இதழ்கள் இளைஞர் முழக்கம்

அம்பேத்கருடன் ஒரு பயணம் – த.கிருஷ்ணா

b-r-ambedkar4

உலகில் உள்ள மனிதர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளனர். அதே போன்றே பெண், ஆண் என்று பாலினங்களில் வேறுபாடு உண்டு. பணம் இல்லாதவன் ஏழை என்றும், சொத்தும்  பணமும் குவித்து வைத்துள்ளவன் பணக்காரன் என்றும் வித்தியாசப்படுத்தலாம். இவை அனைத்தும் நாம் நேரடியாக உணரமுடியும் என்று நம்பக்கூடிய உண்மைகள். ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்வதை நாம் ஐம்புலன்களால் உணரவும் முடியாது. உணர முடியாத ஒன்றை கண்களால் பார்க்க முடியாத ஒன்றை தான் இவன் பிறப்பால் உயர்ந்தவன் என்றும் மற்றொருவன் தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இதை ‘சாதி’ என்று அடையாளப்படுதுகிறார்கள். இந்தியாவில் சாதி படிநிலையாக இருக்கிறது இந்து சமூகமே சாதிப் பிரிவினை கொண்டது. இதில் உள்ள வேதம் என்பது சாதிய கண்ணோட்ட நால்வர்ணம் கொண்டது. ‘இந்து’ ஒன்று கிடையாது எல்லாம் தனித்தனி சாதியாகத்தான் பிரிந்து இருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியவர் மாமேதை அம்பேத்கர்.

டிசம்பர் 6 அம்பேத்கரின் 60-வது நினைவு நாள் ஆனால் இன்றைக்கு கூட அந்த மகத்தான தலைவரை கூண்டுக்குள் வைத்துத்தான் நாம் மரியாதை செலுத்தி வருகிறோம். அவரின் பெயரை உச்சரித்தாலே ஆளும் வர்க்கங்களுக்கும், ஆண்டைகளுக்கும் உதறல் ஏற்படுகிறது. அவரின் ஆளுமையை நம்மால் உணரமுடிகிறது. எந்த ஒரு கருத்துகளையும் எழுதும்போதும் பேசும்போதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சாட்சியாக மாற்ற கூடியவர் அம்பேத்கர்.

அரசியல் அமைப்புச்சட்டம்:

உயர்சாதி இந்துக்களுக்கு எப்பொழுதுமே தன்மனதில் எண்ணம் ஒன்று உண்டு. தங்களைவிட தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் தாழ்ந்தவர்கள் என்றும, அவர்களை விட நாம்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம்தான் அது. ஆனால் அவர்களை விட நாம்தான் உயர்ந்தவர்கள் என்று அம்பேத்கர் ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால் உயர்ந்து நிற்கும்படி செய்து காட்டி எல்லோருக்கும் சாட்சியாக நின்றவர் அம்பேத்கர். என்ன சாட்சி என்றால் அவர் எழுதிய இந்திய அரசியலைமைப்புச் சட்டம் தான் சாட்சி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் பணம் படைத்தவர்கள் இருந்தார்கள் . லண்டன் ஆக்ஸ்போடு யூனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்ற தலைவர்கள் எல்லாம் இருந்தார்கள். உதாரணத்திற்கு ஜவஹர்லால் நேரு, மாளவியா, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் இருந்தும் யாராலும் அரசியல் அமைப்புச்சட்டத்தை இயற்ற முடியவில்லையே ஏன்? இது தான் கேள்வி எல்லோருமே ஏகமனதாக, இதை இயற்ற வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட குடியில் பிறப்பெடுத்த அறிவற்றாலும் திறமையும் வாய்ந்தவர் என எகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட டாக்டர் அம்பேத்கரால் தான் முடியும் என்று முடிவு செய்து அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 29-ம் தேதி அரசியல் சட்ட வரைவுக்குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்படுகிறார். குழுவில் 6 பேர் இடம் பெறுகிறார்கள். கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையதுமுகமது கான், மாதவராவ் , கைதான் போன்றவர்கள் ஆவார்கள். பெயரிலேயே தெரிகிறது உயர்சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும். அம்பேத்கரின் உதவியாராக இருந்தார்கள் என்று, ஆனால் இந்த ஆறு பேரில் ஒருவர் கூட கடைசி வரை அரசியலமைப்புச்சட்டத்தை இயற்ற உதவவில்லை. இருந்த போதும் எதற்கும் கவலைப்படாமல் தன் மிக நுட்பமான அறிவால் சாதிய அடையாளம் மறக்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி முடித்தார் அம்பேத்கர்.

இடஒதுக்கீட்டில் அம்பேத்கரின் தனித்துவமான பார்வை:

இடஒதுக்கீடு பற்றி தீக்கமான முடிவுக்கு வந்த அம்பேத்கர் அவரது கருத்துக்களை தைரியமாக முன்வைக்க லண்டனில் நடந்த 2-வது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள சென்றார். மாநாட்டில் காந்தி, நேரு போன்ற காங்கிரஸ் தலைவர்களும, முஸ்லீம் தலைவர்களும், கிறிஸ்துவ தலைவர்களும் கலந்து கொண்டனர். வெள்ளையர்களும பெருமளவில் கலந்து கொண்டனர்.

முஸ்லீம் தலைவர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பேசினர். கிறிஸ்துவ தலைவர்களும் தங்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசினர். அம்பேத்கர் பேசத் தொடங்கினார். முஸ்லீம்கள், கிறிஸ்துவமக்கள், இந்துக்கள் இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எங்களுக்கு இந்து அல்லாதவர்கள் என்று தனி இடஒதுக்கீடு வேண்டும். அதை சட்டமாக்க வேண்டும் என்றார். அவையில் ஒரே கூச்சல் குழப்பம், காந்தி பதறிவிட்டார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காந்தி அம்பேத்கரைப் பார்த்து கேட்கிறார், மிஸ்டர் அம்பேத்கர் நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். அரிஜன மக்கள் தான் உண்மையான ஹரியின் பிள்ளைகள். ஆவர்களை இந்து மதத்திலிருந்து பிரித்து விடாதீர்கள் என்று பேசி முடித்தார். அம்பேத்கர் மிகவும் நிதானத்துடன்நான் ஏன் இப்படி ஒரு இடஒதுக்கீடு கேட்டேன் என்பதற்கு விளக்க என்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார். வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அம்பேத்கர் பேச தொடங்குகிறார் அவையே நிசப்தமாக காட்சியளிக்கிறது. அந்த கூட்டத்தில் ஹரியானா மாநில பிரதிநிதியை பார்த்து அம்பேத்கர் கேட்கிறார். ஒரு தேதியை குறிப்பிட்டு, மாவட்டத்தை மற்றும் அந்த கிராமத்தை பற்றியும், அந்த கிராமத்தில் ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு குடும்பத்தோடு எரித்து கொல்லப்பட்டாளா? என்கிறார். ஹரியானா பிரிதிநிதி ஆமாம் என்று தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார். மேலும் இதை செய்தது அங்குள்ள உயர்சாதி இந்துக்கள் தானே என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கும் அந்த ஹரியானா மாநில பிரதிநிதி ஆமாம் என்று சாட்சி சொல்கிறார். இதே போன்று தான் உத்திரபிரதேசம் மற்றும் பீகார் பிரதிநிதிகளையும் பார்த்து அம்பேத்கார் கேட்கிறார் உங்கள் மாநிலத்திலும் தலித் குடும்பங்கள் அடித்து நொறுக்கப்பட்டது என்றும் அதை செய்தவர்களும் உயர்சாதி இந்துக்கள் தான் என்றும் கேள்வி எழுப்பிய போது அவர்களும் ஆமாம் என்று தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். இப்படி இந்துக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் தலித் மக்களை, உயர் சாதி இந்துக்களே இப்படி அடித்து கொல்வது தீ வைத்து வீடுகளை எரிப்பது பெண்களை வன்புணர்வு செய்வது என்று இருந்தால் நாங்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும் ஆகவே தான் எங்களுக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் என்கிற தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம் என்றார் அம்பேத்கர். அந்த அவையில் இருந்த வெள்ளைக்காரர்கள் அசந்து போய்விட்டார்கள் இப்படி தனக்கு எதிரானவர்களை தனக்கு ஆதரவானவர்களாக மாற்ற கூடிய ஆளுமை படைத்தவர் அம்பேத்கர்.
மத்திய அரசாங்கத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதை கேள்விப்பட்ட அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த நிகழ்வு எத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இவர் தலித் தலைவர் என்று நாம் சொல்லலாமா? இந்திய திருநாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று தான் சொல்ல வேண்டும்.

உணவு அரசியலை தெளிவாக்கிய நிலைப்பாடு:

மேலை நாடுகளில் எல்லாம் இரண்டே இரண்டு உணவு முறைதான் உள்ளது. ஒன்று அசைவம், மற்றொன்று சைவம். ஆனால் இந்தியாவில் தான் மூன்று உணவு முறை உள்ளது. அது என்ன? சைவம், அசைவம் மற்றும் அசைவத்திலேய மாட்டுக்கறி உண்பது. இந்த முறைக்கு காரணமான இந்து சமூகத்தையும் பார்ப்பனீயத்தையும் அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர். 2000 வருடங்களுக்கு முன்பு மாட்டுகறியை அதிகமாக உண்டவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர்களுடைய ரிக் வேதத்திலேயே வேள்வியில் மாட்டுக்கறியை துண்டு துண்டாக வெட்டி நெய்யிட்டு சாப்பிட்டார்கள் என்பது தான் வரலாறு. இந்த தருணத்தில்தான் புத்தர், இப்படியே பார்ப்பனர்கள் மாட்டை தின்றால் விவசாயத்திற்கு பயன்படும் மாட்டு இனம் அழிந்துவிடும் என்று விவசாயிகளுடன் இணைந்து போராடி மாடுகளை காத்தார் என்பது வரலாறு.

இந்து சட்டம் மசோதாவின் தேவை குறித்து அம்பேத்கரின் விளக்கம்:

இந்து சட்ட மசோதாவிற்காக கடுமையாக சண்டயிட்டார் அம்பேத்கர். இதில் குறிப்பாக அவர் கொண்டுவந்த ஒரு தார மணம் என்ற சட்டம் மற்றும் வரதட்சணை எதிர்ப்பு சட்டம் ஆகியவும் அடங்கும். ஒரு தார மணத்தை வலியுறுத்தி பேசிய அம்பேத்கர் மிகத்தெளிவான கருத்துக்களை எடுத்துரைத்தார். அப்போது மும்பையில்  பஞ்சாலைகளில் இருந்த ஆண்கள் தங்களது ஆலைகளில் வேலை செய்ய கூலியில் வேலை ஆட்களை அமர்த்துவதற்கு பதிலாக 3 4 திருமணங்களைச் செய்து கொண்டு அந்த மனைவிகளை பஞ்சாலைகளில் “கூலியற்ற பணியாட்களாக” அமர்த்தினார். இது போன்ற முறையற்ற நடவடிக்கைகளை தடுக்க “இந்து சட்ட மசோதா” வழிவகுக்கும் என உறுதியாக நம்பினார் அம்பேத்கர்.

அர்ப்பணிப்பான வாழ்க்கை முறை:

அம்பேத்கர் ஒரு முறை வீட்டில் சில குறிப்புகளை தேடிப்பிடித்து எழுதிக்கொண்டிருந்தார். இரவுநீண்ட நேரம் சிந்தித்து கொண்டிருந்ததில் நேரத்தை கவனிக்கவில்லை. நேரம் சரியாக இரவு 11 மணி இருக்கும். பின்னால் திரும்பி பார்க்கிறார் அவரது உதவியாளர் ரட்டோ நின்றிருக்கிறார். ரட்டோவிடம் அம்பேத்கார் ஒரு கோப்பை தேனீர் கொடுத்துவிட்டு நீ வீட்டுக்குச் செல் நேரமாகிவிட்டது என்கிறார். ரட்டோவும் தேனீருடன் கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை ரட்டோ அம்பேத்கர் வீட்டுக்கு வந்து பார்க்கிறார். முதல் நாள் இவர் தன்வீட்டுக்கு 11 மணிக்கு கிளம்பும் போது எப்படி உட்கார்ந்து அம்பேத்கர் எழுதி கொண்டிருந்தாரோ அதே நிலையில் எழுதிகொண்டு இருக்கிறார். வைக்கபபட்ட தேநீர் பருகாமல் அப்படியே இருக்கிறது. ரட்டோ நிற்பதை கவனித்துவிட்ட அம்பேத்கர் கேட்கிறார் ரட்டோ நீ இன்னும் வீட்டுக்கு போகலையா? ஆடிப்போய் விட்டார் ரட்டோ, அப்படி என்றால் இரவு முழுவதும் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்தை கூட அறியாமல் இந்த மனிதரால் இப்படி உழைக்க முடிகிறதே? யாருக்காக இவர் இப்படி உழைத்துகொண்டிருக்கிறார்? என்ற கேள்வி ரட்டோ மனதில் ஏற்பட்டது. யோசித்து பாருங்கள் அவர் கடைசி மூச்சு உள்ளவரை ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு உழைக்கும் அவரின் போர் குணத்தை அவரின்ஆளுமையை என்னவென்று சொல்வது.

ஆகவேதான் உரக்கச் சொல்லுவோம்

சாதிய ஒழிப்பே!

மக்கள் விடுலை!

இது தான் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!!

அம்பேத்கரின் நூல்கள் 38 பாகங்களாக உள்ளன. இவைகளில் முக்கியமான அத்தியாயங்கள் 8, 14, 25, 38 ஆகியவை ஆகும்.

Related Posts