அரசியல்

ஆம்… நாங்கள் தேச விரோதிகளே!

சமீப ஆண்டுகளில் நடந்தேறி வரும், இல்லை நடத்தப்பட்டு வரும் சம்பவங்களும் அதைத் திட்டமிட்டு நடத்துபவர்கள் மீதும் அதீதமான கோபங்கள் உண்டாகி வருகிறது. அதிலும் குறிப்பாக, ரோகித் விமுலா தற்கொலை (கொலை), தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக (JNU) மாணவர் தலைவர் கண்ணையா குமார் மற்றும் 7 பேர் தேசவிரோதச் செயலைச் செயததாகக் கூறி சிறையில் அடைத்திருப்பதும், அதைத் தொடர்ந்து அந்த அடக்குமுறைக்கு எதிராக நடந்து வரும் போராட்டமுமே காரணம். எழும் உணர்வை, எரிகின்ற கோபத்தையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட முடியுமா என்று தோன்றவில்லை.

மறுக்கப்படும் உரிமைகள்

இந்த தேசத்தில் என்ன இல்லை? இந்தியாவில் தேவையான அளவிற்கு வளங்களும் நிதி ஆதாரமும் உள்ளன. அதைப் பயன்படுத்தி மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாக உள்ள இளைஞர்களுக்கு சிறந்த கல்வியும் சுகாதாரமும் நிரந்தரமான வேலையும் வழங்க முடியும். நாட்டின் வளங்களை இக்காரியங்களுக்காக திருப்பி விட வேண்டும். அதற்கு மாறாக அந்நிய – உள்நாட்டு பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் லாபங்களுக்காக இது திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் செல்வத்தில் பாதி வெறும் நூறு கோடீஸ்வரர்களின் கைகளில் சிக்கியுள்ளது. மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோரின் வருட வருமானம் என்பது 10,000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பெரும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை வழங்குகின்ற மோடி அரசு மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறது. இப்படி இந்த தேசத்தின் 90 சதவிகித மக்களுக்கு சுதந்திரமாய் பேசுவதிலிருந்து வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகிறது.

நடத்தப்படும் அவலங்கள்

பொருளாதார, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கொள்கைகளை அமெரிக்காவுக்கு பணயம் வைத்து அவர்களின் அடிவருடியாக மாறிவிட்டது அரசு. உலக மற்றும் உள்நாட்டு முதலாளிகள் லாபம் ஈட்டும் கருவியாக மாற்றிவிட்டது அரசு. சாமானிய மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றுகிறது அரசு. இதை எதிர்த்து நாடு முழுவதும் மக்களின் கொந்தளிப்பு உருவாகிறது. இதிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக மத ரீதியான அணிச் சேர்க்கையை உருவாக்கும் முயற்சியில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் ஈடுபட்டுள்ளன.

இழைக்கப்படும் அநீதிகள்

வரலாறைத் திருத்துகிறார்கள். வரலாற்றுத் தலைவர்களை அவமரியாதை செய்கிறார்கள். காந்தியை படுகொலை செய்தவனை தேசத்தின் நாயகன் என்கிறார்கள். கிறிஸ்தவ தினத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கச் சொல்கிறார்கள். குடியரசு தினத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். முற்போக்கான புத்தகங்களை தடை செய்கிறார்கள். மாட்டிறைச்சியை தடை செய்கிறார்கள். முற்போக்கு எழுத்தளார்களை தாக்குகிறார்கள். முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெறியூட்டுகிறார்கள். இதை எதிர்க்கிற முற்போக்குவாதிகளை தங்கள் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மூலம் கொலை செய்கிறார்கள். இதை எதிர்க்கும் மாணவர்கள் மீது தனது மாணவர் அமைப்பு மூலம் தடுக்க முயற்சிக்கிறார்கள். முடியவில்லை என்றதும் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி நசுக்குகிறார்கள். இவர்கள் செய்யும் அட்டூழியங்களை, அநீதிகளை விவாதித்தால் மாணவர்கள் மீதும், பல்கலைக்கழகங்கள் மீதும், கல்லூரிகள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். தேசத் துரோகி பட்டம் கொடுக்கிறார்கள்.

ஆம்… நாங்கள் தேச விரோதிகள்தான்

இந்த தேசம் இப்படியே கேவலமாய், உங்கள் அரைக்கால் ஆடை, புத்தி போல இருக்க எங்களுக்கு விருப்பமில்லை. அதனால் அதை கொலை செய்யப் போகிறோம்.

நீங்கள் உருவாக்க விழையும் தேசத்திற்கு முற்றிலும் மாறான ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்க போகிறோம்.

,

சாதியில்லா தேசமாக,
மதவெறியில்லா தேசமாக,
சக மனிதனை மனிதனாக நேசிக்கும் தேசமாக,
பாலுக்கு அழும் குழந்தையில்லா தேசமாக,
வேலைதேடும் இளைஞர்கள் இல்லா தேசமாக,
பெண்கள் சுதந்திரமாய் வாழ வழியுள்ள தேசமாக,
மக்களின் சுக வாழ்க்கைக்கான ஒரு தேசமாக,
ஒரு புதிய இந்திய தேசத்தைப் படைக்க விரும்புகிறோம்…

.

ஒரு பக்கம் தேசம் மதவெறியூட்டப்படுகிறது. மற்றொரு பக்கம் தேசம் விலை பேசப்படுகிறது.

மாணவர்களே,
இளைஞர்களே,
பெண்களே,
உழைப்பாளிகளே,
மக்களே,
கிளர்ந்தெழுங்கள்..

அநீதிகளுக்கு, சுரண்டலுக்கு எதிராக இந்த உலகத்தையே குலுக்கியது ஒரு பத்து தினங்களே. இந்தியா என்னும் களம் தன்னைக் குலுக்கிக் கொள்ள தயாராகி வருகிறது. அதில் வெற்றி பெற உன்னதச் சிந்தனையுடன் போராட்ட வீரர்களாக அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரர்கள் தேவைப்படுகிறார்கள். எழுங்கள். நமக்கான தருணம் வந்துவிட்டது…

மதவெறியர்களே ஒழிக…
சமானதானமும், மக்களது சகோதரத்துவமும், மனிதமும் நீடூடி வாழ்க!

Related Posts