அரசியல் சமூகம்

இந்திய ராணுவத்தில் குழந்தைகள்

மற்ற உயிரினங்களைப் போல் இல்லை மனிதர்கள். மற்ற உயிர்கள் எல்லாம் பிறந்த உடனே நடக்கக் கற்றுக் கொள்ளும். தனக்கு நண்பன் யார் பகைவன் யார் போன்றவை அனைத்தும் அதன் ஜீனிலேயே கடத்தப்பட்டுவிடும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும். உலகை எப்படிக் கையாளவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்கு தான் கல்வி என்று ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தக் கல்வியை கொடுக்க வேண்டியது அரசாங்களின் கடமை. குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமை என்று உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் ஒரு அரசே குழந்தை தொழிலாளர்களை வைத்து இருந்தால்… அந்த நாடு கண்டிப்பாக ஒரு நாகரிக நாடாக இருக்காது என்று சொல்வீர்கள் தானே. இதை அனுமதித்து இருக்கும் அரசியல்வாதிகளும் அந்நாட்டு மக்களும் காட்டுமிராண்டிகள் என்று வசைபாடுவீர்கள் தானே. அப்படி செய்வீர்களேயானால் நீங்கள் திட்டிக் கொண்டிருப்பது நீங்கள் வாழும் பாரத மணித்திரு நாட்டையும் அதன் பிரஜையான உங்களையும் தான்.

இந்த வருடம் கடந்த ஜூலை மாதம் , ஆசிய மனித உரிமை மையம் (ஏசியன் செண்டர் பார் ஹியூமன் ரைட்ஸ் ) என்கிற அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறைந்த பட்சம் இந்தியாவில் முவ்வாயிரம் குழந்தைகள் இராணுவத்தில் இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவலை அது வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஐநூறு குழந்தைகள் இராணுவத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். கிழக்கு இந்தியப் பகுதிகளில் இரண்டாயிரத்து ஐநூறு குழந்தைகளும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று அது தெரிவிக்கிறது .

இந்திய அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் இருந்து இருக்கும் இரண்டு பெரிய பிரச்னைகள் காஷ்மீர் பிரச்னையும் மாவோயிஸ்ட்கள் பிரச்னையும் தான். இந்த இரண்டு பகுதிகளுக்குள்ளும் இன்னும் ராணுவத்தால் முழு வீச்சில் ஊடுருவ முடியவில்லை அதனால் தான் அங்கே பிறந்து வளரும் குழந்தைகளை படைகளில் சேர்த்துக் கொள்கிறது இந்திய ராணுவம் என்கிறது அந்த அறிக்கை. இப்படிச் சேர்த்துக் கொள்ளப்படும் குழந்தைகள் யாரும் அதிகாரப்பூர்வமாக இல்லை. குழந்தைகளுக்கு கல்வி தான் முக்கியம் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்தில் உரையாற்றிவிட்டு எப்படி அபிஷியலாக வைத்துக் கொள்ள முடியும்.
இந்த அறிக்கை சில அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது. ஆறில் இருந்து பன்னிரண்டு வயது குழந்தைகள் தான் பெரும்பாலும் ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறார்கள் . இவர்களை உளவு சொல்லவும் கொரியர் பையன்களாகவும் பயன்படுத்துகிறார்கள் இந்திய ராணுவத்தினர். இந்த சிறுவர்களுக்கு அடிப்படை போர் பயிற்சியும் .303 ரக துப்பாக்கியையும் இந்திய ராணுவம் வழங்குகிறது. பனிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை சண்டைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். கண்ணிவெடிகள் செய்யவும் புதைக்கவும் கூட அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதில் பெண் குழந்தைகள் என்கிற பாரபட்சம் கிடையாது. சொல்லப்போனால் சண்டையின் போது பெண் குழந்தைகளே முன்வரிசையில் பயன்படுத்தப்படுகிறார்கள். நக்சலைட்டுகள் பாலசங்கதன் என்கிற பெயரில் ஆதி வாசிக் குழந்தைகளை வற்புறுத்தி சண்டைக்குத் தயார்படுத்தி வருவது பற்றி அறிவிக்கிறது . மேலும் அவர்கள் பள்ளிக்கூடங்களை தாக்கி தகர்த்து வருகின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. அவர்கள் தாக்குதல் எல்லாம் யாரும் இல்லாத போது இரவிலேயே நிகழ்ந்திருந்தாலும் பள்ளிக் கூடங்கள் இடிக்கப்படுவதால் குழந்தைகளால் கல்வி கற்க முடியாமல் போகிறது .

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நக்சலைட்டுகள் உடனான சண்டைகளில் பெருமளவு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று இந்தியாவை எச்சரித்தது. அந்த பகுதிகளில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு குழந்தையாவது ராணுவத்திற்கு வரவேண்டும் என்று இந்தியா வற்புறுத்துவதாகவும் சொல்லியது.இந்த அறிக்கை நக்சலைட்டுகளின் மேல் இருக்கும் குற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறது.

பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட்டும் சில குற்றச் சாட்டுகளை வைக்கிறது. சட்டிகர் மாநில அரசாங்கம் முன்னூறு குழந்தைகளை பாலரக்ஷா என்கிற பெயரில் போலிஸ் படையாக வைத்திருகிறது. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக குழந்தைகளை சேர்த்தாதொடு மட்டும் அல்லாமல் பாலரக்ஷாவில் இருக்கும் குழந்தைகள் கண்டிப்பாக வாரத்திற்கு மூன்று முறை வரவேண்டும் என்றும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் இதனால் அவர்களது கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கிறது அது .

இத்தனை அவமானங்களை ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் அதன் மக்களும் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் வேதனைக்கு உரியது. தீபாவளிக்கு நமது குழந்தைகளை எல்லாம் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கச் சொல்லியும் பூந்தொட்டியும் கம்பி மத்தாப்பையும் தாண்டி வேறு வெடிகள் வெடிக்க கூடாது என்று அறிவுருத்தியும் கொண்டிருக்கும் அதே வேளையில் பல குழந்தைகள் நிஜமான துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு உயிரையும் கல்வியையும் பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையானது.

Related Posts