அம்பேத்கர் இன்றும் என்றும் …….! அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் …….!

இத்தொகுப்பு

1. இந்து மதத்தில் புதிர்கள்

2. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும்

3. தீண்டாமை என மூன்று பகுதிகளாக உள்ளது.

இதில் இரு முன்னுரைகள் உள்ளிட்டு 51 கட்டுரைகள் உள்ளன.

இந்தியாவில் சமூக மாற்றம் உருவாக சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டும் என்பதையும் அதற்கு இந்த சமூக அமைப்பு பற்றிய புரிதல் எந்த அளவு அவசியம் என்பதையும் இந்நூல் வாசிப்பு உணர்த்தியது . அரசியலமைச்சட்டம் உருவாக முழுமுதல் பங்களித்த அம்பேத்கார் தனது அமைச்சர் பதவியை துறக்க வைத்த காரணத்தை உணரவும் , காந்தி படுகொலை ஆனதற்கு மதநல்லிணக்கம் மட்டுமல்ல 40 களில் அவரிடம் வருணாசிரம சிந்தனையில் உருவான மாற்றம் எந்தளவு முக்கிய காரணம் என்பதை உணரவும் இந்நூல் உதவியது. இன்றைய மத்திய அரசின் முடிவுகள் ,அமைச்சர்கள் அவர்கள் ஆதரவில் திளைக்கும் சாமியார்களின் பேச்சுகள் தேர்தல் வெற்றிக்காக இந்துத்துவா போக்கில் சமரசம் செய்யும் அரசியல் கட்சிகள் உள்ள இப்போதைய சூழலில் இந்நூல் மிக முக்கியமாகியுள்ளது .

அம்பேத்கார் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் ’ஐயப்படும் செயல்தான் எல்லா முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது அல்லது முன்னேற்றத்துக்கு முதல் படியாக அமைகிறது’ என்பதை கவனத்தில் கொண்டு மத நம்பிக்கை உள்ளோர் நாத்திகர் என அனைவரும் இதை வாசிப்பது அவசியம் .

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களிடம் நீங்கள் ஏன் இந்துவாக உள்ளீர் எனக் கேட்டால் தெளிவாக பதில் கூற இயலாத அளவில் நிலைமை உள்ளது. ஏனெனில் இம்மதம் சார்ந்த தெய்வங்கள் ஏராளம் ! வழிபடும் முறைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் பல்வேறு கொள்கை கோட்பாடுகளின் கலவைத் தொகுப்பாக உள்ளது. இந்து மதத்தின் புனிதநூலாக வேதங்கள் உள்ளன. ஆனால் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் என அனைத்தும் இதன் தோற்றம் பற்றி வெவ்வேறு விளக்கங்கள் கூறுகின்றன என்பதுடன் தோன்றிய காலம் முதல் பல்வேறு மாற்றங்களுக்கும் உள்ளாகி வந்துள்ளன.

வேதங்களில் ஆரியர்களின் சமூக வாழ்வைப் பற்றி அறிவதற்கான ஆதாரத் தகவல்கள் உள்ளனவே தவிர உள்ளத்தை உயர்த்துவதாக ஏதும் இல்லை . அதேபோல் இம்மதம் பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் திரிமூர்த்திகளை அடிப்படையாகக் கொண்டு அதே சமயம் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் என நிரூபிக்கும் வகையிலும் ஒன்றை ஒன்று அழிக்கும் வகையிலுமான முயற்சியை மையப்படுத்தி பற்பல கதைகள் மற்றும் அவதாரங்களுடன் மூன்று மதங்களாக உள்ளன.

இந்து சமூக அமைப்பு முறையும் பிராமணர்கள் , க்ஷத்திரியர்கள் , வைசியர்கள் ,சூத்திரர்கள் என நிரந்தரமாகவே நான்காக பிரிக்கப்பட்டு தரவாரியாக அமைந்த ஏற்றதாழ்வுகளுடன் உரிய அந்தஸ்துகளால் இணைக்கப் பட்டுள்ளனர் . பிராமணர் , க்ஷத்திரியர் , வைசியர் ஆகிய மூன்று குலத்தில் பிறக்கும் ஆண் வாரிசுகளும் எட்டு வயது முதல் பதினோரு வயதிற்குள் உபநயனம் சடங்கின் மூலம் பூணூல் அணிவிக்கப்பட்டு இரு பிறப்பாளர் ஆகின்றனர். இதிலும் குலத்துக்கு தக்கபடி பூணூல் இழைகள் இருக்கும் .

ஆனால் இவைகளை உருவாக்கியவர் யார் எனும் கேள்விக்கு பிரம்மன் , காசியபர், மனு என பலரின் பெயர் கூறப்படுகிறது. ரிக் வேதத்தில் மட்டும் நால்வருணக் கோட்பாடு எனும் கட்டுக்கதையை நுழைத்ததன் விளைவான குழப்பமிது எனும் எண்ணத்திற்கு அம்பேத்கர் வருகிறார்.

இதில் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் முற்று முழுதாய் கல்வி மறுக்கப்பட்டது . மூன்று வருணங்கள் தனக்கு அடுத்தடுத்த கீழ்நிலை வருணங்களை அடிமைப்படுத்த முடிந்த போதும் சூத்திரர் இன்னொரு சூத்திரரைதான் அடிமைப்படுத்த அனுமதி இருந்தது. இவர்கள் மீதான் ஒடுக்குமுறை ஏன் இவ்வளவு அழுத்தமாய் இருந்தது எனும் முக்கிய கேள்வியையும் எழுப்புகிறார்.

பிரம்மசரியம் , கிரஹஸ்தம் , வானப்பிரஸ்தம் , சந்நியாசம் எனும் நான்கு நிலைகள் தனிமனித வாழ்வை நெறிப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே தான் இந்நூலின் முதல் பகுதி முழுவதும் இந்து மதத்தின் புதிர்களை வாசகர்கள் உணரும் வகையில் பல்வேறு கேள்விகளையே தலைப்புகளாக கொண்டு எழுதப்பட்டுள்ளது .

பௌத்த மதம் பிக்குகள் எனும் சந்நியாசிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தது. திருமணம் ஆகாதவர்களை பிக்குகள் ஆக்குவது எளிது என்பதால் தான் மனு மேற்கண்ட மூன்று குலத்தோரும் கிரஹஸ்த நிலையை தவற விடக் கூடாது என்பதை வலியுறுத்துவதில் உறுதியாக இருந்தார் என்றெழுதி அம்பேத்கார் முதல் பகுதியை முடிக்கிறார்.

பண்டைய இந்தியாவிற்கு நிறைய வரலாறு இருந்தும் பிராமண நூலாசிரியர்களின் புனைவுக் கதைகள் நிரம்பி வெளிப்படுவதால் அது தன் வரலாற்றுத் தன்மையை இழந்து விட்டது.

இந்திய வரலாறு என்பது வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு மதங்களுக்கிடையே ( புத்த சமயத்துக்கும் பிராமணியத்துக்கும் ) நடந்த கடும் போராட்டமேயன்றி வேறல்ல .ஆனால் இதை தயக்கமின்றி ஏற்போர் யாருமில்லை .பௌத்த இலக்கியங்களே இதை நாம் தெளிவாக காண உதவுகின்றன.

ஆரிய சமுதாயம் சூதாட்டம் , மதுப்பழக்கம் , முறையற்ற திருமண உறவுகள், மனைவியரை வாடகைக்கு விடுதல், விலங்குகளுடன் புணருதல் என்று பல்வேறு வகையில் சமூக சமய ஆன்மிக நிலையில் பெரிதும் தரங்கெட்டு தாழ்ந்திருந்தது. அந்த சமயத்தில் கௌதம புத்தர் மிக உயர்ந்த சீர்திருத்தவாதியாக இருந்தார் .

நீதிபோதனையை விட வாழ்ந்து காட்டுவது எனும் அடிப்படையில் சாதாரண மக்களுக்கு கொல்லாமை, திருடாமை, பொய் பேசாதிருத்தல், தூயவராய் இருத்தல், மது அருந்தாமை ஆகியவற்றையும் துறவிகளுக்கு மேலும் ஐந்து கொள்கைகளையும் வலியுறுத்தினார்.

சமத்துவம் இல்லாக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சாதி முறையைக் கண்டனம் செய்தார். பிராமணர்களுக்கு சம அந்தஸ்துள்ள பிக்குகளாக கீழ்சாதியினரையும் சூத்திரர்களையும் மாற்றினார். கல்வி மறுக்கப்பட்ட பெண்களும் சூத்திரர்களும் கல்வி கற்கவும் கற்பிக்கவும் ஏற்பாடு செய்தார். பிராமணர்களுடன் நிறைய விவாதித்து அவர்களையும் தனக்கு சீடராக்கினார். அடிமைகள் சுதந்திர மனிதனாகும் உண்மையையும் அனைவரும் சகோதரத்துவம் உள்ளவர்கள் என்பதையும் புத்தரின் பேச்சில்தான் மக்கள் முதன்முதலில் உணர்ந்தனர்.

எனவே பௌத்தம் என்பது சமயப் புரட்சியானாலும் அது பிரெஞ்சுப் புரட்சி போல சமூக அரசியல் புரட்சியாகும் என்கிறார் அம்பேத்கர்.

இஸ்லாமியர் படையெடுப்பு பிராமணியம் மற்றும் பௌத்தம் அழிய முக்கிய காரணமானது . ஆனால் அரசுகளின் ஆதரவும் பிறப்பின் அடிப்படையில் பிராமணர் புரோகிதராக முடியும் என்பதும் பிராமணியம் மீண்டும் உயிர்த்தெழக் காரணமானது. பௌத்த குருமார்கள் அழிக்கப்பட்டதால் பிக்குகள் அழிந்தனர். அரசுகளின் ஆதரவின்மையும் இணைந்து புத்தர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறக் காரணமானது.

மனுஸ்மிருதி, கீதை, சங்காராச்சாரியரின் வேதாந்தம், மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் ஆகியவை பிராமணீய இலக்கியங்கள். இவை புத்தம் நலிவுற்றதன் உள்ளுறைக் காரணமாக இருக்கலாம் என்பதும் அம்பேத்காரின் எண்ணம்.

புத்தர் காலத்தில் சீர்திருத்தம் பெற்ற பிராமணீயம் மீண்டும் கி.மு. 185 க்கு பின் புஷ்யமித்திரன் காலத்தில் இறுக்கமாயிற்று. கிமு 170க்கும் கிமு150க்கும் இடையில் சுமதி பார்கவா என்பவரால் எழுதப்பட்ட மனு ஸ்மிருதி சட்டமாகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் மற்ற இலக்கியங்கள் பயன்படுத்தப்பட்டன.

தனி மனிதனாகவும், சீதையின் கணவனாகவும், அயோத்தியின் அரசனாகவும் ஆசாபாசங்களும் பெண்ணை சந்தேகித்தலும் ராஜகுல இன்பங்களை அனுபவித்தலும் என வாழ்ந்த சாதாரண மனிதனான இராமன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பூகனை வதம் செய்தது மனுதர்மங்களை காக்க உதவியது. அதுவே அவனை அவதாரமாக்கியுள்ளது . கிருஷ்ணர் மற்றும் பாண்டவர்களின் தனித்தனி கதைகளை வியாசர் துணிச்சலாக இணைத்து கிருஷ்ணன் மகாபாரதத்தின் கதாநாயகனாக ஆக்கப்பட்டிருக்கிறார். இந்திய பண்பாடு என்று தனியாக எதுவும் இருந்ததில்லை . பிராமணிய இந்தியா, பௌத்த இந்தியா, இந்து இந்தியா என மூன்றும் தனித்தனி பண்பாட்டைக் கொண்டவையே என்கிறார் அம்பேத்கர்.

பௌத்தத்தை பிராமணியம் வென்ற பிறகு பிராமணியம் வர்ணத்தை சாதியாக மாற்றியது . இது பல கட்டங்களாக நடந்தது என்பதை தெளிவாக விளக்குகிறார் அம்பேத்கார். குறிப்பாக தகுதிக்கேற்ப மனிதரின் வர்ணம் தீர்மானிப்பது முதலில் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டது . பிறகு குரு மூலம் நடந்தது. பிறகு தந்தையின் அதிகாரத்திற்கு மாறியதால் அது பரம்பரையானது . அதோடுபுறமணமுறைக்கு பதில் அகமண முறை புகுத்தப்பட்டதன் மூலம் சாதி உருவாக்கப்பட்டது. மேல்சாதி பெண் கீழ் சாதி ஆணை திருமணம் செய்வது தடை செய்யப் பட்டது . ஆனால் மேல் சாதி ஆண்கள் கீழ்சாதி பெண்களை மணம் செய்வது தடை செய்யப்படாமல் அதன் மூலம் உருவாகும் குழந்தைக்கு அவன் பொறுப்பெடுக்க வேண்டியதில்லை என்று விடுவிக்கப்பட்டனர் .

பொதுவான சமத்துவமின்மை புரட்சிக்கு வித்திடுகிறது. ஆனால் படிப்படியான சமத்துவமின்மை தனக்கு கீழ் ஒருவன் உள்ளான் எனும் திருப்தி மனநிலை உருவாக்கம் மூலம் புரட்சி ஏற்படாமல் தடுக்கிறது என்கிறார் அம்பேத்கார். இந்து பூர்வீக சமுதாயத்தில் தனிமனித வாழ்வில் உருவாகும் சில சந்தர்ப்பங்களில் மட்டும் தற்காலிகமாக தூய்மைக் கேடு கடைபிடிக்கப்பட்டு சில சடங்குகளின் மூலம் தூய்மை கண்டது. ஆனால் இன்னொரு வகை தீண்டாமை பிறப்பிலேயே வந்து தலைமுறை தலைமுறையாய் அந்தக் கறையுடன் மனிதர்களை வாழச் செய்தது. அந்த வாழ்வு இன்னும் நீடிக்கிறது .

சூத்திர ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்த சண்டாளர்கள் மட்டுமல்ல 1935 ல் இந்திய அரசாங்கத்தின் அறிக்கைப்படி 429 வகை வகுப்புகள் தீண்டாதோர் பட்டியலில் இருந்துள்ளது. (9 மாகாணங்களில் ). கிராமங்களுக்கு வெளியே மக்கள் வசிக்கும் இதுபோன்ற சூழல் ஐரீஸ் , வேல்ஸ் போன்ற நாடுகளில் இருந்தாலும் திருமண உறவின் மூலம் சில காலங்களுக்கு பின் வேறுபாடு மறைந்து விட்டது என்பதைக் குறிப்பிடும் அம்பேத்கர், நாடோடி சமுதாயம் குடியமர்ந்த சமுதாயமாக மாறிய போது இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், தீண்டாமைக்கு அடிப்படை இனக்கோட்பாடோ, அருவெறுப்பான பணிகளில் ஈடுபடுவதோ இல்லை என்பதையும் விரிவாக பதிவு செய்துள்ளார்.

தீண்டாமை தோன்றிய காலம் பசுவதையும் மாட்டிறைச்சி உண்பதும் தடை செய்யப்பட்ட காலம் என்பதை உறுதிப்படுத்துகிறார். அதன் மூலம் தீண்டாமை தோன்றிய காலம் சுமார் கிபி 400 ம் ஆண்டு என்பதை நிறுவிய அம்பேத்கர் புத்த மதத்திற்கும் பிராமணியத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்திலிருந்தே தீண்டாமை தோன்றியது என்பதை அழுத்தமாய் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலின் உருவாக்கத்தில் மிகப்பெரும் கூட்டுழைப்பு செலுத்தப் பட்டுள்ளது . பரவலாக கொண்டு செல்வது மிக அவசியம் !

– செம்மலர்.