இதழ்கள் இளைஞர் முழக்கம்

இந்தியாவை ஆள்வது மத, சந்தை பொருளாதார அடிப்படைவாதமங்கள் – பி.சாய்நாத்

ரோஹித் வெமுலாவின் தற்கொலையானது தேசம் முழுவதும் இதயத்தை தொட்டிருக்கிறது. நாடு முழுவதும் இருக்கின்ற மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏபிவிபி-யின் செயல்பாட்டாளர் சுஷில்குமார் நீதிமன்றத்தின் அனுதாபத்தை பெறுவதற்காக வழக்கை தொடுத்துள்ளார். அவருக்கு எந்த காயமும் இல்லை. மருத்துவமனையிலும் அத்தகைய அறிகுறிகள் குறிப்பிடப்படவில்லை. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாரேயா கடிதம் எழுதியுள்ளார். மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இப்பிரச்சனையை உடனடியாக கையிலெடுத்து ரோகித் வெமுலாவை பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்து விடுதியை விட்டே நீக்கியுள்ளனர். அவருக்கான இளம் ஆராய்ச்சியாளருக்கான உதவித்தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதான் அவரை தற்கொலைக்கு தள்ளியது. ஸ்மிருதி இராணி மும்பையில் இருக்கின்ற சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர். தான் போட்டியிட்ட 3 தேர்தல்களிலும் தன்னுடைய கல்வித்தகுதியை வேறுவேறாக குறிப்பிட்டுள்ளார். ரோகித் வெமுலாவின் குடும்ப பின்னணியானது, ஒட்டு மொத்தமும் குண்டூரில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள். இந்திய கிராமங்களில் 3 சதவிகிதமானவர்கள் மட்டுமே படித்த பட்டதாரிகளாக இருக்கிறார்கள். 10இல்1 இந்தியர் மட்டுமே படித்தவராக இருக்கிறார். அத்தகைய குடும்ப பின்னணியிலிருந்து வெளியே வந்துதான் முனைவர்பட்ட ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். கல்லூரியை விட்டு இடையில் நின்ற கல்வி அமைச்சர் தான் ஒரு தலித் ஆராய்ச்சி மாணவரை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றி இருக்கிறார். ஸ்மிருதி இராணி, இப்பிரச்சனை தலித் மற்றும் தலித் அல்லாத மாணவர்களிடையேயான பிரச்சனை அல்ல என்பதை மட்டும் சரியாக சொல்லி இருக்கிறார். ஆனால், நாம் இதை உயர்சாதி இந்து அடிப்படைவாதிகளுக்கும் தலித் மாணவர்களிடையேயான பிரச்சனையாக பார்க்க வேண்டியிருக்கிறது. தோழர் சுபாஷ் கிஷோர் மீது கடுமையான முறையில் ஆர்.எஸ்.எஸ்.-ஏபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு கைது செய்து சிறையில் வைக்கப்பட்டார்.

என்னுடைய நண்பர் சித்தார்த் வரதராஜூலு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தது. அங்கே செயல்பட கூடிய ஏபிவிபி மிரட்டலான தொனியில் சித்தார்த் வரதராஜூலுவை நிகழ்ச்சியில் உரையாற்ற கூடாது என எச்சரிக்கை செய்தனர். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு வளாகத்திற்கு வளாகம் அடிப்படைவாதிகள் செயல்பாடுகள் வலுப்பெற்றுள்ளன.

இந்தியாவை ஆள்வது யார் ? தேசிய ஜனநாயக கூட்டணி என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், சமூக – மத அடிப்படைவாதமும், சந்தை பொருளாதார அடிப்படைவாதமும் கூட்டணி வைத்து இந்தியாவை ஆள்கின்றன. மத அடிப்படைவாதிகள் கடவுளே பெரியவர் என்கிறார்கள். சந்தை பொருளாதாரவாதிகள் சந்தை தான் பெரியது என்கிறார்கள். ஆனால், பொதுவாக இருக்கின்ற சமூகத்தின் ஏற்ற இறக்கத்திற்கு இந்த இரண்டும் தான் காரணமாக இருக்கின்றன. இந்த இரண்டும் தன்னுடைய லாப நோக்கத்தை அடைவதற்காக ஒன்றுபட்டுக் கொள்வார்கள். சமூக, மத அடிப்படைவாதிகள் தலித், ஆதிவாசி மற்றும் இதர சாதியினரிடையே சமூகரீதியான பிளவை உருவாக்கின்றனர். சந்தை பொருளாதார அடிப்படைவாதிகள் வர்க்கரீதியான பிளவை உருவாக்கின்றனர். இது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் ? மகாராஷ்டிராவின் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டதும் மாட்டுக்கறி வாங்குவதற்கோ, விற்பதற்கோ யாருமே இல்லை எனில் கொலப்பூர் செருப்பு தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டிருந்திருக்கும். சமூக மத அடிப்படைவாதமும், சந்தை பொருளாதார அடிப்படைவாதமும் உலகளவில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின் மிகப்பெரிய அபாயமாக திகழ்ந்து வருகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு இருக்கின்ற சவுதி அரேபியாவிலும் இத்தகைய அடிப்படைவாதங்கள் இருக்கின்றன.

உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதம் உள்ள மக்களின் மொத்த சொத்துக்களை விட 62 தனிநபர்களின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது.

இன்றைய இந்தியாவில் 100 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் அதாவது 80 கோடி மக்களின் சொத்துக்களை விட இந்த 100 பேரின் சொத்து மதிப்பு அதிகம். இன்றும் கூட 75 சதவிகித பேர் 5000க்கும் குறைவான வருமானத்தை பெறுகின்றனர். கிராமப்புறத்தில் இருக்கின்ற 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நிலம் ஏதுமற்றவர்களாக உள்ளனர். விவாசாயிகளுடைய ஒட்டுமொத்த குடும்ப வருமானம் வெறும் 6400 மட்டுமே.

கல்வியை பொறுத்தவரை 40 கோடி பேர் கல்வி நிலையத்திற்குள் கால்படாதவர்களாக இருக்கிறார்கள். இது நான் சொல்லவில்லை. இந்திய அரசாங்கத்தின் சமூக பொருளாதார அறிக்கை சொல்வது ஆகும். நாட்டில் இருக்கின்ற ராஜஸ்தான், அரியாணா மாநிலங்களில் கல்வியறிவு அற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கெடுக்க முடியாத சூழலை அங்கிருக்கும் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அரியாணாவில் 5ம் வகுப்பும், ராஜஸ்தானில் 8ம் வகுப்பும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில், 94 சதவிகித பெண்கள் மற்றும் 84 சதவிகித தலித் மக்களும் மேற்கண்ட வரையறையால் உள்ளாட்சி பொறுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்படுவார்கள். இந்த நாட்டில் உள்ள பெண்களுக்கு கல்வி கொடுக்காததற்கு மேற்கண்ட அரசாங்கத்தை தண்டிக்க வேண்டிய நீதிமன்றம் 8ம் வகுப்பை தேர்ச்சி பெறாதத பெண்களை தண்டிக்கிறது.

நாட்டில் இந்துத்துவ அடிப்படைவாதமும் சகிப்புத் தன்மையும் வளர்ந்துக் கொண்டே இருப்பதால் சமூக நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. தாத்ரி படுகொலை அதற்கான அடையாளமாக இருக்கிறது. தற்போது பகுத்தறிவுவாதிகள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்பு போராளிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கர்நாடக மாநிலத்தில் பேரா.எம்.எம்.கல்புர்கி ஆகியோர் இந்துத்துவ வகுப்புவாதிகளால் இலக்காக்கப்பட்டு கொடூரமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்படி கொலை செய்வது என்பது நம்முடைய பாரம்பரியம் அல்ல. இது இந்துத்துவவாதியான நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதில் துவங்கிய பாரம்பரியம். மூன்று பகுத்தறிவுவாதிகளை சுட்டுக் கொன்ற வரை நீடித்திருக்கிறது.

உலகமய பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் அமலான இந்த 20 ஆண்டுகளில் மூன்று இலட்சம் விவசாயிகள் நாடு முழுவதும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் சமூக நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. நம் முன் இருக்கின்ற சவால் என்னவெனில், 1980களில் முன்னிறுத்தப்பட்ட எப்படி ஒன்றுசேர்வது என்பது தான் இப்போதும் இருக்கிறது. 1948இல் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து விட்டு சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றுகின்ற போது, “உலகத்தின் அரசியல் ஜனநாயகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்பதில் நாம் பெருமைக் கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நாம் இன்னும் சமூக பொருளாதார ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்கவில்லை. எப்போது நாம் பொருளாதார ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்குகிறமோ, அப்போது சமூக முரண்பாடுகள் ஒழிக்கப்படும். அதுவரையில் ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்பது எந்தவிதமான மாற்றத்தையும் சமூகத்தில் ஏற்படுத்தாது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை பிரதமரை தேர்வு செய்வதற்கும், நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தலாம்”

நாம் தேர்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயவிவரத்தை பார்த்தால், 2004ஆம் ஆண்டு 32 சதவிகித பேரும், 2009இல் 53 சதவிகித பேரும், 2014இல் 82 சதவிகித பேரும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். இத்தகைய பின்னணியில், நாடாளுமன்றத்தில் வகுக்கப்பட கூடிய நலத்திட்டங்களுக்கான நிதி வெட்டி சுருக்கப்படுகிறது. 40 முதல் 50 சதவிகிதமான நிதியானது குழந்தை நலத்திட்டங்களில் வெட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடி திட்டத்தை பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிடம் கொடுப்பதற்கான முயற்சியை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. ஒருவேளை தனியாரிடம் அங்கன்வாடி திட்டமானது கொடுக்கப்படமேயானால், சாதாரண ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி வகுப்பை சேர்ந்த குழந்தைகளுக்கு எப்படி ஊட்டச்சத்து கிடைக்கும் ? சுதந்திரம் பெற்ற 68 ஆண்டுகள் கழித்தும் இன்னும் வறுமை மக்களிடம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்பது நாடு முழுவதும் இருக்கின்ற உழைப்பாளி மக்களுக்கு ஓரளவிற்கு உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கி இருந்தது. 100 நாள் வேலைவாய்ப்பானது தேசத்திலேயே திரிபுரா மாநிலத்தில் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது 100 வேலைத்திட்டத்திற்கான நிதியானது அதிகப்படியான முறையில் கடந்த பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் குறைத்திருக்கிறது. திரிபுராவில் இருக்கின்ற மலைவாழ் மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான இத்திட்டத்தை மோடி அரசு குறைத்திருப்பது நியாயம் தானா ? மத்தியில் நடக்கக்கூடிய பிஜேபி அரசாங்கமானது தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏராளமான கோடி ரூபாயை தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதற்காக செலவு செய்தது. மக்களுடைய வயிற்றை நிரப்புவதற்கே வழியில்லாத போது கழிவறைகள் எதற்காக ? தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை, மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கியிருந்தால் கூட பயன்பாடாய் இருந்திருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டை பார்த்தால் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியானது இப்படியெல்லாம் காணாமல் போனது என்பதை நாம் பார்க்க முடியும். 73000 கோடி ரூபாய் மதிப்பில் செல்வந்தர்கள் வாங்கி பயன்படுத்தக்கூடிய வைரம் மற்றும் தங்கத்தின் மீது வரி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது. 78000 கோடி ரூபாய் மதிப்பிலான வரி வருவாய் பெருமுதலாளிகளுக்காக சலுகையாக அளிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக 42.3 ட்ரில்லியன் சலுகையை இந்தியாவில் இருக்கின்ற முதல் 10 பெருமுதலாளிகளுக்கு அளித்து தன்னுடைய விசுவாசத்தை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

1948 இல் அம்பேத்கர் பேசிய ஜீரோ ஜனநாயகம் இன்றும் கூட ஜனநாயகமும் பொருளாதாரமும் பெற்ற ஒரு பிரிவினருக்கும், சமூகத்தில் வாழ்வதற்கு வழியே இல்லாத பிரிவினருக்குமான சமூக முரண்பாடாக இன்னும் தேசத்தில் தொடர்கிறது. கருத்துரீதியான போராட்டத்தை நடத்துவோம். காலம் நம்முடையது. அமெரிக்காவின் லூயிஸ் பிராய்ட், விக்டர் கியூகோ ஆகியோரின் மேற்கோள்களை நினைவில் கொண்டு முன்னேறுவோம்.

இந்திய மாணவர் சங்கத்தின்

15வது அகில இந்திய மாநாட்டில்

பி.சாய்நாத் அவர்களின் துவக்கரை

– தமிழில் கே.எம்.பாரதி

Related Posts