அரசியல்

இன்னும் எதிர்பார்க்கிறோம் சமஸ் . . . . . !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க அல்லாத காங்கிரஸ், பி.ஜே.பி & பா.ம.க அங்கம் வகிக்காத மூன்றாவது அரசியல் மாற்றுக்கான முயற்சியில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒராண்டுகள், இரண்டுகள் என பல ஆண்டுகள் நடக்காத விசயம் இப்போது நடந்துள்ளது. 2ஜி, சொத்துக்குவிப்பு என ஊழலில் திளைத்த தமிழகத்தை இரு பெரும் கட்சிகளிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் முன்னேறி இன்று முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

முதலில் இது நடக்க வேண்டும். நடக்கும். நடக்கட்டும். சமஸ் தனது நடுப்பக்கங்களில் ஒன்றை தினசரி ஒதுக்க வேண்டும். பன்னாட்டு கம்பெனிகளில் தொழிற்சங்க உரிமைக்காக, குறைந்தபட்ச கூலிக்காக, வறட்சி நிவாரணத்திற்காக, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தைப் பாதுகாப்பதற்காக, கல்விக் கட்டண கொள்ளைக்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, வாச்சாத்தி மக்களுக்காக, சென்னையில், மாவட்டங்களில், குக்கிராமங்களில் இடதுசாரிகள் நடத்தும் போராட்டங்களை விளக்கி வியாக்கியானம் செய்து எழுத தினசரி ஒரு பக்கத்தை ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தின் தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து வந்து எழுத வேண்டும். கட்டாயம் எழுத வேண்டும். சாதியாக, மதமாக, பங்களாக்களாக, குடிசைகளாக, கார்களாக, மிதிவண்டிகளாக, ஏழைகளாக, பொதுநலமாக, சுயநலமாக, கட்சிகளாக, அமைப்புகளாக, பிளவுவாதிகளாக, குழப்பவாதிகளாக, எல்லாவற்றிற்கும் மேலாக எதைப் பற்றியும் கவலைப்படாதவனாக, அரசியலற்றவனாக, சித்தாந்தமற்றவனாக இருக்கும் சமூக அமைப்பில் தூய்மைவாதமும், தனித்தன்மை கோட்பாடும் ஒரு அரசியலற்ற அரசியல் தான்.

நாட்டின் ஆளும் வர்க்கம் தனது சித்தாந்தத்தையே சமூகம் சிந்திக்க வேண்டிய தத்துவமாக மாற்றுகிறது. பொதுப்புத்தி என்ற சொல்லாடலின் மூலம் அறநெறியற்ற நீரோட்டத்திற்கும் சமூகத்தை அது இழுத்துச் செல்கிறது. அதற்கு எதிரான அரசியல் போராட்டத்தை இடைவிடாமல் நடத்த வேண்டும். சமூகத்தை அரசியல்மயமாக்குவதும், சித்தாந்த மயமாக்குவதும் அவசியக் கடமை. அத்தகு போராட்டத்தில் இடதுசாரிகளை விட விஞ்சி நிற்பவர்கள் யார் என்பதை சமஸ் எழுத வேண்டும். நாட்டின் வகுப்புவாதத்திற்கு எதிரான சித்தாந்த போராட்டத்தை எவர் நடத்துகிறார்கள்?. மதச்சார்பற்ற சக்திகளோடு இணைந்து பணியாற்றுவதில் இடதுசாரிகள் ஒரு போதும் சளைத்ததில்லை. சாதியம் குறித்து அரசியல் கட்சிகளில் கருத்துக்களை முன்வைப்பதும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதும் இடதுசாரிகள் மட்டும் தானே சமஸ்.

பொருளிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தொழிற்சங்க உரிமைக்காகவும், பிச்சை ஏந்தி நிற்காமல் அரசியல் சக்தியாக உழைக்கும் மக்களை அணிதிரட்டும் பணியை இடைவிடாமல் செய்வது இடதுசாரிகள் என்பதை மறுக்க முடியாது. போராடுவதின் மூலமாக பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்க நினைக்கும் இடதுசாரிகள் சூழலுக்கேற்ற தேர்தல் உத்தியை கையாண்டு வருகிறார்கள். இடதுசாரிகளின் பின்னடைவுக்கு தேர்தல் உத்தி மட்டும் காரணமில்லை என்பது ஊடகவியலாளர்கள் அறிந்த ஒன்று தான். பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேர்தலையும் ஒரு பிரச்சார, போராட்ட மேடையாக இடதுசாரிகள் கருதுகிறார்கள். மக்களது ஜனநாயக, அரசியல் உணர்வை பொறுத்தே இடதுசாரிகளின் உத்திகள் உருவாக்கப்படும். அகநிலைவாதத்தில் இருந்து இடதுசாரிகள் உத்திகளை உருவாக்குவதில்லை.

இப்போது முன்நிற்கும் கேள்விகள் திமுக, அதிமுக பின்னுக்கு தள்ளப்படுமா? அரசியல் மாற்றம் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில், தேமுதிக – மக்கள் நல கூட்டணி பலத்தால் அ.தி.மு.க & தி.மு.க பின்னுக்கு தள்ளப்படும், கூட்டணி அரசாங்கம் என்ற மாற்றம் தமிழக அரசியலில் பாரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதுதான். இதை நோக்கி முன்னேறுகையில் பழைய விசுவாசங்கள் சிலரை தடுக்க கூடும். நம்பிக்கையின்மை பழமைவாதத்திற்கு துணை போகும். இடதுசாரிகள் நம்பிக்கையோடு முன்னேறுகிறார்கள். மக்கள் நலன் மட்டுமே இலக்கு. அதற்கு பாதகமெனில் போர். அதுவே இறுதி தீர்வு.

மாவோ சொல்லுவார் நெருக்கடிகள் நமக்கான வாய்ப்புகளையும் சேர்த்தே கொண்டு வரும் என்று. நாங்கள் மாவோவையும் வாசித்திருக்கிறோம் சமஸ். அடுத்த கட்டுரைக்கு காத்திருக்கிறோம். சர்ச்சைகளை நாங்கள் அவதூறுகளாக கருதுவதில்லை. உண்மைகளை வேறு கோணத்திலும் பார்ப்போம்.

– கே.ஜி.பாஸ்கரன்

திருநெல்வேலி

Related Posts