இதழ்கள் இளைஞர் முழக்கம்

அம்மா ஆட்சியில கல்வித்துறை எப்படியிருக்கு? – இல.சண்முகசுந்தரம்

அம்மா ஆட்சியில கல்வித்துறை எப்படியிருக்கு? – இல.சண்முகசுந்தரம்

                படித்த ஒரு பட்டதாரியிடம் பொதுவாய் ஒரு கேள்வி கேட்போம். எங்கே வேலை செய்ய விரும்புகிறாய்? தனியார் பள்ளியா அல்லது அரசுப்பள்ளியா? அரசுப்பள்ளி என்று சொல்வார். சரி, உன் குழந்தையை எங்கே படிக்க வைக்க விரும்புகிறாய் என்று கேட்டால் என்ன சொல்வார்? தனியார் பள்ளி என்பார்.  தனியார் பள்ளிதான் சிறந்தவை எனில், அங்குதானே அவர் வேலைசெய்ய விரும்பவேண்டும்? ஏனிந்த முரண்பாடு?

அரசுப்பள்ளியில் படித்தால் அதிகம் மதிப்பெண்கள் பெறமுடியாது, மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு செல்லமுடியாது என்பதெல்லாம் நிச்சயம் காரணங்கள் அல்ல என்பதும்,  அரசுப்பள்ளியில் படிப்போர் மதிப்பெண்களை வாங்கிக்குவிப்பதும், உயர்கல்விக்கு செல்வதும் மிகச்சாதாரணமாய் நடந்துகொண்டிருப்பதையும் தமிழகம் நன்கறியும்தான். ஆனாலும், ஏன் தனியார் பள்ளிகள் மீது அத்தனை மோகம்?

சீருடை முதல் மடிக்கணினி வரை விலையின்றி வழங்கப்பட்டும் ஏன் அரசுப்பள்ளிகள் வெறுக்கப்படுகின்றன? கொள்ளைக்கூடாரங்களாய் எந்த நேர்மையுமற்ற பள்ளிகளாய் மாறிவிட்ட பின்பும் தனியார் பள்ளிகளில் ஏன் காத்துக்கிடக்கிறார்கள் பெற்றோர்கள்?

ஆம். இதெல்லாம் உரத்துக் கேட்கப்பட வேண்டிய கேள்விகளாகும். தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கேள்வியாகும் இது. உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பள்ளி ஏன் உங்களுக்குப் பிடிப்பதில்லை? இப்படியான அநேகம் கேள்விகளை மக்கள் எப்போது உள்வாங்குகிறார்களோ, எப்போது திருப்பிக்கேட்கிறார்களோ அப்போது தான் மாற்றுக்கொள்கைக்கான போராட்டமும் துவங்கும். அதற்கான களம் தேர்தல் களம் மட்டுமேயாகும் ஒரு ஜனநாயக தேசத்தில் மாற்றத்திற்கான எந்தவொரு கேள்வியும் கேட்கப்பட வேண்டிய களம் தேர்தல் களம்தான். ஆனால், தேர்தல் களத்தில் இப்படியான வாழ்வுரிமைப் பிரச்னைகளை யாரும் பேசுவதில்லை. எனவே, நாம் விவாதிப்போம். மக்களிடம் கொண்டு செல்லும் முன் நாம் விவாதிப்போம்.

ஏன் அரசுப்பள்ளிகள் வெறுக்கப்படுகின்றன?

ஒரு தனியார் பள்ளியையும், ஒரு அரசுப்பள்ளியையும் மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

பள்ளியின் சுற்றுச்சுவர், வராண்டா, இருக்கைகள், கரும்பலகை, கழிப்பிட வசதிகள், குடிநீர், விளையாட்டு உபகரணங்கள், நவீன கல்விப்பயிற்சி ஏற்பாடுகள் என எத்தனையோ முரண்பாடுகள் இவ்விரு பள்ளிகளுக்கும் இடையில் இருக்கின்றனவே, காரணம் யார்?

ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகையில், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் எனஅதிகாரப்பூர்வமாய் அரசாலேயே 18674 அரசுப்பள்ளிகளுக்கு பெயர் சூட்டுகிறார்களே, ஏனிந்த புறக்கணிப்பு? எல்லா தனியார் பள்ளிகளிலும் எல்லா வசதிகளும் முறையாய் இருப்பதில்லை. ஏராளமான குறைபாடுகள் அங்கும் கொட்டிக்கிடக்கின்றனதான் என்றாலும், குறைந்தபட்சம்  இருக்கைகள், கரும்பலகை, ஆசிரியர்கள் போன்ற சில வசதிகளாவது செய்கிறார்கள் அல்லவா!  அதைக்கூட அனைத்து அரசுப்பள்ளிகளிலும் செய்வதற்கு ஏன் இந்த அரசால் இயலவில்லை?

பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் அரசுப்பள்ளிகளில் இருக்கிறதே, ஆசிரியர்களே இல்லாமல் பள்ளிகளை நடத்திடமுடியுமா? இலவசங்களால் அரசுப்பள்ளிகள் தரமானதாக மாறிடுமா என்ன? 14 விதமான விலையின்றிக்கொடுக்கும் பொருள்களுக்காக, அரசுப்பணத்தை கோடிகளில் கொட்டும் இந்த ஆட்சியாளர்கள் அந்தப்பணத்தை வைத்து படிப்படியாய் செய்ய ஆரம்பித்தாலே அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அத்தனை வசதிகளையும் சிறப்பாய் செய்துவிட முடியுமே, ஏன் செய்யத்தயங்குகிறார்கள்?

தாய்மொழியை சொல்லித்தாருங்கள் என அரசாணை போட்டால், அதைக்கூட மதியாமல் அந்த அரசுக்கு எதிராக நீதிமன்றத்திற்குப்போய் தடையாணை வாங்கி அரசின் உத்தரவை அவமதிக்கிறார்கள்.  எனினும்,  அவர்களுக்கு எதிராக எதையுமே செய்வதில்லையே அரசு, ஏன்? அப்படியெனில், தனியார் பள்ளிகளை வளர்ப்பதற்காகவே அரசு இயங்குகிறதா என்ன?

ஆம். அதுதான் உண்மையாகும். அதைத்தான் மக்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆதாரங்களுடன், அழுத்தமாய், ஆணித்தரமாய் சொல்ல வேண்டியிருக்கிறது.  இன்று, நேற்றல்ல கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொருவரும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அனைவரிடமும் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது.

ஆம். 1978 வரை தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் என்றழைக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அனுமதியே தரப்படவில்லை. அப்போது வரை அரசுப்பள்ளிகளில் தான் அனைவரும் படித்தாக வேண்டும். கல்வி அனைவருக்கும் இலவசமாய், பொதுப்பள்ளிக்கல்வியாய் இருந்தது. ஆனால், அரசிடம் நிதியில்லை, எனவே  அரசுப்பள்ளிகளுக்கு இனி அனுமதி இல்லை. துவங்கப்படும் பள்ளிகள் அனைத்தும் சுயநிதிப்பள்ளிகளாகவே துவங்கப்படும் என்று முதலில் அறிவித்தவர் அன்றைய முதல்வர். எம்.ஜி.ஆர்.

சுயநிதி மெட்ரிக் பள்ளிகளுக்கு நிபந்தனையின்றி அனுமதியளித்து அவர்களை முதலில் ஊக்குவித்தது  அதிமுக. ஆனால், மக்கள் அப்பள்ளிகளைத் தேடி வரவில்லை. ஆக, அரசு சில திட்டங்கள் தீட்டியது. ஆம். அரசுப்பள்ளியை மக்கள் வெறுக்கவேண்டும், தனியார் பள்ளிகளை கொண்டாட வேண்டும் எனத்திட்டமிட வேண்டிய நிர்ப்பந்தம்  அரசுக்கு இருந்தது. எனவே, அரசுப்பள்ளிகளுக்கான நிதியைக் குறைத்தார்கள். ஆசிரியர்கள் நியமனங்களை நிறுத்தினார்கள்.  அரசுப்பள்ளியின் கட்டமைப்புக்குத் தேவையான நிதியை நிறுத்தியதால், அரசுப்பள்ளிகளின் தோற்றம் மாறத்துவங்கியது. பராமரிப்பின்றிப் போயின அரசுப்பள்ளிகள்.

அரசுக்கு இப்போது சாதகான சூழல் நிலவியது. அதாவது, அரசுப்பள்ளிகள் அழியத்தொடங்கிவிட்டன அல்லவா. எனவே, சுயநிதிப்பள்ளிகளுக்கு ஆதரவாய் அரசே அரசாணை வெளியிட்டது. 1991 முதல் அதிமுக ஆட்சியில் கிராமங்கள் வரை ஆயிரமாயிரம் சுயநிதிப்பள்ளிகள் கணக்கு வழக்கின்றித் துவங்கப்பட்டன. சுயநிதிப்பள்ளிகளில் படித்தால் கல்வி நன்றாக இருக்கும் என்று திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. அரசு எந்த மறுப்பும் கூறவில்லை. மாறாக, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களே இல்லாதவாறு பல ஆண்டுகளைக் கடத்தினார்கள். விளைவு, ஆயிரமாயிரம் காலியிடங்கள் அரசுப்பள்ளிகளில். அப்புறம், தரம் எப்படியிருக்கும்?  சுயநிதிப்பள்ளிகளின் பிரச்சாரம் உண்மையென அரசால் நிருபிக்கப்பட்டது. அந்தக்கதை இப்போது  வரை தொடர்கிறது.விளைவு, அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால், அவர்கள் மேனிலைக்கல்விக்கு தனியார் பள்ளியில் படித்திட அரசே பணம் செலவழிக்கும் என்று வெட்கமில்லாமல் தனியார் பள்ளிகளைத் தூக்கிப்பிடிக்கும் அளவுக்கு இன்று நிலைமை மாறியுள்ளது.

எனது ஆட்சியில் தனியார் பள்ளிகளை விடவும், அரசுப்பள்ளிகளே தரமானது என்று சொல்லும் தைரியமோ, மனோநிலையோ திமுக ஆட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி எந்தக் கல்வியமைச்சருக்கும்  இன்றுவரை எப்போதும் வந்ததில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர்களும், சமஉக்களும் சுயநிதிப்பள்ளிகளையும், கல்லூரிகளையும் துவங்கினார்கள். பல்கலைக்கழகமே தனியார் துவங்கலாம் என்று அவர்களே சட்டமியற்றி அவர்களே துவங்கிக்கொண்டார்கள். ஆக,  கல்வி இலாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டது.

1978 துவங்கி 2016 வரையான இந்த 38 ஆண்டுகால தமிழகக் கல்வி வரலாற்றில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் கல்வியில் ஒரே கொள்கை தான். துளி வேறுபாடுகூட இரு கட்சிக்கும் இடையில் இருந்ததில்லை.

எல்லாத் தனியார் கல்வி நிலையங்களிலும் நன்கொடை வசூலிக்கிறார்கள் என்பது ஊரறிந்த செய்தி. நன்கொடை ஒழிப்புச்சட்டம் 1992 போடப்பட்டு, 25 ஆண்டுகள் முடிந்தேவிட்டன. ஆனால், ஒரு பள்ளியின் மீது கூட எந்த அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குறைந்தபட்சம் அதிமுக ஆட்சியில் திமுகவினர் நடத்தும் பள்ளிமீது கூட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையே ஏன்?

கோடிகளில் சம்பாதிக்கும் சுயநிதிப்பள்ளிகள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம் தருவதில்லை. ஏன் கழக ஆட்சியினர் கண்டுகொள்வதில்லை?

ஒவ்வொரு வருடமும் பல தனியார் கல்விநிலையங்களில் பலவிதமான கொலைகள், தற்கொலைகள், மரணங்கள் நிகழ்கிறதே. காரணம் என்ன? தனியார் கல்விநிலையங்களின் கொள்ளை இலாப மனநிலைதானே. இதுவரை எந்தவொரு கல்வி நிறுவனத்தின் மீதும் சுட்டு விரலைக்கூட எந்த அரசும் நீட்டியதில்லையே, ஏன்? அதன் சமீபத்திய உதாரணம் தானே விழுப்புரம் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவிகளின் மரணம். திமுகவின் மாநில ஆட்சியில், பாமகவின் அன்புமணி இராமதாசின் மத்திய அரசுத்துறையால்  அனுமதி தரப்பட்ட அந்தக்கல்லூரியை இப்போது பாதுகாப்பது அதிமுக எனில் தமிழகக் கல்வி சீரழிந்துபோனதில் இரு திராவிடக்கட்சிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு என்றுதானே அர்த்தம்!

சுயநிதிப்பள்ளிகள் கட்டணம் ஒழுங்குபடுத்தும் சட்டம் என்று ஒரு சட்டம் 2009ல் திமுக ஆட்சியில் போடப்பட்டது. 2011 வரை ஆட்சியிலிருந்த திமுகவும் சரி, 2011 முதல் 2016 வரை ஆட்சியிலிருந்த அதிமுகவும் சரி, இந்த சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு பள்ளி மீது கூட நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டார்கள். அரசு தீர்மானித்த கட்டணத்தைத்தான் செலுத்துவோம் என்று அரசை நம்பிய பெற்றோர்களோ இன்று தங்கள் குழந்தைகளோடு தெருவில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? தனியார் பள்ளிகளை எதிர்த்தெல்லாம் நீங்க ஒண்ணும் செய்யமுடியாது, உங்க குழந்தைங்க எதிர்காலம் தான் பாதிக்கப்படும், எனவே அவங்க கேட்கும் கட்டணத்தை கட்டியிருங்க என்கிறார்கள். இதைத்தான் மரணமடைந்த அந்த மருத்துவக்கல்லூரி மாணவிகளிடம் அந்த மாவட்ட ஆட்சித்தலைவரும் அன்பொழுக போதித்திருக்கிறார்.

ஆக, சட்டங்கள் மதிக்கப்படாது. விதிகள் பின்பற்றப்படாது. விதிமுறைகள் கவனிக்கப்படாது என்ற அராஜக நடைமுறையை தமிழகத்தின் கல்வித்துறையில் கொண்டு வந்தது யார்?ஒரு தனியார் பள்ளியின் மீது கூட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எந்த துறைக்கும் இப்போது இல்லையே, இந்த நடைமுறையை ஏற்படுத்தியது யார்?

அரசையே மிரட்டும் அளவுக்கு அதிகாரம் படைத்தவைகளாய் கோலோச்சும் இந்த தனியார் பள்ளிகளுக்கு அந்த மனோதைரியத்தை அளித்தது யார்? இதுதான் திராவிடக் கட்சிகளின் கல்விக்கொள்கையாகும்.

சமச்சீர் கல்வி என்று ஒரு கோட்பாடு. யப்பா, அதில் இருவரும் செய்யும் அரசியல் இருக்கிறதே, கேடு கெட்ட அரசியலப்பா அது.

நான் தான் அதைக்கொண்டு வந்தேன் என்பார் கலைஞர். அப்படியெனில், அவர் அந்தக்கொள்கையை எப்போது உருவாக்கினார் என்று சொல்லவேண்டும் அல்லவா,  சொல்வாரா?

இடதுசாரி அமைப்புகளின் கல்விக்கோட்பாடாகும் அது. இந்திய மாணவர் சங்கம் என்ற மாபெரும் அமைப்பின் கோரிக்கையாகும் அது. வலுவாய் அந்தக்கோரிக்கையைப் பேசிய முதல் அமைப்பும் அதுதான். ஆனால், அமல்படுத்துவேன் என்று சொல்லிவிட்டு, அதை மறுத்தவர் யார் என்றால் கலைஞர் என்ற பதிலே பொருத்தமாகும். அப்போது சட்டமன்றம் முன்பு திரண்டு போரட்டம் நிகழ்த்திய அமைப்பு இந்திய மாணவர் சங்கமாகும்.

இனியும் தப்ப முடியாது என்ற சூழலில், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதாய் அறிவித்தனர் திமுக ஆட்சியில். ஆனால், என்ன செய்தனர்?அவர்கள் அறிவித்த சமச்சீர் கல்வியில் சமத்துவமும் இல்லை, சீராக்குதாலும் இல்லை. எல்லாவிதப் பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நீடித்தன தமிழகக் கல்வியில்.

அடுத்து வந்தார் அம்மையார். சும்மா இருப்பாரா? அவர் கொண்டு வந்த திட்டமா? ஒண்ணு என் பெயரை வை, முடியலென்னா அந்தத் திட்டத்துலேயே கை வை என்பதுதானே அவர் கொள்கை. திமுக ஆட்சியில் கொண்டு வந்த புத்தகங்கள் சரியில்லையென்று தடை செய்தார். விளைவு பள்ளிகள் திறந்தும் புத்தகங்கள் இல்லை மாணவர் கையில். உச்சநீதிமன்றம் தலையிட்டது. புதுப்புத்தகங்கள் தருவதாய் நாடகமாடினார். ஆனாலும், சமச்சீர் கல்வி மட்டும் கொண்டு வரப்படவேயில்லை.

அதென்ன அப்படியென்ன இருக்கிறது சமச்சீர் கல்வியில் என்கிறீர்களா?

கல்வியில் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாது, அமைச்சர் வீட்டுப்பிள்ளையும், ஆட்டோ ஓட்டுநர் வீட்டுப்பிள்ளையும் ஒன்றாய் படிக்கும் வகையில் அனைவருக்கும் சமமானதாய், சீரானதாய் இருக்கவேண்டும் என்பதே சமச்சீர்கல்வியாகும்.

அப்படியொரு கல்வியை கொடுத்துவிடுவார்களா என்ன?

மெட்ரிக் பள்ளிகளை ஒழிக்கவேண்டும் என்ற உத்தரவு தானே அதன் முதல் துவக்கமாய் இருக்கமுடியும், செய்துவிடுவார்களா திராவிடக் கட்சியினர்?

சுயநலம். பொறாமை, பொறுப்பின்மை, சமூகவிரோத மனநிலை, சமூகத்தோடு இணைய விரும்பாமை இவை தான் தனியார் பள்ளியின் உருவாக்குதல்களாகும்.

மக்களிடம் இதை எடுத்துச்சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை வருடத்திற்கு சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளப்போகிறோம் என்ற கேள்வியை மக்களிடம் கேட்க வேண்டும். சமூக அக்கறையுள்ள மாணவர்களை பொதுக்கல்வியே உருவாக்கும் என்றும் அதுவே இன்றைய தேவையென்றும், அதற்கு மாற்றுக்கொள்கை அவசியம் என்றும் மக்களிடம் சொல்லவேண்டும்.

Related Posts