அரசியல் அறிவியல் சமூகம்

அறிவியல் மாணவன் கடவுளை தேடினால்…

(கடவுள் கோட்பாட்டை எடுத்துக் கொண்டு அதனை ஆய்வுகளுக்கு உட்படுத்த முடியுமா என்ற சோதனையைச் செய்து பார்த்து கட்டுரை எழுதியிருக்கிறார் அபினவ் என்ற மாணவர். மாற்று வாசகர்களுக்காக அவரது கட்டுரையைத் தருகிறோம்.)

அறிவியலுக்கும் கடவுளுக்கும் இடையிலான முரண்பாடுகளும், வேறுபாடுகளும் பல வருடங்களாக தொடரும் ஒரு அறிவுசார் விவாதமாய் திகழ்கிறது. “அறிவியல் கடவுளை அழித்துவிட்டது” என்று ஒரு சாரரும், “கடவுள் தான் அறிவியலை மனிதனுக்கு அளித்தார். அறிவியல் கடவுளுக்கு என்றும் அடிமை” என்று மறு சாரரும் மோதிக்கொள்ள, “கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு முழுமையான பதில் அளிக்கவே முடியாது. கடவுளை தேடிச் செல்வதே அறிவியல் வளர்ச்சிக்கான பாதை” என்று நடுவில் சிலர் சமாதானம் பேசுகின்றனர்.

இதில் இரு முனைகளில் உள்ள அணிகள் ஒன்றில் சேர்ந்து சண்டை போடுவதா அல்லது சமாதானம் பேசும் கூட்டத்துடன் சேர்ந்து ஊசலாட்டம் ஆடுவதா என்று பல விவாத ஆர்வமுடையோர் குழம்பி தவிக்கின்றனர். அனால் பெரும்பாலான பொதுமக்களோ, “அட போங்கடா! இருக்குற பிரச்சனையில இத பத்தி வேற யோசிக்கனுமா? எனக்கு ஏதோ மனசு நிம்மதிக்காக சாமிய கும்புட்டிட்டு போறேன்”, என்று இதை குறித்து சிந்திக்காமலே ஒரு நம்பிக்கையுடன் வாழ்ந்து, தங்களின் பரபரப்பான வாழ்க்கைய ஓட்டுகின்றனர்.

“இப்பொழுது இறுதியாக ‘கடவுள்’ இருக்கிறாரா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது? இல்லை பெரும்பாலானோரைப்  போல தெரிந்து கொள்ளாமலே வெறும் நம்பிக்கையுடன் வாழ்ந்துவிடலாமா?” என்று குழம்பித் தவிக்கும் பலரிடமும், அறிவியல் மாணவனாக நான் கற்றறிந்து அமைத்துக்கொண்ட என் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அறிவியல் ஆராய்ச்சி முறையில் கடவுள்

“அறிவியல் என்பதும் வெறும் நம்பிக்கை தான். நீ அறிவியலை நம்புகிறாய், நான் நம்பவில்லை. அவ்வளவுதான்” என்று பலரும் கூறி நாம் கேட்டதுண்டு. அவர் கூறுவது போல், அறிவியல் வெறும் நம்பிக்கை தானா? நிச்சயமாக இல்லை.

“நம்பிக்கைகள் கொள்ளாதே. ஆராய்ந்து, கற்றறிந்து தெரிந்துகொள்”,

என்று கூறி அறிவியல் மனித நம்பிக்கைகளை உடைத்தெறிவதாய் திகழ்கிறது. நாம்  வாழும்,நம்மைச் சூழ்ந்துள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அறிவதற்கான முறையே அறிவியல். அறிவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறினார், “இந்த மாபெரும் அறிவியல் பயணமானது பல தலைமுறைகளாக ஆய்வாளர்கள் பின்பற்றி வரும் எளிமையான சில விதகிளின் மூலம் சாத்தியமானது: எண்ணத்தின் கருத்துகளையும் யோசனைகளையும் ஆராய்ச்சி மற்றும் கூர்நோக்குதல் (Observation) மூலமாக சோதித்துப் பாருங்கள். அந்த சோதனையில் தேர்ச்சி பெரும் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். தேர்வடையாததை நிராகரியுங்கள். ஆதாரங்கள் காட்டும் வழியை பின்பற்றி செல்லுங்கள். அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துங்கள். இதை பின்பற்றினால், அண்டம் உங்களுடையது”. இதையே “அறிவியல் ஆராய்ச்சி முறை” என்கிறோம்.

இது எளிமையான, ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு முறை என்று படிக்கும் பொழுதே நமக்குப் புரியும். “கருத்தை முன்வை. அதை சோதித்துப் பார். சோதனையில் தேர்வடையும் கருத்துகள் சரி. இல்லையேல் அது தவறு”. நாம் கொண்டுள்ள எல்லா கருத்துகளுக்கும் இம்முறை பொருந்துமன்றோ?

சரி! இப்பொழுது “கடவுள்” என்ற ‘கருத்து’ நம் முன் உள்ளது. இதை அறிவியல் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தி பார்க்கலாம். கடவுள் என்பவரை யாரேனும் பார்த்ததுண்டா? இல்லை. சிலர் பார்த்ததாக கூறுவார்கள். ஆனால் அறிவியல் முறைக்குள்ள முக்கியமான தன்மை, எத்துனை முறை சோதித்தாலும், யார் சோதனையை நடத்தினாலும் மீண்டும் அதே முடிவுதான் வரும். அவ்வாறு, “கண்ணால் பார்த்தல்” என்ற சோதனையை யார் நடத்தினாலும் கடவுள் கண்ணுக்கு தெரிய மாட்டார். ஆகையால், இந்த சோதனையில் “கடவுள்” என்ற ‘கருத்து’ தேர்வடையவில்லை.

சரி! ஜே.ஜே.தாம்சன் கண்ணுக்கே தெரியாத ஏலக்ட்ரான்களை “கேத்தோடு கதிர் (Cathode Ray)” ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்ததை போல ஏதாவது ஆராய்ச்சி செய்து நிறுவ முடியுமா? முடியவே முடியாது (இதையும் ‘தியானம் செய்து கடவுளை பார்த்தேன்’ என்று நிறுவியதாக சிலர் கூறுவர். அனால் இதுவும் யார் செய்தாலும் அதே முடிவை தராத ஒரு சோதனை).

“பரிணாம வளர்ச்சி” கோட்பாட்டை பதை படிவங்கள் (Fossils) மூலம் டார்வின் நிரூபித்ததை போல கடவுள் இருப்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? இல்லை. ஆகையால் அறிவியல் ஆராய்ச்சி முறைப்படி “கடவுள்” என்கிற ‘கருத்து’ உண்மை இல்லை என்று உறுதி ஆகிறது.

அறிவியலுக்கு கடவுள் விடும் சவால்

“கடவுள் இல்லை என்று அறிவியல் நிரூபிக்கவில்லை” என்றும் “கடவுள் உங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவர். அவரை உணரத்தான் முடியும்” என்றும் வாதிடுவோர் உண்டு. முதலில் “கடவுள்” என்ற கருத்தை முன்வைத்தால், அதை முன் வைத்தவர் நிரூபிக்க வேண்டுமேயொழிய, “அறிவியல் தவறென நிறுவ முடியுமா?” என கேட்பது அறிவற்ற கேள்வி. இதையும் தாண்டி, இந்த வாதங்கள் அடிப்படையிலேயே தவறானது என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.

“காசு டப்பா” கோட்பாடு என்ற ஒன்றை நான் முன்வைக்கிறேன். “உலகிலுள்ள அனைத்து மேஜைகளின் முனையிலும் ஒரு தங்கக் காசு நிரம்பிய காசு டப்பா கண்ணனுக்கு தெரியாமல் உள்ளது. ஆத்மார்த்தமாக அதை உணர்ந்து தெய்வீக நிலையை அடைந்தால், அந்த டப்பாவை நீங்கள் தொட முடியும்”, என்று இப்படி ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறேன். இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? இதையே என் நண்பனிடம் கூறிய பொழுது, “மடையனாடா நீ?” என்று கேட்டான்.

“காசு டப்பா” கோட்பாடு முட்டாள்தனம் என புரியும் மக்களுக்கு, “நாம் காணும் உலகம் மாயை. நம்மை சூழ்ந்துள்ள நிரந்தரமான பிரம்மத்தை உணர வேண்டுமென்றால், அதற்கான வித்யா ஞானம் பெற்று முக்தி நிலையை அடைய வேண்டும்” என்று “அத்வைதம்” கூறுவது முட்டாள்தனம் என புரிகிறதில்லை. அனால் அடிப்படையில் ஏன் “காசு டப்பா” கோட்பாடு தவறு? எந்த ஒரு கோட்பாட்டிற்கும் இருக்க வேண்டிய தன்மை, ‘பொய்யாக்கவியலுமை’. மேலே தூக்கி எறியும் கல் கீழே விழவில்லையெனில், நியூட்டனின் “புவி ஈர்ப்பு” கோட்பாடு தவறென நிறுவ முடியும். நுண்ணோக்கியில் நம் தோலை பார்த்து கற்கள் தென்பட்டால், “உயிரணு” கோட்பாடு (Cell Theory), பொய்ப்பிக்கப்படும். அனால் “எனக்கு காசு டப்பா தென்படவில்லை” என்று சொன்னால், “நீங்கள் ஆத்மார்த்தமாக உணரவில்லை. தெய்வீக நிலை அடையவில்லை” என்று கூறிவிடுவேன்.

ஆகையால், “காசு டப்பா” கோட்பாட்டை நீங்கள் பொய்ப்பிக்கவே முடியாது. “காசு டப்பா” போன்று “நீர் குமிழி” கோட்பாடு, “பச்சைக்கிளி” கோட்பாடு என யார் வேண்டுமானாலும் தங்கள் கற்பனையைக்  கோட்பாடு என கூறலாம். அனால் அதெல்லாம் முட்டாள்தனமானது என நாம் அறிவோம்.

“காசு டப்பா” கோட்பாடு போல தான் கடவுளும். கடவுள் இருக்கிறதாக வாதிடுவோர், வரலாற்றில் எப்பொழுதும் அறிவியல் அறிவிற்கு ஒரு படி முன்னே சென்று தங்கள் கற்பனையை நிறுத்திக் கொள்வர். முதலில் “மனிதனை கடவுள் உருவாக்கினர்” என்றனர். “இல்லை. மனிதன் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவன்” என்றதும், “சரி! பூமியை கடவுள் உருவாக்கினர்” என்றனர். “இல்லை. பூமி சூரியனிலிருந்து வெளியேறிய ஒரு துகள்” என்றால், “சூரியனை கடவுள் உருவாக்கினர் என்றும்”, பின்னர் அதையும் “சூப்பர்நோவா” கோட்பாட்டினால் பொய்ப்பித்ததும், “அண்டத்தையே கடவுள் தான் உருவாக்கினர்” என்றனர். “அதுவும் இல்லை. பிக் பேங் நிகழ்வால் உண்டானது அண்டம்” என்றால், இப்பொழுது இறுதியாக “அந்நிகழ்வே கடவுளால் தான் உருவானது” என்கின்றனர் (“பிக் பேங்” நிகழ்வு முன்னால் நடந்தவை குறித்து அறிய “நியூட்ரினோ” ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் தெரிந்துவிட்டால் வேறொன்றை கற்பனை செய்வார்கள்). இவை எதுவும் வேலைக்காகவில்லை எனில், “கடவுளை நீ உணர வேண்டும்” என்றிடுவார்கள். 

இவ்வாறு “கடவுள்”, “காசு டப்பா” கோட்பாட்டைப் போல பொய்ப்பிக்க இயலாது ஒரு கருத்தாக மாற்றப்படுகிறது. ஆகையால் “காசு டப்பா” கோட்பாடு போலவே கடவுளும் ஒரு அடிப்படையற்ற கருத்து.

நம்பிக்கைக்காக கடவுள்

அறிவியல் முறையின் உதவியால் “கடவுள்” என்ற கருத்து எப்படி பொய்யானது என்பதையும், கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை என்பதையும் அறிந்தோம். இறுதியாக, “ஏதோ என் கஷ்டத்துக்கெல்லாம் வழி காட்டுவாருன்னு நம்பி கடவுள வேண்டிக்கிறேன்” என்போருக்கு வருவோம். இதற்கு தத்துவார்த்த ரீதியாக பல அறிஞர்கள் பதில் அளித்துள்ளனர். இதை எளிமையான ஒரு எடுத்துக்காட்டுடன் புரிந்து கொள்வோம்.

ஒரு மனிதனிடம் இருந்து இன்னொருவன் திருடுகிறான். திருடியவன் நன்கு வாழ்கிறான். திருடப்பட்டவன் வறுமையில் வாடுகிறான். இப்பொழுது திருடியவன் “கடவுளின் கருணை” என்றும், திருடப்பட்டவன் “கடவுளே! எனக்கு உதவி செய்” என்றும் கூறிக்கொண்டிருந்தால், இந்த “திருட்டு” என்ற செயல் தவறு என்றே அறியாது போவர். “கடவுள் நம்பிக்கை”, “திருட்டு” என்பது தவறான செயல் என்பதை அறிய விடாமல் செய்கிறது. இதே போல் தன் நாம் வாழும் சமூகத்திலும் பல திருட்டுகள் நடக்கின்றன. முதலாளி தொழிலாளியின் உழைப்பை திருடுவது, ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோரின் வாய்ப்புகளை திருடுவது, ஆண்கள் பெண்களின் உரிமைகளை திருடுவது என பல திருட்டுகளாலேயே நம் வாழ்வில் கஷ்டங்கள் உருவாகின்றது என்பதை நம்மை அறியவிடாமல், “கடவுள்” நமக்கு பொய்யான ஒரு நம்பிக்கையை அளித்து நம்மை ஏமாற்றுகிறது. நம் இன்னல்களின் மூலம் இந்த அநீதி மிக்க சமூக அமைப்பில் உள்ளது என்பதை அறிய விடாது தடுக்கிறது. பெரியார் கூறியது போல், “மனிதன் விழித்துக் கொண்டால், கடவுள் காணாமல் போய் விடுவான்!”

இறுதியாக, அறிவயல் முறையால் பொய்ப்பிக்கப்பட்ட, பொய்யான நம்பிக்கை அளித்து எமாற்றும் “கடவுள்” இல்லவே இல்லை என்று அறிவியல் முறையில் பயிலும் மாணவனாக நான் முடிவுக்கு வருகிறேன்.

நீங்கள்…?

Related Posts