அரசியல்

அரசு சாரா நிறுவனங்களும் (NGO), அதன் மறைமுக அரசியலும் . . . . . . . !

Church-NGO-non-governmental-organization-apostolicleaders-forum-604x270

முதலாளியம் ஓய்வு நேரங்களை உற்பத்தி செய்யும். அந்த ஓய்வு நேரங்களை வேறு வழியில் தானே திருடியும் விடும். மேலை நாடுகளிலேயே இந்த நிலைமைதான். இந்தியா போன்ற மூன்றாம் உலக வளரும் நாடுகளில் இன்னும் முதலாளித்துவமே முழு வளர்ச்சி அடையவில்லை. சமூகம் இன்னும் நிலப்பிரபுத்துவ, அரைக்காலனிய தாராளவாதச் சமூகமாக இருக்கிறது. இத்தாராளவாதப் போக்கு, அசலான புரட்சிக்கும் பெருந்தடையாக இருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னான இந்தியாவில் மொழி, இன, தலித் அடையாள அரசியல் போக்குகள் தவிர்க்க இயலாதவை. அடிப்படையில் சிற்சில பாசிசப் போக்குகள் இருந்தாலும், அவை விடுதலையைக் கோரியே முன் நிற்கின்றன.

60 களின் பெண்ணிய அரசியல், 70 களின் சமய மாற்ற அரசியல், 80 களின் சாதிவாத அரசியல், 90 களுக்குப் பின்னான இசுலாமிய எழுச்சி இவை யாவும் எதார்த்த நடைமுறை போக்குகளே ஆகும். அரசு தன்னை நிறுவிக்கொள்ள எத்தகைய அதிகார அடக்குமுறைகளையும், நீக்குப் போக்கு சமரசவாதத்தையும் மேற்கொள்ளும். அதிலும் குரோனி கேப்பிடலிச, உலகமயத்தில் மக்களின் எதிர் அரசியலை, போராட்டக்குணத்தை அடக்கி ஒடுக்கும். நீர்த்துப் போகச் செய்யும் மடைமாற்றி மழுங்கடிக்கும்.

அத்தகைய நீர்த்துபோகச் செய்யும் ஒரு வழிமுறைதான், “அரசு சாரா நிறுவனங்கள்”. இந்த இந்த NGO களின் பணி என்ன? தனிநபரை முன்னிறுத்தி, வழிபாட்டு மனோபாவ, வடிகால் மனோபாவத்தை நடைமுறைப்படுத்தி, நடுத்தர வர்க்க, நல்லெண்ண அரசியலை முன்னிறுத்தி, மறைமுகமாக அரசு நிறுவனத்தைத் தாங்கிப்பிடிக்கும். மக்களின் எதிர்க்கிளர்ச்சியை, கருணை, அன்பு, கோரிப்பெறுதல் என்று, நிலவுகின்ற சட்டவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தி, மழுங்கடிக்கும்.

இடதுசாரியம் (பொதுவுடைமை) ஒன்றே விடுதலைக்கு வழி. சீர்திருத்த அரசியலைக் காலத்தின் தேவையைப் பொறுத்து ஏற்கலாம். ஆனால் இந்த NGO களின் அரசியலை, எந்தப்புள்ளியிலும் ஏற்க இயலாது.

“ஏழைகள் என்பவர்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வரம்” கிறித்துவ கன்னியாஸ்திரிகளின் கூற்று.  “என் கடன் பணி செய்து கிடப்பதே” அப்பரின் கூற்று. “தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்சோதி” வள்ளலார். இவை அத்தனையும் அறம் என்ற ஒற்றைக் கதையின் கீழ் நல்லனவாகவே தெரியும். அறம் இங்கு ஆளும் வர்க்கத்தின் அங்குசமாக இருக்கும் போது, பாரபட்சமான, செயல்பாட்டுக்கு உதவாத இந்த அறத்தினால் சமூவ விடுதலை சாத்தியமா?

இந்தியாவில் அதிக அளவில் அரசு சாரா நிறுவன்ங்கள் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் எதிர்ப்பரசியலை, நீர்க்கச் செய்த்தில் இந்த NGO கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தலித்தியம், பெண்கள், சுகாதாரம், சூழலியல், என்று கவர்ச்சிகர, விசயங்களை கையிலெடுத்து, தனது சேவையை இந்த NGOக்கள் தொடங்கும். மிடில்க்ளாஸ் மனோபாவத்தை, மூலதனமாக்கி சுயதிருப்தி அடையச் செய்யும். சட்டவாதப்புரட்சிக் கூட, மக்களை தயார்படுத்தாத, மொன்னை அரசியல் போக்குதான் இந்த NGOக்களின் அரசியல்.

சூழலியல் காப்பு என்கிற பெயரில் இங்கு, தனி நபரை, முன்னிறுத்தி, வழிபாட்டு மனோபாவத்தோடு அநேகம் பேர் கிளம்பியிருக்கிறார்கள்! சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரை இவர்களின் பெயர்கள் மிக அழகாக இருக்கும், அதில் ஒரு நபர்தான் சமீபத்தில் கைது செய்யப்பட்ட “பியூஸ் மானுஷ்”. பியூஸ் சேத்தி என்கிறப் பெயரை பியூஸ் மானுஷ் என்று மாற்றிக் கொண்டு, சேலம் பகுதிகளின் ஏரிகளை தூர்வாருதல், கண்மாய்களைப் புணரமைத்தல் போன்ற பணிகளைச் செய்து வரும் பியூஸ் மானுஷ் சமீபத்திய பெருவெள்ளத்தின் போது நிறைய உதவிகளை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கத்து. சேலம் மக்கள் கழகம் என்கிற பேனரில், அவரது செயல்பாடுகள் சேலம் தாண்டியும் பிரபலம்.

இவரது கைது சமூக வலைதளங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. தன்னை 30 காவலர்கள் தாக்கினார்கள் என்று FB_IMG_1468917959661பிணையில் வந்து கண்ணீருடன் பேட்டியளித்தார்.  புதிய தலைமுறையின் “அக்னிப் பரீட்சை” வரை பியூஸ் மானுஷ் பிரபலப்படுத்தப்பட்டார். அரசு வன்முறைக்கு எதிராக, முகநூலில் பல புதிய புரட்சியாளர்களை காண நேர்ந்தது. பியூஸ் மானுஷ் என்கிற தனிநபர் மீது நமக்கு எந்த விரோதமும் இருக்கவில்லை. அதே போல் அதே தனிநபர் மீது கட்டப்படும் புனித பிம்பம், போராளி பிம்பம், வருத்தமளிப்பது, வன்காரி மத்தையா என்கிறார் ஒருவர், பினாய்க் சென் என்கிறார் இன்னொருவர், பூவுலகின் நண்பர்கள் அணுசக்தி எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் என அனைவரும் பியூசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். இதற்கு சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் உண்ணாவிரதமிருந்த முகிலனுக்கு இவர்கள் ஆதரவளிக்கவில்லை. தனிநபர் போராட்டங்களை மொத்தமாக நிராகரிப்பது (அ) விமர்சனத்துக்குள்ளாக்குவது, இன்றைய இடதுசாரிகளின் தேவையாக இருக்கிறது.

பன்னாட்டு நிதியுதவி, ஃபோர்ட் பவுண்டேசன் என்பன NGO க்களின் மீது வைக்கப்படும் பொதுவான, பரவலானக் குற்றச்சாட்டுகள். இவை புறந்தள்ளக்கூடியன அல்ல. அதையும் விடுத்து, இவர்கள் தங்களது சேவைகளை தொடங்கித் தொடர, இங்கே இருக்கிற அதிகாரிகளுடன் உடன்பாடு காணுகின்றனர். 144 தடை உத்தரவு போடப்பட்ட நாயக்கன் கொட்டாய்க்குள் கூட தொண்டு நிறுவனங்கள் நுழைய முடியும். அரசு இவர்களை மறைமுகமாக வளர்த்து விடும். இவர்களும் அரசுக்கு ஆபத்தில்லா வகையில், தங்களது செயல்பாடுகளைத் தொடர்வர்.

இந்த இடத்தில்தான் பியூஸ் மானுஷ் கைது அரசியல் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.  அரசை எதிர்க்காத, காவல்துறையின் மீது பெரிய நம்ப்பிக்கை வைத்திருந்த, பியூசை அரசு ஏன் பிணையில் கூட உடனடியாக விடாமல் ரிமாண்ட் செய்தது?

பியூஸிடம் பணிபுரிந்த கிருபா முனுசாமி என்கிற பெண், முகநூலில் பியூஸின் மீது வைத்த குற்றச்சாட்டுகள் விவாதிக்க வேண்டியன. அதனைத் தொடர்ந்து CPI (ML) தோழர் சந்திரமோகன் அக்குற்றசாட்டுகளை, மேலும் விவாதமாக்கி, ஆதாரங்களுடன் பியூசின் கார்ப்பரேட் அரசு ஆதரவு நடவடிக்கைகளையும், அவரதுவியாபார சந்தைத்தன்மையையும் விளக்கியுள்ளார். அதற்கு எதிர்வினையாக பியூசின் அக்னிப் பரீட்சை மற்றும் முகநூல் எதிர்வினைகள் சத்தில்லை.

பியூசின் அரசியல் நிலைப்பாட்டில் கொள்கையளவிலேயே நமக்கு மாறுபாடு இருக்கின்றது. தாராளவாத, சட்டவாதப்புரட்சி முன் வைக்கும் சமரசவாதத்துக்கும், நல்லெண்ண அடிப்படையில், சாராம்சவாதத்துக்கும் வலுசேர்க்கின்ற இந்த அரசியலால் ஆகப்போவது என்ன? ஒன்றும் இல்லை.

காஷ்மீர் பற்றி எரிகையில், இங்கு மாநில அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்கிற நிலையில், பியூஸ் மானுசின் கைது பேசுபொருளாக்கப்படுவது அபாயமான அரசியல். ஏதோ மறைபொருளான ஒரு விசயத்துக்கு இந்தக் கைது இருக்குமோ என்று சந்தேகிக்க அநேக இடமிருக்கிறது! மக்களை திசைதிருப்பும், மக்களின் எதிர்க்குரலை நீர்க்கச் செய்யும் இத்தகைய கைது நடவடிக்கைகளை அரசு அவ்வப்போது செய்து, தன்னை ஆக்டிவாகக் காட்டிக் கொள்ளும். பியூஸ் அதன் ஒரு கருவியாகக் கூட இருக்கலாம். ஆனால், நிலவுகின்ற அசாத்தியமான இச்சூழலில் பியூசுக்காக, மக்கள் கருத்து தெரிவிப்பது / தெரிவிக்க நிர்பந்திக்கப்படுவது எல்லாமே, வேண்டாத அரசியல். இது கார்ப்பரேட் நலனை முன்னிறுத்தும். அரசைத் தாங்கிப்பிடிக்கிற இந்த ரசியல் போக்கை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது. ஏற்க முடியாது. தனிநபர் வழிபாட்டு மனோபாவ அரசியலின் அடிப்படை பாசிச நீட்சியும் பாசிசம்! இதனை எங்கனம் ஆதரிக்க முடியும்.

–    ரபீக் ராஜா

Related Posts