இலக்கியம்

ஆட்டோகிராப் …..!

தூங்கி எழுந்தது முதல் சொல்லத் தெரியாத ஒரு எரிச்சல் . கோபம் . எதையும் யாரையும் கவனித்து எந்த வேலையும் செய்யத் தோன்றாத சோம்பல் .சோர்வு உடலிலா? மனதிலா? எதையும் சிந்திக்கவும் தோன்றவில்லை.

இன்று பார்த்துதான் கணேசனுக்கு எல்லா வேலைகளுக்கும் லட்சுமியை கூப்பிடத் தோன்ற வேண்டுமா ! பேஸ்ட் எங்கே என ஆரம்பித்தவன் குளித்து தலை துவட்ட டவல் என ஒவ்வொன்றுக்காய் லட்சுமியின் பேரை ஏலம் போட்டான்.

டிபன் சாப்பிட்டு விட்டு உணவு கேரியரை எடுத்து கூடையோடு பைக்கில் வைத்தபடியே ‘ குடிக்க கொஞ்சம் தண்ணி குடு லட்சுமி ‘ என்றான்.

அவ்வளவுதான் தண்ணீர் கொண்டு வந்தவள் நிதானம் தவறினாள் . ‘ செய்யற வேலையெல்லாம் விட்டுட்டு உங்களுக்கு ஊழியம் செய்யவே நேரம் சரியாயிருக்கு . நா என்ன உங்களுக்கு வேலைக்காரியா இல்லே அடிமையா ?! ‘ என சடசடவென பொரிந்தாள்.

அதே நேரம் அவன் பதிலுக்கோ அல்லது பைக்குக்கோ காத்திராமல் காலில் செருப்பை மாட்டிக் கொண்டு விறுவிறுவென பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.

வழக்கமாய் மனைவியை பஸ் ஸ்டாப் வரை பைக்கில் சென்று இறக்கி விடுபவன் லட்சுமியின் எதிர்பார்க்காத இந்த நடவடிக்கையால் கலவரமடைந்து விக்கித்து நின்றான் .

எப்போதும் கூட்டமாய் வரும் பேருந்து இவளின் கோபமனநிலை தெரிந்து பயந்து போனது போல் அதிசயமாய் இவள் உட்கார ஜன்னலோர சீட் ஒன்றை காலியாய் வைத்திருந்தது. பஸ்ஸில் அமர்ந்து சில்லென்ற காற்று மேலே படவும் மனம் சற்று அமைதியாக கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமானாள்.

மதிய உணவு நேரம் . ஆபீஸில் தினமும் தன்னோடு அமர்ந்து சாப்பிடும் உஷாவைத் தேடினாள். அவள் சாப்பிடக் கூட வராமல் டேபிள் மேல் தலை சாய்த்து படுத்திருந்தாள். ‘ உடம்பு சரியில்ல போல’ என நினைத்து ‘ உஷா என்னாச்சு தலை வலிக்குதா ? காய்ச்சலா ? ‘ என கேட்டபடியே நெற்றியில் கை வைத்து பார்த்துவிட்டு தலையை தொட்டு நிமிர்த்தினாள். இன்னும் ஈரம் காயாத கண்கள் அவள் அழுது கொண்டிருக்கிறாள் எனக் காட்டியது .

பார்த்த லட்சுமிக்கு திக்கென்றது . உஷா இங்கு பணிபுரிய வந்து மூன்றாண்டு காலம் ஆகிறது. எல்லோரிடமும் அளவோடு பழகும் அவள் லட்சுமியிடம் மட்டும் சற்று நெருக்கமாகப் பழகுவாள். அந்த உரிமையில் கேட்டவள் ஏதும் பேசாமல் மௌனமாக காத்த உஷாவை முகம் கழுவ வைத்து சூடாக காப்பி தந்து ஆசுவாசப்படுத்தினாள்.சற்று தெளிவான உஷா ‘ அவரோட சின்னதா ஒரு பிரச்னை , முதல் தடவையா வந்ததால பயந்துட்டேன் .அதை நெனைச்சவுடனே அழுகை வந்துடுச்சு , அவ்ளவுதான், வேற ஒண்ணுமில்ல . கவலைப்படாதே’ என்றாள். ‘குட் குட் இப்பிடித்தான் தைரியமாய் இருக்கணும் ‘ வா சாப்பிடலாம். என்று அவளையும் அழைத்தபடி கேண்டீன் பக்கம் நகர்ந்தாள் லட்சுமி.

கேண்டீன் டிவியில் ஆட்டோகிராப் படம் ஓட அடுத்த டேபிள் கலா தன் நண்பரிடம்’ இதே ஒரு பெண்ணோட ஆட்டோகிராப்பா இருந்தா இப்பிடி ரசிப்பாங்களா ? ‘ என கேட்டாள்.’ சகிக்காது ‘ என அழையாத விருந்தாளியாய் பதிலளித்தார் எதிர் டேபிள் சரவணன் .

கேண்டீன் மேனேஜர் சானலை மாற்ற நகைச்சுவை கூறும் நிகழ்ச்சி ஓடியது. அதில் ‘ முதல் மனைவி போட்டோ முன்னால இரண்டாவது மனைவியை கொண்டு நிறுத்தி தொட்டு கும்பிட்டுக்கோ ‘ன்னு சொல்றாங்களே. மாத்தி நினைச்சு பாருங்க ‘ என்று தொடர டிவியை நிறுத்தினார். அதற்குள் ‘இதெல்லாம் நெனைக்கவே அறுவெறுப்பானது என்ன பேசினாலும் ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் தனித்தனி நியதிதான் அது மாறினா அசிங்கம்’ என்று யாரும் கேட்காமலே மீண்டும் முத்துதிர்த்தார் சரவணன். பொறுக்க முடியாத கலா ‘ கொல்லன் பட்டறைல ஈக்கு என்ன வேலை ‘ என்று முகத்தில் அறைந்தாற்போல் கேட்கவும் அசட்டுச் சிரிப்போடு இடத்தைக் காலி செயதார் சரவணன்.

‘இதே எண்ணம் தான் எங்க வீட்டுக்காரர் கிட்டயும் இருக்கு . அவரோட தங்கை தப்பான ஒருத்தர காதலிச்சதுல பிரச்னை . அவளை சமாதானப் படுத்தி நல்ல இடத்துல கட்டிக் குடுக்க வீட்டுல நினைக்கறாங்க . அவளை கன்வின்ஸ் பண்றதை விட எல்லாருக்கும்– காதல் கூடாது. மீறி காதலிச்சா ஆள் எப்பிடியிருந்தாலும் ஏத்துக்கணும் ஆள் மாறினா அர்த்தம் வேறன்னு நெனைக்கிற– இவர சமாளிக்கிறதுதான் பிரச்னையா இருக்கு .அதுல என் நிலைமை தர்மசங்கடமானது ‘ என்று விஷயத்தை போட்டுடைத்தாள் உஷா.

மாலை ஆபிஸ் முடிந்து பேருந்தில் ஏறி அமர்ந்தவள் மனதில் தன் கணவனின் ஆரோக்கியமான சிந்தனை விஸ்வரூபமாக தெரிந்தது.

லட்சுமியும் கணேசனும் பக்கத்து வீடுகளில் வசித்தனர். அவள் கல்லூரியில் காலெடுத்து வைத்து ஓராண்டானது. காதல் கடிதம் கொடுத்த சக மாணவனின் குணம் தெரியாமல் ஊசலாடினாள். வீட்டில் விஷயம் தெரிந்து பிரச்னையானது. எதேச்சையாக வந்த கணேசன் இது தெரிந்து இவளிடம் தனியாகப் பேசினான். அந்தப் பையனைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான். அவன் சரிவர மாட்டான் என்பதை பக்குவமாகப் புரிய வைத்தான்.

கணேசனின் குணம் தெரிந்த லட்சுமியின் வீட்டார் அவளை அவனுக்கே மணமுடித்துத் தர அதுவும் உடனே செய்ய நினைத்தனர். கணேசனோ அதையும் அவளை சுயமாக சிந்திக்க சொல்லி , படிக்க நினைத்த அளவு படிக்க விட்டு ,அவள் கூறிய பிறகே திருமண ஏற்பாடுகளில் இறங்கினான். இன்று வரை , எந்த விஷயத்திற்காகவும் , அவள் மனம் புண்பட பேசியதில்லை.

அவரைப்போய் இன்று காரணமே இல்லாமல் மனம் நோக செய்து விட்டோமே . நிழலின் அருமை வெய்யில் வந்தால்தான் தெரியுமோ? போனவுடனே அவரை சமாதானப் படுத்த வேண்டும் என்று பலவாறு நினைத்தவாறு பஸ்ஸை விட்டு இறங்கினாள்.

வீட்டிற்குள் நுழைந்தவள் முகம் கை கழுவிக் கொண்டு சமையலறையில் நுழையப் போனவளை ‘ லட்சுமி ‘ என்று அழைத்து அவளின் கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்து சூடான காப்பியை தந்தான். ” ஸாரி லட்சுமி உன்னோட வேலை சுமையை யோசிக்காமல் உன்னை டென்ஷன் பண்ணிட்டேன் ” என்றான்.

இதிலும் இயல்பாக தன் பெருந்தன்மையை காட்டி விட்டானே என்ற பெருமிதம் பொங்க காப்பியை வாங்கி மேஜை மீது வைத்து விட்டு கண்ணில் பெருகிய நீருடன் அவனை மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

வாழ்க்கையின் ரகசியம் புரிந்ததில் சந்தோஷம் பொங்கியது.

– செம்மலர்.

Related Posts