அரசியல்

அழகான பேச்சுக்கள் விரியும் சாலையில் காத்திருக்கும் அபாய பள்ளங்கள்

– எஸ்.வி. வேணுகோபாலன்

“செயல், அதுவே சிறந்த சொல்” என்றார் ஹொசே மார்த்தி என்னும் கியூப தத்துவஞானி. நாம் இன்னும் சொற்களை வைத்து மனிதர்களை நம்பத் தலைப்படுகிறோம். சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பதுபோல் வந்தே மாதரம் என்பார் கிளியே, மனத்தில் அதனைக் கொள்ளார் என்றார் மகாகவி. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்… என்று எச்சரித்தார் வள்ளலார். “அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன், அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்” என்று ஒரு திரைப்படப் பாடலே எழுதினார் கவியரசு கண்ணதாசன்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து குண்டு துளைக்காத கண்ணாடி அறை ஏற்பாடுகளைத் தவிர்த்து, எழுதி வைத்துக் கொள்ளாத ஒரு சிறப்புரையை நீண்ட நேரம் தங்கு தடையின்றி ஆற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. பள்ளிகளில் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும் … பெண் குழந்தைகளைத் துருவிக் கேட்டது போதும், ஆண் குழந்தைகளை எப்போது கேட்பீர்கள், பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஒவ்வோர் ஆண் மகனுக்கும் ஒரு தாய் இருப்பாள் இல்லையா என்று கேட்கிறாரே, எங்கோ போய்விட்டார் அவர்… என்னமாப் பேசறார் என்று ஊடகங்களும், அறிவுஜீவிகள் சிலரும் பெரிதும் கொண்டாடினர்.

மிகவும் வித்தியாசமான சூழலைத் தேர்ந்தெடுத்துள்ளனர் நமது தேசத்தின் வாக்காளர்கள். ஊழலால் வெறுத்துப் போனவர்கள் நேர்மையான, வெளிப்படையான ஆட்சியைக் கனவு கண்டிருக்க வேண்டும். வேளாண் துறையில் பயிர்கள் துளிர்க்க விரும்பியிருக்க வேண்டும். விலைவாசி குறைய வேண்டுதல்.. கல்வி,வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி போன்றவை தங்களுக்குக்கை எட்டுகிற அளவில் வாய்க்க வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

இவ்வாண்டின் மத்திய பொது பட்ஜெட் அறிக்கை வாசிக்கப்பட்ட போது, அருண் ஜேட்லியின் குரல் தனக்கு ப.சிதம்பரம் குரல் போலவே காதில் விழுந்ததாக மருத்துவர் ஜி. ராமானுஜம் போன்ற பலர் முக நூலில் பதிவு செய்திருக்கின்றனர்.ஆனால் அதற்குமேலும் ஆபத்து சூழ்கிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் இருந்தே தொடங்க வேண்டும். நாட்டின் மிகப் பெரிய அரசு நிறுவனத்தைக் கூறு போட்டுத் தனியாருக்கு விற்கும் பாஜகவின் வேகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விஞ்சக்கூடியது. நிதித்துறையை தாரை வார்க்க முன்மொழிவு செய்யும் அவர்களது திட்டங்கள் பகிரங்கமானவை. கசப்பான மாத்திரை என்பது மக்களை நிரந்தர நோயாளிகளாகப் பார்க்கும் மட்டமான அரசியல் பார்வையின் மொழி. மேற்கு வங்கத்தில் பல பத்தாண்டுகளாக அறிந்திராத பொதுக் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ். நடத்தியது என்பது பத்திரிகையாளர் விவரிப்பு அல்ல, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரது அனுபவச் சுவடு. பங்க ளாதேஷ் நாட்டிலிருந்து இஸ்லாமியர் ஊடுருவி வந்து, மேற்குவங்க மக்களது வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றனர் என்ற விஷமப் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறது அந்தப் படை. கிறிஸ்துவ, முகம்மதிய மக்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வருவோம் என்ற இந்துத்துவக் குரலுக்கு அரசின் ஆசீர்வாதங்கள் உண்டு என்பதை விளக்க வேண்டியதில்லை. இந்தி யர் எல்லோரும் இந்துக்களே என்று கர்ஜிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். 2014 ஏப்ரலிலிருந்து ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் 149 மதமோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மோதல்கள் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடி மகாராஷ்ட்ரா வருகிறது. மகா ராஷ்ட்ராவில் தேர்தல் வருகிறது என்பதை நினைவில் கொள்க.

இந்திய வரலாற்று மையத்தின் தலைவர் சுதர்ஷன் ராவ், சாதிய முறைகளைக்கொண்டிருந்த பழையவர்ணாசிரமசமூக அமைப்பே மேன்மையானது என்கிறார். பாபர் மசூதி கட்டப் பட்ட இடத்தில் இராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு என்கிறார். இஸ்லாமியர்கள்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பேசும் அவர் சொல்வதுதான் இனி அதிகார பூர்வ வரலாறு என்பதில் உள்ள அபாயத்தைப் பார்க்கத் தவறினால், எதிர்காலம் என்ன ஆகும்?

மோடியை பிரதமராக்க உத்தரப்பிரதேசத்தில் தனது கடுமையான செயல் திட்டத்தைச் செயல் படுத்தினார் அமித் ஷா. பதிலுக்கு அவரை, பாஜக தேசியத் தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வந்துவிட்டார் மோடி. ஈவிரக்கமற்ற ஒரு மதவெறியர் அமித் ஷா என்பது ஊரறிந்த விஷயம். கட்சியில் இவர், ஆட்சியில் அவர்!

அமெரிக்காவுக்கு வால் பிடிக்கிறார் மன்மோகன் என்று கேலி செய்த பாஜக, ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக எப்படி மோடியை அங்கு அனுப்பி வைப்பது என்று கணக்குகளைப் போடத் தொடங்கியது. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு வசதியாக அந்நிய மூலதனத்தை பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அனுமதிக்க முடிவெடுத்தது. பாலஸ்தீனியப் பிரச்சனையில் இஸ்ரேல் செய்வது அடாவடி வேலை என்று பேசக்கூட அஞ்சு கிறது. அறுபது நாள்தானே ஆயிற்று, எண்பது நாள்தானே போயிருக்கிறது, இன்னும் கொஞ் சம் நேரம் கொடுத்துப் பார்ப்போம் என்று எழுதுகிறார்கள்.. பேசுகிறார்கள். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிக வேக மாக எடுக்கப்படுவது பற்றி ஊடகங்கள் எப்போது எழுதும் என்று தெரியவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகரில் பற்றியெரியும் மதவெறி பிரச்சனையின் ஆணிவேர் பாஜக அலுவலகத்தில் இருக்கையில், மதவாதம் தவறு என்று சொல்லும் மோடிக்கு எத்தனை கால அவகா சம் கொடுக்கலாம்? பாலியல் வழக்குகளில் சிக்கி இருக்கும் சாமியார்களை சங் பரிவாரம் பாதுகாப்பதுஅம்பலமாகிப் போன விஷயம். இந்த சாமியார் களைப் பற்றி மோடியும் அமித் ஷாவும் மௌனம் காப்பது ஏன்? மனிதக் கழிவுகளைச் சுமப்பதும், கழிப்பறைகளைக் கழுவுவதும் கடவுள் அளித்த பணியாகக் கருத வேண்டும் என்று குஜராத் முதல்வ ராக இருக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறிய அதே வாயால் இப்போது நவீன கழிப் பறைகளைக் கட்டித் தர உத்தரவிடு வது எத்தனை எளிதாக இருக்கிறது!

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத் திருத்தங்களை முதலில் தாங்கள் ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தானில் நிறைவேற்றச் சொல்லிவிட்டு அதை அகில இந்திய அளவில் மத்திய அரசிலும் கொண்டுவரத் துடிக்கும் ஓர் அரசு எப்படி சாதாரண மக்களின் ஆட்சியாக இருக்க முடியும்?

மகாத்மா காந்தி கொலை வழக் கின் ஆதார ஆவணங்களை அழிக்கும் வேலையில் மோடி அரசு இறங்கியிருக்கிறது என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ள சூழ்நிலையில் அதைப் பற்றி வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விளக்கத்தை அரசு தரவில்லையே? குஜராத் கலவரங்களைத் தூண்டிவிட்ட குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மாயா கொட்னானியை இன்றுவரை தற்காத்துக் கொண்டி ருக்கும் நரேந்திர மோடி, தான் மக்களின் பிரதம சேவகர், மந்திரி அல்ல என்று பேசும்போது எத்தனை கோடி கைகள் தட்டி ஆரவாரிக்கின்றன? அவரது சுதந்திரதினப் பேச்சு குறித்த புகழுரைகளைத் திட்டமிடப்பட்ட திசை திருப்பல் வேலையாகத்தான் கருத முடியும். ஆபத்துகள் நிறைந்த திசை திருப்பல் அது.

ஆனால் நம்பிக்கைகள் ஒட்டு மொத்தமாக அழிந்து போய்விடுவ தில்லை. மக்களிடம் உள்ளார்ந்த விஷயங்களை எடுத்துப் பேசும் அரசியலும் இங்கே இருக்கவே செய்கிறது. மக்களுக்காகப் போராடும் அரசியல் அது. “பட்டினியாய்க் கிடந்தாலும் பிள்ளைக்குப் பால் கொடுப்பாள், பால் குடிக்கும் பிள்ளையின் முகம் பார்த்தே பசி மறப்பாள்” என்று வரும் பாடலைப் போல் அமைந்திருக்கும் அரசியல் அது. தேர்தலில் பெரிய பின்னடைவைச்சந்தித்திருப் பினும், ஓயாது மக்கள் பிரச்சனை களுக்காகத் துடிப்போடு இயங்கிக் கொண்டிருப்பவர்களும் அவர்களே. மிக முக்கியமான விஷயம், துணிச்சலும், பொறுப் புணர்வும்,அர்ப்பணிப்பும் கொண்ட இடதுசாரி அரசியல் அது. இடதுசாரிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று பேசவும், எழுதவும் செய்வோர், மக்கள் உருப்பட்டுவிடக் கூடாதே என்று கவனமாக இருப்பவர்களாக இருக்கக் கூடும். இடதுசாரிகளின் தேவை முன்னெப்போதையும் விட இப்போது இன்றியமையாத தாக ஆகிக் கொண்டிருப்பதை நடப்பு விஷயங்கள் புரிய வைக்கின்றன. நவீன தாராளமயம் சீரழித்துக் கொண்டிருக்கும் நமது பண்பாக்கங்கள் குறித்தும் பேசும் இடதுசாரி அரசியல் மக்களை விழிப்படைய வைத்துப் போராட அணிதிரட்டும் அரசியல். விரி வான இடதுசாரி, ஜனநாயக அணியைத் திரட்ட முனைந்திருக் கும் அரசியல்.

ஆரோக்கியமான மாற்றுக் கொள்கைகள் குறித்தும், சாதி-மத வெறிக்கு எதிரான போராட்டங் கள் குறித்தும், ஆண்-பெண் சமத்துவ உரிமைகள் குறித்தும் அக்கறையும், பங்களிப்பும் கொண் டிருப்போர் இடதுசாரிகள். செயல் – அதுவே சிறந்த சொல் என்பதை அவர்களது களப்பணியும், அமைப் புகளின் செயல்பாடுகளும் விளங்க வைத்து விடுகின்றன. அவற்றின் தேவை பெருகும் காலத்தில் நிற் கிறோம் நாம். அதாவது நம் பிக்கைக் குடையின் கீழ்!

Related Posts