இதழ்கள் இளைஞர் முழக்கம்

அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் – பிரியா

Vergal

வேர்கள் – ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும், அடிமைத்தனத்தினை எதிர்க்கும், அடிமைத்தனம் என்றால் என்னவென்று கேட்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

தனக்கான, தனக்கு உரிமையான நிலத்தில் சுதந்திர வாழ்வு வாழ்ந்து கொண்டு, பறவையைப்போல் திரிந்து கொண்டிருந்த ஒருவனை, தனது சுய லாபத்துக்காக கொடிய விலங்கினைப்போல் விலங்கிட்டுப் பிடித்து, இருட்டறையில் அடைத்து வைத்து அவன் அது வரை கண்டறிந்திராத ஒரு நிலத்தில், அவன் இது வரை கேட்டறியாத பாஷை பேசும் மனித மிருகங்கள் வாழும் நிலத்தில், அவர்தம் தேவைக்காக இவர்தம் நலம் சுருக்கி, சுயம் பிடுங்கப்பட்டு உணர்ச்சிகள் சூறையாடப்பட்டு, வாழ்ந்த முறைகள் மறக்கடிக்கப்பட்டு, இனிமேல் இதுதான் உன் அடையாளம், இதுதான் உன் வாழ்க்கை முறை, இதுதான் உன் உணவு என்று திணிக்கப்பட்ட ஏதோ ஒன்றை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல், அதிலிருந்து தப்பி ஓடவும் வழியில்லாமல் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் துயர் மிகு சரித்திரமே வேர்கள்.

இதன் நாயகன் குண்டா கிண்டே, ஆப்பிரிக்கா காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர். பணத்திற்காக அதே ஆப்பிரிக்க கைக்கூலிகளால் சிறை பிடிக்கப்பட்டு அமெரிக்க முதலாளிக்கு தரகர்களின் மூலம் அடிமையாக விற்கப்பட்டவர், அமெரிக்க அடிமை வாழ்வு பிடிக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயன்று தப்பியோடும் அடிமைகளை பிடிக்கும் வெள்ளைக்காரர்களிடம் சிக்கி கால் பாதங்கள் வெட்டுண்டு நல்ல மனம் படைத்த அமெரிக்க மருத்துவர் ஒருவரால் மருத்துவம் பார்க்கப்பட்டு பின்னர் அவருக்கே வண்டியோட்டியாய் அடிமையானவர். இத்தனை துயரங்களையும் கடந்து இதுதான் வாழ்க்கை என்றான பின்னர் அதே எஜமானரிடம் அடிமையாய் இருந்த ஆப்பிரிக்க வம்சாவளி பெண்ணை மணந்துகொண்டு ஒரு மகளுக்கு தந்தையானவர். அவர் வாழ்வின் துயரங்கள் அனைத்தையும் சற்றேனும் மறப்பதற்கு அருமருந்தாய் இருந்தது அவரது மகள் கிஸ்ஸி.

குண்டா கிண்டே தனது மகள் மிகச் சிறிய வயதினளாய் இருக்கும் போதே அப்பிஞ்சு குழந்தைக்கு தனது தாய் மொழியையும், தன் தாய் நாட்டினைக் குறித்தும், தனது வம்சம் மற்றும் குடிப் பெருமை குறித்தும் சொல்லிக் கொடுக்கிறார். இது அவரது மனைவிக்கு பிடிக்காத போதும் அவர் மனைவி இல்லாத, தனது மகளுடன் அவருக்கு அமையப் பெற்ற தனிமை சந்தர்ப்பங்களில் தன்னால் முடிந்த அளவு ஆப்பிரிக்க காடுகளில் தொடங்கி அமெரிக்க அடிமையானது வரையான தனது வரலாற்றையும், பூர்வீகம் மற்றும் குடிப் பெருமையையும் அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அத்துடன் தான் கற்றுக் கொடுத்த அனைத்தையும் அவள் தனது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்னும் உறுதி மொழியையும் பெற்றுக் கொள்கிறார்.

இந்த எண்ணம் அவருக்கு எப்படி தோன்றியது எனில் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர் மத்தியில் கதை சொல்லிகள் என்று ஒரு வகையினர் உண்டு. அவர்களுக்கு தொழிலே அம்மக்களின் வரலாற்றை வழி வழியாக அறிந்து அதை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது. ஒரு கதை சொல்லி தனது வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் தான் அறிந்த வரையிலான வரலாற்றை உண்மை மாறாமல் தனது சீடருக்கு சொல்லிக் கொடுக்கிறார், அதன் பின் அந்த சீடர் தான் கற்றறிந்த வரலாற்றுடன் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும் சேர்த்து தன்னுடைய சீடனுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இப்படியே தலை முறை தலை முறையாக அங்கு வரலாறு உயிர்ப்புடன் இருக்கிறது. இதே முறையைப் பின்பற்றியே குண்டே கிண்டாவும் தனது மகளுக்கு தங்களுடைய வரலாற்றைசொல்லிக் கொடுக்கிறார், அத்துடன் இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான உறுதி மொழியையும் பெற்றுக் கொள்கிறார்.அவருக்கு உறுதி அளித்தது போலவே கிஸ்ஸி தனது குழந்தைகளுக்கு தன் தந்தையின் கதையை அவரது கதை வரை சொல்லி வளர்த்து அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் வரலாற்றுடன் இதனையும் கூறி வளர்க்க வேண்டும் என்னும் உறுதி மொழியையும் பெற்றுக் கொள்கிறார்.

இது அப்படியே அடுத்து அடுத்த தலை முறைக்கு பயணப்பட்டு கிண்டேவின் வம்சத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் காதில் இந்த கதையை சொல்வதென்பது ஒரு வழக்கமாகவே மாறி விடுகிறது.இந்த நூலின் ஆசிரியர் அலெக்ஸ் ஹேலி குண்டா கிண்டேவின் வம்சத்தில் வந்த ஏழாவது தலைமுறையை சேர்ந்தவர். இவர் வரை இக்கதை இப்படியே வழி வழியாக வருகிறது. இதனிடையே அமெரிக்காவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, பல கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும் சந்தித்து பல உயிர்த் தியாகங்களுக்குப் பின் அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறது. கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களைப் போல அந்நாட்டு குடிகளாகி கல்வி வேலைவாய்ப்பு மற்றும் இன்ன பிற உரிமைகளையும் பெறுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயர ஆரம்பிக்கிறது.

ஆனால் இத்தனை மாற்றங்களின் பின்னும் மாறாமல் தொடர்வது கிண்டேவின் வம்சத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் காதுகளில் ஓதப்படும் அவர்தம் வம்ச வரலாறு. இந்த பழக்கத்தின் காரணமாகவே இந்த நூலாசிரியர் வரை வந்து சேர்ந்த வரலாறு பின் அவர்தம் மனதில் ஏதோ ஒன்று உந்தித் தள்ள தன் வரலாற்றின் உண்மை தன்மையை பின் நோக்கி ஆராய்ந்து அதை தெளிவுபடுத்திக் கொள்ள விழைகிறார். பல கோப்புகள் மற்றும் பல நல்ல உள்ளங்களின் துணையுடன், எந்த கிராமத்திலிருந்து குண்டா கிண்டே கடத்தப்பட்டாரோ அதே கிராமத்தையே தான் முயற்சியின் மூலம் சென்றடைகிறார். என்னதான் அக்கிராமம் அவரது பூர்வீகமாய் இருந்தாலும் பல காரணங்களால் மாறுபாடடைந்த கலாச்சாரத்தில் வாழும் நூலாசிரியர் தான் அம்மக்களிடமிருந்தது அந்நியப்படுவதாகவே உணர்ந்து வருந்துகிறார். அவர்களுடன் வந்த மொழிபெயர்ப்பாளர் அலெக்ஸ் யாரென்பதை அக்கிராம மக்களுக்கு எடுத்துரைக்க அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று தங்கள் சிறு குழந்தைகளை அவரிடம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்று செல்கின்றனர். எப்படி குண்டா கிண்டேவின் வரலாறு அமெரிக்காவில் உயிர்ப்பித்து வாழ்கிறதோ அப்படியே அவருடைய அப்பாவான ஓமோராவின் வரலாறு ஆப்பிரிக்க கதை சொல்லிகள் மூலம் அங்கும் உயிர்ப்பித்து வாழ்வதை நூலாசிரியர் அறிகிறார்.

இப்புத்தகத்தைப் படித்து முடிக்கையில் அடிமை முறையினால் ஏற்பட்ட துன்பங்களையும் அதிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும் உணர்வது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கர்களைக் குறித்து மேலை நாடுகள் நம்முள் விதைத்துள்ள கட்டுமானங்கள் சிதைவதையும் நாம் உணரலாம். வெறும் காட்டு மிராண்டிகளாகவும், மனிதர்களைத் தின்பவர்களாகவும் நமக்கெல்லாம் காட்டப்பட்ட ஆப்பிரிக்கர்கள் உண்மையில் மிகச் சிறந்த பண்பாட்டுடன் கூடிய ஒழுக்கமான வாழ்வினை வாழ்பவர்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். வரலாறுகளை தெரிந்து கொள்ள விழைபவர்களும், உலகின் அனைத்து வகை அடிமைத்தனத்திற்கும் எதிராக குரல் கொடுப்பவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் “வேர்கள்”
குறிப்பு : ROOTS என்கிற இந்த ஆங்கில நூலின் சுருக்கம் ஏழு தலைமுறைகள் என்ற பெயரில் சவுத் விஷன் வெளியிட்டகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

Related Posts