அரசியல்

இது நமக்கான போர் அல்ல…!

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா? என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன.  குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் உயிருள்ள, உணர்ச்சியுள்ள ஒரு பெருந்திரள் மக்கள் கூட்டமே வசித்து வருகிறது.

பொம்மையிடம் விருப்பம் கேட்க முடியாது, ஆனால் உயிர் உணர்ச்சியுள்ள மக்களிடம் நிச்சயம் கேட்க வேண்டும். காஷ்மீரில் ஒரு சிலர் காஷ்மீர் பாகிஸ்தானில் சேர வேண்டும் என்றும், சிலர் இந்தியாவிடம் சேரவேண்டும் என்றும், இல்லை காஷ்மீர் காஷ்மீரீகளுக்கே என்றும் கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். பாக். ஆக்கிரப்பு காஷ்மீர் (PoK) மற்றும் இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் (IoK) என்றும் மாறி மாறி இருவரும் அங்குள்ள மக்களை பந்தாடியிருக்கிறார்கள். என்னை பொருத்தவரையில், காஷ்மீர் எப்படி இருக்க வேண்டும், யாருடன் இருக்க வேண்டும் (அல்லது) தனியே இருக்க வேண்டுமா என்பதை காஷீமீரில் வாழும் மக்களே முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தியோ அல்லது வேறு ஜனநாயக முறைகளின் மூலமோ தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

என்னுடைய கருத்து ஒரு புறம் இருக்கட்டும். இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் உருவானது பாகிஸ்தான். ஆனால் இந்தியா, தான் ஒரு மதச்சாற்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசாகத்தான் இருக்கும் என்று தெளிவாக பிரகடனப் படுத்தியது. அதன் அடிப்படையிலேயே அரசியல் சாசனமும் இயற்றப்பட்டது. இந்தியாவில் இந்து, கிறிஸ்த்தவம், இஸ்லாம், ஜெயின், சீக்கியம், புத்தம், நாத்திகர்கள் என்று பல வேற்றுமை கொண்ட மக்களை நாம் பார்க்க முடிகிறது. இந்த வேற்றுமையில் ஒற்றுமையில் (Unity in Diversity) தான் நாம் பெருமைப் பட்டுக் கொள்ள முடியுமே தவிர, காலாவதியாகி நாம் தேவையில்லை என்று தூக்கி எறிந்த மன்னர் ஆட்சி முறையில், ஒரு சில மன்னர்கள் அவரவர் மத நம்பிக்கைகளை நிலை நாட்ட செய்த கொடுமைகளுக்காகவும், இந்தியா இந்துக்களின் நாடாக இருந்தது என்ற இந்துத்துவ வாதிகளின் பழைய கதையும், அதனை மீட்டெடுப்போம் என்ற அவர்களின் கோஷமும், இஸ்லாமிய நாடு என்று வாஹாபியசம் பேசும் ISIS போன்ற அமைப்புகளிலிருந்து இவர்கள் எந்த விதத்திலும் வேறுபடவில்லை என்று தெளிவாக காட்டுகிறது.

நீங்கள் ஒரு இந்துவாக (அல்லது) ஒரு கிறிஸ்தவராக (அல்லது) ஒரு இஸ்லாமியராக (அல்லது) ஒரு நாத்திகராக இருக்கலாம். உங்கள் நட்பு வட்டத்தையோ அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தையோ அல்லது குடியிருக்கும் இடத்தையோ சுற்றிப் பாருங்கள். நம்மைச் சுற்றி பல அடையாளங்கள் கொண்ட மக்களோடு நாம் வாழ்வதில் என்ன சிக்கல் இருக்கிறது? மக்களாகிய நாம் நட்புடன் தான் வாழ்ந்து வருகிறோம். தினசரி பொருட்தேவை (material needs) மற்றும் ஆன்மீகத் (spritual needs) தேவையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு மனிதர்களோடும் உறவாடுகிறோம். ஆன்மீகத் தேவை என்பது கடவுளை நோக்கித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் அது ஒரு குறுகிய பார்வை. கடவுளை மறுப்பவர்களுக்கும் ஆன்மீகத் தேவை இருக்கும் என்பதே உண்மை.

இப்படி ஒவ்வொரு நாடும், ஏதோ ஒரு மதத்தை அல்லது ஏதோ ஒரேயொரு அடையளாத்தின் கீழ் கொண்டுவர நினைத்தால் நடைமுறையில் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். மீண்டும் மன்னர் ஆட்சியை நோக்கி நகர வேண்டியத்துதான். அப்படி ஒரு முயற்சியை தான் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியில் நாம் பார்த்தோம். அதன் கோர விளைவுகள் நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். இப்படி ஒரு வாய்பு என்பது முதலாளித்துவத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இரு நாடுகளுக்கிடையிலான சண்டைகள் தானாக தோன்றியிருந்தாலும், தீர்வை நோக்கி அவர்கள் நகராமல் பார்த்துக் கொள்ள முதலாலித்துவ நாடுகள் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் மிக சாதூர்யமாக இருவரிடமும் நட்பு பேணுவது போல் கலகம் மூட்டிவிடுவர்.

இருநாடுகளுக்கும் ஆயுதங்கள் வழங்குவது, முதற்கொண்டு இது தொடர்கிறது. தற்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சூழ்ந்துக் கொண்டிருக்கும் போர் மேகங்களை நாம் புரிந்துக் கொள்ள வேண்டுமாயின் இவற்றை புரிந்து கொளவது அவசியமாகிறது. இந்தியாவில் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசாங்கம் ஒரு வலதுசாரி அரசாங்கம், குறிப்பாக ஒரு மதக் கோட்பாட்டை வலியுறுத்தும் அரசாங்கம். முதலில் தேசியவாதம் (Nationalism) என்னும் போர்வையில் மக்களை தூண்டிவிடுவது, பின் மதக்கொள்கையை புகுத்துவது தான் இவர்களின் தற்போதைய யுக்தியாக இருக்கிறது. ஏற்கனவே சிக்கலில் இருக்கும் ஒரு இஸ்லாமிய நாட்டுடன் போர் என்பதன் மூலம், இந்நாட்டு மக்கள் அனைவரும் இஸ்லாமை வெறுக்க வேண்டும், அவர்களை எதிரியாக பார்க்க வேண்டும் என்ற யுக்தியும், பின் அதிலிருந்து இந்துக்களின் வலிமை என்ற போலி கொளரவமும் கொண்டு வருவதே இவர்களின் நோக்கம்.

உரி என்னும் இடத்தில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி என்பது சரியே! ஆனால் பயங்கரவாதிகள் உருவாகிக் கொண்டிருக்கும் காரணத்தின் வேரை அகற்றாமல் அவ்வப்போது பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது கண்துடைப்பு. இது இரண்டு நாட்டின் அரசாங்கத்திற்கும் மக்களை மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், சண்டைகள் தீர்க்கப்படாமல் தொடர்வதற்கும் ஒரு மிகப் பெரிய ஆயுதம் பயங்கரவாதம். உரியை நம் இராணுவம் நெருங்கிய உடனேயே பாகிஸ்தானில் இருக்கும் பிற்போக்கு (reactionary conservatives) அமைப்புகள் தன் நாட்டு இராணுவத்தை பலப்படுத்த வேண்டும், எல்லைகட்டுப்பாடுகள் கெடுபிடியாக்க வேண்டும் என்று முற்படும். இதுவே போர் மேகங்கள் என நான் முதலில் கூறியது. இவ்வாறு போர் மேகம் சூழ்ந்துவிட்டால், நம் தாக்குதல் தான் முதலாவதாக பலமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முற்படும். அந்தந்த அரசாங்கள் ஏற்கனவே முளை சலவை செய்யப்பட்ட தன் நாட்டு மக்களிடம் மேலும் செல்வாக்கு கூட தாக்குதல் நடத்தக் கூடும் அபாயம் உருவாகும்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே! இரண்டு நாட்டிற்கும் அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இருக்கும் வரை எப்படி அமைதி சாத்தியமாகும்? இரண்டு நாட்டின் இராணுவத்திற்கு மட்டுமல்ல, உலகிலுள்ள ISIS போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்குக் கூட U.S Arms Industry-யின் ஆயுதங்களே உபயோகப் படுத்தப்படுகின்றன. முதாலாளித்துவத்தை பொருத்தமட்டில் எல்லைப் பிரச்சனை உள்ள நாடுகள், இயற்கை வளங்கள் அதிகம் உள்ள நாடுகள் இவையனைத்தும் அவர்களின் சந்தையே! இது இஸ்ரேல் – பாலஸ்தீனம், சிரியா, அரபு நாடுகள் போன்ற நாடுகளை கவனித்தாலும் நமக்கு புரியும்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கொண்டாடும் சிலர், இந்தியாவின் (இவர்கள் மொழியில் பாரத மாதா) பிரதான எதிரியென இவர்கள் கருதும் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவது அமெரிக்கா என்ற நாடு என்று தெரியும் என்றால், மோடியின் அமெரிக்க பயணத்தை இவர்கள் கொண்டாடியதே ஒரு முரண்பாடான விநோத வேடிக்கை. ஒருவேளை இவையெல்லாம தெரியாது என்றால் உங்கள் அமைப்பே உங்களுக்கு இவற்றை கற்பிக்காமல் துரோகம் செய்கிறது என்று தான் பொருள். இவர்களின் கொள்கைப் படியே, இந்தியா உடனடியாக அமெரிக்கவுடனான உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தேச விரோதிகள் ஆக்கப்பட வேண்டும்? செய்வார்களா? முடியாது, அங்கிருந்து இவர்களுக்கும் எல்லாம் வருகிறதே!

State Sponsored Terrorism என்பது, ஒரு அரசாங்கமே பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது என்பது தான். எது எப்படியாயினும், இந்தியாவில் உள்ள மக்களான நாம் வாழ வேண்டும் என்றால் நம் சுற்றம் அழிய வேண்டும் என்று நினைக்க மாட்டோம், இதுவே தான் அனைத்து நாட்டின் மக்களின் எண்ணமும் கூட. பாகிஸ்தான் உட்பட. ஆனால் மக்களின் இந்த மனநிலையை அவ்வப்போது தத்தம் தேவைகளுக்காக ஆட்சியமைக்கும் அந்தந்த நாட்டு அரசுகள் மூளைச் சலவை செய்து மக்கள் தான் போரை விரும்புவது போல் சித்தரிக்கின்றனர். நமது பெயரில் நடத்தப்படும் போர்கள் நம்முடையதல்ல.

என்னைப் பொறுத்த வரையில் போர் என்று ஒன்று நடந்தால் அது மக்களின் ஒன்றுப்பட்ட சக்தியால் ஜனநாயக மாண்புகளை அழிக்கும், மக்கள் ஒற்றுமையை மொழி, இன, மத, தேச அடையாளங்கள் பூசி சீர்குலைக்க நினைக்கும் ஆளும் அதிகார வர்க்கங்கள் மீது நடத்தப்பட வேண்டும். அதுவரையில் எந்தப் போரும் நம்முடையதல்ல. #ThisIsNotOurWar

Related Posts