இதழ்கள் இளைஞர் முழக்கம்

அரசால் மட்டுமே நல்ல கல்வியை வழங்கமுடியும் – பேரா.கே.ஏ.மணிக்குமார், மேனாள் துணைவேந்தர்.

3515296_origகாலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை கல்வி கொடுப்பது பெற்றோரின் கடமை என்று கூறியது. இதனால் கல்வி அனைவருக்கும் சென்று சேரவில்லை. இந்தியா சுதந்திரமடையும் போது எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை 11 சதம். 7 சதம் பெண்கள் மட்டுமே அப்போது கல்வியறிவு பெற்றிருந்தனர். இத்தகைய அவல நிலையிலிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் என்ன செய்வது என்ற அடிப்படையில் தான் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டில், கல்விக்கு தேசிய வருமானத்தில் 10 சதம் நிதி ஒதுக்கவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1937 தேர்தல் அறிக்கையிலும் காங்கிரஸ் கட்சி இதை குறிப்பிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் கொள்கை கல்வி கொடுப்பது அரசின் கடமை என்று கூறியது. ஆனாலும் நேரு அரசு கல்விக்கு 10 சதம் நிதியை ஒதுக்கவில்லை.1948-ல் அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் கமிஷன் இதை சுட்டிக்காட்டியதுடன் கல்வி வர்க்க உரிமையல்ல, அனைவரும் பெறவேண்டிய உரிமை என்று கூறியது. 1964-ல் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் கல்வியில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று கூறியது. ஆனால் புதிய கல்விக் கொள்கை சாதி, மத ரீதியாக மாணவர்களை பிரிக்க முயற்சிக்கிறது.

கோத்தாரி கமிஷன் தாய்மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமென்றது. அருகாமைப் பள்ளிகளை recommendation-of-kothari-commission-1-638வலியுறுத்தியது. தேசிய உற்பத்தி மதிப்பில் 6 சதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டுமென கூறியது. 1999- ல் அமைக்கப்பட்ட தபஸ் மஜூம்தார் கமிஷனும் இதை வலியுறுத்தியது. மேலும் 10 ஆண்டுகள் கூடுதலாக 14,000 கோடி ரூபாய் வீதம் செலவு செய்தால் அனைவருக்கும் முழுமையாக கல்வி கொடுக்கமுடியுமென்று கூறியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதம் மட்டுமே. ஆனால் அன்று வாஜ்பாய் அரசு நிதி ஒதுக்கவில்லை. கல்வியில் சிறந்த நாடுகள் அனைத்தும் தாய்மொழி வழியாகவே கல்வி கொடுக்கின்றன. ஆங்கில மொழியை கற்பதும் வழி கற்பதும் வேறுவேறு. ஆனால் இரண்டையும் குழப்புகிறார்கள்.

சாதாரண அரசுப் பள்ளியில் பயிலும் மாணவனுக்கு ஆண்டுக்கு ரூ.250 செலவு செய்யும் அரசு, கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் பயிலும் மாணவனுக்கு ரூ.13000 செலவு செய்கிறது. அரசின் இத்தகைய பாகுபாட்டையும் ஒரு குழு சுட்டிக்காட்டியது. நாம் இந்த அரசிடம் கேட்பது ஒரேமாதிரி வாய்ப்பைத்தான், ஒரேமாதிரி பாடத்திட்டத்தையல்ல.

புதிய கலவிக்கொள்கை அரசு நிதி ஒதுக்கீடு குறித்து சொல்லாதது மட்டுமின்றி கல்வியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறது. ஆசிரியர் இல்லாமல், மாணவர்கள் கல்லூரிக்கு வராமலேயே பட்டங்கள் வழங்கும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று பெருகியுள்ளது. இத்தகைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் கல்வியின் தரம் குறைகிறது. அரசால் மட்டுமே நல்ல கல்வியை வழங்கமுடியும். 20 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் நாட்டில் கல்வியை முற்றிலும் தனியாருக்குக் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு முயல்கிறது.  மறுபுறம் மாநில அரசுகள் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் உயிர்ப்போடு இயங்குவதை தடுக்கும் வகையில் மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் எப்போதுமே விமர்சனங்களின் மையமாக இருக்க வேண்டும். கல்விநிலையத்தில் மாணவர் ஒற்றுமையை சிதைப்பது, முற்போக்கு சிந்தனைகள் வளர விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது. மாணவர் சக்தியை ஒடுக்கிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்காதது மட்டுமல்ல, இந்தியாவை காக்க வந்த அவதாரம் தான் விக்டோரியா மகாராணி என்று போற்றி புகழ்ந்தவர்கள் தான் இன்று ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறார்கள். எனவே தங்களுக்கு தகுந்த மாதிரி வரலாற்றை திரிக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் கல்வியறிவு தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. அது ஒரு தலித் கிராமம். காரணம் அங்கு உறைவிடப் பள்ளிகள் இருந்தது, இன்றைக்கும் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வெளியூர்களில் வேலைக்கு செல்ல முடியும். அதனால் அந்த கிராமத்தில் எல்லொருமே எட்டாம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். கேத்தலின் கோவ் என்ற சமூகவியல் அறிஞர் 1952- ல் தஞ்சாவூர் பகுதிக்கு சென்றபோது குழந்தைகளும் பெரியவர்களும் வயலில் வேலை செய்வதை கண்டுள்ளார். 1974 ல் மீண்டும் அங்கு சென்றபோது குழந்தைகள் வேலை செய்வதை பார்க்க முடியவில்லை. விசாரிக்கிறபோது சொல்கிறார்கள், எங்களுக்கு கூலி அதிகமாகக்கிடைக்கிறது எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று. இந்த இரண்டும்தான் நமக்கான மாதிரி.

அம்பேத்கார் தலித்துகளுக்கு குடிநீர் மறுக்கப்பட்ட ஏரியில் குடிநீர் எடுக்கும் போராட்டம் நடத்தியபோது டாண்டன் என்ற பிரெஞ்சு புரட்சியாளரின் வார்த்தைகளை குறிப்பிடுவார். அது துணிவு, மேலும் துணிவு. அத்தகைய துணிவுடன் போராட்டங்களை முன்னெடுப்போம்.

Related Posts