அறிவியல்

இணைய சுதந்திரத்திற்காகப் போராடி மறைந்த ஆரோன்…

கடந்த ஆண்டு சனவரி 11 , அமெரிக்காவைச் சேர்ந்த ஆரோன் தனது 26 வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்னர், அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கை எதிர்த்து 2 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருந்தார். அவ்வழக்கின் மூலம் அவருக்கு 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அபராதமும் கிடைத்திருக்கக்கூடும். இரண்டு ஆண்டுகள் போராடியும், அவரது இரண்டாவது கோரிக்கை மனுவும் தள்ளுபடியான நிலையில், தற்கொலை முடிவைத்தேர்ந்தெடுத்தார் ஆரோன்.

ஆரோன் செய்த குற்றமென்ன?

எம்.ஐ.டி. என்கிற அமெரிக்கப் பல்கலைக்கழகம், தன்னுடைய மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை காசுக்கு விற்றுக்கொண்டும், மற்றவர்களின் பார்வைக்கு அனுமதிக்காமல் பாதுகாத்தும் வைத்திருந்த நிலையினை மாற்றி, எல்லோருக்கும் கிடைக்கச் செய்ததுதான் ஆரோன் மீது சுமத்தப்பட்ட ஒரே குற்றம். அறிவியலையும் அதன் ஆய்வுகளையும் எல்லோருக்குமானதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதே அவர் செய்த குற்றமாம்.

எதற்காகச் செய்தார்?

கத்திரிக்காயை சமைத்து உண்ணலாம் என்றும், அரளிவிதை உடலுக்கு நஞ்சு என்றும் நமக்குச் சொல்லித்தந்த நமது முன்னோர் எவரும், அதற்கான பிரதிபலனை எதிர்பார்த்திருக்கவில்லை. அறிவியலும் தொழிற்நுட்பமும் எல்லோருக்கும் பொதுவானதாக மாறுகிறபோதுதான், ஒருவர் விட்ட இடத்திலிருந்து மற்றவர் தொடரவும், பல அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவரவும் எளிதாக இருக்கும். அதனால் அறிவியலைக் கற்பதற்கு எவ்விதத் தடைகளும் இருக்கக்கூடாதென்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவராக இருந்தார் ஆரோன். இன்றைக்கு பல்கலைக்கழகங்கள் எல்லாம், ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிற எல்சவீர் போன்ற நிறுவனங்கள் நிர்ணயிக்கிற மிகப்பெரிய தொகையினைக் கொடுத்துதான், அறிவியல் ஆய்வு கட்டுரைகளை வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்திய பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரையில், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களின் ஆய்வுக்கட்டுரைகளை பெறுவதற்கு மிகப்பெரிய தொகையினை செலவழிக்க வேண்டியிருக்கிறது. உலகின் எண்ணற்ற ஏழை நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் நிலை அதைவிடவும் மோசம். இதனை எதிர்த்தே, காசுக்கு விற்றுக்கொண்டிருந்த ஆய்வுக்கட்டுரைகளை எம்.ஐ.டி.யின் மின்நூலகத்திலிருந்து தரவிறக்கம் செய்து மக்களின் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். அதன்பிறகு, வேறு வழியின்றி எம்.ஐ.டி.யின் மின்நூலகமே லட்சக்கணக்கான கட்டுரைகளை பொதுத்தளத்திற்கு கொண்டுவந்தது. ஆரோன் மீது வழக்கு தொடுக்காமல் விட்டது அம்மின்நூலக நிறுவனம். ஆனால், அமெரிக்க  அரசோ, ஆரோனிற்கும் அவரைப் பின்தொடர நினைப்போருக்கும் ஒரு பாடம்கற்பிக்க நினைத்து, அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

ஆரோன் வேறு என்னவெல்லாம் செய்தார்?

இளவயதிலேயே மிகப்பெரிய அறிவாளியாகத் திகழ்ந்தார் ஆரோன். தன்னுடைய 14 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயங்குவதற்கான வரையறை குறித்த ஆய்விதழை எழுதியிருக்கிறார். 20 வயதிற்குள்ளாகவே ரெட்டிட் என்கிற செய்தித்தள நிறுவனத்தை உருவாக்கினார். இணையத் தணிக்கை முறைக்கு எதிராகவும், கட்டற்ற அறிவுசார் விடுதலைக்காகவும் ஏராளமான நடவடிக்கைகளில்/போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். விக்கிபீடியாவிற்கும், படைப்பாக்க பொதுமங்களின் உரிமைக்கும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

இலட்சக்கணக்கான நீதிமன்ற ஆவணங்களை எடுத்து யார் வேண்டுமானாலும் படித்துக்கொள்ளும் வகையில் மக்களுக்காக எடுத்து பொதுவாக்கியிருக்கிறார். அவற்றையெல்லாம் காசு கொடுத்து மட்டுமே வாங்கவேண்டியிருந்த நிலையினை மாற்றி, இலவசமாக கிடைக்க வழிவகைசெய்தார். அவையெல்லாம் பொதுச்சொத்து என்றும், ஆய்வு மாணவர்களுக்கு நிச்சயம் பயன்படும் என்றும் வாதிட்டார். அப்போதே அவர் மீது வழக்கு தொடுக்க துடித்தது அமெரிக்க அரசு. ஆனால் சட்டப்படியான அவரது வாதம், வழக்கு தொடுக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இணையப் பயனாளர்களையும் இணையதளங்களையும் முடக்க முயன்ற சோபா என்கிற இணைய தணிக்கைச் சட்டமுன்வரைவை எதிர்த்து மிகக்கடுமையாகப் போராடினார் ஆரோன். இணையம் மூலம் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் ஆதரவினை திரட்டுவதிலும், அதனைச் சட்டமுன்வரைவிற்கு எதிராகப் பயன்படுத்தி சட்டத்தையே முடக்கச் செய்ததில் ஆரோனிற்கு முக்கிய பங்குண்டு. அவரைச் சிறைப்பிடிக்க அவரது இச்செயல்களே காரணமாக இருந்தன.

அறிவுச் சுதந்திரத்திற்காக தன்னலமின்றி போராடினார் ஆரோன். கல்வியில் பின்தங்கியிருக்கிற இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு அவரது போராட்டக் காரணங்கள் மிகமுக்கியமானவை. ஆனாலும், அவர் ஒரு கிரிமினல் குற்றவாளியாகச் சித்தரிக்கப்பட்டு, மிகப்பெரிய மன அழுத்தத்திற்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டார்.

அவருடைய முதல் நினைவுவருடமான 2014ல், அறிவும் அறிவியலும் எல்லோருக்கும் பொதுவானதாக மாறுகிற சமூகத்தை படைக்க உறுதியேற்போம்.

மேலும் படிக்க/பார்க்க :

1.Hounding Aaron Swartz to His Death

2.Aaron Swartz: The First Martyr of the Free Information Movement

3.Aaron Swartz ‘Murdered By Intimidation’

Related Posts