இதழ்கள் இளைஞர் முழக்கம்

அமெரிக்காவின் அடிமையா? எதிரியா?

பேரா.ஆண்ட்ரூ லெவின்

உலகின் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமெரிக்காவின் இலக்கு மிகவும் தெளிவானது. மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் அமெரிக்கப் பெருமுதலாளிகளின் தேவைகளுக்கு சேவகம் செய்யவேண்டுமென்பதும் அவர்களது நலன்களை மேலும் மேலும் அதிகரிக்க தேவையான உதவிகளைச் செய்யவேண்டுமென்பதும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல… உத்தரவு. அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் அந்தப் பிரதேசத்தில் ஒரு நிலையான கட்டமைப்பு இருக்கவேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது.

இரண்டாம் உலகப்போர் முடிவதற்கு முன்பே இதைச் சிந்தித்துவிட்டது அமெரிக்கா.

போர் முடிந்த சில ஆண்டுகள் கழித்து, மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் பிரான்சையும் பிரிட்டனையும் அங்கிருந்து அகற்றுவதென்றும் அமெரிக்கா முடிவு செய்தது. 1956-ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னணியில் பிரான்சையும் பிரிட்டனையும் மத்திய கிழக்குப் பிரதேசத்திலிருந்து முற்றாக வெளியேற்றிவிட்டு முற்றிலும் தனக்கான பிரதேசமாக மாற்றிக்கொள்ள முயற்சித்தது அமெரிக்கா. ஆனால், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு சோவியத் ஒன்றியம் என்ற சக்தியை அனைத்துத் தளங்களிலும் எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அப்போதுதான், இஸ்ரேல் என்ற ஒரு தேசம் உதயமானது. 1948-ல் உருவான இஸ்ரேல், சில காலம் கழித்து- அதாவது 1967-ல் எகிப்துடனும் இதர பல நாடுகளுடனும் போரில் ஈடுபட்டது. அந்த நாடுகளின் ராணுவங்களை நசுக்கியது. இப்படியாக பாலஸ்தீனத்தையும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் தனது நலன்களுக்கான களமாக மாற்றியது.

இந்த நிலையில், இஸ்ரேலை தனது 51-வது மாநிலமாகவே கருதிக்கொண்ட அமெரிக்கா, தனது நலனே இஸ்ரேலின் நலன் என தனது ஏவலாளியாக மாற்றிக்கொண்டது. இஸ்ரேலுக்கு எது நல்லது என்று பட்டதோ அதுவெல்லாம் அமெரிக்காவுக்கும் நல்லது என்றே ஆனது. அமெரிக்காவுக்கு எது நல்லது என்று தெரிந்ததோ அதுவெல்லாம் இஸ்ரேலுக்கு நல்லது என்றானது. இரு நாடுகளும் சேர்ந்து அரபுப் பிரதேசம் முழுவதையும் வேட்டைக்காடாக மாற்றத் தொடங்கின. மத்தியக்கிழக்கு நாடுகளில் ஜனநாயகத்தைப் பரப்புவதாகக் கூறி அமெரிக்காவும், அதன் ஏவலாளியான இஸ்ரேலும் நடத்தத் தொடங்கிய சதிராட்டங்கள் இலக்கு ஏதுமில்லாதது அல்ல… ஒட்டுமொத்த அரபு உலகின் எண்ணெய் வளத்தையும் கைப்பற்றுவது, அதன் மூலமாக உலகம் முழுவதும் எண்ணெய் சப்ளையை தனது கைக்குள் கொண்டுவருவது என்பதே அதன் பிரதான இலக்கு.

அமெரிக்காவின் இலக்குகள் தெளிவானவையே ஆனால் தெளிவற்றதாக எது இருக்கிறதென்றால், மத்திய கிழக்குப் பிரதேசம் முழுவதும் திட்டமிட்டபடி போர்களையும் பதற்றத்தையும் தீராத பகைமைகளையும் அழியாத துயரங்களையும் உருவாக்கியாயிற்று… அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படிச் செல்வது என்பதுதான் அமெரிக்காவுக்குத் தெரியவில்லை.

இது அமெரிக்க வெளியுறவுத்துறையின் கொள்கைகளை உருவாக்குகிற அரசுக்கட்டமைப்பின் பிரச்சனை அல்ல. ஏனென்றால் அந்தக் கட்டமைப்பானது எப்போதுமே ஒரு தெளிவான பாதையை உருவாக்கிக் கொண்டு களத்தில் இறங்குவது இல்லை. எந்த நாட்டைப் பிடிக்க வேண்டும், அங்கு என்ன குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். அதற்கேற்றார்போல் கல்லை எறிந்து பார்ப்பார்கள்; அதன் பின்விளைவு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து பலவந்தமான முறையில் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பார்கள்.

முன்பு சோவியத் ஒன்றியம் இருந்தபோது ஏகாதிபத்தியத்திற்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அமெரிக்காவிடம் தெளிவான வரையறைகள் இருந்தன என்று கூறலாம். பனிப்போர் காலக்கட்டத்தில் எல்லா நாட்டிலும் அயல்துறை வட்டாரங்களில் உண்மையான அரசியல் பிரச்சனைகளும் அதுசார்ந்த கோட்பாடுகளுமே பிரதான இடம்பெற்றிருந்தன. ஆனால் இன்றைக்கு எந்தக் கோட்பாடும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கோட்பாடற்ற அமெரிக்காவின் பயணத்தில், அது ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடியை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மொத்த நெருக்கடிகளுக்கும் ஜார்ஜ் புஷ்சும், பாரக் ஒபாமாவும் `பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று பெயர் வைத்துக் விட்டார்கள்.

எந்தவொரு நியாயமான காரணத்திற்காகவும் இன்றி புஷ்சின் ஆட்சிக்காலத்தில் அதிபயங்கரமான போர் நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. அது பெரும் பேரழிவாக இருந்தது.

ஆனால் அப்போதும் கூட அவர்கள் `ஜனநாயகத்தை’ப் பற்றி பேசுவதை நிறுத்தவில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே அனைத்து பயங்கரங்களையும் நிகழ்த்தினார்கள்.

ஆனால் உண்மையில், ஜனநாயகங்கள், இதர ஜனநாயகங்கள் மீது ஒரு போதும் போர் நடத்துவதில்லை. இதை இந்தப் பூவுலகின் எல்லா தத்துவ ஞானிகளும் பேசியிருக்கிறார்கள். மத்தியக் கிழக்குப் பிரதேசம் முழுவதும் தாங்கள் நிறுவ விரும்பும் கைப்பாவை ஆட்சிகள், இஸ்ரேலில் நிலவுகிற `ஜனநாயகத்திற்கு’ ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சமீப ஆண்டுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.

2003ம் ஆண்டில் இராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அதற்கு `மனிதநேயப் படையெடுப்பு’ என்று பெயரிட்டுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு இன்று வரையிலும் அந்த நாட்டைப் பாதுகாப்பது எங்கள் கடமை என்று கூறி ஒபாமாவின் கைக்கூலிகள் அப்பட்டமாக இராக்கைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்தியக் கிழக்குப் பிரதேசம் முழுவதிலும் உள்ள அமெரிக்க தூதர்கள், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் சிஐஏ உள்ளிட்ட உளவுத்துறை அதிகாரிகள் என எல்லோரும் இடைவிடாமல் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது வேலை, ஏற்கெனவே மோசமாகி இருப்பதை இன்னும் நாசமாக்குவது என்பதுதான்.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் புஷ் இராக்கை நொறுக்கினார். இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள், புஷ்சே பரவாயில்லை என்பதுபோன்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஆப்கானிஸ்தானையும் நொறுக்கினார். ஜிம்மி கார்ட்டர், ரொனால்டு ரீகன் ஆகியோரின் காலத்தில் நொறுக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமாக நொறுக்கினார். ஆனாலும் இன்றைக்கு நடப்பதைப் பார்த்தால், ஆப்கனினும் கூட புஷ்சே பரவாயில்லை என்றே தெரிகிறது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மீதும், ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

உலக வர்த்தக மையக் கட்டிடம் மீதும், பென்டகன் மீதும் நடந்த அந்தத் தாக்குதல்கள் அல்கொய்தா அமைப்பில் இருந்த சவூதி அரேபியர்கள் மற்றும் இதரர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை; ஆப்கானியர்களால் அல்ல. ஆப்கானிஸ்தானில் அன்றைக்கு ஆட்சியிலிருந்த தலிபான் பயங்கரவாதிகளின் அரசு, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்புப் புகலிடமாக இருந்தது என்பது உண்மைதான்; தலிபான் பயங்கரவாதிகளும், அல்கொய்தா பயங்கரவாதிகளும் ஒரேவிதமான எண்ணம் கொண்டவர்கள்தான். ஆனால் ஆப்கானியர்கள் ஒருபோதும் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலில் எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை.

ஆனால் அதுவெல்லாம் அமெரிக்காவிற்கு பொருட்டல்ல.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துவிட்டது. அன்றைக்கு ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சும் துணை ஜனாதிபதி டிக் செனய்யும் ஆப்கானிஸ்தானிலும் அதைத்தொடர்ந்து இராக்கிலும் படையெடுப்பை நடத்துவது என முடிவு செய்தார்கள். பழிக்குப் பழி வாங்கப்போவதாக உறுமினார்கள்.

இந்தக் காரியத்தை கனகச்சிதமாக உலகெங்கிலும் செய்து முடித்தன அவர்களது சேவக ஊடகங்கள்.

பழிவாங்குவது என்றால், மறைமுகமான முறையில் சூழ்ச்சிகள் மேற்கொண்டு நடத்தப்படுகிற தாக்குதலாகவே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அப்படியெல்லாம் பொறுமை காக்க புஷ்சும் செனய்யும் நாகரிகம் தெரிந்தவர்கள் அல்ல. அவர்கள் கொடூரமான முறையில் பழிவாங்க நினைத்தார்கள்.

அன்றைக்கு அவர்கள் வைத்த தீ, உண்மையில் முடிவு எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆப்கானியர்களின் துயரமும் இராக்கியர்களின் வேதனையும் இதர பல நாடுகளது மக்களின் அவலமும் மேலும் மேலும் பயங்கரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை விட இன்னும் கொடூரமாக இராக்கை தாக்கினார் புஷ். இராக் மீதான போர்தான் மத்திய கிழக்குப் பிரதேசத்தையே நொறுக்கியது. இப்போதும் அமெரிக்காவின் இலக்கு இராக்கை முற்றாக அழிப்பதுதான்.

இராக்கில் படையெடுப்பு நடத்தியது தவறு என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டாலும் கூட, அவர்களது கண் முன்பே இராக்கை ஒரு மண் மேடாக அமெரிக்கா மாற்றிக் கொண்டிருப்பதை எந்தவிதத்திலும் தடுத்து நிறுத்த முயலவில்லை.

ஜனநாயகத்தைச் சொல்லி, அமைதியைச் சொல்லி, மனிதநேயத்தைச் சொல்லி புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாகச் சொல்லி மத்தியக் கிழக்குப் பிரதேசத்தை நொறுக்கினார்கள். ஆனால் கடைசி வரை அவர்கள் குறிப்பிட்ட எதுவும் அந்தப் பிரதேசத்திற்கு வந்து சேரவே இல்லை.

மனிதகுலத்திற்கு எதிரான கொடிய குற்றங்களுக்காக சிறைக் கொட்டடியில் தள்ளப்பட்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ், டெக்சாஸ் மாநகரத்தில் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். புஷ்களும், கிளிண்டன்களும் முன்னாள் ஜனாதிபதிகளும், அந்த ஜனாதிபதிகளின் மனைவிமார்களும் அமெரிக்காவை ரட்சிக்க வந்தவர்கள் போல தங்களைப் பாவித்துக் கொண்டு வலம் வருகிறார்கள்.

புஷ்சுக்குப் பிறகு ஒபாமா பிரச்சாரத்திற்கு வந்தார். அது 2008ம் ஆண்டு. அவர் உண்மையில் அமைதியின் தூதுவராக சித்தரிக்கப்பட்டார்.

ஆனால் உண்மையில் அவர் தனக்கு முந்தையவர்களை விஞ்சிவிட்டார். அவர்கள் செய்யாததையும் இவர் செய்தார். முந்தைய ஆட்சியாளர்களின் பாதையில் ஒபாமா இன்னும் வேகமாகச் சென்ற பின்னணியில், 2011ல் அரபு வசந்தம் என்று சொல்லப்படுகிற அரேபிய எழுச்சி பிரம்மாண்டமாக எழுந்தது.

அரபு நாடுகள் முழுவதிலும், ஏன் ஐரோப்பா, அமெரிக்காவிலும் கூட பெருமளவிலான மக்களின் கிளர்ச்சிகள் ஆவேசமாக எழுந்தன. முன்னெப்போதும் மத்தியக் கிழக்குப் பிரதேசம் இப்படிப்பட்ட எழுச்சியைப் பார்த்ததில்லை. அமெரிக்காவிலும் கூட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதிகாரம் கோலோச்சும் தெருக்கள் அனைத்தையும் மக்கள் ஆக்கிரமித்தார்கள்.

ஆனால் அந்த மாபெரும் போராட்டங்களில் வழிகாட்டும் கோட்பாடோ அல்லது தலைமையேற்கும் ஸ்தாபன ஏற்பாடோ இல்லாமல் இருந்ததை கண்டுபிடித்துவிட்டது ஏகாதிபத்தியம். படிப்படியாக அந்த மகத்தான இயக்கம் தன் நிலை இழந்தது. அடுத்த ஆண்டே தேர்தல் சர்க்கஸில் மீண்டும் பாரக் ஒபாமா தனது இலக்கை எட்டினார். மீண்டும் வந்தவுடன் உள்நாட்டில் தொழிலாளர்களின் முதுகெலும்பை முறித்தார். தொழிற்சங்கங்களை அழிக்க உறுதியேற்றார். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் இந்த பயங்கரத்தை எதிர்கொண்டனர்.

வெளிநாடுகளில், புஷ் விட்டுச்சென்ற பணியை அவரைவிட வேகமாக ஒபாமா அமுலாக்கினார். இவரது கைகளில் சிக்கி முதலில் பலியானது லிபியா. இன்றைக்கு இந்த உலகில் கொடூரமான ஆட்சியாளர்களிடம் ஒரு நாடு சிக்கியிருக்கிறது என்றால் அது லிபியாதான். அங்கிருந்து தப்பித்து ஆயிரமாயிரமாய் அப்பாவி மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி கடல்வழி ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். காற்றுவீசினால், அலை அடித்தால் அதிலேயே படகு கவிழ்ந்து மடிகிறார்கள்.

ஒபாமா, தனது வெளியுறவு அமைச்சர் ஹிலாரியுடன் சேர்ந்துகொண்டு எகிப்தையும் குறி வைத்தார். அதன் விளைவு, இன்றைக்கு எகிப்து மீண்டும் ராணுவ சர்வாதிகாரியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. அரேபியப் பிரதேசத்தில் ஒரு கொடூரமான அடக்குமுறை அரசாங்கமாக எகிப்து மாறியுள்ளது. எகிப்தில் நடப்பதையெல்லாம் அமெரிக்க ராணுவமே நடத்திக் கொண்டிருக்கிறது. இரு நாட்டு ராணுவங்களின் உறவு இன்னும் ஆழமாக மாறியிருக்கிறது.

சிரியாவைப் பற்றி நாம் பேசவே வேண்டாம். அது சொல்ல முடியாத பயங்கரம். அங்கு நடப்பது ஈவிரக்கமற்ற கொடூரம். எழுத்தில் வடிக்க முடியாத பேரழிவு.

அங்கு ரத்த ஆறு ஓடச் செய்துகொண்டிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டத்திற்கு, அவர்கள் இந்த அளவிற்கு அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கு ஒபாமாவின் தயக்கமே காரணம் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் மெக்கெயினும், லின்ட்சே கிராகமும் குற்றச்சாட்டுகிறார்கள். அதற்குப் பரிகாரமாக அவர்கள் சொல்வது என்னவென்றால் சிரியாவையே அழித்துவிடு என்பதுதான். அந்த அளவிற்கு ஒபாமாவுடன் நாடாளுமன்றத்தில் பணிபுரிகிறவர்களும் பயங்கர போர் வெறியர்கள்.

புஷ் செய்யாமல் விட்டதையெல்லாம் ஒபாமா செய்தார்; ஒபாமா செய்யாமல் விட்டுவிட்டதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் கருதுவதையெல்லாம் செய்வதற்கு அடுத்து தயாராகிக் கொண்டிருக்கிறார் ஹிலாரி.

மத்திய கிழக்கு மட்டுமல்ல… எங்கும்… உலகெங்கும் பற்றி எரிய வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற இவர்களது பயங்கரத்தின் அடுத்த கட்டம், ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதான போர் என்பதே ஆகும்.

“நீ எனக்கு அடிமை; இல்லையென்றால் எனக்கு எதிரி.”

இதுவே அடுத்த வரப்போகும் ஹிலாரியின் இலக்கு.

-தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

(கட்டுரையாளர், அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தின் அரசியல் தத்துவப் பேராசிரியர். அமெரிக்காவில் ஏகாதிபத்திய அரசியலைச் சாடி எழுதிவரும் கல்வியாளர்களில் ஒருவர்.)

Related Posts