அரசியல் இளைஞர் முழக்கம்

இந்திய விடுதலை போர்: வாசித்துத் தீராத வரலாறுகள்

– கமலாலயன்

இந்தியா விடுதலை பெற்றது 1947 ஆகஸ்ட் 15 ல் தான் பிரிட்டிஷ் ஆட்சி எனம் நுகத்தடியின் கீழ் இந்தநாடு நைந்ததோ சற்றேறக் குறைய 300 ஆண்டு காலம். இதன் விடுதலைக்கான போராட்டம் நாடு தழுவிய அளவில் வெகு மக்கள் இயக்கமாக ஆனது காந்தியின் தலைமையில்தான் என்பது உண்மையின் ஒரு பக்கம். மறுபக்கத்தில் , தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து விடுதலைப் போராட்டத் தலைமையை அவர் ஏற்குமளவிற்கு சூழலைக் கனியச் செய்ததில் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஏராளமான சிறு சிறு இயக்கங்களுக்கு ஒரு பங்கு நிச்சயம் உண்டு. பஞ்சாப் மண்ணில் பகத்சிங் ஒரு புரட்சியாளனாய் மலர்வதற்கு அவரது குடும்பத்திலேயே தந்தையும், சிற்றப்பா அஜித்சிங்கும் முன்னோடிகளாய் இருந்திருக்கிறார்கள் . லாலா லஜபதிராயும் பிற மூத்த தலைவர்களும், சந்திர சேகர் ஆஸாத் போன்ற சக தோழர்களும் வெவ்வேறு அளவில் பகத்சிங்கின் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பிர்ஸா பகவான் என அழைக்கப்பட்ட பிர்ஸா முண்டா, பழங்குடியினத்தவரின் நடுவே எழுச்சி நிகழ்வதற்குக் காரணமாயிருந்தான். வடகிழக்க மாநிலத்தின் அடர்ந்த மலைக்காடுகளின் நடுவே மூங்கில் கோட்டையொன்றை அமைத்து வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடி மலைகளின் ராணி எனப் புகழ்பெற்ற கைடின்லியூவும் பழங்குடி இனப் பெண்தான். சிவகங்கைச் சீமையில் , வெள்ளையரை எதிர்த்துப் வாளேந்திப் போரிட்டு சமஸ்தானத்தை மீண்டும் வென்று ஆட்சி செய்த வீரமங்கை வேலு நாச்சியாரும், வெள்ளையரின் ஆயுதக்கிடங்கினுள் எண்ணெய் பூசிய உடலோடு குதித்து தீக்குளித்து கிடங்கையே தகர்த்ததன் மூலம் வெற்றிக்குப் பங்களித்த குயிலியும் தமிழ்நாட்டு எடுத்துக் காட்டுகள்.

1806 ல் வேலூர்ப் புரட்சி, அதற்கு முன்னும் பின்னுமாக நிகழ்ந்த பாளையக்காரர்களின் எழுச்சிகள்,1857 யில் வடஇந்தியா முழுவதிலும் நடைபெற்ற முதலாவது சுதந்திரப் பெரும்போர், சிட்டகாங் ஆயுதக் கிடங்குப் போராட்டம் என எண்ணற்ற நிகழ்வுகளால் நாட்டின் பல பகுதிகளிலும் சுதந்திரப் போரின் பொறிகள் கிளம்பி அனல் பரப்பின, .இவ்வாறு மெல்ல மெல்லக் கொதிநிலை அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்தத் தணலை முழு வேகத்தில் விசிறி விட்டு விடுதலைப் போர் பெரு நெருப்பாகக் கொழுந்து விட்டெரியச் செய்வதற்கு, காந்தியின் வருகை, பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும் செய்த உயிர்த்தியாகங்கள், இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம் வளர்ச்சி, காங்கிரசுக்குள் சோசலிஸ்ட் கட்சி, பின் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம்லீக் கட்சிகளின் தோற்றம் போன்ற பல்வேறு காரணிகள் வலுவாகப் பங்களிப்புச் செய்தவையாகும்.

விடுதலைப்போராட்டம் தீர்மானகரமான இறுதி அடியை பிரிட்டிஷ் இந்தியக் கப்பற்படைனிரின் எழுச்சி மூலம் (1946) பிரிட்டிஷ் இந்தியக் கப்பற்படையினர் கடலில் கப்பல்களில் இருந்தபடி போராடிய நாட்களில், பம்பாய், சென்னை, கல்கத்தா வீதிகளில் கடற்கரையோரம் பல்லாயிரம் தொழிலாளர்களும், பாட்டாளிகளும், சாதாரண மக்களும் அணிவகுத்து ஆர்ப்பாட்டங்களில் இறங்கி ஆதரவு தெரிவித்தனர். இந்த வளர்ச்சிப் போக்கைத் தொடர்ந்து வளர அனுமதித்தால் என்ன ஆகும் என்பதை ஊகித்தறிந்த நிலையில்தான் அடுத்த ஆண்டே அதிகாரத்தைக் கைமாற்றித் தந்துவிட்டு, எப்போதும் தங்கள் மேற்குலகச் சுரண்டலுக்கு “இந்தியாவின் நுழைவாயில் அகலத் திறந்தே இருப்பதை மட்டும் உறுதிப்படுத்தியவாறு விலகிப் போனார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்!

வரப்போகிற ஆகஸ்ட் 15 2015 இந்தியா விடுதலை பெற்ற 68 வது ஆண்டு வழக்கம் போல் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி வீர உரை நிகத்தப் போகிறார்.முப்படைகளின் அணிவகுப்பு மரியாதைகள் தூள்பறக்கும்! மாநிலத் தலைநகரங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள், அனைத்துத் தொலைக்காட்சிளிலும் சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சிகளில் சினிமா நட்சத்திரங்களின் கலந்துரையாடல்கள்.இப்படி எதுவும் குறைவின்றி நடந்தேறப் போகின்றன.

இந்தப் பகட்டாரவாரங்கள்,சரியாகக் கூர்மையான மொழியில் சொன்னால், போலித்தனமான நடிப்புச் சுதேசிகளின் கபடநாடகக் காட்சிகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். இவை ஒருபுறம் இருக்க விடுதலைப் போர் என்பது ஏதோ கத்தியின்றி ரத்தமின்றி நடந்து முடிந்த அமைதிப் புரட்சி(தானா?) என்பது பற்றிய ஒரு சரியான முடிந்தவரை முழுமையான புரிதலைப் பெறுவது நாட்டுபற்றுமிக்க நம் அனைவரது கடமை.குறிப்பாக இளைய தலைமுறையைச் சேர்ந்த நண்பர்கள், கடந்தகால வரலாற்றின் ஏடுகளிலிருந்து கற்றுகொண்டே தீரவேண்டிய அம்சங்கள் ஏராளமாய் உள்ளன. அவ்வாறு கற்கவும், புரிதல் பெறவும் அவர்கள் அவசியம் படித்தே தீர வேண்டிய புத்தகங்கள் எவை?

இக்கேள்விக்குப் பல்வேறு விதமான பதில்கள் கிடைக்கவே செய்யும். விடுதலைப் போராட்டம் என்றால் காங்கிரசும், காந்தியும் மட்டுமே மக்களின் மனங்களில் தோன்றுமாறு தொடர்ச்சியாக ஆண்ட, ஆளும் வர்க்க சக்திகள் வரலாறுகளைக் கட்டமைத்து வந்துள்ளன. ஆனால் இந்திய விடுதலைபோரின் பன்முகப்பட்ட சிக்கலான பரிமாணங்களைப் புரிந்து கொள்வதற்கு அது தொடர்பான வரலாற்று ஆவணங்களைப் பின்வருமாறு பரந்த அளவில் வகைப்படுத்தி அணுகுவது முதற்கடமையாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களான கலெக்டர்கள், நில அளவையாளர்கள், பொறியியல், கட்டவியல் நிபுணர்கள், வருவாய் அதிகாரிகள், எழுத்தர்கள், படைத்தளபதிகள், சிப்பாய்கள், போன்றவர்கள் தமது பணிகள் தொடர்பாக எழுதிச் சென்றுள்ள சுயசரிதைகள், நாட்குறிப்புகள், நினைவுப் பதிவுகள் அடங்கிய பல்லாரிக் கணக்கான பக்கங்கள் கொண்ட தொகுதிகள்.

(இவை அனேகமாக 99.99 சதவீதம் ஆங்கிலமொழியில்தான் உள்ளன.)

பிரிட்டிஷ், இந்தியப் பத்திரிகையாளர்கள் முறையே ஆங்கிலத்திலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை நேரில் கண்டும், கேட்டறிந்தும் எழுதி வெளியிட்ட செய்தி, விமர்சனக் கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள்.

இந்திய விடுதலைப் பேரியக்கத்தின் தலைவர்கள், தளபதிகள், தொண்டர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள, சுயசரிதைப் பாங்கிலான ஏராளமான நினைவுக் குறிப்புகள். விடுதலைப் போரைப் பின்னணித் திரைச் சீலைகளாகவோ அல்லது நேரடியான நிகழிடக் களங்களாகவோ அமைத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ள எண்ணற்ற இலக்கியப் படைப்புகள். (இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலுமாக.)

இங்கு நாம் தமிழில் வெளியான புத்தகங்களின் குவியலில் இருந்து குறிப்பாகச் சிலவற்றைக் காணலாம். மறைந்த மாபெரும் இடதுசாரிச் சிந்தனையாளரான இ.எம்.எஸ்.நம்புதிரிபாட் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி மொழியாக்கம் செய்யப்பெற்ற இந்திய விடுதலை போராட்ட வரலாறு , ஏ.கே.கோபாலன், பி.சுந்தரய்யா, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, அனந்தன் நம்பியார், பாலதண்டாயுதம், கே.ரமணி, வி.பி.சிந்தன், ஆர்.உமாநாத் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின் வரலாற்று நூல்கள்.

காந்தி எழுதிக் கவித்துள்ள பலநூல்களில் விடுதலைப் போராட்டம் தொடர்பான எண்ணற்ற கட்டுறைகள், ஜவஹர்லால் நேருவின் சுயசரிதை, பட்டாபி சீதாராமய்யா எழுதிய காங்கிரஸ் மகாசபை சரித்திரம், கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள், கல்பனா தத்(பிற்பாடு கல்பனா ஜோஷி) எழுதிய சிட்டகாங் ஆயுதப் போராட்ட நினைவுகள், உபேந்திரநாத் பந்த்யோபாத்தியாய் எழுதிய நாடுகடத்தப்பட்டவனின் தன் வரலாறு சிவலை இளமதி எழுதிய சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், சிவவர்மா எழுதிய பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும், அஜய்குமார் கோஷ் எழுதிய காந்தி, வ.ரா.என அழைக்கப்பட்ட வஇராமஸ்வாமி எழுதிய மகாகவி பாரதியார், ம.பொ.சிவஞானம் எழுதிய சுதந்திரப்போரில் தமிழகம் மற்றும் காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் போர், சுதந்திரப் போர்க்களம், உள்ளிட்ட சில நூல்கள் போன்றவை அவசியம் வாசிக்கப்பட வேண்டியவைகளுள் சிலவாகும்.

பகத்சிங் பற்றிய ஏராளமான நூல்கள் ஏற்கனவே வந்திருக்கின்றன. இனியும் வரும். புத்தக வியாபாரிகளின் லாப நோக்கத்திற்கென்று எதுவும் விதிவிலக்கில்லை அல்லவா ? ஆனால் வீரத்தியாகி பகத்சிங்கை வெறும் வெடிகுண்டு துப்பாக்கி ஏந்திய மாவீரன் என்று சித்தரிப்பதிலேயே பெரும்பாலான நூல்கள் போட்டி போட்டுக் கொண்டு கவனம் செலுத்துகின்றன. ஒரு சில நூல்கள் மிகுந்த சிரத்தையுடன் பகத்சிங் எவ்வளவு நுண்ணுணர்வு மிக்க அரசியல்வாதி, எவ்வளவு தீர்க்கமாக அவர் மிக இளம் வயதில் தனது சமகால அரசியல் நிகழ்வுகளை ஆராய்ந்து வெளிப்படுத்தி உள்ளன. அவற்றுள், பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்ற சுப.வீரபாண்டியன் எழுதிய நூலும், கோபால்தாக்கர்(தமிழில் நெல்லை எஸ்.வேலாயுதம்) எழுதிய மாவீரன் பகத்சிங் நூலும், சிவவர்மா, அசோக் தவாலே, அறந்தை நாராயணன் ஆகியோர் எழுதிய நூல்களும் பகத்சிங்கை மிகவும் சிறப்பான முறையில் அறிமுகம் செய்கின்றன.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிறுவன செயற்பாட்டாளரான தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் எழுதி தமிழ்நாடு அரசின் பரிசு உட்பட பல விருதுகள் பெற்ற விடுதலை தழும்புகள் நூல் இளைஞர்களின் வாசிப்பில் தவறவே விடக்கூடாத நூல். சிறு சிறு கட்டுரைகளாக வாசிக்க எளிய நடையில் எழுதப்பட்ட இந்நூல் ஏறாளமான தகவல்களின் களஞ்சியமாக அமைந்ள்ளது.

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 1806 வேலூர் புரட்சி, 1947 மற்றும் இந்திய வரலாற்றில் இளைஞர்கள் போன்ற பல நூல்கள் சிறு சிற கையேடுகளாக இந்திய வரலாற்றில் எரிமலை போல் வெடித்த நிகழ்வுகளை விவரிப்பவையாக உள்ளன.எஸ்.கே.மித்தல்(தமிழில் பாரதிப்பிரியா) எழதிய விடுதலைப்பாதையில் இந்தியா நூலும் சிறிய ஆனால் மிகச் செறிவான நூல்.

நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கிப் படைப்புகளின் வழி இந்திய விடுதலைஙப போரைஙச சித்தரித்த நூல்களும் ஏராளம், அவற்றுள் முக்கியமானவை பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம், சரத்சந்திரரின் பாரதி, நிரஞ்சனா எழுதி தமிழில் தோழர்.பி.ஆர்.யஷ்பால் எழுதிய காம்ரேட் போன்றவையாகும்.

இந்திய மொழிகள் பலவற்றிலும் இப்படிப்பட்ட நூல்கள் பல உள்ளன. ஆங்கிலம் வழியே அவற்றை நாடறியச் செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் அலட்சியமாக புறக்கணிக்கின்றன, தனிப்பட்ட தோழர்கள் முற்போக்கு இயக்கத் தேவைகளையொட்டி ஓரளவு இத்தகைய நூல்களை வெளிக்கொர்கின்றன. ஸ்டாலின் குணசேகரனின் விடுதலை வேள்வியில் போன்ற தொகுப்பு நூல்கள் எடுத்துக்காட்டுகளாகும்.

1857 எழுச்சியின் பேரோசை என்ற தலைப்பில் முனைவர் கா.மோகன்ராம் எழுதிய (வாசல் பதிப்பகம், மதுரை) மிகச் சிறந்த நூலை வாசித்தால் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் அந்த எழுச்சியின் பரிமாணங்கள் நமக்கும் புலனாகும்.

நின்று பேச நேரமில்லை போக வேண்டியது நெடுந்தூரம் என்றுதான் கட்டுரையை நிறைவு செய்ய தோன்றுகிறது. இந்திய விடுதலைப் போர் இன்னும் தன் இலக்கை முழுமையாக எட்டி விடவில்லை என்பதையே உருது மகாகவி ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸின் நாம் தேடி அலைந்த விடியல் – அதுவல்ல என்பது போன்ற கவிதைகள் காட்டும் உண்மை. தமிழில் அரங்கநாதன் என்பவர் எழுதிய இரவிலே வாங்கினோம் – விடியவே இல்லை என்ற புகழ்பெற்ற புதுக்கவிதை ஓர் உதாரணம். ப.கு.ராஜன் தமிழில் மொழியாக்கம் செய்து பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள மகாகவி ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ், வாழ்க்கை, கவிதைகள், கருத்துகள் நூலை வாசித்தால் மனதிற்பொங்கும் ஆதங்கத்தை எங்கே கொட்டுவதென அறியாமற் திகைப்போம்.

வாசிப்பது மட்டும் போதாது, ஒரு நல்ல நூலை வாசித்ததும் அதன் கருத்துகளை அசை போட்டு உள்வாங்கிக் கொண்டு குறைந்தது பத்துப் பேரிடமாவது அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வெறும் வாய்மொழி வதந்தி மலம் பிள்ளையார் பால் குடித்து ஏப்பம் விட்டதாக ஒரே நாளில் உலகம்முழுவதும் மூடத்தனத்தைப் பரப்புவதற்கு அவர்களால் முடிந்தது. நாம் ஏன் மௌனம் சாதிக்கிறோம்?

Related Posts