இதழ்கள் இளைஞர் முழக்கம்

இயற்கை வளங்கள் யாருக்கானது?

 

தமிழகத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பதற்கான போராட்டம், அதன் முழு அர்த்தத்தோடு இப்போது இத்தேர்தலின் மூலமாகத்தான் துவங்கப்போகிறது.

ஆம். மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் என்று கூட தோன்றலாம் சிலருக்கு. ஆனால், உண்மைகளை கொஞ்சம் உரசிப்பார்த்தால் எத்தனை நிதர்சனமான வாக்கியமென்று நிச்சயம் புரியும்.

36 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு ரூ.3600 க்கு என ஒருவர் குத்தகை விட்டால் அவரை நாம் என்னவென்று சொல்வோம்? அதுவும் பல்லாயிரம் கோடிகள் இலாபமீட்டும் பெப்சி எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு. நிலம் வெறும் நிலமல்ல. தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி நதிக்கரையில். சந்தை மதிப்பில் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அந்நிறுவனத்திற்கு ரூ.3600 க்கு வழங்க  அவர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் வெறும் 15 நாட்கள். தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர். 1,000 லிட்டர் தண்ணீர் ரூ. 37\க்கு வழங்கப்படுமாம்.

ஆறுகளைப் பாதுகாக்கும் அதிமுக அரசின் கொள்கைக்கு இதை விடவும் வேறு ஏதேனும் உதாரணத்தைச் சொல்லிவிட முடியுமா என்ன! 2005 இல் இதே தாமிரபரணி ஆற்றக்கரையில் கோக் ஆலைக்கு அனுமதி கொடுத்தவர்கள் இப்போது பெப்சி ஆலைக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஆக, கோக் – பெப்சிகளுக்குத்தான் தமிழகத்தின் ஆறுகளை வழங்கிட வேண்டும் என்பது இவர்களின் கொள்கை போலும்.

ஆறுகளை வைத்து வேறென்ன செய்யலாம்?

இதோ மணல் அள்ளலாம், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்கின்றனர் அதிமுகவினர். அது எப்படிங்க அவங்களுக்கு மட்டும் சொந்தமாகும்? அவங்க ஆட்சியில இருக்கிறப்போ அவங்க எடுத்துக்கட்டும், நாங்க ஆட்சியில இருக்கிறப்போ நாங்க எடுத்துக்கிருதோம், இப்படித்தானுங்களே பல வருசமா நடக்குது என எசப்பாட்டு பாடுகின்றனர் திமுகவினர்.

ஆம். இது தான் அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளுக்கும் இடையில் உள்ள எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். அரசியல் என்றாலே ஒரு இலாபமீட்டும் தொழில்தான் என்ற நிலைக்கு தமிழக அரசியலை மாற்றியுள்ள அவ்விரண்டு திராவிடக் கட்சிகளும் தங்களது வேட்டைக்களமாக இன்று எதையெல்லாம் கருதுகின்றனர் என்று பட்டியலே போடலாம்.

கல்வி, மருத்துவம், ஆற்று மணல், நீர், ரியல் எஸ்டேட், கனிமவளம் ஆகியவை தான் இன்று தமிழகத்தில் பணம் கொழிக்கும் துறைகள். இதெல்லாம் யார் கையில் இருக்கின்றன? ஆள் பலமும், பண பலமும், அதிகார பலமும் தேவைப்படும் இந்தத் துறைகளில் அதிமுக, திமுகவினர் தவிர வேறு யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை தமிழகமே நன்கறியும். அப்படியே வேறு கட்சிக்காரர் ஒருவர் கல்வித்துறையிலோ அல்லது மருத்துவத் துறையிலோ இருக்கலாம். ஆனால், அந்த வீட்டிலிருந்து ஒருவர் திமுகவில் இருப்பார், இன்னொருவர் அதிமுகவில் இருப்பார் அல்லது அவர் வேறு ஏதேனும் ஒரு முதலாளித்துவக் கட்சியில் பொறுப்பில் இருப்பார்.

ஆனால், ஆற்று மணலாகட்டும் அல்லது ரியல் எஸ்டேட் ஆகட்டும் ஆளும் கட்சிக்காரர்களைத் தவிர எந்தக் கட்சிக்காரரும் ஆதிக்கம் செய்ய வாய்ப்பேயில்லை. அதிமுக காரருக்கு திமுக உதவி செய்யும், திமுக காரருக்கு அதிமுக உதவி செய்யும் என்பதும் ஊருக்கே தெரிந்த சேதிதான்.

பல்லாயிரக் கணக்கான குளங்கள், நீர்ப் பிடிப்புப் பகுதிகள், நீர் ஓட்டப் பாதைகள் என இந்த நாற்பது ஆண்டுகளில் காணாமல் போயிருக்கின்றனவே, ஏதேனும் ஒரு தேர்தலிலாவது திமுகவினரோ அல்லது அதிமுகவினரோ அதைப் பேசியிருப்பார்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர் ஆக்ரமித்துள்ள குளத்தை மீட்போம் என்று எப்போதுமே பேசியதில்லையே ஏன்? காரணம், கூட்டுக்கொள்ளை. அதனால் தான் இன்று தமிழகத்தின் குளங்களும், ஆற்று வழிப்பாதைகளும், சிற்றோடைகளும், வாய்க்கால்களும் என ஏராளமானவை காணாமல் போயிருக்கின்றன.

சென்னையின் மழைக் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னறிவிப்பில்லாது நீர் திறந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டித்து அணுதினமும் பேசும் ஸ்டாலின், அதற்காக விசாரணைக் கமிசன் வைத்தே தீருவேன் என்று இப்போதே அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், சென்னையைச் சுற்றியுள்ள குளங்கள் காணாமல் போனதும், ஏரிகள் பட்டா போடப்பட்டதும் தான் சென்னை வெள்ளத்துக்கு முக்கியக் காரணங்கள் என்று எல்லா ஆய்வுக் குழுக்களும் கூறிய பின்னரும், காணாமல் போன குளங்கள், ஏரிகள் குறித்து விசாரணைக் கமிசன் அமைப்பேன் என்று ஒரு முறைகூட கூறவில்லையே, ஏன்?

கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து திரு.சகாயம் அறிக்கை வெளிவந்துள்ளதே. அதை பகிரங்கமாய் மக்களிடையே அறிவித்து உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என்றாவது இன்று வரை ஒரு வார்த்தை கூறியிருக்கிறாரா திருவாளர். ஸ்டாலின்? இரண்டு ராஜன்களும் தமிழகத்தின் மொத்தக் கனிமவளத்தையும் சூறையாடியிருக்கின்றனரே, இந்த இரு கட்சிகளின் துணையில்லாமலா, இத்தனைக் கொள்ளையும் நடந்திருக்கும்? வருமானத்துக்கு அதிகமாய் சொத்து சேர்த்தார் என்று இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் என மாறி மாறி வழக்குகள் போட்டுக் கொண்டனர்.

ஆனால், ஒருமுறையாவது மணல் கொள்ளை, ஆற்று நீர் கொள்ளை, ரியல் எஸ்டேட் கொள்ளை, கனிம வளக்கொள்ளை குறித்து ஒரு வழக்காவது பதிவு செய்ததுண்டா, ஏன்? மணலும்,நீரும்,கனிமவளங்களும் கொள்ளையடிக்கப்பட்டதேயில்லையா, என்ன?

விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் ஆக்கிடக்கூடாது என்பது விதி. ஆனால், தமிழகத்தின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்து பட்டா போட்டு அதிகாரப்பூர்வமாக விற்கமுடிகிறதே, எப்படி? ஆட்சியதிகாரத்தின் துணையில்லாமல் ஒரு செண்ட் விவசாய நிலத்தையாவது பட்டா போடமுடியுமா?

இரு கட்சிகளின் இலாபமீட்டும் அரசியலால் தான் தமிழகத்தின் எல்லா வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது தமிழகத்தில் யாரும் மறுக்க இயலாத உண்மைகள் தான் என எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால், தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் எதிராய் அப்படியொரு எதிர்க் குரல் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல்தானே அரசியல் நிகழ்ந்துள்ளது இத்தனை நாளும். அந்தச்சூழல் இப்போது மாறியிருப்பதுதான் தமிழகத்தின் புதுத் துவக்கமாகும்.

ஆம். தமிழகத்தில் ஒரு புது அரசியல் சூழல் துவங்கியுள்ளதன் முதல் அறிகுறிதான் இப்போதைய தேர்தலாகும்.

ஆற்று மணலுக்காக, கனிம வளங்களுக்காக, ஆற்று நீருக்காக, விவசாய நிலங்களுக்காக முதல் குரல் இந்தத் தேர்தலில்தான் ஒலிக்கப்போகுது. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கும் எதிரான அந்தக்குரல் ஓங்கி ஒலித்திடட்டும்.

– இல.சண்முகசுந்தரம்

9444774651

Related Posts