இதழ்கள் இளைஞர் முழக்கம்

இங்கே எங்களையும் ‘பார்’க்கலாமே… – வீரபத்ர லெனின்

அதிமுக அணி இரண்டாக உடைந்து; முதலமைச்சர் என்ற பந்தை மாறி, மாறி அடித்துக் கொண்டிருந்த விளையாட்டை நாம் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தோம். தொலைக்காட்சிகளும் ‘பிரேக்கிங்’ என்ற கட்டத்தைத் தாண்டி ‘பிக் பிரேக்கிங்’ என நொடிக்கு நொடி விக்கட்டுகள் சாய்வதை காட்டிக் கொண்டிருந்தனர்.

இதனால் நாம் டி.20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியை மறந்து விட்டோம். என்னடா இது எப்படா உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வந்தது என பிப்ரவரி மாதம் தான் ஐபிஎல் போட்டி கூட துவங்குகிறது யார்ராது இது இப்படி பொய் சொல்வது என்று நீங்கள் நினைக்கலாம். கோலியா, ஸ்மித்தோ விளையாடும் டி20 போட்டி கிடையாது. இது பார்வையற்றவர்களுக்காக நடத்தப்பட்ட உலக கோப்பைப் போட்டி. இப்படி ஒரு போட்டி நடைபெற்றதா என நம்மில் பலருக்கு தெரியவே தெரியாது. பாரா ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளையே நாம் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு திணறிக்கொண்டிருக்கும் போது பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போன்று ஒன்று நடைபெறுகிறது என்பது தெரியாமல் இருப்பது நம் குறையல்ல. ஆனாலும் அதை நாம் தெரிந்து கொள்வதும் அவசியம் தானே.

ஜனவரி 31ந்தேதி துவங்கியது பார்வையற்றோருக்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நேபாளம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் என 10 நாடுகளைச் சேர்ந்த வீர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த உலக கோப்பைப் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

பிப்ரவரி 12ந்தேதி பெங்களூரில் உள்ள எம். சின்னசுவாமி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலக கோப்பை போட்டிகளில் இந்தியா 9 ஆட்டங்களில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி கண்டது. பாகிஸ்தான் அணி விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டி பலம் வாய்ந்ததாக இருந்தது. இதில் இரு அணிகளுக்குமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. போட்டியில் தங்கள் அணிதான் கோப்பை வாங்க வேண்டும் என இரு அணிகளுமே கடுமையாக மோதின. கடைசியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை தன் வயப்படுத்திக் கொண்டது. 2012ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் இதே அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதின. இதிலும் இந்தியா தான் கோப்பை வென்றது. இப்படி தொடர்ந்து கோப்பைகளை வாங்கிய இந்திய வீரர்களை யாரும் கண்டும் காணாமால் விட்டுவிட்டார்கள்.

பார்வையற்றோர் கிரிக்கெட் வரலாறு:-

மெல்போர்ன் நகரில் 1922ம் ஆண்டு ஆலைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பார்வையற்ற தொழிலாளர்கள் (நாம் சிறு வயதில் பரீட்சை அட்டைகளைக் கொண்டு கிரிக்கெட் விளையாடியதை போல்) டின்கேனைப் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள். பிறகு இவர்களுக்கென்று விக்டோரியன் பிளைன்ட் கிரிக்கெட் கழகம் துவக்கப்பட்டது. பார்வையற்ற வீரர்கள் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டிருந்ததால் 1928ம் ஆண்டு அவர்களுக்காக பிரத்தியேக வசதிகளுடன் முதல் விளையாட்டு மைதானமும்; கிளப் அவுசும் துவங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் துவக்கப்பட்டது. பின்னர் உலக நாடுகளிலிருந்து பல வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாட ஆரம்பித்தனர்.

1998ம் ஆண்டு இவர்களுக்கான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் – தென்ஆப்பிரிகாவை வீழ்த்தி 94 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு தொடர்களில் தென் ஆப்பிரிகாவை (2002), இந்தியாவை (2006) வீழ்த்தியது பாகிஸ்தான். பிறகு 2014ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கனியை ருசித்தது. டி20 ஆதிக்கம் கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்ததால், பார்வையற்றோர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2012ம் ஆண்டு துவங்கியது.

விதிகள்:

தோனி, கோலி, போன்ற வீரர்கள் விளையாடும் விதிகளைப் போன்றது கிடையாது இவர்கள் விளையாடும் கலம்.
பார்வையற்றோர் வீரர்கள் பயன்படுத்தும் பந்து (சாதாரண) பந்தை விடப் பெரியது. “ஸ்வீப் ஹாட்”டைப் ஆதாரமாக கொண்டு வீரர்கள் விளையாடுவதால் அவர்களை அவுட் செய்வது கடினம். அதனால் விக்கெட்டுகளை எடுப்பதற்காக ஸ்டம்பையும் பெரிதாக வைத்துள்ளனர்.

ஒரு அணியில் மொத்தம் 11 வீரர்கள் இருப்பார்கள். இதில் 4 பேர் முழுப்பார்வையிழந்தோர், 3 பேர் அரைகுறைப் பார்வையிழந்தோர், 4 பேர் அரைகுறைப் பார்வை படைத்தவராக கட்டாயம் இருக்க வேண்டும். இவர்கள் பயன்படுத்தும் பந்து ஒலி எழுப்பும் சத்தத்தைக் கொண்டது. இந்த ஒலி அசைவை வைத்துத்தான் பேட்ஸ்மென் விளையாடுவார்கள். பவுலர் பாலை ரிலீஸ் செய்யும் போது ‘விளையாடு’ என அம்பையர் சத்தம் போட வேண்டும்.
முழுபார்வையற்றோருக்கு பந்து போடும் போது ‘பந்து’ இரண்டு முறை பிட்சை தொட்டிருக்க வேண்டும். மங்கலான பார்வையுடையவர்களுக்கு ஒரு முறை தொட்டிருந்தால் போதுமானது. முழுபார்வையற்றோரை ‘அவுட்’ செய்வது கடினம். அதனால் ‘எல்பிடபிள்யூ’ முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலே சாதனை செய்வது என்பது கடினமான ஒன்று தான். ஆனால் பார்வையை இழந்து சாதிப்பவர்களை நாம் சாதனையாளர்களாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை நாம் சக மனிதனாக பார்ப்பது அவசியமான ஒன்று.

“இன்னும் எத்தனை உலக கோப்கையைத் தான் இந்தியாவுக்கு வாங்குவது, தயவு செய்து எங்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பு தாருங்கள்” என இந்திய அணி கேப்டன் அஜய் ரெட்டி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்புகளை தராமல் 10 லட்சம் காசை மட்டும் மத்திய அரசு தந்துள்ளதால் அதை அவர்கள் புறக்கணித்துள்ளனர்.
எங்கள் அணியில் உள்ள 17 பேரில் 14 வீரர்கள் மோசமான நிதி நிலைமையால் அவதிப்படுகின்றனர். தினசரி அன்றாட வாழ்வில் இவர்களால் சம்பாதிக்க முடியவில்லை. இதனால் கூலித் தொழிலாளர்களாக செல்கின்றனர். தயவு செய்து மத்திய – மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அஜய் ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து இந்த கோரிக்கைக்காக நாமும் போராடுவோம்.

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விழிப்புணர்வோ, அதற்கான வாய்ப்புகளோ இல்லாத காரணத்தால் அவை பிரபலமடையவில்லை. எனினும் கடந்த 4 ஆண்டுகளில் தங்களின் தனிப்பட்ட முயற்சியால் இந்திய அணி வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்க வேண்டியது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் புகழ் பெற்ற வீரர்களின் கையில் உள்ளது என திராவிட் தெரிவித்துள்ளார். அவர்களுடன் கைகோர்ந்து நாமும் நடைபோடுவோம்.

Related Posts