இளைஞர் முழக்கம்

இந்தியாவில் சோசலிசத்தை இளைஞர்கள் கொண்டுவருவார்கள்…

தோழர்.என்.சங்கரய்யாவுடன் ஒர் உரையாடல்

இந்திய விடுதலைக்காக 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, தேசம் விடுதலை பெற்ற பின்தான் விடுதலை. விடுதலைப் போர் வீறு கொண்டு எழுந்த போது சிறுவன் என ஓரம் ஒதுங்கி நிற்காமல் பிரிட்டிஷாரைஅடித்து விரட்டிட மாணவர்களை அணிதிரட்டிய விடுதலைப் போராட்ட வீரர் தோழர்.என்.சங்கரய்யா அவர்களைச் சந்தித்தோம்.

வயது 94 கம்பீரமான தோற்றம், லட்சியத்தின் மீது துளியும் தளரா நம்பிக்கை, மிகக்கூர்மையான நினைவாற்றல், 70 ஆண்டுகளுக்கு முன்நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தை, தன் பங்கேற்பின் பதிவுகளை நம் கண்முன் விவரிக்கிறார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உள்ள 10 இலட்சம் உறுப்பினர்களுக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் துவங்கிய தோழர் சங்கரய்யாவுடன் இப்போது நீங்கள்..

இமு : விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவிய சூழல் போராளிகள் எதிர் கொண்ட பிரச்சனைகள் குறித்து கூறுங்கள்.

பதில் : விடுதலைப் போராட்ட காலம் என்பது பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் இல்லாத காலமாகும். பிரிட்டிஷாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவது என்பது மிகவும் கடினமான செயலாக இருந்த காலம் அது. ஆனாலும், பிரிட்டீசாரை எப்படி நாட்டை விட்டு விரட்டுவது என்பதே மக்கள் சிந்தித்த ஒரே விசயமாகும். சுதந்திரத்தைப் பற்றிப் பேசினால் சிறைவாசம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால் கொடிய அடக்குமுறைகளும், தூக்குத் தண்டனை போன்ற கடும் தண்டனைகளும் இருந்த காலமாகும். இன்றைக்கு இருப்பதைப் போல் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் எப்படி ஆட்சியைப் பிடிப்பது அதை எப்படி நடத்துவது என்று போட்டா போட்டிக்கே இடமில்லாக் காலமாகும் அது.

பதவியைப் பற்றியோ, பதவி கிடைத்தால் ஏற்படும் சுகபோகங்களைப் பற்றியோ சிந்திப்பதற்கே இடமில்லாக் காலமாக இருந்தது.

இத்தகையப் பின்னணி கொண்ட இருண்ட காலத்தில்தான் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பங்கெடுத்த விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவைவிட்டு தானாக வெளியேறவில்லை. இமயம் முதல் குமரிவரை, மும்பை முதல் அசாம்வரை ,இந்தியாவின் எல்லா மொழிகளும் பேசக்கூடிய அனைத்துப் பகுதி மக்களும் விடுதலை என்ற ஒரே குறிக்கோளுக்காக இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய அடக்குமுறைகளைக் கடந்து சாதி, மதம், இனம், என வேறுபாடுகளைத் துறந்து இந்திய மக்களின் ஒன்றுபட்ட நீண்ட போராட்டத்தின் காரணமாகத்தான் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விரட்டியடிக்கப்பட்டது. இவ்வாறாக, இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராடியதால் கிடைத்த இந்திய சுதந்திரத்தை அபகரிக்க, ஏகாதிபத்திய சக்திகள் கடும் அச்சுறுத்தல் விடுக்கின்றன. அதை எதிர்கொண்டு சுதந்திரத்தைப் பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும்.

கேள்வி : விடுதலைப் போராட்டத்தில் உங்களைப் போன்ற அன்றைய இளைஞர்களை ஈர்த்த சம்பவமாக எதைக் கருதுகிறீர்கள் ?

பதில் : 1931 மார்ச் 23 அன்று மாலையில் பிரிட்டிஷாரின் கொடூரக் கரங்களால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மாவீரர்கள் தூக்கிலேற்றி கொல்லப்பட்ட செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. தேச விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த இவ்வீரர்களின் மரணம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்தக் கோபம் அன்று நான் வசித்து வந்த இந்தியாவின் தென் கோடியான தூத்துக்குடியிலும் எதிரொலித்தது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், பொது மக்கள் ஆவேசத்துடன் பங்கேற்ற எழுச்சியான ஊர்வலங்களைக் கண்டேன். அத்தகைய ஊர்வலங்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வாழ்க! பிரிட்டிஷ் அடக்குமுறை ஆட்சி ஒழிக! என்ற கோஷங்களை முழங்கினர். இந்தியா முழுவதும் இந்த முழக்கங்களே எதிரொலித்தன. இந்த மூவரின் வீர மரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் அடிப்படையை, அதன் அஸ்திவாரத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்தது.

எனவே, இன்றும் இந்திய இளைஞர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் பதாகையை உயர்த்திப் பிடித்து ஜனநாயகத்தை நோக்கியும், சோசலிசத்தை நோக்கியும் வீர நடைபோடுவார்கள் என நான் நம்புகிறேன்.

அதேபோல், தமிழ்நாட்டில் கப்பலொடிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி ஆகியோர், 1908ஆம் ஆண்டிலேயே திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்திய மாபெரும் கிளர்ச்சிகளை நினைவுகூற விரும்புகிறேன். சிதம்பரனார் சிறைப்பட்டு, கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுத்து, கடைசியில் கண்ணனூரில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதைப்பற்றி பரலி.சு.நெல்லையப்பர் எழுதிய வ.உ.சிதம்பரம்பிள்ளை சரித்திரம் என்ற நூலை வாசிக்கும்படி நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் ஆகியோர் நடத்தியப் போராட்டங்களும், செய்திட்ட தியாகங்களும் இந்திய விடுதலைக்கு வித்திட்டது. தேசீய வாதிகள், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் ஆகியோர் ஈடுபட்ட மாபெரும் போராட்டம் வெற்றி கண்டது. அதனுடைய பாரம்பரியத்தை தலைமேற்கொண்டு, சாதிவேறுபாடுகள், மதவேறுபாடுகள் இன்றி பல மொழிகள் பேசும் இந்திய மக்கள் இந்த சுதந்திர திருநாட்டில் ஜனநாயகத்துக்காகப் போராடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தைத் தொடர்ந்து, தோழர். பகத்சிங் கூறிபடி, சோசலிசத்தை நோக்கிப்போராடுவதே சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு நாம் செய்யவேண்டிய நன்றிக்கடனாகும்.

.இன்னுமொரு முக்கியப் போராட்டம், பம்பாயில் இருந்த இந்திய கப்பற்படை வீரர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கியக் கலகத்தை உருவாக்கி நடத்தியதுதான் பிரிட்டீஸ் ஆட்சியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கையாக அமைந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய கப்பற்கடை வீரர்களை கொடுரமாக அடக்கினார்கள், அடக்குமுறைகளுக்கு எதிராகவும், கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாகவும் இந்தியாவில் பல நகரங்களில் கிளர்ச்சிகள் சக்திவாய்ந்த அளவில் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பிரிட்டிஷார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பம்பாய் நகரத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்டோர்களை சுட்டுக் கொன்றனர்.

இந்தக் கொடிய நிகழ்விற்குப் பின் விடுதலைப் போராட்டம் மிகவும் தீவிரமானது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஷாரின் இராணுவ வாரிகளை வழி மறித்து, சிப்பாய்களை கீழிறக்கிவிட்டு, இராணுவ லாரிகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள். மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சு நடுங்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இனி ஒரு கணம் கூட ஆட்சியில் நீடித்திட முடியாது என்று உணர்ந்த பிறகுதான் ஆட்சியிலிருந்து வெளியேறினார்கள். இதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி : விடுதலைப் போராட்டத்தின் போது மதவாத சக்திகளின் செயல்பாடுகள் எப்படியானதாக இருந்தன?

பதில் : இன்று மதவாத சக்திகள் மக்கள் ஒற்றுமைக்கு குறுக்கே நிற்பதைப் போலவே விடுதலைப் போராட்ட காலத்திலும் மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்திற்கு குறுக்கே நின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மதவாத சக்திகள் மதரீதியாக பிளவுபடுத்தி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலின் பெயரில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம் உருவாகமல் தடுத்தார்கள். விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த பகுதிகளில் வகுப்புக் கலவரத்தை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி வந்தனர்.

இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்ட இந்திய மக்கள், தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், இன்னும் பிற முற்போக்கு சக்திளோடு இணைந்து பிரிட்டிஷார் மற்றும் மதவாத சக்திகளின் சதித் திட்டத்தை முறியடித்து பிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

கேள்வி : விடுதலைப் போராட்ட வீரர் என்கிற பார்வையில் இன்றைய அரசியல் சூழல் குறித்து உங்கள் கருத்து.

பதில் : இன்றைய அரசியல் சூழல் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மத்திய பாஜக ஆட்சி, மதவெறி சித்தாந்தத்தை கடைப்பிடிக்கிற ஆர்எஸ்எஸ் எனும் இயக்கத்தால் தலைமை தாங்கப்படுகிறது. சிறுபான்மை மதங்களை சார்ந்த மக்களுக்கு எதிராகக் கலவரங்களை உண்டாக்கி ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதைத்தான் குஜராத் கலவரம் தவங்கி, முசாபர் கலவரம் வரை தற்போது ஜார்கண்ட் ஜம்ஷட்பூர் வகுப்க் கலவரம் வரையான நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ஜம்ஷட்பூர் என்பது தொழில் கேந்திரம் கொண்ட நகரமாகும் இந்தியாவின் உருக்கு அலைகளும், பல கனரக தொழிற்சாலைகளும் கொண்ட நகரம். அம்மாநிலத்தில் அமைந்திருப்பது பாஜக ஆட்சியாகும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வகுப்புக் கலவரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

பாஜக தலைமையிலான மத்திய ஆட்சி தாராளமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அன்னியப் பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கவும், இந்தியப் பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்தை பாதுகாத்திடவும்தான் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் இந்தியாவின் வளர்ச்சி என்று கூறுகிறார்கள்.

பிற்போக்கான பொருளாதாரக் கொள்கையை ஒரு பக்கம் அமுலாக்கிக் கொண்டே, எதேச்சிகார ஆட்சியை நோக்கியான நடவடிக்கைளையும் எடுத்து வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நீண்ட காலம் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகிறது, இத்தகைய பிற்போக்கானப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், உண்மையான தொழில்வளர்ச்சியை ஏற்படுத்தவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டி போராடுவதே இந்திய மக்கள் முன் உள்ள மிகவும் அவசர அவசியமான கடமையாகும்.

அதேபோல், மத்தியில் ஆளும் சக்திகள் எதேச்சிகாரத்தை நோக்கி நகர்வது, வகுப்புக் கலவரங்களை உருவாக்குவது, மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு எதிரான மிகவும் பிற்போக்கான கொள்கையைப் பின்பற்றுதல் போன்ற இந்த மூன்று கேடுகளை செல்கின்றனர். இதை எதிர்த்து சாதி, மத, மொழி வித்தியாசமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழக்கூடிய மக்களும், எவ்வாறு இந்திய விடுதலைக்காகப் போராடினார்களோ அதே உறுதியுடன் மீண்டும் போராட வேண்டும் என இந்திய மக்களிடத்தில் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, வகுப்புவாதத்தை எதிர்த்தும், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும், பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தும், எதேச்சதிகாரத்தையும் நோக்கி செல்லும் நடவடிக்கையை எதிர்த்தும், போராடிப் பெற்ற இந்திய சுதந்திரத்தைப் பாதுகாத்தும், இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தும்படியும் பாடுபட அனைத்து இளைஞர்களையும், யுவதிகளையும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மேற்கண்ட லட்சியங்களுக்காக மகத்தான போராட்டத்தை நடத்துவதில், தமிழகம் இந்த இயக்கத்தின் பிரதானமான அங்கமாக இருக்கிறது. எனவே, இந்த இயக்கத்தில் உள்ள ஊழியர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றுணர்ந்து, அதிலுள்ள சிறப்பம்சங்களையும், பாடல்களையும், கிளர்ச்சிப் பிரச்சாரங்களின்போது மேற்கோள்காட்டி இடதுசாரிக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள், மத்தியதரவர்க்கத்தினர் ஆகியோருடன் ஒன்றுசேர்ந்தும் லட்சியங்களை அடையப் பாடுபட வேண்டும்.

அதேபோல், அனைத்து மதங்களிலும் உள்ள இளைஞர்களையும், பெண்களையும் மட்டுமில்லாது, பல்வேறு சித்தாந்தங்களைப் பின்பற்றக்கூடியவர்களையும் வென்றெடுத்து நம்மோடு இணைக்கக்கூடிய பணியினைச் செய்வதன் மூலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை மாபெரும் இயக்கமாக தமிழகத்தில் விரிவுபடுத்திட வேண்டும் என்று நான் தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

ஒய்வறியா அந்தப்போராளியின் குரலில், இன்னும் அதே எழுச்சி, அதே வேகம், அதே நம்பிக்கை.

பகத்சிங்கின் சோசலிசம் என்ற வார்த்தைகளை ஒலிக்கும்போதெல்லாம், இந்திய இளைஞர்கள் அதைச்செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் தோழர்.என்.சங்கரய்யாவின் வார்த்தைகள் நமது நெஞ்சுக்கும், செயலுக்கும் உரமாகட்டும்.

சந்திப்பு; எம்.தாமு, அ.விஜயகுமார், சே.செல்வராஜ்

Related Posts