சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

அறிவுள்ள மூடர்கள் …!

ஏன் இந்த வீண்வேலை?

தமிழ் சினிமா இவர்களுக்கெல்லாம் என்ன செய்தது?.

சாதாரணமாக, நான்கு பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள், கவர்ச்சிக்கு மட்டும் நாயகி என்று வைத்து படம் எடுத்து காசு பார்த்துவிட்டு போகலாம்தானே?

ஆனால், 21 ஆம் நூற்றாண்டின் இளம் கீற்றுக்கள் அப்படி எளிதான பாதையை விரும்பவில்லை. தன்னையே உருக்கி ஊற்றி, தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு முயற்சிதான் ‘மூடர் கூடம்’.

இந்தப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். கதை சொல்லும் உத்தி, திரைக்கதை நேர்த்தி, தேர்ந்தெடுத்த வசனங்கள், காமிரா, நடிப்பில் புதிய பரிணாமம் – நவீன் மற்றும் குழுவினர் சிரத்தையெடுத்து உழைத்திருக்கிறார்கள்.

“நாம் வாழ்க்கையை அடைய ஒரு பாதையை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால், பாதைதான் வாழ்க்கை என்பதை மறந்துவிடுகிறோம்” என்று பின்னணிக் குரலோடு படம் தொடங்குகிறது படம். புத்தரின் வாசகங்கள் திரையில் தெரிகின்றன. நவீன், வொயிட் (எ) வெள்ளைச்சாமி, செண்ட்ராயர், குபேரன் என நான்கு புதிய பாத்திரங்கள் அறிமுகமாகின்றனர். அவர்களின் வாழ்க்கைப் பயணம் கண் முன் விரிகிறது.

கதை சொல்லும் உத்தி, புதுமையானது. ஆனால், புரியாததல்ல. சொல்லப்போனால், புரிந்து கொள்ள கடினமான விவாதத்தை எளிமையான முறையில் நடத்துகிறது.

முன் கதைகள் சொல்வதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறைகள் ரசிக்க வைக்கின்றன. “கோச்சடையான்” 3 டி அனிமேசனைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ள தமிழ் ரசிகனுக்கு, ‘குபேரன்’ முட்டாப்பயதான் என்ற 2 டி அனிமேசன் ஒரு புதிய நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது.

அம்மாவையும், காதலையும் இழந்து தனியே விடப்படும் வெள்ளையன், தன் மாமா வீட்டின் மீது வைத்த எதிர்பார்ப்பும், எதிர்ப்பார்ப்பு உடைபடுவதையும் உடல் மொழியிலேயே நமக்கு உணர்த்தும்போது நம்பிக்கைக் கீற்று வந்து அகல்கிறது. உடல்மொழி, இசை, காமிரா கோணங்கள், காட்சித் தொகுப்பு என அனைத்திலும் கதை சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு மாமரத்தில் 100 மாம்பழங்கள் பழுக்கின்றன என்ற உதாரணத்தோடு – யார் செய்வது திருட்டு? என்ற கேள்வியை நவீன் முன்வைக்கிறார். தனது வசனங்களுக்காகவே அவர் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறார்.

அந்த வகையில்,

படைப்பாளன் ஒரு பறவையைப் போல. தான் தின்று செத்தபின், செரிக்காத மிச்சத்தை ஏதோ ஒரு காட்டிலும், கடினமான பாறை இடுக்கிலும் அது விட்டுவிட்டுச் செல்கிறான். அந்த மரம் ஒரு காட்டையே உருவாக்குகிறது, அந்த மரம்பாறையைப் பொடியாக்குகிறது.

வாழ்த்துவோம்!

Related Posts