்தான் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார். திபா கடைசி ஆட்டத்தில் தேர்ந்தெடுத்த ஜிம்னாஸ்டிக்கின் பெயர், ‘மரணத்தின் வாலட்’ என்ற ஆபத்தான ஆட்டமாகும். மூன்று தலைகீழ் கரணங்களுக்குப் பின் சரியாக தரையில் வந்து நின்ற திபா, அந்த ஆட்டத்தை வெற்றிகரமாக்கிக் காட்டிய 5 வீரர்களில் ஒருவர். திபா நிச்சயம் புதிய உச்சங்களை எட்டுவார்.

மோசமான விளையாட்டுத் துறை, பிற்போக்கு ஆணாதிக்கப் பார்வை கொண்ட அரசு, விளையாட்டைக் கொண்டாடாத சமூகம் என்ற மூன்று தடைகளை கரணமிட்டுத் தாண்டி, ஒவ்வொரு விளையாட்டு வீரனும் ஆட வேண்டிய மரண ஆட்டம், எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் சமூகத்தின் கவலையாகும் !

Related Posts