இதழ்கள் இளைஞர் முழக்கம்

‘இதுதான் வளர்ச்சி என்றால் இந்த வளர்ச்சி எங்களுக்குத் தேவையில்லை’ (நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’) -எஸ்.கவிவர்மன்

‘குடம் பத்து ரூபாய், சுத்தீகரிக்கப்பட்ட மினரல் வாட்டர், தேவைப்படுவோர் வண்டிய நிறுத்துங்க’ இது பரவாலாக புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் வாகனங்களில் சிண்டெக்ஸ் டாங்குகளை வைத்து குடிநீர் விற்பனை செய்யும் குட்டி வியாபாரிகளின் வாகனத்தின் மைக் எழுப்பும் ஒலி. புதுக்கோட்டை மிகவும் பின்தங்கிய மாவட்டம், தண்ணியில்லாக் காடு என்று சொல்வார்களே அதுபோன்ற நிலைமைதான் இங்கு. கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லை. இந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணமென்று புதுக்கோட்டையில் 6 பேர் இறந்துள்ளனர்.

நீண்ட காலமாக காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர். ஏற்கனவே பல ஆயிரம் ஏக்கர் இயற்கை காடுகளை ஆட்சியாளர்களின் பினாமிகள் அழித்து தைலமரங்களை நட்டு மேலும் வறட்சியை உண்டாக்கியுள்ளனர். தனியார் பேர்ப்பர் மில்களுக்கு தீனிபோட இந்த தைல மரங்கள் திட்டமிட்டு இயற்கையை அழித்து புதுக்கோட்டையில் வளர்க்கப்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் தைலமரக்காடுகள் இருப்பதால் பெய்யும் மழை ஏரி குளங்களுக்கு செல்லவிடாமல் ஆளுயர வரப்புகள் அமைத்து மழைநீரை தடுத்துவிடுகின்றனர். இப்படி குடிக்கும் நீருக்கே அல்லல் படும் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் முற்றிலும் பாலைவனமாக்கி புதுக்கோட்டையை மட்டுமல்ல காவிரி படுகை முழுவதையும் குறிவைத்து கொள்ளையடிக்க துணிந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

மாவட்டத்தின் மிகச் சிறந்த விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள் என பேதமில்லாமல் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இது புதுக்கோட்டை மாவட்டத்தை மட்டும் பாதிப்புக்குள்ளாக்கும் என்று சொல்லமுடியாது. தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியான நெடுவாசல் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் உள்ளது. நெடுவாசலை தலைமையிடமாக்கொண்டு காவிரிப் படுகை முழுவதிலும் இத்திட்டம் விரிவடையும் என்பதில் சந்தேகமில்லை. தஞ்சை, திருவாரூர் நாகை, கடலூர், பாண்டிச்சேரி என தமிழகத்தையே கூறுபோடும் சதிதிட்டம் இதில் அடங்கியுள்ளது. நெடுவாசலில் கடந்த 2006-ஆம் ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. நெடுவாசலை மையமாகக்கொண்டு வடகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி ஆகிய ஊர்களில் துளையிட்டு ஆய்வுப்பணிகள் நடந்திருக்கின்றன.

இந்த திட்டத்தில் 6,000 அடிக்கு ஆழ்துளையிட்டு பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. இதற்காக படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களாக ஆழ்துளையிடப்படும். இதன் காரணமாக கடல் நீர் உட்புகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே விவசாயிகளின் அச்சம். இதன் காரணமாக பல லட்சம் ஏக்கர் நிலம், உப்பு நிலமாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் நெடுவாசலை சுற்றி 100 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது.

தமிழகத்தின் ஒட்டு மொத்த நெல் உற்பத்தியில் 36 சதம் தஞ்சை மண்டலத்திலிருந்து கிடைத்தது. ‘சோழ மண்டலம் சோறுடைத்து’ என்பார்கள். காவிரி நதிநீர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் இன்று நிலைமை மிகமோசமடைந்து வருகிறது. 99சதம் விவசாயமே பிரதானமாகக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு தொழிற்சாலைகளோ, வேலைவாய்ப்புகளோ கிடையாது. ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் வந்தால் 500 பேருக்கு வேலைகிடைக்கும் என்று சொல்லப்படுவதுதான் மிகவும் அவலமான செய்தி. 5லட்சம் மக்களையும், 2லட்சம் ஏக்கர் விவசாத்தையும் அழித்துவிட்டு இந்த நாசகரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? சில கண்டெய்னர்கள் மட்டுமே திரவ எரிவாயு நிரப்ப வந்துபோகும். இது தவிர வேறு எந்த வளர்ச்சியும் அங்கு இருக்கப்போவதில்லை.

நிலத்தடி நீரை சுரண்டி, விவசாய வளத்தை அழித்து, மக்கள் வாழ்வை சூரையாடி வரும் வளர்ச்சி நெடுவாசலுக்கு அல்ல, விவசாய நிலங்களிலும் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும் நாட்டில் எங்குமே தேவையில்லை என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் உரத்த குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Related Posts