புதிய ஆசிரியன்

இரு வேறு இந்தியா இது என்றால்… (பரிசுபெற்ற கட்டுரை)

(சின்னக் குத்தூசி அறக்கட்டளை 2015 கட்டுரைகள் போட்டியில், கடந்த ஆண்டு வந்திருந்த பொருளாதாரம் குறித்த படைப்புகளின் வரிசையில் நம்மோடு இணைந்து செயல்படும் புதிய ஆசிரியன் இதழில், கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி ஜனவரி 2014ல் வெளிவந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுரையை மாற்று இதழில் மறுபிரசுரம் செய்கிறோம்.)

“இறைவன் உலகத்தைப் படைத்தானா, ஏழையை அவன்தான் படைத்தானா” என்பது கவியரசு கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு திரைப்பாடலின் பல்லவி. அதன் அடுத்த வரி, ‘…ஏழையைப் படைத்தவன் அவன் என்றால், இறைவன் என்பவன் எதற்காக?’ என்று போகும். உனக்காக நான் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலின் முதல் சரணம், ‘பொன்னகை அணிந்த மாளிகைகள், புன்னகை மறந்த மண்குடிசை’ என இரண்டு காட்சிகளைச் சொல்லும். ‘பசி வர அங்கே மாத்திரைகள், பட்டினியால் இங்கு யாத்திரைகள்’ என்ற அடுத்த வரி, பணம் கொழிக்கும் இடத்தையும், பசி பஞ்சத்தில் வாடும் மக்களையும் அடையாளப்படுத்தும்.

விடுதலைக்குப்பின் இந்தியா என்று சொல்லிக் கொண்டிருந்த காலம்போய், 1991க்குப் பின் இந்தியா என்ற புதிய மைல் கல் ஒன்று இப்போது ஊன்றப்பட்டிருக்கிறது. இது இப்போது நவீன தாராளமய இந்திய நாடு! இதன் வாழ்க்கை முறையே வேறு. விதிமுறைகள் வேறு. நியாயங்கள் அநியாயத்திற்கு வெவ்வேறு! ஒரே ரயில் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்ட குளுகுளு ரயிலும் வந்து நிற்கிறது. ஒரு முறை கூட தண்ணீரால் கழுவப்படாத அழுக்குப் பெட்டிகளோடு கட்டை வண்டி மாதிரியான வேறு ஒரு ரயிலும் பச்சை விளக்கு எரியக் காத்திருந்து அதே நிலையத்திலிருந்து புறப்பட்டுப் போகிறது. பக்கத்து டேபிளில் பூரி, தோசை எல்லாம் அமர்க்களமாக யாரோ சாப்பிட்டுக் கொண்டிருக்க, சர்வர் சுந்தரம் படத்தின் நாயகன் நாகேஷ் கால் சராய்ப் பையில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் ஐந்து நயா பைசாவை நம்பி ஒரு ப்ளேட் இட்லி, வடை ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருப்பதுபோல் இரண்டு இந்தியாவும் பக்கத்துப் பக்கத்து இடங்களில் பயணம் செய்கிறது.

27 கோடி இந்தியர்கள் இரவுச் சாப்பாடு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்று டாக்டர் மால்கம் ஆதிசேஷையா பல்லாண்டுகளுக்குமுன் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். நவீன தாராளமயம் உறக்கமற்ற இரவுகளை அதிகரித்து உதவுகிறது. அதுவும் இரண்டு இந்தியாவுக்கும் பொது. ஒரு பக்கம் லாப வேட்கையோடும், மூலதனத்தைப் பெருக்கும் வெறியோடும் கண்ணாடி தம்ளர்களில் திரவத்தின் மேற்பரப்பில் ஐஸ் கட்டி கிளிங் சத்தம் எழுப்ப இரவுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் ஒதுங்க இடம் இன்றி, நிரம்பாத வயிறுகளோடு, எதிர்கால வாழ்வும் இருட்டிப் போன திசையில் வெறித்துப் பார்க்கும் கண்கள்.

அண்மையில் கார்டியன் நாளேட்டில் ஜான் பில்கர் எனும் சிந்தனையாளர் எழுதி இருந்த கட்டுரை ஒன்று தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் (ஜனவரி 4) வெளியாகியிருந்தது. இரண்டு எதிரெதிர் துருவங்களில் நசிந்து கொண்டிருக்கும் நாடு இந்தியா என்பது அதன் தலைப்பு. ஆனால், எதிர்ப்பும் வலுக்கிறது என்பதையும் அவர் தலைப்பில் சேர்த்திருந்தார். வளர்ச்சி, சாதனை என்று எழுப்பப்படும் கூச்சல்களுக்கிடையே பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்கள் – குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது அறியாது அவதியில் இருக்கும் குழந்தைகள்… என முரண்பாடுகளை அந்தக் கட்டுரை பேசுகிறது. எளிதில் குணப்படுத்தக் கூடிய வயிற்றுப் போக்கு போன்ற காரணங்களால் நமது நாட்டில், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் மரிக்கின்றன. உயிர் பிழைப்பவரில் பாதிக் குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாது வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பவர்கள். பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியில் விட்டு வெளியேறும் மாணவர்கள் 40% பேர்.

இப்படியான புள்ளிவிவரங்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாயும். இந்த இழிவான நிலைக்குமுன்னால் வேறு எந்த நாடும் போட்டிக்கு நிற்க முடியாது என்று எழுதிச் செல்கிற பில்கர், இந்தியாவின் நிதி விவகாரத்திற்குத் தலைநகரமான மும்பையின் இன்னொரு முகம், அதன் செம்பாதி மக்கள் சுத்தம், சுகாதாரம் அற்ற சேரிப் பகுதிகளில் அவதியுறுவதுதான் என்கிறார். அமெரிக்க விளம்பர நிறுவனம் ஒன்று தயாரித்துக் கொடுத்த விளம்பரங்களை வைத்துக் கொண்டு இந்தியா மின்னுகிறது என்று பா ஜ க தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அடித்த கூத்தை மக்கள் 2004 தேர்தலில் நிராகரித்தனர். இந்தியா மின்னிக்கொண்டிருந்தால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று கேட்கும் பில்கர் இந்த எண்ணிக்கை கூட குறைத்து மதிப்பிட்டதாக இருக்கக் கூடும், உள்ளபடியே மரணத்தைத் தேடிக் கொண்ட விவசாயிகள் இன்னும் கூடுதலாக இருக்கும் என்கிறார்.

ஆட்சி மாற்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வந்தாலும் அவர்களும் இதே சந்தைப் பொருளாதார நவீன தாராளமய கொள்கைகளைத் தொடரவே செய்தனர். மைக்ரோசாப்ட், பிஸா ஹட், மான்சாண்டோ, கோகோ கோலா, ராபர்ட் முர்டோக் என கணினி, பிஸா உணவு, விதைகள், குளிர்பானம் மற்றும் தண்ணீர், ஊடகங்கள் எல்லாவற்றிலும் பன்னாட்டு நிறுவனங்கள் அதுவரை தங்களுக்கு திறக்கப்படாத வாசலைத் திறந்து புகுந்து கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதைக் குறிப்பிடும் பில்கர் பா.ஜ.க மற்றும் சுதந்திரம் பெற்றுத் தந்தாகச் சொல்லும் காங்கிரஸ் இரண்டையும் இந்த உலகமயம் கரைத்து விழுங்கிவிட்டது என்று சொல்வது முக்கிய கவனம் பெற வேண்டிய விஷயமாகும்.

மாற்று பிரதமராக இன்று முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி குஜராத்தில் நிகழ்த்திய வெறியாட்டம், படுகொலைகள், மதவெறிக்குப் பலியிட்ட அப்பாவி இஸ்லாமிய உயிர்கள் இவற்றை மறைத்துக்கொண்டு வளர்ச்சி நாயகன் வேடத்தில் வலம் வருவதையும் பில்கர் விமர்சிக்கிறார். இத்தனை எதிரான சூழலிலும் நம்பிக்கை குலையவில்லை என்று கட்டுரையை முடிக்கும் அவர் 2012 தில்லி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாடெங்கும் பரவிய ஆவேச நெருப்பு பற்றி எழுதிவிட்டு, தனிப் பெரும் வீராங்கனைகளாகப் போராடுவோராக மேதா பட்கர், வந்தனா சிவா, அருந்ததி ராய் போன்றோரை அடையாளப்படுத்துகிறார்.

தொடர் போராளிகளாகக் களத்தில் இயங்கும் இடதுசாரிகளைப் பற்றி அவர் குறிப்பிடாதது அவரது அரசியலாக இருக்கக்கூடும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் விளைவுகள் குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் தொலைநோக்குப் பார்வையும், சர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் பரிச்சயமும், அடிப்படையில் முதலாளித்துவத்தின் சாகசங்கள், சறுக்கல்கள், மீட்சிக்கான அதன் உத்திகள், உள் முரண்பாடுகள் குறித்த மார்க்சிய ஞானமும் இடதுசாரிகளுக்கு உண்டென்பதை சுதந்திர ஜனநாயக சிந்தனையாளர்களாக விளங்கும் அறிவுஜீவிகள் பதிவு செய்வதில்லை. ஆனால் பரந்துபட்ட ஜனத் திரளிடையே ஓயாத பிரச்சாரமும், அவர்களை உள்ளடக்கிய போராட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கும் இடதுசாரி சக்திகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நலனை முன்வைத்து நடத்திவரும் போராட்டங்களை யார் முயன்றாலும் மறைக்க முடியாது. இடதுசாரி தொழிற்சங்கங்கள் விரிவுபடுத்தி இருக்கும் ஐக்கிய போராட்ட மேடையில் இப்போது காங்கிரஸ், பா ஜ க கட்சிகளின் தொழிற்சங்க அமைப்புகளான ஐ என் டி யு சி மற்றும் பி எம் எஸ் ஆகியவையும் நாடு தழுவிய போராட்டங்களில் இணைந்து வருகின்றன. பிப்ரவரி 20, 21-2013 இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் 11 கோடி தொழிலாளிகள் தேசத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
unnamed
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலமான 2004-2008 காலத்தில் இடதுசாரிகளின் ஆதரவில்தான் அது நீடித்தது. இடதுசாரிகளின் நிர்பந்தத்தால்தான் தேசிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் வகுக்கப்பட்டது. பொதுத் துறையைக் காக்க முடிந்தது. தவறான சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்த முடிந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், மலைவாழ் மக்கள் உரிமைச் சட்டம் போன்றவை நிறைவேற்றப் பட்டன. அமெரிக்கவுடன் அணு ஆற்றல் உடன்பாட்டை இந்திய ஆட்சியாளர்கள் செய்துகொண்டதற்கு எதிராக 2008ல் இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். எம்.பி.க்களை விலைக்கு வாங்கி கட்சிகளை பேரம் பேசி ஆட்சிக்கு ஆதரவு திரட்டிக் கொண்டபின், இனி எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் தாராளமய கொண்டாடிகள் மன்மோகன் சிங்கும், ப சிதம்பரமும்.

இடதுசாரிகளின் தொல்லை பொறுக்கமாட்டாமல் கொண்டுவந்த சட்டங்களை ஏதோ தாங்கள் விரும்பி கொண்டுவந்ததுபோல் மக்கள் மன்றத்தில் சொல்லி 2009 தேர்தலில் மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதுவரை தடுத்து நிறுத்தியிருந்த வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்திற்குள் நுழைய சட்டம் இயற்றப்பட்டது. பொதுத் துறை பங்கு விற்பனை மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. உள்நாட்டுத் தனியார் வங்கிகள் தொடங்கப்படவும், அயல் நாட்டு வங்கிகள் உள்ளே நுழையவும் சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்சூரன்ஸ் துறையை ஒழித்துக் கட்டும் நோக்கோடு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கெனவே அறியப்பட்டிருந்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் கட்டிட ஊழல்….என துறைவாரியாக பல லட்சம் கோடி தேச சொத்து கொள்ளை அடிக்கப்பட்டது. இயற்கையாகக் கிடைக்கும் தாது செல்வமும் சூறை போய்க் கொண்டிருக்கிறது. மக்கள் ஓட்டாண்டி ஆக்கப்பட்டுவிட்டனர். ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க முடியாத மனிதர்கள் 83.6 கோடி பேர் என்று .அரசே நியமித்த குழுவின் தலைவர் மறைந்த அர்ஜுன் சென் குப்தா 7 ஆண்டுகளுக்குமுன்பே சொல்லிச் சென்றார்.

இன்னொருபுறம், 2005-06 நிதியாண்டிலிருந்து 2010-11 நிதியாண்டு வரையில் 5 ஆண்டுகளில் மட்டும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அரசே விட்டுக் கொடுத்த வரிச் சலுகைகள் ரூ 21 லட்சம் கோடி! இந்தப் பணம், எல்லாக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்க உத்தரவாதம் செய்யும் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றக் கையில் காசு இல்லை என்று சொல்பவர்கள் தர்மம் செய்த பணம். சுகாதார வசதி, தூய்மையான குடிநீர், எளிய மக்களுக்கு மருத்துவ வசதி ஏற்பாடு செய்து தர எங்களிடம் நிதி இல்லை என்று சொல்பவர்கள் அள்ளிக் கொடுத்த பணம். சாலை செப்பனிடுதல், விளக்கு வசதி, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தத் தக்க உள்கட்டுமான சிறப்பு ஏற்பாடு போன்ற எதற்குமே எங்களிடம் தம்படிக் காசுகூட இல்லை என்று மழுப்புபவர்கள் விட்டுக் கொடுத்திருக்கும் பணம் இந்த வரிச்சலுகை.

ஊழலும், தனியார்மயமும், கார்பொரேட் மூலதன பெருக்கமும், டாலர் கோடீஸ்வரன்களின் அதிகரிப்பும் நவீன தாரளமயத்தின் கொடை ! அதற்கு மாற்றான கொள்கைக்காகப் போராடாமல் கோடிக்கணக்கான சாதாரண மக்களுக்கு எந்த நியாயமும் பிறக்காது. தி ஹிந்து நாளிதழின் ஞாயிறு சிறப்புப் பகுதியில் (05 01 2014) வெளியாகியிருக்கும் தனது கட்டுரையில் பிரபல பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் அப்படியான மாற்றுக் கொள்கைக்கான குரலை அருமையாக ஒலித்திருக்கிறார். வளர்ச்சிப் பாதை ஏன் இன்னும் வெகுஜன மக்கள் வாழ்வில் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்விக்கு இரண்டு விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன என்று சொல்லும் அவர், ஒரு சாரார் இந்த தாராளமயக் கொள்கை அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்ந்து பலன் அளிக்க இன்னும் காலம் எடுக்கும், எனவே சீர்திருத்தங்களை மென்மேலும் வேகப்படுத்த வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மை அதுவன்று. இந்தக் கொள்கைகள் யாரையும் வெளியே நிறுத்தி வைக்கவில்லை. மாறாக, சமமற்ற முறையில் எல்லோரையும் உள்ளடக்கிக் கொண்டுதான் சாதாரண மக்களை வஞ்சிக்கிறது என்கிறார் அவர்.

நவீன தாராளமயம் நவீன முறையில் சுரண்டுகிறது. நவீன கருவிகளை அது உருவாக்குகிறது. நவீன சமாதானங்களை உற்பத்தி செய்கிறது. நவீன சகிப்புத் தன்மையை வளர்த்து திசை திருப்புகிறது. மிக முக்கியமாக, இடதுசாரி எதிர்ப்பின்கீழ் திரள வேண்டிய மக்களை நவீன தாராளமயம் சிதைத்துப் பிளவுபடுத்தி அடையாள அரசியலின் பக்கம் கொண்டு தள்ளுகிறது. இந்தியா போன்ற தேசத்தில் சாதிய வன்கொடுமை, தீண்டாமை, மத வேறுபாடுகள் ஊன்றிப் போயிருக்கும் மரபணுக்களில் நவீன தாராளமயம் தன்பங்கிற்குக் கூடுதல் நஞ்சு கலக்கவும் செய்கிறது. இளைய தலைமுறை போதை கலாச்சாரத்திற்கும், தவறான சிந்தனைகளுக்கும் தடுமாறிச் செல்ல பாதை அமைத்துத் தருகிறது.

எனவேதான் இரண்டு எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இந்தியாவிற்குள், ஒரே வறுமை, ஒரே ஏழ்மை, ஒரே பட்டினி, ஒரே வேலையின்மை…என ஒன்றுபோல பிரச்சனைகளில் உழலும் மக்களைக் கூட உள்ளெதிர் துருவங்களாக மாற்றி மோதவிடுகிறது சமகால சமூகச் சூழல். இது இன்னும் ஆழமாக விவாதிக்க வேண்டிய தனி விவாதப் பொருள் என்றாலும் குறிப்பிட்ட வேண்டியதாயிருக்கிறது.

இந்தப் பின்புலத்தில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவரா, அவரா என்பதல்ல கேள்வி. இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா என்பதுமல்ல கேள்வி. அதே மோசமான கொள்கைப் பாதையா, மாற்றுக் கொள்கை வழியா என்பதுதான் மக்கள் கவனிக்க வேண்டிய திசைவழி! அவர்கள்முன் அதை எடுத்துச் சொல்லவேண்டியதுதான் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆற்றவேண்டிய கடமை.

இறைவன் உலகத்தைப் படைத்தானா என்ற அந்தப் பாடலின் சரணத்தில் கண்ணதாசன் கொடுமைகளை விவரித்தபின் ஒரு கேள்வியை சத்திய ஆவேசத்தோடு எழுப்பி இருப்பார்: இரு வேறு உலகம் இது என்றால், இறைவன் என்பவன் எதற்காக என்பது அந்தக் கேள்வி. நாம் கேட்க வேண்டியது, இரு வேறு இந்தியா இது என்றால், ஆட்சியாளர்கள் எதற்காக என்பது தான்! அடுத்து சிந்திக்க வேண்டியது அதை மாற்றும் ஆட்சியை வழங்கும் கொள்கை உள்ளோரை அடையாளப்படுத்துவதுதான்!

Related Posts