இதழ்கள் இளைஞர் முழக்கம்

அரிசி இலவசம், தண்ணீர் பத்து ரூபாய்… எது சாதனை?

இல.சண்முகசுந்தரம்

அதிமுக அரசின் சாதனைகளில் அம்மா குடிநீரும் ஒரு சாதனையாம். வீட்டில் குடிநீர் இணைப்பே இல்லாத அதிமுகவினரும் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். குடிநீரை லிட்டருக்கு ரூ.10 என விற்பது ஒரு அரசின் சாதனையாக முன்னெடுக்கப்படுவது அநேகமாய் உலகில் தமிழகமாய் மட்டும் தான் இருக்கும். குடிநீரை அரசே விற்பது என்பது பெரும் அவமானமல்லவா! ஆனால், பெரும் அவமானத்திற்குரிய ஒரு விசயம் ஏன் இத்தனைப் பெருமிதமாய் கொண்டாடப்படுகிறது?

ரயில்வே நிர்வாகத்தால், 1 லிட்டர் குடிநீர் 15 ரூபாய்க்கும், தனியார் சார்பில் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், 10 ரூபாய்க்கு அரசு விற்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதானே. இப்படித்தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அரசின் குடிநீர் விற்பனைக்கும், தனியார் நிறுவனத்தின் குடிநீர் விற்பனைக்கும் இடையில் ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது.

தனியாரின் குடிநீர் விற்பனைக்கு எதிராக மக்களின் கோபாவேசம் நிச்சயம் ஓர் நாள் எழும். தண்ணீர் என்பது விற்பனைப்பொருள் அல்ல, அடிப்படை உரிமை என்ற ஆக்ரோசம் ஓர் நாள் வெளிப்படும். எங்களது அரசு அமைந்தால், தனியாருக்கு குடிநீரை விற்பனை செய்யும் உரிமையைப் பறிப்போம் என ஏதேனும் ஒரு அரசியல் கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரும் சூழலும், இந்த ஜனநாயக தேசத்தில் மக்கள் போராட்டத்தால் எழும். ஆனால், அரசே குடிநீரை விற்க ஆரம்பித்தால்..?

முதற்கட்டமாக, குடிநீர் என்பது விற்பனைபொருள் தான் என்பதும், அதைக் காசுகொடுத்துத் தான் வாங்கவேண்டும் என்பதும் இப்போது அரசாலேயே உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவதாக, பொதுவில் கிடைக்கும் குடிநீர் என்பது சுகாதாரமற்றது என்ற மனநிலை மக்கள் மனதில் உறுதிசெய்யப்படுகிறது. மினரல் வாட்டர் என்றழைக்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே குடிப்பதற்கு ஏற்ற நீர் என்ற ஆழமான கருத்தியல், பொதுப்புத்தியாக மக்கள் மனதில் திணிக்கப்படுகிறது. குடிநீர் விற்பனைப்பொருள் தான் எனும் பொது உடன்பாட்டுக்கு மக்கள் திரளை கொண்டுவர இயலுகிறது. குறிப்பாக, அதிமுக போன்ற பெரும் கட்சியில் இருக்கும் சாதாரண கூலித்தொழிலாளி கூட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு ஆதரவாய் மாறிவிடுகிறார்.

அதுவும், பேருந்துநிலையம் போன்ற பொது இடங்களிலேயே அம்மா குடிநீர் என அரசே விற்க ஆரம்பித்தால்..?

இங்குதான் புதிய ஆபத்துகள் துவங்குகின்றன.

ஒரு பேருந்து நிலையத்துக்குப் போய்ப் பாருங்கள். அம்மா குடிநீர் என அழகான கடை ஒன்று திறக்கப்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான வாட்டர் பாட்டில்களோடு ஒரு விற்பனையாளரும் அங்கு இருப்பார். பத்து ரூபாய் எடுத்துக்கொடுத்தால் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் கிடைக்கும் (காசு கொடுத்து வாங்கும் அனைவரும் வாட்டர் என்று தான் சொல்லுகின்றனர். அதை உரிமையாய் கேட்போர்தான் அழகுதமிழில் குடிநீர் என்று சொல்கின்றனர். வாட்டர் எனச் சொன்னால் தானே வியாபாரமாகும்!)

அங்கு பொதுக்குடிநீர் குழாய் இருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். அதுதான் சுத்தமானது இல்லீங்களே, அப்புறம் அதை எதுக்குங்க தேடணும் என்றுதானே கேட்கிறீர்கள்? ஆம். இதுதான் தமிழர்களின் மனநிலை. அதாவது, நகராட்சியால் பொதுஇடங்களில் வைக்கப்படும் குடிநீர் என்பது சுத்தமானது இல்லை. சுகாதாரத்திற்கு கேடானது அது. எனவே, பொதுக்குழாய்களில் உள்ள குடிநீரை உபயோகிக்கக்கூடாது. காசு கொடுத்து வாங்கிக் குடித்துக்கொள்ளவேண்டும்.

பொதுக்குடிநீர் என்பது ஆபத்தானது என்ற இத்தகைய மனநிலையை தமிழர்களின் மனதில் உருவாக்கியதுதான் அதிமுகவின் பெரும் சாதனையாகும். அரசின் விற்பனையால் தான் இது சாத்தியமாகியுள்ளது என்பதை சொல்லவும்வேண்டுமோ!

ஆனால், தனியாரை விட அரசு குறைவாக விற்கிறது என்பதே பெரும் சாதனையாக சொல்லப்படுகிறது. இது உண்மையெனில், அரசு என்ன செய்திருக்கவேண்டும்?

அதிக விலைக்கு நீரை விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கவேண்டுமல்லவா, ஏன் எடுக்கவில்லை? மேலும், கோக் மற்றும் பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு நீர் விற்பனையும் குறைந்திருக்கவேண்டுமல்லவா, ஏன் குறையவில்லை?

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் தினம் ஐந்து இலட்சம் தண்ணீர்( லிட்டர் ரூ.1.25பைசா) எடுத்ததோடு போதாதென்று, ஈரோடு பெருந்துறை தொழில் வளர்ச்சி மையத்திலும் 71.3 ஏக்கர் நிலத்தில், தினசரி 30 இலட்சம் தண்ணீரை எடுத்துக்கொள்ள கோக் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்ததே அதிமுக அரசு ஏன்?

குறைந்த விலை அம்மா குடிநீரால், கோக் நிறுவனத்திற்கு குடிநீர் விற்பனை குறைந்தது எனில், ஏன் புதுத்திட்டங்களை கோக் நிறுவனம் துவங்கவேண்டும்? அதிக விலைக்கு நீரை விற்று, தமிழக மக்களை கொள்ளையடிக்கும் கோக் நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டதை அன்றைய மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஏன் அனுமதித்தார்? அம்மா என தன்னை அழைக்கும் கட்சிக்காரர்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் கூட, கோக் நிறுவனத்திற்கு அனுமதியளிக்க மனசு வராது எனும்போது, தினசரி 30 இலட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சினால், அந்தப் பகுதியின் நீர்வளமே சில ஆண்டுகளில் அழிந்துவிடும் என்பது கூடவா, மக்களின் முதல்வருக்குத் தெரியாது?

ஆக, குறைந்த விலைக்கு அரசே குடிநீரை விற்பதன் மூலம், அதுவரை கோக், பெப்சி, பிஸ்லரி, நெஸ்லே, கோத்தாரி, கோத்ரேத், சபோல்ஸ் என பெரும் நிறுவனங்களின் நீரை வாங்கிப்பழகாத, ஏழை மக்கள், கிராம மக்கள் அரசின் குடிநீரை வாங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர். அதாவது, குடிநீர் வியாபாரத்தின் எல்லை கிராம மக்களுக்கும், டவுண்பஸ் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பேருந்துநிலையம் போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொதுக்குடிநீர் குழாய்களும், குடிநீர் பாத்திரங்களும், தொட்டிகளும் அகற்றப்பட்டிருக்கின்றன.

இவ்வாறாக, பொதுக்குடிநீர் பயன்பாடு என்பது முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் என்ன நடக்கும்? உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் என்பதே சுகாதாரமற்றதுதான் என்ற எண்ணம், மக்கள் மனதில் ஆழமாய் உருவாக்கப்படுவதால் குடிநீர் வியாபாரம் என்பது அதிகரிக்கப்படும். அரசு குடிநீர் விநியோகத்திற்கான கோரிக்கையென்பது மக்களிடமிருந்து குறையும். இதுதான் அதிமுக அரசின் இப்போதைய சாதனையாகும்.

தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்டால் கூட தரத்தயங்கும் மனநிலைக்கு தமிழக மக்களை மாற்றியதும் அதிமுக அரசின் பெருஞ்சாதனையென்றே நிச்சயம் கூறலாம். பேருந்திலொ அல்லது ஏதேனும் பயணங்களிலொ தண்ணீர் இல்லையென்றால், யாருக்கும் இப்போதெல்லாம் அருகில் இருப்பவரிடம் கேட்கத்தோன்றுவதில்லை. அப்படியே கேட்டாலும் சிலர் கொடுப்பதில்லை. கொடுப்பவர்களோ எனக்கு இன்னைக்கு புல்லா வேணும், சும்மா வாயை நனைச்சிட்டு கொடுத்துருங்க என்று சொல்லிக்கொடுக்கும் நிலை பலருக்கு. சும்மா சும்மா தண்ணிய குடிச்சிக்கிட்டே இருக்காதே, பாட்டில காலி பண்ணிடாதே, தவிச்சதுன்னா ஒரு மடக்கு குடிச்சுக்கோ என குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் சொல்லும் நிலை.

காரணம், நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு நாள் வெளியே சென்றது என்றால், தாகத்துக்கு தண்ணீர் குடித்தால் ஒரு நாளைக்கு நாலு லிட்டராவது குறைந்தது வேணும், அப்படியே அம்மா குடிநீரை வாங்கினால் கூட ரூ.40 செலவாகும். முடியுமா எல்லாக்குடும்பங்களாலும்..? ஆக, தாகத்துக்கு குடிப்பது என்ற நிலைமாறி, தொண்டை வறண்டுவிட்டால், உதட்டை நனைச்சுக்கோ என்ற நிலைதான் அநேக குடும்பங்களில்.

மடிக்கணினி இலவசமாய் வழங்கப்படும் நாட்டில், ஏன் குடிநீரை மக்கள் காசுகொடுத்து வாங்கவேண்டும்? அரிசி வாங்க இந்நாட்டு மக்களிடம் காசு இருக்காது என்றுதானே, இலவசமாய் வழங்குகிறார்கள். அந்தளவுக்கு ஏழ்மையான ஒரு நாட்டில், குடிநீரின் விலை ரூ.10 என அரசே விற்பனை செய்வது எந்தவகை நியாயம்?

ஆனால், 2011 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதி என்ன தெரியுமா?

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் என 4வது பிரிவின் கீழ் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1.வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

2.இதன்மூலம், 20000 புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படும்.

3.இதன்மூலம், 5.6 இலட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

ஆக, இலவசமாய் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று வாக்குறுதிகொடுத்துவிட்டு, லிட்டர் நீரை ரூ.10க்கு விற்பதும் ஒரு சாதனையாக கொள்ளப்படவேண்டியதுதான்.

தமிழகத்தின் நிலத்தடி நீரில் 72 சதமான நீர் பயன்பாட்டுக்கு உரியது அல்ல என்றும், பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றும் அரசின் பொதுப்பணித்துறையே அறிக்கைவிடும் நேரத்தில், நிலத்தடி நீரைப் பெருக்குவது துவங்கி நீர் தொடர்பான அனைத்து விசயங்களிலும் பொறுப்பாய் செயல்படுவதை விட்டுவிட்டு, நீர் விற்பனையை ஆரம்பித்து வைத்தால்..?

ஏற்கனவே, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆய்வு செய்யப்பட்ட 967ல் 814 குடிநீர் நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் மட்டுமல்ல, குடிக்கத் தகுதியில்லாத தண்ணீரை விற்கும் நிறுவனங்கள் என்று அறிவிக்கப்பட்டவைதான். அதன் மீது நடவடிக்கை என வரும்போது, அந்நிறுவனங்கள் வேலைநிறுத்தம் செய்து ஒரு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை உருவாக்கியதை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில், அவர்கள் நினைத்தால் அரசை சுலபமாய் மிரட்ட முடியும்.

அதாவது, குடிநீரை காசுகொடுத்து வாங்கினால் தான் சுகாதாரமாய் இருக்கும் என்ற கருத்தோட்டத்தை வளர்த்தெடுக்க, வளர்த்தெடுக்க அதன் முழு விளைவும் மிக மோசமாய் இருக்கும்.   தனியாருக்கு இலாபம் அதிகரிக்கும் என்பதோடு, தமிழக நீர் வளமும் அழிக்கப்படும் அபாயமும் உருவாகும். அரசின் குடிநீர் திட்டங்கள் படிப்படியாக செயல் இழக்கும். அதாவது, ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து குடிநீர் திட்டங்கள் அநேகம் துவக்கப்படும் என்றாலும், அவை முழுமையாய் மக்கள் பயன்பாட்டுக்கு வராது. திட்டங்கள் துவக்கப்படுவதின் நோக்கம் ஊழல்தான் என்பதை மக்களும் அறிவார்கள். மேலும், குடிநீர் வரியும் வழக்கம்போல உள்ளாட்சியால் உயர்த்தப்படும். ஆனால், குடிநீர் கொடு என்ற கோரிக்கை மக்களிடமிருந்து திட்டமிட்டு படிப்படியாய் அகற்றப்படும்.

அதன்பின்னர், ஏதோ ஒரு ஆண்டில் இப்படியான அறிவிப்பு அறிவிக்கப்படலாம்.

இனி, குடிநீரை ஒவ்வொரு முறையும் பாட்டிலில் வாங்க வேண்டியதில்லை. தமிழக அரசு புதிய திட்டம் அறிவிப்பு.

குடிநீருக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாய் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த கார்டுகள் வங்கிக் கணக்கோடு இணைக்கப்படும். ஸ்மார்ட் கார்டை வாங்குவோர் ஆட்டோமெடிக் வாட்டர் வெண்டிங் மெஷினில் இருந்து, தேவைக்கேற்ப வங்கிக்கணக்கு மூலம் பணம் செலுத்தி, தங்களது சொந்த வாட்டர் கேனில் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஸ்மார் கார்டு அரசின் குடிநீருக்கு மட்டுமில்லாமல், தனியார் நிறுவனங்களின் குடிநீருக்கும் செல்லுபடியாகும் வகையில் தனியார்-அரசு கூட்டு ஒப்பந்தம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செய்யப்பட்டிருக்கிறது, மேலும், டெபிட்/கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ஏனெனில், இனி குடிநீர் என்பது சாதாரண விற்பனைப்பொருளல்ல. பெட்ரோல், டீசலை விட அதிக இலாபம் தரும் பொருளாக மட்டுமல்ல, அதிகம் விற்பனையாகும் பொருளாகும் குடிநீரே இருக்கும்.

      ஏனெனில், நீரின்றி அமையாது உலகு..

 

    நீரின்றி ஒருவரும் உயிர் வாழ இயலாது.

Related Posts