அரசியல்

இளைஞர்கள் இருக்கிறோம்!

எஸ்.கார்த்திக்

ஏப்ரல் 14 மாலை 5 மணி. மும்பை பாந்த்திரா ரயில் நிலையம் திணறத் துவங்குகிறது. ரயில் நிலையத்தின் தடைகளை எல்லாம் தகர்த்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக மக்கள் கூட்டம் குவிகிறது.  பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கின் கடைசி நாள் காட்சி இதுதான். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு வெளியான போதும் ஏன் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே குவிந்தார்கள்?

ஏப்ரல் 15. கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் ஆக்கிரமித்து கிடந்தது . உலகில் மட்டுமல்ல உள்ளூர் எல்லைகளே மூடப்பட்டிருக்கும் நிலையில் ;வீட்டிற்குள் புதிய நண்பர்களையோ , உறவினர்களையோ அனுமதிக்காதீர்கள் என இந்த உலகே தனிமனித மிரட்சிக்கு  உள்ளாகி இருக்கும் சூழலில் இந்தியாவில் முதல் பாதிப்பு நிகழ்ந்த கேரளத்தின் முதல்வர் இவ்வாறு சொல்கிறார்: “வளைகுடா நாடுகளில் இருக்கும் கேரள மாநிலத்தவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை அரசு இயக்க வேண்டும் அவர்களுக்கான மருத்துவ வசதி மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கேரள அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்”.

பத்து நாட்களுக்கு முன்புதான் மகாராஷ்டிராவின் ஒரு முனையிலிருந்து ஒடிசாவின் மறுமுனைக்கு செல்ல 1700 கிலோமீட்டர் தூரத்தை எட்டுநாள் சைக்கிள் அழுத்தி கடந்த இளைஞனை நம்பிக்கை மனிதன் என சமூக வலைதளங்கள் தூக்கி கொண்டாடின . அதற்கு சற்று இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனை அழைத்து வர 1400 கிலோ மீட்டர் டூவீலரில் சென்று வந்த தாயை தைரியத்தாய் என தாங்கிப் பிடித்தார்கள் .இந்த ஒற்றை மனிதர்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பொருளாதாரத் துரோகம் பலருக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படியான எந்த சிறு பயண ஏற்பாடுகளும் இல்லாத ஒரு பெரும் கூட்டம் தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தில்லியில் இருந்து கிளம்பியது; இந்த பெரும் உழைப்பாளி கூட்டத்தின் இன்னொரு பகுதி கடந்த மார்ச் 24 ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பியது; இப்படி இந்தியாவின் எல்லா முனைகளிலிருந்தும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களை நோக்கி பரபரக்க , கேரளம் சிறிதும் சலனம் இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் தங்கள் மாநிலத்தவர்களை திரும்பி கொண்டுவர விரும்பி கொண்டிருக்கிறது.

வைரஸ் பயம் மட்டும் தான் காரணமா?

மும்பை,  தில்லி இன்ன பிற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் கிளம்புவதற்கு வைரஸ் பயம் மட்டும் தான் காரணமா என்றால் நிச்சயம் இல்லை. ஊரடங்கின் இந்த நாற்பது நாட்களும் அவர்கள் அங்கே உயிர் பிழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிற பேரச்சம் தான் அதன் ஆணிவேர் . இந்த நேரத்தில்தான் இந்த உலகின் முன்பு 54 நாடுகளைச் சேர்ந்த இடதுசாரி இளைஞர் அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறிய சில வரிகள் முக்கியத்துவம் பெறுகின்றன:

“நாம் இந்த கொடிய வைரஸை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை; மாறாக இந்த சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்துப் போராடுகிறோம்; இந்த முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறோம் ஏனென்றால் அது நமக்கு எதையும் தராமல் அது சந்திக்கும் சவால்களையும் உழைப்பாளிகளின் தோள்களிலே இறக்கி வைக்கிறது”. 

இந்நேரத்தில் போர்ச்சுக்கல் அரசாங்கத்தின் ஒரு அறிவிப்பினை சொல்ல வேண்டி இருக்கிறது. கடந்த மார்ச் 18ம் தேதி போர்ச்சுக்கல் அரசாங்கம் அந்த நாட்டில் இதுவரை அகதிகளாக புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் குடிமக்களாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.ஏனெனில் போர்ச்சுக்கல் நாட்டின் அதிகாரப் பூர்வ குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவமும் பொது நிர்வாக ஏற்பாடுகளும் இலவசம். இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும்போது அகதிகளாய் வந்த மக்கள் கூட இலவச மருத்துவம் இன்றி உயிரிழந்த விடக்கூடாது என்கிற உயர்ந்த மனித நேயத்தின் அடையாளம் போர்ச்சுக்கல் நாட்டின் அறிவிப்பு.

நிவாரண முகாம்களான  கம்யூனிஸ்ட் அலுவலகங்கள்

அதேநேரத்தில் உலகின் இன்னொரு மூலையில் சோசலிச வியட்நாமில் வைரஸ் பாதிப்பு துவங்கியவுடனே, அந்த அரசாங்கம் இரவோடு இரவாக புதிய ஏடிஎம்களை திறந்தது. மறுநாள் மொத்த உலகின் பார்வையும் வியட்நாமில் விழுந்தது. ஏனெனில் அவை பணம் தரும் இயந்திரங்கள் அல்ல; மாறாக இந்த வைரஸ் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட உழைப்பாளி மக்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவச அரிசியை பெற்றுக்கொள்ளக்கூடிய ‘அரிசி ஏடிஎம்’ தான் அவர்கள் நிறுவியது. ஏடிஎம்மில் மக்கள் எத்தனை முறை வேண்டு மானாலும் அது வழங்கக்கூடிய 2 கிலோ இலவச அரிசியை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம்.

இதே போல உலகின் சின்னஞ்சிறிய நாடான கியூபா உலகம் முழுமைக்கும் இந்த வைரஸ் பாதிப்பு உண்டாக்கியிருக்கும் கலக்கங்களை களைய தனது ஒரு பெரும் மருத்துவ படையை உலக நாடுகளுக்கு அனுப்பி வைரசுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் வாழ்வுரிமையோடு இணைத்து நடத்தி வருகிறது.

இந்த நாடுகள் மட்டுமல்ல; அநேகமாக உலகின் அனைத்து கம்யூனிச இயக்க அலுவலகங்களும் பொது அமைப்புகளின் அலுவலகங்களும் இந்த வைரஸ் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஏனெனில் மக்களை இனம்,மதம்,  மொழி கடந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் மொத்த மனித சமூகமும் எங்கள் சகோதரர்கள் என்ற உயர்ந்த லட்சியம் கம்யூனிசத்திற்கே உரித்தான ஒன்று. இந்தியாவில் அந்த உயரிய மனிதநேயத்தின் சாட்சியாக கண் முன்னே உயர்ந்து நிற்கிறது கேரளம்.

இந்தியாவில்  முதல் வைரஸ் தொற்று உருவான  கேரள மாநிலம் கடந்த 100 நாட்களில் லட்சக்கணக்கான மக்களை ஆய்வு செய்து, அவர்களில் நூற்றுக்கணக் கானோருக்கு மருத்துவம் செய்து 257 பேரை குணப்படுத்தி இன்று வெறும் 140 பேருக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  பிப்ரவரி , மார்ச் மாதங்களில் கொரோனா பாதிப்பில் முதல் மாநிலமாக இருந்த கேரளம், தற்போது ஏப்ரல் மாதம் இந்திய அளவில் பத்தாவது இடத்தில் உள்ளது. உலகமே உற்று நோக்கக் கூடிய தரமான சிகிச்சைகளைக் கொண்டு கவனம் ஈர்த்துள்ளது. உலகமே இந்த வைரஸ் தடுப்பில் திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது கேரளத்தின் செயல்களை பின்பற்றுங்கள் என வாஷிங்டன் போஸ்ட் உட்பட உலக ஊடகங்கள் பேசத் துவங்கி உள்ளன. 

ஊரடங்கை கேரளா எப்படி சமாளித்தது?

உலகமே அடைபட்டிருக்கும் இந்த சூழலில் கேரள மக்கள் மட்டும் ஜனவரி 30ல் துவங்கி வீட்டை விட்டு வெளியேறாமல் எப்படி அந்த 100 நாட்களை கடந்து சமாளித்தார்கள் என்ற கேள்விக்கு அவர்கள் கேரள பெருவெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பதிலாக தருகிறார்கள். ஊடகங்கள் சொல்வது போல இது உடனடியாக நடந்துவிட்டது அல்ல;  ஒரு பெரும்  பேரிடரில் இருந்து ஒரு நல்ல அரசாங்கம் கற்றுக்கொண்ட  அனுபவம்தான் கொரோனா வைரஸ் தொற்றை இவ்வளவு தூரம் தடுத்து நிறுத்துவதற்கு அந்த அரசாங்கத்திற்கு உதவியிருக்கிறது. கடந்த கேரள பெருவெள்ளத்திற்கு பிறகு இடதுஜனநாயக முன்னணி அரசாங்கம் வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர் களை சமாளிப்பதற்கு தன்னார்வலர்களை கொண்ட ஒரு பெரும்  இளைஞர் படை தேவை என்பதை உணர்ந்தது. அதன் விளைவாகவே கிராம பஞ்சாயத்து துவங்கி மாநிலம் வரை ஒரு பெரிய தன்னார்வலர் இளைஞர் செயல் படையை உருவாக்கி வைத்திருக்கிறது. 941 கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 20,000 பேரும்,  87 நகராட்சி களில் சுமார் 7000 பேரும், 6 மாநகராட்சிகளில் சுமார் 3000 பேரும் என 30000 பேர் கொண்ட ஒரு பேரிடர் கால தனிப்படையை  பினராயி விஜயன் அரசு உருவாக்கி வைத்துள்ளது.

இதுபோக கேரள இளைஞர் நலத் துறையின் கீழ் கிராமத்திற்கு ஒருவர் வீதம் தன்னார்வலர் ஒருவரைக் கொண்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற இளைஞர்களை மாதம் ரூபாய் 2500 சிறப்பு ஊதியம் வழங்கி பணியாற்ற வைத்து வருகிறது. 

அவர்கள் தான் இந்த வைரஸ் பாதிப்பு காலம் முழுவதும் முதியவர்களுக்கான மாத்திரை, பலசரக்கு, காய்கறிகளை வாங்கி கொடுப்பது போன்ற பணிகளை செய்கிறார்கள். இந்தியாவிற்கே முன்மாதிரியாக கிராமங்கள் துவங்கி நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் கேரள அரசு இந்த வைரஸ் தொற்றின் போது  இலவச உணவு வழங்கக் கூடிய சமூக சமையல் அறைகளை திறந்தது. அந்த சமூக சமையலறைகளில் இருந்து அந்தந்தப் பகுதி மக்களுக்கு விநியோகிக்க கூடிய வேலையையும் அவர்கள்தான் செய்து வரு கிறார்கள்.  இதுபோக மக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி கை கழுவி நோய் பரவாமல் தடுப்பதற்கான ஏற்பாடு களையும், நோய் உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த மக்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த பொழுது அவர்களுக்கு தேவை யான அனைத்து உதவிகளையும் செய்தவர்களும் இந்த இளைஞர் படைதான்.

இதுபோக கேரள இளைஞர் ஆணையம் என்ற அரசின் தனி அமைப்பு கேரள தீயணைப்புத்துறையோடு இணைந்து இந்த காலத்தில் செய்த பணி மகத்தானது. மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மருத்துவத்திற் காக சென்று வருவதற்காக மக்களுக்கு ஒரு தனி உதவி எண்ணையே உருவாக்கி அவர்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் இந்த ஆணையம் செய்து வருகிறது. இப்பணியில் தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என கேரள இளைஞர் ஆணையம் தெரிவிக்கிறது.  மூன்றரை கோடி மக்கள் கொண்ட கேரள மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களை தவிர்த்து 116 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்கிற நிலைமையை கேரள அரசு உறுதி செய்திருக்கிறது . அதாவது சுமார் 29 குடும்பங் களை  ஒரு தன்னார்வலர் பார்த்துக் கொள்கிறார்.

தமிழகத்தில்  இளைஞர்கள் இல்லையா?

ஆனால் நமது தமிழகத்தில் இதுவரை தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒட்டுமொத்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை. சுமார் 8 கோடிப் பேர் வாழும் நமது தமிழ்நாட்டில் 6666 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்கிற கவலைக்குரிய நிலைமையே நீடிக்கிறது. இது ஏறக்குறைய ஒரு பேரூராட்சியின் மக்கள் தொகைக்கு ஈடானது.

தமிழகத்தில் சென்னை வெள்ளம், கஜா புயல் என பல்வேறு நேரங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட ஒரு பெரும் இளைஞர் படை மக்களுக் கான நிவாரணத்தை வழங்குவதில் முன்னணியில் நின்றது.

அவர்களையெல்லாம் இணைத்து செயலாற்றுவதில் அரசு காட்டியிருக்கும் சுணக்கம், இன்றைக்கு மக்கள் வெளியில் வந்து சமூக இடைவெளியை உடைத்து, அனைத்தையும் வாங்கும் அவலநிலைக்கு அவர்களை தள்ளி இருக்கிறது . தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றைக்கும் நிவாரணப் பணிகளில் ஈடுபட தயாராக இருக்கும் நிலையில், ஒரு பாரபட்சமான அரசியல் அணுகுமுறையோடு அவர்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இந்த அரசு மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

களத்தில் நிற்கிறது வாலிபர் சங்கம்

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தின் போது, பேரிடர்  கால நிவாரணப் பணியாற்ற அமைப்பின் சார்பில் ஒன்றிய அளவிலான குழுக்களை உருவாக்கி அவர்களை பயிற்சி  கொடுத்து தயார்ப்படுத்த வேண்டும் என விவாதிக்கப் பட்டது. சுனாமி காலம் முதல் தமிழகம் சந்தித்த பல்வேறு பேரிடர் காலங்களிலும் வாலிபர் சங்கத்தின் நிவாரணப் பணியின் பங்கு மகத்தானது. தற்போது ஒரு பெரும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் கூட அரசு இதுவரை பெரும்பான்மையான மாவட்டங்களில் அதிகாரப்பூர்வமாக தன்னார்வலர்களை அங்கீகரிக்காத நிலையிலும்கூட, வாலிபர் சங்கம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்களை கடந்த 20நாட்களாக வழங்கியிருக்கிறது.  

இந்த நெருக்கடி மிகுந்த சூழலில் கூட 2500க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத் தோழர்கள் இரவு பகல் பாராது வேலை செய்திருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் தமிழர் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்ட தகவல் அளித்து அங்கு  மாத்திரை வாங்கிக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ததும் சரி, கள்ளக்குறிச்சியில் ஒருவருக்கு தேவைப்பட்ட அத்தியாவசியமான மாத்திரையை திருச்சியி லிருந்து வாங்கிக் கொண்டு சேர்த்த பணியானாலும் சரி; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்களும் சில நல்ல அரசு அதிகாரிகளும் அழைப்பது எங்கள் வாலிபர் சங்கத்  தோழர்களைத் தான்.  இந்த காலத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளுக்கு 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னார்வலராக சென்று இரத்த தானம் வழங்கி இருக்கிறார்கள். இன்றும் தினசரி அரசு ரத்த வங்கியில் இருந்து தொடர்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. 

பெரும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அனை வரும் ஒன்றிணைந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட வேண்டியது இந்த சமூகம் நமக்கு விடுத்திருக்கும் சவால். வைரஸோ , பசியோ  இரண்டும் உயிர்க்கொல்லி தான்.  இவ்விரண்டு பிணிகளையும் போக்குவது ஒரு சேர எடுத்துச் செல்லப்பட வேண்டிய உடனடிக் கடமைகள்.

மீண்டும் நினைவுக்கு வருவது 54 நாடுகளைச் சேர்ந்த இடதுசாரி இளைஞர் அமைப்பின் அறிக்கை  தான்;  “இதுபோன்ற இன்னல் மிகுந்த காலங்களில் இடதுசாரி இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம்; நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம், நாம் வெல்லுவோம், நாம் தனித்து இல்லை, இது ஒற்றுமையின் நேரம், நாம் அனைவரும் உணர்வால் ஒன்றிணைவோம்”.

நன்றி
தீக்கதிர்

Related Posts