இதழ்கள்

ஆபாசமான சூழலை மாற்றுங்கள்:சாதத் ஹசன் மண்டோ!

Saadat Hasan Manto

சாதாரண மக்களின் வாழ்க்கையில் நடக்கின்ற அன்றாட நிகழ்வுகளை தனது வலிமையான வார்த்தைகளில் கூர்மையான படைப்புகளாக மாற்றியவர் சாதத் ஹசன் மண்ட்டோ.

அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது என்று வெகுமக்கள் மத்தியில் உள்ள கருத்தாக்கங்கள், பலரின் வாழ்க்கையாக உள்ளது என்பதை ரத்தமும் சதையுமாக மண்ட்டோ வெளிப்படுத்தியுள்ளார். அவரின் படைப்புகள் படிப்பவர்களின் மனசாட்சியை உலுக்குகிறது; பதறச் செய்கிறது; உடலை சில்லிடச் செய்கிறது.

ஒரு சராசரி தந்தையின் எண்ண ஓட்டங்கள் பற்றியும், எண்ணங்களின் வெளிப்பாடே நிகழ்வுகளாக நடக்கிறது என்பதையும் ‘காலித்’ என்ற சிறுகதையில் மண்ட்டோ பதிவு செய்துள்ளார். ஒரு பாலியல் தொழிலாளி தினம் தினம் தான் சந்திக்கும் இன்னல், வெறுப்பு, ஆற்றாமை, உடல் ரீதியான சித்தரவதை ஆகியவற்றை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை ‘அவமானம்’ என்ற கதையில் பதிவிட்டுள்ளார்.

மதக்கலவரத்தின் பாதிப்பையும், அது காலப்போக்கில் எவ்வாறு மனிதர்களை என்னவாகவெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதையும் தனது நுட்பமான எழுத்தால் ‘சஹாய்’ எனும் கதையின் வடித்துள்ளார்.

‘திற’ மற்றும் ‘சில்லிட்டுப்போன சதைப் பிண்டம்’ ஆகிய கதைகள் வரலாற்றின் உயிர் வலியை உணரச் செய்யும் கதைகளாகும். ஆனால் அந்தக் கதைகள் ஆபாசமானவை என்று கூறி – அவற்றின் மீது வழக்கு தொடுக்கப்பட்டதையும் கேட்கும்போது, எதிர்த்தவர்களின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

இதற்கு பதில் கொடுத்த மண்டோ, “என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்த தவறும் இல்லை. என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுபவன எல்லாம் உண்மையில் அழுகி போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது” என்றார் …

“இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்றி முயற்சி செய்யுங்கள். இதுதான் சிறந்த வழி…” என்று மாற்றத்திற்கான வழியையும் மண்ட்டோ சொல்கிறார்.

Saadat Hassan Manto

சாதாரண மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து, மனங்களையும், குணங்களையும் ஊடுருவி ஆய்வு செய்திருக்கும் ஆய்வாளராகவும் மண்ட்டோ திகழ்கிறார். எதார்த்தங்களை கதை வடிவில் வாசிக்க வைக்கிறது அவரது சிறுகதைகளை தொகுத்துள்ள அவமானம் புத்தகத்தின் மூலம்.

அவமானம்

(சாதத் ஹசன் மண்ட்டோ, காலித்​ படைப்புகளின் தொகுப்பு)

தமிழாக்கம்: ராமநுஜம்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-18

விலை: ரூ.60

Related Posts