இதழ்கள் இளைஞர் முழக்கம்

அழிவின் பிடியில் உலகம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? – விளாடிமிர் புடின் ரஷ்ய ஜனாதிபதி

அழிவின் பிடியில் உலகம்

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

–           விளாடிமிர் புடின் ரஷ்ய ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது ஆண்டில் நாம் கூடியிருக்கிறோம். இந்த தருணத்தில் வரலாற்றில் நாம் கடந்து வந்த பாதையையும் எதிர்காலத்தில் நாம் செல்ல வேண்டிய பாதையையும் பற்றிப் பேச வேண்டியது அவசியமாகிறது.

1945 ஆம் ஆண்டில் பல நாடுகள் ஒன்று சேர்ந்து நாஜிசத்தை வீழ்த்தினோம். இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிந்தைய தற்போதைய உலகக் கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டினோம்.

அதைப்பற்றிப் பேசும்போது நான் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஹிட்லருக்கு எதிரான கூட்டணியின் தலைவர்கள் எங்களது நாட்டில் உள்ள யால்தா நகரில் கூடி, நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை உருவாக்கிடத் தேவையான கோட்பாடுகளை வரையறுத்தார்கள்.

யால்தாவில் உருவான அந்த அணி, கொந்தளிப்புச் சூழலில் பிறந்தது. இரண்டு உலக மகா யுத்தங்களில் பலியான பல லட்சக்கணக்கான உயிர்களின் மரணத்தில் பிறந்தது.

20ஆம் நூற்றாண்டில் இந்த புவிக்கோளம் முழுவதிலும் இதுவே பிரதான பிரச்சனையாக இருந்தது.

இன்னும் நியாயமாகப் பேசுவோமானால், கடந்த 70 ஆண்டுகளில் மனிதகுலம் ஏராளமான பிரச்சனைகளை, கொந்தளிப்பை, பரபரப்பான நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது; ஆனால் அனைத்திலிருந்தும் இந்த உலகம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால் இரண்டாம் உலக யுத்தத்தின்போது உருவான அந்தக் கோட்பாடுகள்தான் காரணம்.

அந்த வகையில் உலக நாடுகளின் பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை உயரிய அதிகாரம் மிக்கது; அனைத்து நாடுகளின் கருத்துக்களையும் எதிரொலிக்கக்கூடியது; உலக நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வல்லமை மிக்கது. இந்த சபை அதற்குரிய தன்மையில் போதுமான அளவிற்கு சீரிய முறையில் செயல்படவில்லை என்று பரவலான விமர்சனம் இருப்பது உண்மையே; குறிப்பாக, பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களிடையே பல முக்கியமான பிரச்சனைகளில் தீராத முரண்பாடுகள் இருப்பது உண்மையே.

எனினும், கடந்த 70 ஆண்டுகளாக ஐ.நா.சபை இத்தகைய வேறுபாடுகளைக் கடந்து வந்துள்ளது. பல தருணங்களில் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, அப்போதைய சோவியத் ஒன்றியம், இப்போதைய ரஷ்யா ஆகிய அனைத்து நாடுகளுமே தங்களுக்கான ரத்து அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளன. பன்முகத் தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் உள்ள ஒரு அமைப்பில் இது இயல்பான ஒன்றே.

ஐக்கிய நாடுகள் சபையை நிறுவியபோது அதை உருவாக்கிய தலைவர்கள், இந்த சபையில் எப்போதுமே ஒருமித்த கருத்து மட்டுமே இருக்கும் என்று கட்டாயம் நினைத்திருக்க மாட்டார்கள். இந்த மாபெரும் சபையின் நோக்கம், நாடுகளுக்கு இடையே சமரசங்களை உருவாக்குவது தான்; பல நாடுகளின் வேறுபட்ட கருத்துக்கள், கண்ணோட்டங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் இதன் பலம். இப்போது பிரச்சனை, இந்த சபையில் நாம் விவாதிக்கிற பிரச்சனைகள் அல்லது தீர்மானங்கள் முடிவுகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா, இல்லையா என்பதுதான். எத்தகைய பிரச்சனையை வேண்டுமானாலும் இங்கே விவாதிக்கலாம், தீர்மானிக்கலாம்.

ஆனால், இந்த நடைமுறைகளை மீறி, ஐ.நா. சபையை புறந்தள்ளிவிட்டு எந்தவொரு அரசேனும் எந்தவித நடவடிக்கை மேற்கொண்டாலும் அது சட்டவிரோதமானதுதான். அப்படிப்பட்ட நாடுகள் சர்வதேச சட்டவிதிகளை நிராகரிக்கின்றன; எதிராகச் செயல்படுகின்றன என்றே பொருள். நம் அனைவருக்கும் தெரியும், பனிப்போர் முடிவடைந்தபிறகு இந்த உலகில் ஒரேயொரு தனிப்பட்ட மையத்தின் ஆதிக்கம் என்பது உருவாகிவிட்டது; பிரமிடு போன்ற அமைப்பாக உலக அரசியலை கட்டமைத்துக் கொண்ட அவர்கள் அந்த பிரமிடின் உச்சத்தில் நின்று கொண்டு பதட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்; அவர்கள் இந்த உலகில் தாங்களே வலுவானவர்கள் என்றும் தாங்கள் மட்டுமே உயரியவர்கள் என்றும், தாங்கள் தனித்தன்மை மிக்கவர்கள் என்றும் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையை உடைத்துவிட முடியாது என்று அவர்களுக்கு தெளிவாகத் தெரியும்; ஆனாலும் கூட தாங்களே அதிகாரமிக்கவர்கள் போன்றும் உலகிற்கான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் செயல்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடைகளை உருவாக்கி வருகிறார்கள். வேறு வார்த்தையில் சொல்லப்போனால், ஐக்கிய நாடுகள் சபையின் குறுக்கே அவர்கள் நிற்கிறார்கள்.

இன்றைக்கு உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்றார்போல் ஐக்கிய நாடுகள் சபையும் பொருத்தமான மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்காக முழுமையாக இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் அதேநேரத்தில் இந்த சபையின் தார்மீக அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட நடக்கும் எந்தவொரு முயற்சியும் மிகவும் ஆபத்தானது. அதை அனுமதித்தால் சர்வதேச அமைப்புகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் சீர்குலையும் ஆபத்து ஏற்படும். அதற்கு பிறகு உலகில் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. போரும் படைகளும் மட்டுமே இந்த உலகை ஆட்சி செய்யும்.

சுயநலத்திற்குப் பதிலாக கூட்டுச் செயல்பாடு கோலோச்சும் ஒரு உலகை, சர்வாதிகாரத்திற்குப் பதிலாக சமத்துவ வாய்ப்புக்கான சிந்தனை கோலோச்சும் ஒரு உலகை நாம் பெறவேண்டியுள்ளது. இல்லையென்றால், ஜனநாயகமும் சுதந்திரமும் படிப்படியாக பறிக்கப்படுகிற, இறையாண்மைமிக்க சுதந்திர நாடுகள் படிப்படியாக வெளியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிற நாடுகளாக மாற்றப்படுகிற ஆபத்து நிகழும்.

இங்கே நமது சக நாடுகளின் தலைவர்கள் அரசின் இறையாண்மை குறித்து பேசினார்கள். அதன் பொருள் என்ன? அது அடிப்படையில் முழுமையான சுதந்திரம் பற்றியது; எந்தவொரு தனி நபரும், எந்த ஒரு நாடும், எந்தவொரு அரசும் தனது எதிர்காலத்தை சுதந்திரமாகத் தேர்வு செய்து கொள்கிற உரிமை பற்றியது. இது தொடர்பான சிந்தனையும் சரி, சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சர்வதேசச் சட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையும் சரி, தெள்ளத்தெளிவானதாக, வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள். அந்த உண்மையை ஏற்று, ஒருவருக்கொருவர் அவசியம் மரியாதையைப் பேண வேண்டும். எவரொருவரும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பைத்தான் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடமுடியாது. இதைத்தான் நமது கடந்த காலம் கற்றுக்கொடுக்கிறது. எனவே கடந்த காலப் படிப்பினைகளை நினைவுகூரவேண்டும்.

சோவியத்ஒன்றியத்தின் வரலாற்றிலிருந்து சில குறிப்பிட்ட அத்தியாயங்களை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். எந்தவொரு தத்துவார்த்த சிந்தனையையும் சரி, அதன் அடிப்படையிலான சமூகப் பரிசோதனைகளையும் சரி, யாரும் ஏற்றுமதி செய்யமுடியாது. மீறி முயற்சித்தால் துயரமான முடிவுகளே ஏற்படும். முன்னேற்றத்திற்குப் பதிலாக பின்னடைவே மிஞ்சும். ஆனால் இந்த படிப்பினையை இன்றும் கூட சிலர் கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். மீண்டும் அதே தவறுகளை செய்கிறார்கள். ‘புரட்சிகளை’ ஏற்றுமதி செய்கிறார்கள். ஜனநாயகம் என்று கூறி, அதை ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்கள். உலகின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வட ஆப்பிரிக்காவிலும் ஜனநாயகத்தைக் கொண்டுவரப்போவதாக எனக்கு முன்னால் பேசிய சிலர் கூறினார்கள்.

மேற்கண்ட பிரதேசத்தில் உண்மையில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் நீண்டகாலமாக நீடிக்கின்றன. அந்த மக்கள் இயல்பாகவே மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மாற்றம் எப்படிப்பட்டதாக நிகழ வேண்டும்? அந்த மக்களுக்கு சமூக மற்றும் அரசியல் வாழ்வில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்குப் பதிலாக இன்றைக்கு ஒரு கடுமையான அந்நிய ஆக்கிரமிப்புத் தலையீடு நடந்திருக்கிறது. அந்நாட்டின் சமூகவாழ்வும் தேசியக் கட்டமைப்பும் கடுமையான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவருவதற்குப் பதிலாக வன்முறையும், வறுமையும், சமூகப் பேரழிவும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அங்கே மனிதஉரிமைகளைப் பற்றி துளி அளவு கூட யாரும் கவலைப்படவில்லை. அந்த நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமை பற்றிக் கூட சிந்திக்கவில்லை.

இத்தகைய நிலைமையை உருவாக்கியவர்களுக்கு எனது தரப்பில் நான் எந்த உதவியும் செய்யமுடியாது. இப்போதாவது அங்கே நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா? எனது அச்சம் என்னவென்றால் இந்தக் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை என்பதுதான். மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இன்றைக்கு அதிகார வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அராஜகம் தலைதூக்கியுள்ள பகுதிகளாக அவை மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலைமைகளைப் பயன்படுத்தி அந்த நாடுகளில் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.

‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்று சொல்லப்படுகிற ஐஎஸ் அமைப்பின் பதாகையின்கீழ் பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகள் அணிதிரண்டிருக்கிறார்கள். அதில் இராக்கின் முன்னாள் ராணுவத்தினரும் கூட இருக்கிறார்கள். 2003ம் ஆண்டு இராக்கில் நடந்த கொடிய யுத்தத்திற்குப் பிறகு தெருவில் விடப்பட்ட அந்நாட்டின் ராணுவ வீரர்கள் இப்போது பயங்கரவாதப் படையில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படையில் சேர்ந்திருப்பவர்களில் பலர் லிபியாவிலிருந்து வந்தவர்கள்.

எப்படிப்பட்ட லிபியா? ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானம் 1973ஐ அப்பட்டமாக மீறி, படையெடுத்து ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட லிபியா.

இது ஒருபுறமிருக்க, சிரியாவின் ‘மிதவாத’ எதிர்க்கட்சியினர் என்று மேற்கத்திய நாடுகளால் சொல்லப்படுகிற படையினரும் இந்தப் பயங்கரவாதிகளோடு கைகோர்த்திருக்கிறார்கள்.

முதலில் அவர்களுக்கு ஆயுதங்களும் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் மேற்படி இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் பயங்கரவாதப் படையுடன் இணைந்துவிட்டார்கள். மேற்படி ஐஎஸ் அமைப்பு ஏதோ அந்தரத்திலிருந்து திடீரென வந்துவிடவில்லை. அதுவும் கூட மேற்கண்ட பிரதேசத்தில் மதச்சார்பற்ற அரசுகளுக்கு எதிரான ஒரு கைக்கூலிக் கருவியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான். அந்த மதச்சார்பற்ற அரசுகள், சிலருக்கு விரும்பத்தகாத சக்திகளாக மாறியதால் ஐஎஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இராக்கிலும் சிரியாவிலும் தனது கால்களை பதித்துவிட்ட இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு, அங்கிருந்து இதர பிரதேசங்களுக்கு தீவிரமான முறையில் தனது அட்டூழியத்தை விரிவுபடுத்தத் துவங்கியது. அது ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தையும் தனது காலடியின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது. அதுமட்டுமல்ல, அதற்கு அப்பாலும் அதன் திட்டங்கள் செல்கின்றன. இத்தகைய நிலைமை இந்த உலகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து.

இத்தகைய பின்னணியில் சர்வதேச பயங்கரவாதம் குறித்தும், அதன் அச்சுறுத்தல் குறித்தும் போலித்தனமாக – பொறுப்பில்லாத முறையில் சில நாடுகளின் தரப்பில் கூக்குரல் எழுப்பப்படுகிறது. அவர்கள், உண்மையில் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரும் நிதிஉதவியும் ஆயுத உதவியும் ஆதரவும் அளிக்கிற நாடுகள் குறித்துப் பேசாமல் கண்களை மூடிக் கொள்கின்றனர். சட்டவிரோதமான எண்ணெய் வர்த்தகம், ஆயுத வியாபாரம் மற்றும் கடத்தல் போன்ற பல வழிகளில் இந்த பயங்கரவாதிகளுக்கு நிதியும் ஆதரவும் அளிக்கப்படுகிறது. பயங்கரவாதிகள் எவ்வளவு கொடியவர்களோ அதே அளவிற்கு இந்த உலகிற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்… அந்த பயங்கரவாதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, தங்களது சொந்த அரசியல் நலனை அடைவதற்காக அவர்களை பயன்படுத்துபவர்களும்தான்.

உங்களுக்கு இன்னும் பல உண்மைகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மதிப்பிற்குரிய கனவான்களே, நீங்கள் மிகவும் பயங்கரமான, கொடூரமான நபர்களை அவசியம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அவர்கள் கற்கால மனிதர்கள் அல்ல, அவர்கள் உங்களைப் போலவே அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாது, யாரை அழிக்க யார், முயல்கிறார்கள் என்பது. சமீபத்தில் கிடைத்துள்ள புள்ளி விபரங்கள் – ஆயுத சப்ளை தொடர்பான விபரங்கள் இதை இன்னும் தெளிவாக்குகின்றன.

பயங்கரவாதிகளுடன் விளையாடுவதற்கு சிலர் பலமுறை முயற்சித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு ஆயுதம் அளித்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஆயுதங்கள் சுடுகிற போது அதன் அழிவு அனைவருக்கும் ஆபத்தானதாக மாறியிருக்கிறது. இன்றைய நிலைமையில் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது முன்னெப்போதும் பயங்கரவாதிகளின் கண் படாத புதிய பகுதிகளுக்கும் கூட பரவியிருக்கிறது. குறிப்பாக இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பல முகாம்களில் உலகின் பல நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு பயங்கரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளும் அடங்கும்.

துரதிருஷ்டவசமாக நான் இதை பகிரங்கமாகவே சொல்ல வேண்டிய கட்டாயமிருக்கிறது. இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தலில் ரஷ்யாவும் தப்பிக்கவில்லை. ரத்தவெறி பிடித்து அலையும் இந்தக் கொடிய குற்றவாளிகளை நாம் அனுமதிக்கமுடியாது. அவர்களது பயங்கரங்களைத் தொடர அனுமதிக்க முடியாது. நாங்கள் விரும்புவதைப்போலவே நீங்களும் நினைக்கிறீர்களா?

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவத்திலும் தொடர்ச்சியாக எதிர்த்துப் போரிட ரஷ்யா தயாராக இருக்கிறது. இன்றைக்கு இராக்கிற்கும், சிரியாவிற்கும் நாங்கள் ராணுவ ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் உதவிகள் செய்துள்ளோம். அந்தப் பகுதிகளில் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான போரில் உதவி செய்திருக்கிறோம்.

இன்றைய நிலையில் சிரியாவின் அரசாங்கமும் அதன் ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நேருக்கு நேர் நின்று போராடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு உதவிசெய்ய அல்லது ஒத்துழைக்க மறுப்பது மிகப்பெரும் தவறாகவே முடியும்.

இன்றைக்கு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினரையும் இதர பயங்கரவாத அமைப்புகளையும் எதிர்த்து இந்த உலகில் உண்மையிலேயே போராடிக் கொண்டிருப்பது சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் ராணுவப் படையினரும் குர்து இன மக்களின் ஆயுதக்குழுக்களும்தான் என்பதை நீங்கள் அங்கீகரித்தே ஆக வேண்டும்.

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனைகள், என்ன முரண்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இன்றைக்கு எதார்த்த நிலைமை என்பது வேறு.

சிரியாவில் நிலவும் சூழ்நிலைமையைப் பயன்படுத்தி ரஷ்யா தனது நலனை விரிவுபடுத்த முயற்சிப்பதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் அது உண்மையல்ல. ரஷ்யாவுக்கு தனது எல்லையை விரிவுபடுத்தும் எந்தவிதமான சிந்தனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இன்றைக்கு உலகம் சிக்கியிருக்கிற ஆபத்தைப் பற்றி பேசுவது அவசியம். அந்த ஆபத்தை ரஷ்யா இனியும் சகித்துக் கொள்ள தயாராக இல்லை.

சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டுக் சிந்திக்க வேண்டியுள்ளது; பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு நியாயமான, விரிவான சர்வதேசக் கூட்டணியை உருவாக்க வேண்டியிருக்கிறது.

ஹிட்லருக்கு எதிராக அமைக்கப்பட்ட அந்த மாபெரும் கூட்டணியைப் போலவே, மனிதகுலத்திற்கு எதிராக முளைத்துள்ள புதிய தீங்கினையும் வேரோடு அழித்திட அனைவரும் ஒன்றுபட வேண்டியுள்ளது. இதில் இன்னும் குறிப்பாக முஸ்லீம் நாடுகள் மிக முக்கியப் பங்காற்றிட வேண்டும். இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பயங்கரவாத அமைப்பு அந்த பிராந்தியத்தில் உள்ள ஒரு சில இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டுமே அச்சுறுத்தல் அல்ல; அது உலகம் முழுவதும் ரத்தவெறியாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிற ஒரு அமைப்பாக மாறியிருக்கிறது; உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரும் மதங்களுக்கு எதிராக குற்றங்களை கட்டவிழ்த்துவிடத்துவங்கியுள்ளது.

இந்த பயங்கரவாதத்தை முன்வைக்கும் அந்த அமைப்பின் தத்துவார்த்தவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் போலித்தனமான இஸ்லாமை முன்வைக்கிறார்கள்; உண்மையில் இஸ்லாம் மதத்தின் மனிதநேயமிக்க மாண்புகளை சிறுமைப்படுத்துகிறார்கள். இதுகுறித்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மதத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்; பேச வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். உலகம் பெரும் ஆபத்தின்பிடியில் சிக்கியிருக்கும் இந்த தருணத்தில் உங்களது வழிகாட்டுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன்.

அடுத்து ஒரு மிக முக்கியப் பிரச்சனை, இன்றைக்கு மிகப்பெரும் எண்ணிக்கையில் அகதிகள் முகாம்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் தங்களது நாடுகளுக்கு அருகில் உள்ள அண்டை நாடுகளில் முதலில் குவிகிறார்கள்; பிறகு அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். முதலில் ஆயிரக்கணக்கில் இந்த எண்ணிக்கை இருந்தது. தற்போது பல லட்சக்கணக்கில் மாறியிருக்கிறது. உலக வரலாற்றில் மிகப்பெரிய துயரகரமான மனித இடப்பெயர்வு இது. இது ஐரோப்பா உள்பட அனைத்து நாடுகளுக்கும் ஒரு கடினமான பாடம் ஆகும்.

எந்தச் சந்தேகமும் இல்லை, அரபு நாடுகளிலிருந்து வரும் அகதிகள் நம்முடைய அன்பையும் ஆதரவையும் கோரி நிற்கிறார்கள்; அந்த ஆதரவை அவர்களுக்கு அளித்தே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவர்களது நாடு அழிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு மீண்டும் புதிய மாற்றங்கள், அரசு அமைப்புகள் உருவாக்கப்படும் வரை அதற்கான ஏற்பாட்டைச் செய்வது, அதுவரை அந்த மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வது என்பது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி இந்த ஏற்பாடுகள் உடனடியாக நடக்க வேண்டும். ஐ.நா. சபைக்கு மாறாக நடக்கும் ஏற்பாடுகள் நிராகரிக்கப்பட வேண்டும். லிபியாவில் அரசுக் கட்டமைப்பு உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். இராக்கில் புதிய அரசுக்கு ஐ.நா. முழுமையான ஆதரவும் உதவிகளும் அளித்திட வேண்டும். சிரியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பில் உள்ள அரசாங்கம் பாதுகாக்கப்படத் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

ஐ.நா.வின் தலைமையில் உலகின் அமைதியும், பிராந்திய அமைதியும் உலகப்பொருளாதார நிலைத்தன்மையும் தொடர்ந்து நீடிக்க சர்வதேச சமூகம் உறுதியேற்க வேண்டும். இந்த அனைத்து ஏற்பாடுகளும் ஒரே நாளில் செய்துவிட முடியாது; சற்று காலம் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே; ஆனால் இதற்கு வேறு எந்த மாற்றும் இல்லை.

ஆனால் பனிப்போர் காலத்தில் இருந்த நிலைமை இன்றைக்கும் நீடிப்பதாகக் கருதி, புதிய புதிய பிரதேசங்களில் தனது இருப்பைக் காட்டுவதற்கு நேட்டோ ராணுவ கூட்டணி முயற்சிக்கிறது. அவர்கள் யாருடன் மோதுவதற்காக உதயமானார்களோ அந்த சோவியத் ஒன்றியம் இப்போது இல்லை. எனவே நேட்டோ ராணுவக் கூட்டணி மேலும் மேலும் தனது ராணுவத்தை விரிவுபடுத்துவது அர்த்தமற்றது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தற்போது வறுமையின் பிடியில் சிக்கியுள்ள சில நாடுகளுக்கு நேட்டோ அணி தவறான பாதையைக் காட்டுகிறது. ஒன்று மேற்கத்திய நாடுகளோடு இணைந்திருக்க வேண்டும்; அல்லது கிழக்கோடு இணைந்திருக்க வேண்டும் என்று மிரட்டுகிறது. இப்படிப்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒரு கடுமையான புவி அரசியல் நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இதுதான் நடந்தது. அதிகாரத்தில் இருக்கும் அரசுக்கு எதிரான கருத்து கொண்ட மக்களை இப்படித் தூண்டிவிட்டதன் விளைவாக அங்கு ஒரு திட்டமிட்ட ராணுவக் கலகம் வெளியிலிருந்து நடத்தப்பட்டது. இது உள்நாட்டு யுத்தத்திற்கு வழிகோலியது.

உக்ரைன் நெருக்கடி தொடர்பாக மிக விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மின்ஸ்க் உடன்பாடு அமலாக்கப்பட வேண்டும். அங்கு ரத்தம் சிந்துவதற்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும். ஐரோப்பா மற்றும் யுரேசியா பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பொருளாதார ஒத்துழைப்பு என்பதைப்பற்றிப் பேசும்போது நாம் உலக வர்த்தக அமைப்பின் கோட்பாடுகள், விதிமுறைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசவேண்டியுள்ளது. வர்த்தகம், முதலீடு, சந்தைப் போட்டி என்பதில் சமமான வாய்ப்புகள் இருப்பது அவசியம்.

அதற்கு மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு எதிராக தன்னிச்சையான பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படுகின்றன. ஒருநாட்டிற்கு எதிராக இன்னொரு நாடு இப்படி பொருளாதாரத்தடை விதிப்பது என்பது உலகச் சந்தையில் போட்டியிலிருந்து சக போட்டியாளரை ஒழித்துக் கட்டுவது போலாகும். அதுமட்டுமல்ல, பொருளாதாரச் சுயநலம் அச்சுறுத்தும் விதத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாகும். சில நாடுகள் தங்களுக்குள் மட்டுமேயான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன. அவை திரைமறைவில் பல பேரங்களை நடத்துகின்றன. தங்களது சொந்தக் குடிமக்களுக்கு, பொது மக்களுக்கு, தொழிலதிபர்களுக்கு கூடத் தெரியாமல் ரகசியமாக நடத்துகின்றன. இந்த பொருளாதார விளையாட்டின் விதிகளை வகுத்தது உலக வர்த்தக அமைப்புதான். ஒருகுறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் சாதகமான அந்த விதிகள் மாற்றப்பட வேண்டும். அது நீடித்தால் உலகப் பொருளாதார – வர்த்தகக் கட்டமைப்பு முற்றாக சீர்குலையும்.

நான் முன்வைத்துள்ள இந்தப் பிரச்சனைகள் உலகின் அனைத்து நாடுகளது எதிர்காலத்தோடு நேரடியாகத் தொடர்புடையது. எனவே எங்களுக்கு மட்டுமேயான கொள்கை என்பதற்கு மாறாக, உலகம் முழுவதற்குமான கொள்கைகளையும், திட்டங்களையும் முன்மொழிய ரஷ்யா விரும்புகிறது.

உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு மிக முக்கியப் பிரச்சனை காலநிலை மாற்றம் என்பதாகும். பாரீசில் கடந்த டிசம்பரில் நடந்த ஐ.நா.காலநிலை மாற்ற மாநாட்டில் எடுத்த முடிவின்படி எமது நாட்டின் பசுங்கூட வாயு கழிவுகளை 70 முதல் 75 சதவீத அளவிற்கு குறைப்பதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டியுள்ளது. இயற்கையைச் சிதைக்காத, சுற்றுச்சூழலை மேலும் மோசமாக்காத புதிய தொழிற்நுட்பங்களை உருவாக்குவதில் நாங்கள் எப்போதும் தயாராகவுள்ளோம்.

-ஐக்கிய நாடுகள் சபையில் 2015 செப்டம்பர் 15 அன்று ஆற்றிய உரை

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Related Posts