இதழ்கள் இளைஞர் முழக்கம்

இனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா

இனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா

                தமிழகத்தில் பேனா விற்பனை சூடுபிடித்துள்ளது. போனாவை வாங்கியவுடன் முதலமைச்சர் கனவோடு முதல் கையெழுத்து போடுவதற்காக பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் விருப்பங்களை அவர்களின் கனவுகளை எல்லாம் இத்தனை நாட்கள் வசதியாக மறந்துவிட்டு தற்சமயம் துயிலெழுந்து ஏமாற்ற தயாராகியுள்ளனர். வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 15 ஆவது சட்டமன்ற தேர்தலை தமிழகம் சந்திக்கவுள்ளது. ஒவ்வொருமுறை தேர்தல் வரும்போதும் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும் ஆட்சிக்கு வந்தபின்னர் வெற்று அறிவிப்புகளை செய்வதோடு ஆட்சிகாலம் என்பது முழுமையடைகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது தமிழகத்தின் தேவையாக முன்வைத்த கோரிக்கைகள்கூட இன்றைக்கும் நிறைவேறாத சூழலில் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கவுள்ளது.

1960 களில் காங்கிரஸ் தமிழக மக்களுக்கான விருப்பங்களை புறக்கணித்த போது மக்கள் நலனை முனவைத்து டாடா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்கு பகையாளி என்று முழங்கியது திமுக. திமுக உழைப்பாளிக்கு நெருக்கமான இயக்கமாக தன்னை காட்டிக்கொண்டது. ஜனநாயகம், மாநில சுயாட்சி போன்ற முக்கிய முழக்கங்களை முன்வைத்தது. சுயமரியாதை இயக்கத்தின் வாரிசாகவும், சாதிய ஒழிப்பை தங்களுடைய கொள்ளையாகவும் ஏற்றுக் கொண்டது.

1967 இல் காங்கிரசை வீழ்த்தி தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை திமுக ஏற்றது. ரூபாய்க்கு இரண்டு படி அரிசி லட்சியம், ஒருபடி (1.2 கிலோ) நிச்சயம் என்று தேர்தல் வாக்குறுதியாக வைத்து ஆட்சிக்கு வந்தது. சில மாதங்கள் மட்டுமே ரூபாய்க்கு ஒருபடி என்ற திட்டம் அமலானது. இப்படி துவங்கிய தேர்தல் அறிக்கை அமலாக்கம் 2006 ஆம் ஆண்டில் லட்சியங்களை மறந்து இலவச தொலைக்காட்சிபெட்டி தருவதாக அறிவித்தது. அடிப்படை மக்கள் நலனை மறந்ததோடு மட்டுமல்லாமல் ஊழல் செய்து அதில் பிழைக்கக் கூடிய இயக்கமாக தன்னை சுருக்கிக் கொண்டது.

1970 களில் எம்ஜிஆரால துவக்கப்பட்ட அண்ணா திமுக தன்னை எளிய மக்களின் நண்பனாக தன்னை காட்டிக் கொண்டது. விவசாயி, மீனவ நண்பன், படகோட்டி, ரிக்ஷாகாரன், தொழிலாளி ஆகிய படங்களில் நடித்து பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்களுக்கு வாயசைத்து உழைப்பாளி மக்களின் தோழனாகக் காட்டி தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் எம்ஜிஆர். ஆட்சி அதிகாரத்துக்கு அண்ணா திமுக வந்த பிறகு மீனவ மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதும். தனியார் கல்வி நிறுவனங்களை திறந்துவிட்ட பெருமை அவர்களையே சாரும்.

1990 களில் வந்த உலகமயம் இந்திய நாட்டிலிருந்த சமூக நீதியை குலிதோண்டி புதைத்தது மட்டுமல்லாமல் சுரண்டலுக்கு மலர்பாதை ஒன்றை அமைத்து கொடுத்தது. விடுதலை போராட்டத்தின் பலன்களாக உழைப்பாளி மக்களுக்கு கிடைத்து வந்த சின்ன சின்ன வாய்ப்புகள் கூட அடைக்கப்பட்டது. இந்திய வளங்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு பெருநிறுவனங்களின் லாப குவியலில் மேலும் கொட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. கட்சிகளின் பெயர்கள் பலவாகயிருந்தாலும், மாநிலங்கள் வெவ்வேறாகயிருந்தாலும். மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா தவிர பிற மாநிலங்களில் மாற்று கருத்துகளின்றி அமலாக்கப்பட்டது.  அப்படி அமலாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமானது.

தமிழகத்தில் இன்றைக்கு உள்ள இளைஞர்கள் 1985 களுக்கு பின்னால் பிறந்தவர்கள்தான். 15 வயதில் துவங்கும் இளமை பருவம் முப்பது வரை என ஐக்கிய நாடுகள் சபை வரையறை செய்கின்றது. சமூகத்தின் ஆற்றல் மிக்க பிரிவினர்களாக இவர்கள் இருந்து வருகின்றனர். எந்தவொரு சமூகமும் இவர்களின் வாய்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற உரிய வாய்ப்பினை உருவாக்கிடுவது அவசியம். அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கி தராமல் வளர்ச்சி பற்றி பேசுவது வெற்று கூச்சல் என்பது தவிர வேறு எதுவும் இல்லை.

ஏராளமான அறிவிப்புகளும் புள்ளி விபரங்களும் புகழ் மாலைகளும் உரக்க வெளி வருகின்ற இந்த நேரத்தில் உண்மை நிலையையும் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் தற்சமயம் பார்க்க வேண்டியுள்ளது. இன்று கல்வி வியாபாரமாகியிருக்கும் நிலையில் கல்வி பயில்வதற்கே கடன் பெறுவதும், இதர செலவுகளை சந்திப்பதற்கு தங்களுடைய குடும்பத்தில் உடைமைகளையும் விற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. கல்வி பயின்று முடிக்கும் நிலையில் மிகப்பெரிய கடன் சுமையுடனேயே உழைப்பு சந்தைக்கு வந்து சேர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

கடன் நிர்பந்தம், வாழ்வதற்கான அத்தியாவசிய பொருட்களை அடைவதற்கும் குறைந்தபட்சத் தேவைகளை சந்திப்பதற்கும் உடனடியாக பணியில் அமர்வது என்பது முதல் நெருக்கடியை தருகிறது. படிப்பு முடிந்தவுடன் பணி வாய்ப்பு என்பது முதலீடாக வைத்து பல கல்லூரிகள் தங்கள் தொழிலை மிகச்சிறப்பாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய கனவுகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்திட வேலை வாய்ப்பு என்பது மிக அவசியமானதொன்றாகும்.

கடந்த 1990 முதல் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளையோ, மத்திய அரசும் கண்மூடிக் கொண்டு கடை பிடித்து வருகிறது. இதில் ஆண்ட ஆளூம் கட்சி என்ற வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னால் மட்டும் போதாது என்று மற்றொன்றை மாறி மாறி முந்தக்கூடிய ஏற்பாடும் உண்டு எனலாம். இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் 48 ஆண்டு காலம் ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்நிலையில் வேலைவாய்ப்பு என்பது எந்தநிலையில் உள்ளது. கல்விதுறையில் தான் விரும்பிய படிப்பை படிப்பதற்கு தடையேதும் இல்லாத நிலை உள்ளதா என்ற இரு கேள்விகளும் தமிழக இளைஞர்கள் ஆட்சியாளர்கள் முன்வைக்கும் வினாக்களாகும்.

அனைத்து துறைகளிளுமுள்ள காலிபணியிடங்களை நிரப்புவது எனவும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதும் பிபிஓ மையங்கள் மூலமாக ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வேலை வாய்ப்புகளும், இருபது லிட்டர் தூய்மையான குடிநீர் வழங்குவது மூலமாக 5.6 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், ஒரு லட்சம் பேருக்கு போக்குவரத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமெனவும். மீண்டும் வெண்மை புரட்சியை தமிழகத்தில் உருவாக்கி அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது. ஆகமொத்தம் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதெனவும் 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.

ஐந்தாண்டு ஆட்சி பொறுப்பில் இவற்றையெல்லாம் நிறைவேற்றிவுள்ளார்களா என்றால் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதை போல வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து வைத்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 86 லட்சம் என்பதிலிருந்தே ஆட்சியாளர்களின் வாக்குகள் பொய்யானவை என்று நிரூபிக்கிறது.

2006 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு பணியிடங்களை நிரப்புவோம் எனவும், ஒன்றியத்திற்கு ஒரு தொழிற்சாலை உருவாக்குவோம் என்று முன்வைத்தது. ஐந்தாண்டுகள் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிலிருந்தது. ஐந்துமுறை தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி பதிவியில் இருந்தார். 23 ஆண்டுகாலம் ஆட்சிலிருந்த திமுக 2016 பிப்ரவரி 21 ந் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த உறுதிமுழக்க பேரணியில் துணைமுதலமைச்சராக இருந்த ஸ்டாலின் பத்து முழக்கங்களை முன்வைத்தார். அதில் ஒன்று தமிழகம் ஊழலின் உறைவிடமாகவுள்ளது ஆட்சி, மற்றொன்று வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை காலியென்ற நிலையை மாற்றி வேலை இருக்கின்றது என்று மாற்றுவோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்து கொடுத்த  வாக்குறுதிகளை மறந்துவிட்டு கொள்ளை அடித்ததையும், கொள்கைகளை கைவிட்டு ஏமாற்றி பிழைக்கும் இவர்களின் சுயநலத்தை தமிழக இளைஞர்கள் அறிவார்கள். இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என பாரதியின் வரிகளுக்கு ஏற்ப மக்களின் நலன்காக்க இளைஞர்களின் வாழ்வு சிறக்க புதியதொரு அரசியலை, உண்மையின் வெளிச்சத்தில் புதிய பாதை உருவாக்க வேண்டும் என்பதே தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Posts