பிற

இளையராஜாவின் புதிய ரசிகை … (அனுபவப் பதிவு)

2015 ஜீன் 02 இசைஞானி இளையராஜாவிற்கு வயது 71.  1000 திரைப்படங்கள் உட்பட 5000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கலைமாமணி, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசு விருது, டாக்டர் பட்டம், பத்மபூஷண் விருது, தேசிய விருது 4 முறை என பல விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பண்ணைபுர கிராமத்தின் ராமசாமி, சின்னத்தாயம்மாள் பெற்ற மகனான ராசையா, 1969-ல் சென்னை வந்து மேற்கத்திய முறையில் பியானோ, கிதார் கற்று லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்று இன்றைக்கு இசைஞானி இளையராஜாவாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். உலகத்தை வியக்க வைக்கும் சிம்ஃபனி இசைக்கு சொந்தக்காரர்.

இவையெல்லாம் இன்று என் ஐம்பதை நெருங்கும் வயதில் வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இசைஞானியை அறியாமல் அவ்வளவு அறியாமை நிறைந்த மனுஷியா நான்! இல்லை! ஆமாம்! இரண்டுமே என் பதில்களாக உள்ளன.

சின்னஞ்சிறு வயதில் சுப்ரபாதமும், ஆடுவோமே பள்ளு பாடுவோமே இரண்டும் எம்.எஸ் அம்மா குரலிலும் டி.கே. பட்டம்மா குரலிலும் கேட்ட போது இசை என்னை ஈர்த்தது. பிறகு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான பல பாடல்களை கேட்கும் போது அந்த என் வயதின் உணர்வுகளோடு சிரித்தும், அழுதும், காதலித்தும், மறந்தும் ஒன்றிக்கலந்த இசையாய் அனுபவித்திருக்கிறேன்.

அதன் பிறகான காலச்சூழல் வாழ்வின் சூழல் இசையிலிருந்து என்னை எங்கோ கொண்டு நிறுத்தி விட்டது. ஆனால் அடிமனதில் கேட்கும் ஆர்வம் மட்டும் தனியாமலிருந்தது. காற்றில் வரும் கீதமாய் பல பாடல்கள் அவ்வப்போது வந்து செவிவழியே மனதை நிறைத்ததுண்டு.

மூச்சை இழுத்துப் பிடித்து மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்று எஸ்.பி.பி கேட்கும் போது கொண்டாடாத காதல் மனம் உண்டா! கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று காதலோடு தாலாட்டும் போது மயங்காத மனமும் உண்டா!

காட்டுக் குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லே – என்று தளபதி நம்மைக் கேட்கும் போது சேர்ந்து ஆடாத கால்கள் உண்டா! அம்மாவென்றழைக்காத உயிரில்லையே என்று ஜேசுதாஸ் உருகும் போது உருகாத உயிரேது?

விஷயம் என்னவெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டு ரசித்த போது ரசனை மட்டுமே மனதில் நின்றது. யார் எழுத்து? யார் குரல்? உருக வைப்பதும் ஆட வைப்பதும் யாருடைய இசை? என்ற கேள்விகளுக்கு இடமில்லாத வாழ்வின் நகர்வில் காலம் ஓடியது. இன்று நின்று நிதானமாய் வாழ்வை திரும்பிப் பார்த்து விட்டதை தேடிப் பிடிக்கும் ஆர்வத்தோடு வாசிப்பும், இசையும் கைக்குள் அடக்கமான போதுதான் இசையின் பிரம்மாண்டம் மனதை உலுக்கியது.

அதிலும் இளையராஜாவின் பாடல்களையும், இசை ஆல்பங்களையும் ஒரு சேர கேட்கும் போது இதுநாள் வரை நாம் தவற விட்ட இவர் யார்? என்பதற்கான விடையை மனம் தேடியது.

பாடல்களை கேட்க கேட்க மனம் 16க்கும் 50க்குமாய் மாறி மாறித் தாவியது. வார்த்தைகளே இசை போல ஓங்கி ஒலிக்கும் போது இசைக் கருவிகள் அடங்கியிருப்பதும், வார்த்தைகள் அடங்கும் போது பின்னணியில் இசை பிரம்மாண்டமாய் விரிவதும் அடடா! இது இவருடைய தனித் தன்மையாக தோன்றுகிறது. வார்த்தைகளின் அழகை கெடுக்காத, முழங்காத அழகும் இவருடைய தனிச்சிறப்பாக உணர்ந்தேன்.

’மடை திறந்து பாயும் ஒலி அலை நான்’ பாடலில் வருவது போல புதுராகம் படைப்பதால் நானும் இறைவன் போலவும், விரல்களும் குரல்களும் ஸ்வரங்களின் ராஜ்ஜியமாயும் மாறும் வித்தை! என்ன ஒரு இன்பம்!
சலங்கை ஒலியில் நம்மையும் சேர்த்து பரத நாட்டியம் ஆட வைக்கும் இசை இளையராஜாவின் குரலில் ’ஜனனி ஜனனி’ யில் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ’பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கருப்பு நிலா’ பாடலின் குழைவும், ’நதியோடும் கரையோரம்’ பாடலின் காதல் மனதின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் எஸ். ஜானகியின் குரல் இவரின் இசையமைப்பில் அப்படியே நெஞ்சை அள்ளுகிறது.

தென்றலுக்கும், மழைக்கும் சாதியும், தேசமும் பேதமில்லை என்ற “வானவில்லே’ வரிகளை தூக்கி நிறுத்தும் சாதனா சர்க்கத்தின் குரல் ’சங்கத்தில் பாடாத கவிதை’ பாட்டின் இசையமைப்பில் காதல் உருகி நிற்கிறது. ’மயில் போல’ என்ற பவதாரணியின் குரலில் எழில் கொஞ்சும் இயற்கை அழகு ’சொர்க்கமே என்றாலும்’ பாடலில் இளையராஜா S.ஜானகியின் கம்பீரக் குரலில் கிராமியச்சூழலோடு நம் மனக்கண் முன் காட்சியளிக்கிறது.
அடக்கமான குரலில் ’முத்தமிழே’ வர ஆர்ப்பாட்டமான இசையும் குரலுமாய் ’முத்தாடுதே’ பாட்டு நம்மை சொக்க வைக்கும். பூவே செம்பூவே, காதல் வானிலே, எனக்குப் பிடித்தப் பாடல், கற்பூர பொம்மை ஒன்று ஏராளமான பாடல்களின் வரிசையை நம்மால் சொல்ல கூட முடியாது. காதல் காவியமாய் நம் முன் நின்று கொண்டிருக்கும் ஏராளமான பாடல்களோடு பெண்ணின் மென்மையான காதலும் மோகமும் நிறைந்த இன்ப உணர்வை பெண் குரலில் இவரின் இசை பரவசமாய் நம்மை பேச வைக்கிறது. மறைந்த அருமையான பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் குரலில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச’! அடக்கமான இசையில் பிரம்மாண்டமாய் வெளிப்படும் ’என்னுள்ளே என்னுள்ளே’ ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வில் ஒன்ற வைக்கிறது.

இது தவிர, இசை ஆல்பங்கள் How to name it? Nothing but wind. Mad mod mood, Song of soul, Study for violin, போன்ற பலதும் பாடல்களும் நம் காதுகளை பெரும்பாலும் புல்லாங்குழலாலும் வயலினாலுமே நிரப்புகிறது. கொஞ்சம் கிடார், கொஞ்சம் கீ போர்ட், கொஞ்சம் தபேலா என குறைந்த இசைக் கருவிகளுடன் 5000 பாடல்களுக்கு இசையமைப்பு என்பது நம்மை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
அதிலும் இவர் வயலினை பயன்படுத்தியிருக்கும் விதம் ஒன்றில் சோவென அருவியாய் கொட்டும். இன்னொன்றில் காட்டாற்று வெள்ளமாய் பாயும், மற்றொன்றில் என்னவென்று தெரியாத சோகத்தில் ஆழ்த்தும், வேறொன்றில் அமைதி என்றால் அப்படி ஒரு பேரமைதி நம் நெஞ்சை நிறைக்கும்.

வயலினும் குழலும் சேரும் போது நம் மனது எங்கோ வானில் சிறகடித்துப் பறக்கிறது. அது தரும் கற்பனையின் எல்லை காண முடியாததாகிறது. மகிழ்ச்சியின் வெள்ளத்தில் வார்த்தைகளில் மனது தடுமாறுகிறது.

எங்கிருந்து வருகுவதோ – குழல்
யார் செங்குவதோ
குன்றின்று வருகுவதோ – மரக்
கொம்பினின்று வருகுவதோ

என்று குழலோசையை உருகிப் பாடினான் பாரதி. இவர் பாடல்களிலும் சரி, இசை ஆல்பங்களிலும் சரி குழலோசை பயன்படுத்தியிருப்பதை பார்க்கும் போது இந்த நாத வெள்ளம் எப்படி சாத்தியமானது என்று நம்மை பிரமிக்க வைக்கிறது. இதை இசைப் பலர் மூச்சை சுவாசிக்கிறாரோ என்ற சந்தேகம் எழும். அப்படி ஒரு இசை. ஒரு கணம் நம்மை உச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. அடுத்த கணம் இதமாய் மெதுவாய் வருடித் தழுவுகிறது.
வயலின் கேட்க விருப்பமற்றிருந்தேன். புல்லாங்குழல் கேட்க விருப்பமிருந்தும் கேட்க வாய்ப்பின்றி இருந்தேன்.
இந்த இரண்டையும் சேர்த்து கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ள போது வார்த்தைகளின்றி தவிக்கிறேன். இவரின் இசைக் கோர்ப்பு கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமிழ்தமாய் மனதில் நிற்கிறது.

இப்போது சொல்லுங்கள் இந்த இசை ஞானியை, நான் பெற்ற அந்த இன்பத்தை, அதில் வெளிப்படும் காதல், சோகம், மோகம், நம்பிக்கை, சந்தோஷம், பக்தி, கிராமிய மணம், குழைவு என அனைத்தையும் அவருடைய Song of soul தரும் ஆழ்ந்த அமைதியையும் அனைவரும் அனுபவிக்க வேண்டுமானால் நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் ஏராளமாய் இசை விருந்து படைக்க வாழ்த்துவதன் மூலம் அர்த்தம் சரியாய் மிளிரும்! அதுதான் நாம் அவருக்கு செலுத்தும் மரியாதை.

இப்படி ஒரு பிரம்மாண்டத்தை என்னுள் உணர வைத்த தோழமைகளுக்கு நன்றி சொல்லாவிட்டால் இந்த வார்த்தைகள் நிறைவுறாது. இசைக்கு மரியாதை என்றும் நம் நெஞ்சில்! அதன் உருவமாய் நம் முன் நிற்கும் இசைஞானிக்கும்!

Related Posts