இதழ்கள் இளைஞர் முழக்கம்

அவன் பெயர் அய்லான்

 – எஸ்.பி.ராஜேந்திரன்

 

எப்படியேனும் தப்பித்து அத்தையிடம் சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் பிழைத்துக் கொள்ளலாம் என்று அய்லான் குர்தியிடமும், காலிப் குர்தியிடமும் அவர்களது தந்தை அப்துல்லா கூறிக் கொண்டிருந்தார். அய்லானுக்கு 3 வயது. காலிப்புக்கு 5 வயது.

அவர்களது அத்தை கனடாவில் இருக்கிறார்.

கோபானியிலிருந்து எப்படியேனும் தப்பித்து துருக்கிக்குள் நுழைந்து, துருக்கியின் மேற்கு எல்லையிலுள்ள துறைமுகமான லெஸ்பாஸுக்கு சென்று, அங்கிருந்து எப்படியேனும் கடலை கடந்து கிரீஸுக்கு சென்றுவிட்டால், அங்கிருந்து எப்படியாவது ஹங்கேரிக்கு சென்றுவிடலாம்; அங்கிருந்து எப்படியாவது செக். குடியரசு வழியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரை அடைந்துவிட்டால், அங்கிருந்து எப்படியாவது கனடாவுக்கு சென்றுவிடலாம் என்பதே அப்துல்லாவின் திட்டம்.

அத்தைக்கும் தகவல் அனுப்பினார்கள். டிமா குர்தி என்ற அந்த அத்தை, அப்துல்லாவின் உடன்பிறந்த சகோதரியாவார். துருக்கியிலிருந்து கடலை தாண்டி கிரீஸுக்குவந்துவிட்டால் போதும், உங்களை கனடா அழைத்து செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் பதில் அனுப்பியிருந்தார். அதன்படியே, எங்கும் சிக்காமல் அழைத்து வருவதற்கு அனுமதி கேட்டு கனடா அரசாங்கத்தின் குடியேற்றத் துறை அலுவலகப் படிக்கட்டுகளில் தவம் கிடந்தார் அந்த அத்தை.

ஒரு வருடம் ஆகிவிட்டது. அத்தை எப்படியும் ஏற்பாடு செய்துவிடுவார் என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி அய்லானையும், காலிப்பையும் அழைத்துக் கொண்டு தந்தையும், தாயும் கோபானியைவிட்டு வேறு வழியே இல்லாமல் கிளம்பிவிட்டார்கள்… அந்த நகரிலிருந்து இப்படி எங்கேனும் கடல் கடந்து சென்று பிழைத்துக் கொள்ளலாம் என நம்பி அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு கிளம்பிய பல்லாயிரக்கணக்கான மக்களோடு தாங்களும் அகதிகளாக…!

கோபானி.

கோபேன் என்றும், அலாப் அல் அமர் என்றும் சிரிய மொழியிலும் அழைக்கப்படுகிற நகரம்.

சிரியாவுக்கும், துருக்கிக்கும் இடையில் இருக்கும் மிக முக்கியமான நகரம் கோபானி. சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட நகரம் இது. இதுதான் அய்லானின் சொந்த ஊர். இந்த கோபானிக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு.

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் துருக்கியின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த நகரைத்தாண்டித்தான், வளைகுடா நாடுகளிலிருந்து தரைவழியாக துருக்கிக்குள் செல்ல முடியும். கோபானி நகரின் கடைசியில் அமைந்துள்ள சாலைவழியாக வெளியேறினால், அடுத்த 3 கிலோ மீட்டரிலேயே துருக்கி வந்துவிடும். அந்தச் சாலையில் டெல் அபயத் என்ற பகுதி வழியாக திரும்பினால் உலகின் கிழக்குப் பகுதிக்குச் செல்ல வழி கிடைக்கும். ஜாராபிளஸ் என்ற பகுதிவழியாக திரும்பினால் உலகின் மேற்குப் பகுதிக்கு செல்ல வழிகிடைக்கும். தரைவழியாக வளைகுடா நாடுகளை உலகின் கிழக்குடனும், மேற்குடனும் இணைக்கிற மிக முக்கியமான – கேந்திரமான பகுதிதான் கோபானி.

இந்த நகரைக் கைப்பற்ற வரலாற்றில் பல யுத்தங்கள் நடந்துள்ளன.

வரலாற்றில் பதிவான எல்லா யுத்தங்களையும் விட கொடிய யுத்தம் – அங்கிருந்த மக்களையெல்லாம் நரவேட்டையாடிய யுத்தம் கடந்த ஆண்டு (2014) அக்டோபரில் நடந்தது. துருக்கி வழியாக ஏராளமான ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் கோபானி நகரைக் கைப்பற்றுவதற்காக கொடூரமான தாக்குதலைத் துவக்கினர். ஆனால் அதை கோபானி நகர மக்கள் எதிர்கொண்டவிதம், இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

பசார் அல் -அசாத்தின் ஆட்சி நடைபெறும் சிரியாவில் குர்து இன மக்கள் வாழும் வடக்குப் பிரதேசம் தான் கோபானி நகரம். இந்த நகரம் உள்ளிட்ட வடக்கு சிரியா பிரதேசத்திற்கு ரொஜாவா எனப் பெயர் உண்டு.

ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக்கிலிருந்து சிரியாவிற்குள் நுழைந்து அந்நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை கடுமையான முறையில் தாக்கி சில நகரங்களை கைப்பற்றிவிட்டனர். இந்த நகரங்களில் கொடூரமான படுகொலைகளை அரங்கேற்றினர். ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவின் ராணுவம் கட்டாயமாக போரில் ஈடுபடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஐஎஸ் பயங்கரவாதிகள் மேலும் முன்னேறி சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ்சை நோக்கி வந்துவிடாமல் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிரியா ஜனாதிபதி பசார் அல்-அசாத்தின் படைகளுக்கு ஏற்பட்டது. எனவே நாட்டின் வடக்குப் பகுதியான குர்து இன மக்களின் ரொஜாவா மாகாணப்பகுதியை பாதுகாப்பதில் அசாத்தின் அரசு கவனம் செலுத்தவில்லை.

இந்த சூழ்நிலைமையை ஐஎஸ் பயங்கரவாதிகளின் மற்றொரு பிரிவினர் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். மிக எளிதாக துருக்கி வழியாக ரொஜாவா மாகாணத்திற்குள் நுழைந்து அதை அப்படியே கபளீகரம் செய்துவிடுவது என்ற நோக்கத்துடன் கோபானி நகருக்குள் ஆயுத பலத்தோடு நுழைந்தனர்.

சிரியாவின் தெற்கிலும் கிழக்கிலும் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு அரசு போரிட்டுக் கொண்டிருந்ததால், வடக்குப் பகுதியில் அரசாங்க கட்டமைப்பே சீர்குலைந்தது. இந்த நிலைமையில்தான் அந்த மக்கள் தாங்களே ஒரு அரசாங்கத்தை வடிவமைத்துக் கொண்டனர். சுய நிர்ணய அதிகாரத்துடன் கிட்டத்தட்ட சோசலிச சிந்தனையை ஒட்டிய ஒரு கட்டமைப்பை உருவாக்கி விடுவது என அந்த குர்து இன மக்கள் முயற்சி மேற்கொண்டனர்.

பொதுவாக குர்து இன மக்களுக்கு விடுதலை வேட்கை அதிகம். துருக்கியை ஒட்டியுள்ள சிரியா மற்றும் இராக்கின் வடக்குப் பகுதிகளில் உள்ள குர்து இன மக்கள் மிக நீண்ட காலமாக குர்திஸ்தான் என்ற புதிய நாட்டை அமைப்பதற்காக போராடிவருகிறார்கள். இன்னும் குறிப்பாக துருக்கியில் உள்ள குர்து இன மக்கள், சிறுபான்மையினர் என்பதால் அவர்களை கொடூரமான முறையில் அந்நாட்டு அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது. இதற்கு எதிராக துருக்கி தொழிலாளர் கட்சி மிகப்பெரிய அளவிற்கு குரல் கொடுத்தது. பி.கே.கே என்று அழைக்கப்படும் துருக்கி தொழிலாளர் கட்சி ஒரு கட்டத்தில் குர்து இன மக்களை பாதுகாப்பதற்காக ஆயுதப் போராட்டத்தையும் கூட துவக்கியது. குர்து இன மக்களிடையே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், அசிரியர்கள் என பல்வேறு மதங்கள் உண்டு. ஆனால் இன அடிப்படையில் குர்து மக்கள் எப்போதுமே ஒன்றுபட்டு போராடினர்.

துருக்கி தொழிலாளர் கட்சியின் நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக, துருக்கியை ஒட்டியுள்ள சிரியாவின் கோபானி நகரம் உள்ளிட்ட ரொஜாவா மாகாணத்தில் ஒய்பிஜே மற்றும் ஒய்பிஜி என இரண்டு முக்கிய அமைப்புகள் உருவாகின.மார்க்சிய – லெனினிய சிந்தனையுடன் குர்திஸ்தான் எனும் நாட்டை உருவாக்கி அதை சோசலிச பூமியாக்குவோம் என்ற துருக்கி தொழிலாளர் கட்சியின் தாக்கத்தில் கோபானியில் உருவான மேற்கண்ட இரண்டு அமைப்புகளும், இதர பல்வேறு மக்கள் குழுக்களும் சிரியாவில் மார்க்சிய சிந்தனைகளை – இடதுசாரி கண்ணோட்டத்தை முன்வைப்பதில் முக்கியப் பங்கு வகித்தன.

இந்தப் பின்னணியில்தான் 2014ல் ஐஎஸ் பயங்கரவாதிகள் கோபானி நகரம் உள்ளிட்ட ரொஜாவா மாகாணத்தை கைப்பற்றப் போகிறார்கள் என்ற நிலைமை எழுந்தபோது, அதற்கு எதிராக துருக்கி தொழிலாளர் கட்சியின் ஆதரவோடு, கோபானியில் செயல்படும் ஒய்பிஜே மற்றும் ஒய்பிஜி மக்கள் குழுக்கள் மிகப்பெரும் ஆயுதப் போருக்கு தயாராகின. இதில் ஒய்பிஜே என்பது முற்றிலும் பெண்கள் மட்டுமே செயல்படும் போராட்டக்குழு. ஒய்பிஜி என்பது முற்றிலும் இளைஞர்கள் மட்டுமே செயல்படும் போராட்டக் குழு. சுருக்கமாகச் சொன்னால் இவை இரண்டும் குர்து மக்களின் விடுதலைக்காகப் போராடும் வாலிபர் மற்றும் மாதர் சங்கங்கள்தான்.

இவ்விரண்டு இயக்கங்களும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி 2014 அக்டோபர் மாதத்தில் துவங்கி நடத்திய போர் மிகவும் உக்கிரமானது.

வெறும் 1,60,000 மக்கள் தொகையே கொண்ட கோபானியை ஒரு நிமிடத்தில் நசுக்கிவிடலாம் என எண்ணித்தான் அமெரிக்கா மற்றும் துருக்கியின் ஆதரவோடு ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்தார்கள். ஆனால் பல மாத காலம் பயங்கரவாதிகளால் உள்ளே நுழையக் கூட முடியவில்லை. நகரத்தின் எல்லையிலேயே ஒய்பிஜே மற்றும் ஒய்பிஜி படையினர் கடுமையான சவாலை ஏற்படுத்தினார்கள். கோபானி நகரைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளை முதலில் கைப்பற்றுவது என முடிவு செய்து ஐஎஸ் பயங்கரவாதிகள் சற்று பின்வாங்கி அந்த மலைக்குன்றுகளில் ஆயுதங்களோடு முகாமிட்டனர். அங்கிருந்து கோபானி மீது இடைவிடாமல் குண்டு வீசி மிகக் கொடிய தாக்குதலை நடத்தினர். சில நாட்கள் கழித்து நகரம் மயானமாகி விட்டது என்று எண்ணி மீண்டும் நகருக்குள் நுழைய முற்பட்டார்கள். ஆனால் கோபானி நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு மரணம் காத்திருந்தது. பெண்கள் படையும் இளைஞர் படையும் ஒவ்வொரு தெருவிலும் பயங்கரவாதிகளோடு வீரம் செறிந்த போரினை நடத்தினார்கள். பல நூற்றுக்கணக்கான ஐஎஸ் பயங்கரவாதிகள் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மிக எளிதாக அந்த பயங்கரவாதிகளால் கோபானியை கைப்பற்ற முடியவில்லை.

உலகின் சமீபகால வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் ஆதரவும், ஆயுத உதவியும் பெற்ற – இந்த உலகையே நடுங்கச் செய்து கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய பயங்கரவாதப் படைக்கு எதிராக – அதாவது கண்ணில் காண்பவர்களையெல்லாம் ஈவிரக்கமின்றி கொண்டு குவித்து நரவேட்டையாடுகிற ஐஎஸ் பயங்கரவாதப் படைக்கு எதிராக – இப்படி ஒரு யுத்தம் வேறெங்கும் நடக்கவில்லை. அது கோபானியில் மட்டுமே நடந்தது. எந்த ஆயுத பலமும் இல்லாமல் மக்கள் சக்தியைக் கொண்டு மட்டுமே கோபானி நகரம் இந்தப் போரை நடத்தியது. இந்தப் போரில் மக்களை அணி திரட்டிய பெண்கள் மற்றும் இளைஞர் படைத் தளபதிகள் கம்யூனிச சிந்தனை கொண்டவர்கள். அந்த நெஞ்சுறுதிதான் அவர்களை இயக்கியது.

இதைப்பற்றி எழுதுகிற போது, கோபானியில் நடந்த அந்தப் போர், இரண்டாம் உலகப்போரின் போது – இந்த உலகமே எனது காலடியில் கீழ் என்று கொக்கரித்துக் கொண்டு பல நாடுகளை அழித்து லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்து முன்னேறிக் கொண்டிருந்த உலக மகா கொடியவன் சர்வாதிகாரி ஹிட்லரையே, மரணப்படுகுழியில் தள்ளிய – ஹிட்லரின் படைகளுக்கு சாவுமணி அடித்த – ஹிட்லரின் படைகளில் கொடூரமானது என்று கருதப்பட்ட ஜெர்மானிய ராணுவத்தின் ஆறாவது படைப்பிரிவினை ஓட ஓட விரட்டிய அந்த மகத்தான ஸ்டாலின் கிராடு யுத்தத்திற்கு இணையானது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலின் கிராடு யுத்தம் 1942ல் ஆகஸ்ட் 23 ல் துவங்கி 1943 பிப்ரவரி 2 வரை நடைபெற்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பாசிச ஜெர்மனியும் , அதன் கூட்டாளிகளும் உழைக்கும் மக்களின் மகத்தான தலைவனாகத் திகழ்ந்த மாபெரும் சோவியத் ஒன்றியத்தின் மீது நடத்திய போர் அது. ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்டாலின் கிராடு மாநகரத்தை கைப்பற்றுவதற்காக ஹிட்லரின் படைகள் நடத்திய யுத்தம் அது. ஸ்டாலின் கிராடை கைப்பற்றி விட்டால் சோவியத் ஒன்றியத்தையே வீழ்த்தியதாக அர்த்தம். சோவியத் ஒன்றியத்தை வீழ்த்திவிட்டால் உலகையே எளிதாக வீழ்த்தியவிடலாம் என்பது ஹிட்லரின் கணக்கு. ஆனால் அந்தக் கணக்கைத் தவிடுபொடியாக்கியது ஸ்டாலின் கிராடு. லட்சக்கணக்கான மக்களின் – லட்சக்கணக்கான சோவியத் செஞ்சேனை வீரர்களின் உயிர்களைத் தியாகம் செய்து, ஹிட்லரின் படைகள் வீழ்த்தப்பட்டன.

உலகையே அச்சுறுத்திய கொடியவன் ஹிட்லருக்கு அன்றைக்கு முடிவு கட்டியது மாவீரன் ஸ்டாலின் என்ற மகத்தான கம்யூனிஸ்ட்டின் தலைமையில் இயங்கிய சோசலிச பூமியாம் சோவியத் ஒன்றியம்.

அதே போல இன்றைக்கு கொடிய ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு வீரம் செறிந்த எதிர்ப்பைக் காட்டி, கடைசி வரைக்கும் வீழாமல் போரிட்டவர்கள் கோபானியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள்.

இத்தனை உறுதிமிக்க போரினை நடத்திக் கொண்டிருந்தபோது, துருக்கி அரசாங்கம் ஒரு சூழ்ச்சி செய்தது. துருக்கி தொழிலாளர் கட்சியின் மூலமாகத்தான் கோபானியில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர் படைகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்று வந்தன. அதைக் கொண்டே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் போரிட்டார்கள். எனவே துருக்கி தொழிலாளர் கட்சியை கொடூரமாக ஒடுக்க முற்பட்டது அமெரிக்கக் கைக்கூலியான துருக்கி அரசாங்கம்.

ஒட்டுமொத்தத்தில் மார்க்சியம் பேசுகிற , ஒரு சோசலிச சமூக கட்டமைப்பை உருவாக்க சிந்திக்கிற இந்த இயக்கங்கள் நிறைந்த கோபானி உள்ளிட்ட ரொஜாவா மாகாணத்தை முற்றாக அழித்து விட வேண்டுமென்று அமெரிக்காவிடமிருந்து உத்தரவு பறந்து வந்தது.

இதற்குப் பிறகு துருக்கி மூலமாக சவூதி அரேபியாவும் இதர பல அமெரிக்க கைக்கூலி நாடுகளும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு இன்னும் ஏராளமான ஆயுதங்களை சப்ளை செய்தன. அதைக் கொண்டு அவர்கள் கோபானியை சல்லடையாகத் துளைத்தார்கள்.

எத்தனை எத்தனை மரணங்கள்! நகரெங்கும் ரத்த ஆறு!

கோபானி வீழ்ந்தது.

அனைத்தையும் இழந்து உயிர் மட்டுமே மிஞ்சியவர்கள் ஊரை விட்டு வெளியேறினார்கள். துருக்கி எல்லை வழியாக பிழைப்பைத் தேடி புறப்பட்டார்கள்.

அப்படி புறப்பட்டவர்கள் தான் அய்லானும் காலிப்பும் அவர்களது தந்தை அப்துல்லாவும் தாய் ரேகானும்.

எப்படியேனும் தப்பித்து அத்தையிடம் சென்று விடலாம் என்று அய்லானிடமும் காலிப்பிடமும் கூறிக்கொண்டே வந்தார் அப்துல்லா.

எப்படியோ துருக்கி துறைமுகமான லெஸ்பாஸூக்கு வந்து, கிரீசை நோக்கிச் செல்வதற்காக ஒரு படகைப் பிடித்து விட்டது இந்தச் சிறிய குடும்பம். இவர்களோடு மேலும் பன்னிரண்டு அகதிகளை ஏற்றிக் கொண்டு கடல் வெளியில் புறப்பட்டது அந்தப் படகு. கடுமையான அலைகள் அடிக்கும் அந்தக் கடலில், முதல் கட்டமாக பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள கிரீஸ் நாட்டின் கோஸ் தீவுகளுக்குச் சென்று அங்கிருந்து வேறொரு படகைப் பிடித்து கிரீசின் பிரதான கரைக்கு செல்வதுதான் அவர்களது திட்டம்.

கோஸ் தீவுகளை நெருங்கிய போது கடல் அலைகள் தீவிரமடைந்தன. அந்தக் கொந்தளிப்பில் இந்த சிறிய படகு தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

அய்லானும் காலிப்பும் ரேகானும் அந்த இளம் தந்தை அப்துல்லாவின் பிடியில் இருந்தார்கள். நான்கு பேரும் சேர்ந்து மேலே வரமுடியவில்லை. அலைகளின் கொந்தளிப்பில் சிக்கிய அவர்கள் உயிர் பிழைக்க கடலுக்குள் கடுமையாகப் போராடினார்கள். சில நிமிடங்களில் தாய் ரேகான் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அப்துல்லாவின் பிடியிலிருந்து ரேகானின் உடல் நழுவியது. அடுத்த கணமே காலிப்பின் உடலும் நழுவியது. எப்படியேனும் அய்லானை மட்டுமாவது காப்பாற்றிவிடத் துடித்தார் அப்துல்லா. ஆனால் அடுத்த அலையின் கொந்தளிப்பான சுழற்றலில் அய்லான் என்ற அந்த மூன்று வயது பச்சிளம் குழந்தை அப்துல்லாவின் கையை விட்டு எங்கோ போய்விட்டது.

2015 செப்டம்பர் 2.

உலகம் முழுவதும் ஊடகங்களில் பரபரப்பான காட்சிகள். கிரீஸ் நாட்டின் கோஸ் தீவுகளின் ஒரு கரையோரத்தில் மணலில் முகம் புதைந்தவாறு ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடக்கிறது. அந்த உடலைப் பார்த்து பதறியபடி ஒரு போலீஸ்காரர் கையில் எடுத்து, கண்ணீர் துளிர்க்க, கொண்டு செல்கிறார்.

அந்தக் காட்சிகளைப் பார்த்து உலகமே அதிர்ந்தது.

சிரியாவிலிருந்து வெளியேறும் லட்சக்கணக்கான அகதிகளின் கதியை அந்தக் குழந்தையின் மரணக் காட்சிகள் உலக மக்களுக்கு உணர்த்தியது. அந்தக் காட்சிகள்தான், முதல்முறையாக, தங்களது ஆட்சியாளர்கள் நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் அப்பாவி மக்களின் சிந்தனையைத் தூண்டிவிட்டது. சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை வரவேற்கிறோம் என்று ஜெர்மானியர்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் கிரீஸ் மக்களையும் சொல்ல வைத்தது. சிரியாவின் அகதிகளை எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறோம் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஜெர்மானிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்லையும் அறிவிக்க வைத்தது.

கிரீசின் கடற்கரையில் மணலில் முகம் புதைத்து மரணித்துக் கிடந்தாலும், உலகையே பேச வைத்த அந்த அற்புதக் குழந்தையின் பெயர் அய்லான்.

 

 

Related Posts