இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஆரோக்கியமாக வாழ்ந்திட யோகா மட்டும் போதுமா? – தாமு

yo

யோகா செய்வதின் மூலம் நோய் நொடி இல்லாமல் இந்தியர்கள் வாழ முடியும் என்கிற அரிய வகை கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. சர்வதேச யோகா தினத்தில் மோடி அவர்கள் முன் வைத்துள்ள யோகாவை பற்றி நாம் ஆராய்ந்தால் அதன் உண்மை நிலை விளங்கும். யோகா என்பது ஒரு கலை அந்த கலையை இந்து மதத்தை சார்ந்தது என்கிற மதச்சாயத்தை பூசி ஒரு மதம் சார்ந்த கலையாக மாற்றிடும் முயற்சியில் ஒரு நாட்டின் பிரதமரே ஈடுபடுவது ஆபத்துக்குரியது.

யோகாவால் மட்டும் இந்தியர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்திட முடியுமா?

நோய் நாடி நோயின் முதல் நாடி என்பார்கள் நோய்களை உருவாக்குற காரணிகளை ஒழிக்காமல் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ முடியாது. 1991 ஆம் ஆண்டு, ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் மானுட மேம்பாட்டு வளர்ச்சியில் தான் உள்ளது என ஐக்கிய நாட்டு மன்றம் வலியுறுத்தியது. மனித வள மேம்பாட்டில் 1992 ல் 122 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 136 வது இடத்தில் அதாவது வறுமை தேசம் என வர்ணிக்கப்படும் சில ஆப்பிரிக்கா நாடுகளை விட கீழே உள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 1,210,193,422 (2015) உள்ளனர், உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தை கொண்டிருந்தாலும். உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது இந்தியா. 29 மாநிலம், 7 யூனியன் பிரதேசம், 640 மாவட்டங்கள், 7933 நகரங்கள், 6 லட்சத்து 38 ஆயிரம் கிராமங்கள் கொண்ட தேசத்தில் 72.2 சதம் மக்கள் இந்தியாவின் ஆன்மா என்று காந்தி வர்ணித்த கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு (ஏறத்தாழ அமெரிக்காவின் முழு மக்கள் தொகை) வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர். மேலும் உலகின் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் என புள்ளி விபரங்கள் கூறுகிறது. இந்திய மக்கள் தொகையில் 25 சதமானோர் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கு கீழே வருவாய் ஈட்டுபவர்களாக உள்ளனர் என ஆய்வறிக்கை கூறுகிறது. நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் இவர்களால் வெறும் யோகாவை மட்டும் வைத்து ஆரோக்கியமாக வாழ்ந்திட முடியுமா?

இந்தியாவின் சுகாதார வசதிகள்:

இந்திய மக்கள் தொகையில் 31 சதமானோர் மட்டும் தான் முறையான சுகாதார வசதிகளைப் பெறுபவர்களாக உள்ளனர் என  ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு 10 மரணங்களில் ஒரு மரணம் மோசமான சுகாதார வசதியால் நிகழ்கிறது என்றும், இருபது மரணங்களில் ஒருவர் சாதாரணமாக தீர்க்கப்பட வேண்டிய வயிற்று போக்கால் இறக்கிறார். இந்தியாவில் மட்டும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ஏழைகள் சாதாரண வயிற்று போக்கு நோய்க்கு வைத்தியம் பார்க்க முடியாமல் இறக்க நேரிடுகிறார்கள்.

இப்படி இறப்பவர்களில் 88 சதம் குழந்தைகளாவர், சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுக்கு 1600 பேர் மரணிக்கிறார்கள், இந்தியாவில் குழந்தை பெற்று கொள்ளும் லட்சம் பெண்களில் 174 பேர் போதிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் பேறு காலத்தில் மரணிக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது ஆண்டொன்றுக்கு 45 ஆயிரம் பெண்களும், 1 மணி நேரத்திற்கு 5 பெண்கள் என பேறு காலத்தில் மரணிக்கிறார்கள்.

இந்தியாவில் இறக்கும் குழந்தைகளில் 50 சத குழைந்தைகள் நல்ல ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் இறக்கிறார்கள், 47 சதமான குழைந்தைகள் குறைவான எடையுடன் வளர்கிறார்கள், 6 லட்சத்து 38 ஆயிரம் கிராமங்களில் இருக்கும் 72 சதமான மக்கள் 5100 நகர்புறங்களில் உள்ள மருத்துவமனைகளை நோக்கி தான் செல்ல வேண்டிய அவல நிலை இன்றும் உள்ளன. மருத்துவ சேவை கிராமங்களை நோக்கி செல்லாததின் விளைவு நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகமாக இறப்பதற்கு ஓர் காரணமாகும்,

உலகிலேயே கழிப்பறை வசதி இல்லாமல் வாழ்வோரும், வீடற்றவர்கள் எண்ணிக்கையும் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம். தமிழகத்தில் மட்டும் சாலையோரங்களிலும், தார்பாய்கள் மூலம் டென்ட் அடித்து வாழ்ந்து வருபவர்கள் மட்டும் 23 லட்சம் பேர். மும்பை மாநகரத்தில் மட்டும் 57 ஆயிரம் நபர்கள் சாலையோரங்களில் வாழ்ந்து வருகிறார்கள், இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் வீடற்றவர்களின் எண்ணிக்கையை காண முடியும். டெல்லியில் இரவு நேரத்தில் பார்த்தால் அனைத்து மேம்பாலங்கள் கீழேயும், சாலையோரங்களிலும் மக்கள் வாழ்ந்து வருவதை காண முடியும். இவர்களுக்கு அம்மாநில அரசு பழுதுடைந்த பேருந்துகளை வீடுகளாக்கி வாழ ஆணையிட்டுள்ளது. இப்படி வீடே இல்லாதவர்களிடமும், கழிப்பறை அளவில் வீடுகளில் வாழ்ந்து வருபவர்களை பார்த்து கழிவறையை கட்டி வாழுங்கள் என வலியுறுத்தி பல கோடி ரூயாய் அளவிற்கு விளம்பரமும் செய்து வருகிறார் மோடி.

ஆரோக்கிமான வாழ்வு என்றால் என்ன:

கல்வி, வேலை, குடியிருக்க வீடு, நல்ல குடிநீர், மருத்துவசேவை, மாசற்ற சூழல் இந்த ஆறு அம்சங்கள் மனிதன் ஆரோக்கியமாக வாழ அடிப்படையானதாகும், கல்வியும், மருத்துவத்தையும், குடிநீரையும், அரசின் பொறுப்பில் இருந்து தனியார் வசம் ஒப்படைத்துள்ளதால் இவை மூன்றும் காசுள்ளவர்கள் மட்டும் பெறக்கூடி சூழலை உருவாக்கி வாங்கும் சக்தி இல்லாத பெரும் பகுதி மக்களை ஆரோக்கியமற்ற சூழலில் வாழ தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா ஏழை நாடல்ல ஏழைகளின் நாடு, இம்மண்ணில் உள்ள வளங்களை போல் உலகில் எம்மண்ணிலும் கிடையாது. அத்தகைய வளங்களை தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு கொள்ளை அடித்து கொள்ள அனுமதித்துள்ளனர் ஆட்சியாளர்கள்.
பன்னாட்டு நிதியம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 360 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது 100 கோடியாகும்) பல லட்சம் கோடி ரூயாயை இந்திய முதலாளிகள், செல்வந்தர்களால் வெளிநாடுகளில் பதுக்கியுள்ளனர் என கூறுகிறது, இப்பணம் அனைத்தும் இந்தியாவிற்கு சொந்தமானதாகும், கடந்த 10 ஆண்டுகளில் மல்லையா, அம்பானி, டாடா, மிட்டல் போன்ற பல இந்திய முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை மட்டும் பல லட்சம் கோடிகளாகும். மக்களிடம் வரி வசூலித்து இவர்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளார்கள். ஒரு மல்லையாவிற்கு உலகின் பல நாடுகளில் சொத்துக்கள் இருக்கிறது என்றால் மல்லையாவை விட மலை முழுங்கிகள் லட்சக்கணக்கானோர் இந்தியாவில் உள்ளனர். இத்தகைய நபர்களுக்காக தான் மக்களால் தேர்வு செய்யப்படும் அரசுகள் மல்லுகட்டி கொண்டு சேவகம் செய்து வருகிறது. மோடி ஜீ நோய்வாய்ப்பட்டு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் இந்தியர்களுக்கு யோகா செய்தால் ஆரோக்கியம் கிடைத்துவிடும் என்ற ஜீபூம்பா காட்டி வருகிறார். கருப்பு பணத்தை பறிமுதல் செய்து, வரிபாக்கியையும் வசூலித்து இந்தியாவின் ஆரோக்கியத்திற்கு செலவிட்டாலே சுகாதார வசதியில்லாமல் பறிபோகும் மனித உயிர்களை பாதுகாக்க முடியும். இந்தியாவின் ஆரோக்கியத்திற்கு முதலில் தேவை யோகா அல்ல சுகாதாரமான வாழ்க்கை தான்.

Related Posts