பிற

அப்படி என்னதான் சலுகை கொடுத்துவிட்டது அரசாங்கம்? …

 • அரியநாயகம்

நமது நாட்டில் அரசு என்பது ஜனநாயகப்பூர்வமாக மக்களால் வாக்களிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு இருக்கும் எண்ணம், நமது மக்கள் ஜனநாயக அரசு என்பது மக்களால், மக்களுக்காக நடத்தப்படுகிறது என்பது.

இந்த அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் மக்களுக்காகத் தான் நடைபெறுகிறதா என்பதை அலசுவதுதான் இப்பதிவின் நோக்கம். ஆனால் இந்த அரசு பெரும்பான்மையான அடித்தட்டு மக்களுக்காகச் செயல்படுகிறதா? அல்லது ஒரு சிறுபகுதி பெரும் முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படுகிறதா? என்பதைப் பார்ப்போம். தயவு செய்து இப்பதிவைப் பொறுமையாக வாசித்து விட்டு உங்கள் எண்ணத்தைப் பகிருங்கள்.

அ) ஓர் ஆண்டிற்கான நமது மத்திய அரசின் செலவினம்

நமது மத்திய அரசின் 2014-2015 ம் ஆண்டின் திட்டமிட்டச் (PpPLAN EXPENDITURE) செலவு ரூ. 4,67,000 கோடிகள், திட்டமிடாச் (NON-PLAN EXPENDITURE)செலவு ரூ. 12,13,000 கோடிகள், ஆக மொத்தம் ஒரு ஆண்டிற்கான நமது மத்திய அரசின் செலவினம் என்பது ரூ. 16,81,000 கோடி தான்.

ஆ-1,   பதினேழு (17)  தனி நபர்களின் வரிப்பாக்கி மட்டும் 2.14 லட்சம் கோடி ரூபாய்..!!
வரிபாக்கி சம்பந்தமாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்து பூர்வமாக அளிக்கப்பட்ட பதில் ஒன்றில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா அவர்கள் கீழ்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 2015 அன்று வரை மொத்த வரிபாக்கி 8 லட்சத்து 27ஆயிரத்து 680 கோடி ரூபாயாகும்.

 • 17 தனி நபர்கள் மட்டும் வைத்திருக்கும் வரிபாக்கி 2.14 லட்சம் கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யார், யார் என்பதை தெரிவிக்க  மறுத்து விட்டார். பெயரைக்கூட வெளியிடாத இந்த அரசுகள்தான் கறுப்புப் பணத்தை வெளிக்கொணரப் போகிறார்களாம்.
 •  35 நிறுவனங்கள் மட்டும் தர வேண்டிய வரிப்பாக்கியின் அளவு 90 ஆயிரத்து 568 கோடி ரூபாய் ஆகும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
 • ரூபாய் 10 கோடிக்கு மேல் வரிபாக்கி வைத்திருப்பவர்கள் 4,692 பேர்களாகும்.

ஆ-2,  ஒவ்வொரு வருடமும் வராக்கடன்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்கள்

ரிசர்வ் பேங்க் அளித்துள்ள தகவல்:- ஐந்து ஆண்டுகளில் அரசு வஜா (தள்ளுபடி) செய்த வராக்கடன்களின் மதிப்பு ரூ.1,06,170 கோடிகள் ஆகும்.

2011-12 –ல் ரூ.20,752 கோடிகள்.

2012-13 –ல் ரூ.32,992 கோடிகள்.

2013-14 –ல் ரூ.42,447 கோடிகள்.

இதில் ஒரு கோடிக்குமேல் பாக்கி வைத்திருக்கும் கடன்தாரர்கள் எத்தனை பேர் என்ற தகவல் ரிசர்வங்கியிடமே இல்லையாம்.

ஆ-3,  தனது வரிவருவாயில் நமது மத்திய அரசு விட்டுக் கொடுத்தது.

மத்திய அரசு தனது வரிவருவாயில் விட்டுக் கொடுத்தது எவ்வளவு என்பதைக் கீழ்கண்ட அட்டவணை விளக்கும். (இத் தகவலானது நமது மத்திய அரசால் பட்ஜெட்டின் போதுவெளியிடப்படும்(annexure 12) அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.)

அட்டவணையில் கூறப்பட்டுள்ள தொகை ரூபாய் கோடியில்

1.நேரடி வரியில் (கார்ப்ரேட் வருமானவரியில்) விட்டுக் கொடுத்தது.

எண் வரிகள் 2013-14(காங்கிரஸ்) 2014-15 (பா.ஜ.க)
1 Corporate வருமான வரி 57,793.0  62,398.6

 

 1. மறைமுக வரியில் விட்டுக் கொடுத்தது.
எண் வரிகள் 2013-14 (காங்கிரஸ்) 2014-15 (பா.ஜ.க)
1 கலால் வரி 1,96,223 1,84,764
2. சுங்க வரி 2,60,714 3,01,688
மொத்தம் 4,56,937 4,86,452

2013-14ம் ஆண்டில் நமது மத்திய அரசு (காங்கிரஸ்) வரி வருவாயில் விட்டுக் கொடுத்தது ரூ.5,49,984.1 கோடி (அதாவது ஐந்து லட்சத்து, நாற்பத்தியொன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தினாலு கோடி ரூபாய்கள).

தற்போதைய மத்திய அரசு ( நமது மோடி அரசு) 2014-15ம் ஆண்டில் தனது வரி வருவாயில் விட்டுக் கொடுத்தது ரூ.5,89,285.2 கோடி (அதாவது ஐந்து லட்சத்து,எண்பத்தியொன்பதாயிரத்து இரு நூற்றுஎன்பத்தி ஐந்து கோடி ரூபாய்கள்).

கடந்த 6 வருடங்களில் நமது மத்திய அரசுகள் வரிவருவாயில் விட்டுக் கொடுத்தது ரூ. 31 லட்சத்து 88 ஆயிரத்து 614 கோடிகள், இது கிட்டத்தட்ட இந்த வருட பட்ஜெட்டை விட இரு மடங்காகும்.

ஆ-4,  தங்கம் மற்றும் வைரம் இறக்குமதி வரியில் மட்டும் மத்திய அரசு விட்டுக்கொடுத்தது

நமது மத்திய அரசுகள் இறக்குமதி வரியில் வைரம் மற்றும் தங்கத்திற்கு விதித்த வரியில் மட்டுமே விட்டுக் கொடுத்தது கீழ்கண்ட அட்டவணை விளக்கும்.

                        பொருட்கள் 2012-13 2013-14 (காங்கிரஸ்) 2014-15 (பா.ஜ.க)
1.வைரம் மற்றும் தங்கம் (71) 61,676 கோடி ரூ. (21%) 48,635 கோடி ரூ.

(16%)

75,592 கோடி ரூ.

(25%)

நமது அரசுகள் இறக்குமதி வரியில் வசூலிக்காமல் விட்டுக் கொடுத்ததில் சுமார் 25%  தங்கம் மற்றும் வைரத்திற்கே ஆகும்.

ஆனால் விவசாய உரத்திற்கான வரியில் விட்டுக் கொடுத்தது 2% கூட கிடையாது. மேலும் மருந்துகளுக்கான வரியில் விட்டுக் கொடுத்தது 0.3 சதவிதம் தான். இதிலிருந்து இந்த அரசுகள் யாருக்காக நடைபெறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் 2015-2016 ம் ஆண்டிற்கானப் பட்ஜெட்டில் சலுகை

 • கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 • வெல்த் டேக்ஸ் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

(குறிப்பு இங்கு நாம் கறுப்புப் பணம் சம்பந்தமான விவரங்களுக்குள் போகவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அது இன்னும் அனுமார் வால் போல விரியும். உதாரணமாக பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தை வெள்ளையாக்குவதில், ‘மொரீசியஸ் வழியாக வரும் முதலீடுகள்’ முக்கியப் பங்கு வகிக்கின்றன. )

இ. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேளாண் அமைப்பு அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உணவு வேளாண் அமைப்பு, “2015ல் உலக அளவில் உணவு பாதுகாப்பு நிலை” என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் உலகிலேயே சத்துணவுக் குறைவுடன் இருக்கும் மக்கள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. அதாவது 19 கோடியே 46 லட்சம் மக்கள் நமது நாட்டில் இருப்பதாகவும், உலகிலுள்ள சத்துணவுக் குறைவாக இருக்கும் நால்வரில் ஒருவர் நமது இந்தியாவில் தான் உள்ளனர் என்ற உண்மையையும் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நமது இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசத்தைக் காட்டிலும் பின் தங்கியுள்ளது என்று அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது. மேலும் உலகத் தாய்மார்கள் குறித்த அறிக்கையில் நம் நாடு 140 வது இடத்தில் உள்ளது.

நமது இந்தியாவில் 1000 குழந்தைகளில் 52.7 குழந்தைகள் 5 வயது பூர்த்தியாவதற்குள் இறந்து விடுகின்றன. மேலும் இந்த அறிக்கையில் பொதுத்துறை சுகாதார நிறுவனங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லையென்றும், சுகாதார வசதி தேவைபடுவோர்க்கு அதுப் போய் சேர்வதில்லை எனவும் குறிக்கபட்டுள்ளது.

இது தான் நமது நாட்டின் பெரும்பான்மையான அடித்தட்டு வாழ்க்கை நிலை. ஆனால் பெரும் முதலாளிகளுக்குச் சலுகைகளை அள்ளி, அள்ளி வழங்கும் நமது மத்திய அரசு சாதாரண அடித்தட்டுப் பெரும்பான்மையான மக்களுக்கானத் திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்கீடு செய்கிறது என்பதைப் பார்த்தால் உண்மை நிலை விளங்கும்.

ஈ) மதிய உணவுத் திட்டத்தில் நமது மத்திய அரசு வெட்டியது

இந்தியா முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11.6 இலட்சம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் எட்டாம் வகுப்பு வரைப் படிக்கும் சுமார் 10 கோடி மாணவ-மாணவிகள் பயன் பெற்றுவருகின்றனர். இதனால் வறுமையின் காரணமாக மாணவர்கள் இடையிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்துவது பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலும், அதிக நாட்கள் வருவதையும் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே நமது நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. இந்த மதிய உணவுத் திட்டமானது குறைந்த பட்ச ஊட்டச்சத்து வழங்கும் வகையில் அமைந்திருந்தது என்பதை பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஆனால் பாஜக அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் மதிய உணவுத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை 13,000 கோடியிலிருந்து, 9,000 கோடியாகக் குறைத்துள்ளது.

மேலும் மதிய உணவுத் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை முழுவதுமாக நீக்கியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வினால் மதிய உணவுத் திட்டத்திற்கானச் செலவுக் கூடிக் கொண்டிருக்கும் போது மத்திய அரசின் இந்த நடவடிக்கை மதிய உணவுத் திட்டத்தின் தரத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மாநில அரசுகளின் தலையில் மேலும் சுமையை ஏற்றும். (சமையல் எரிவாயுவிற்கு மானியம் என்பதே ஒரு புனைவு- அதன் மூலம் அரசுக்கும் கார்ப்ரேட்களுக்கும் வரவு தான் அதிகம்- ஆதாரத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு அரசியல் பதிவைப் பார்க்கவும்.)

 • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம் எனும் அங்கன்வாடி திட்டத்திற்கான ஒதுக்கீடு 18,000 கோடி ரூபாயிலிருந்து 8000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
 • நமது மோடி அரசு சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.10,000 கோடி ரூபாயைக் குறைவாக ஒதுக்கியுள்ளது.  2014-15 ம் ஆண்டு பட்ஜெட்டில் 21,100 கோடி ரூபாயாக இருந்தது, 2015-16 ம் ஆண்டு பட்ஜெட்டில் 10,286 கோடியாக, அதாவது ஒதுக்கீட்டைப் பாதியாக வெட்டியுள்ளது.
 • மேலும் அடிப்படைக் கல்விக்கான ஒதுக்கீடும் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 1. சந்தைப்பொருளாதாரமும், திட்டமிட்டப் பொருளாதாரமும்

திட்டமிட்டப் பொருளாதாரத்தில் பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை தன் கட்டுக்குள் வைத்திருந்தது.

ஆனால் சந்தைப் பொருளாதாரத்தில் இவை அணைத்தும், திறந்து விடப்பட்டு, அத்தியாவாசியப் பொருட்களின் மீதான வரியை மேன்மேலும் உயர்த்தி, ஆடம்பர மற்றும் எலக்ட்ரானிக்ஃஸ் பொருட்களின் மீதான வரிகளைப் படிப்படியாகக் குறைத்தும் வந்துள்ளது. நமது பூமியில் கிடைக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு  போனறவற்றிற்கும் சர்வதேச விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் நமது இந்திய தொழிலாளர்களுக்கானச் சம்பளம் மற்றும் போனஸ் நிர்ணயம் மட்டும் அடிமாட்டு விலை நிர்ணயம். மேலும் நமது அரசுகள் வறுமைக் கோடு நிர்ணயம் செய்வதில் இன்றைய வாழ்க்கையின் யதார்தத்திற்குப் பொருந்தாத அடிமட்ட அளவில் வருமான  உச்ச வரம்பு நிர்ணயித்தது. சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையே போட்டி  என்பதை சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்கானப் போட்டியாக மட்டும் சுருக்கிக் கொண்டு, பெரும் முதலாளிகளுக்கு அபரீதமான (கொள்ளை) லாபத்திற்கு உத்திரவாதமளிக்கின்ற முதலாளித்துவ அரசு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

2.மானியமும், ஊக்குவிப்புச் செலவினமும்

அத்தியாவாசியப் பொருட்களின் மீது விதித்துள்ள மறைமுக (கலால் வரி, தொழில் வரி, மதிப்புக் கூட்டு வரி) வரியின் மூலம் நமது அரசு வருவாய் ஈட்டுகிறது. அதாவது பெரும்பான்மையான அடித்தட்டு மக்களும் அப்பொருட்களை வாங்குவதன் மூலம் அரசு தன் கஜானாவை நிரப்புகிறது. அதன் ஒரு பகுதியை மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்குச் செலவிடும் போது அதற்கு “மானியம்“ என்று பெயரிட்டுள்ளது. ஆனால் பெரும் முதலாளிகளுக்குச் செலவிடும் போது அதனை தொழில் “ஊக்குவிப்புச் செலவினம்” என்று அழைக்கிறது அரசு.  மக்களின் பணத்தை மக்களுக்குக் கொடுத்தால் ஏதோ பிச்சையிடுவது போலும் சித்தரிக்கின்றனர்.

உ. நமக்குத் தேவையான பார்வை

நாம் எப்பொழுது பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் வாழ்நிலையிலிருந்து அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் பார்ப்பது தான் உண்மையான ஜனநாயகம் மலர வழிவகுக்கும்.

மக்கள் அனைவரும் சமமற்ற முறையில், சமூகம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் ஒரு சமூகத்தில் அத்தியாவாசியப் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு என்பதே ஒரு ஏமாற்று வேலை.

உதாரணத்திற்கு ஒரு கண் இல்லாதவர், ஒரு கால் இல்லாதவர், ஒரு கையில்லாதவர், இரு காலும் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என பற்பலக் குறைபாடுகள் உள்ளவர்களை ஒரு திடகாத்திரமான உடல்நிலை இருப்பவருடன் சமமாகப் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்காதோ, அதே போல் தான் அனைத்துப் பொருட்களுக்கும், அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான வரி என்பது எப்படிச் சரியாக இருக்கும்.

ஆனால் நமது அரசுகள் ஒருபடி மேலே போய் திடகாத்திரமான ஆளுக்குச் சலுகைகளை மேலும், மேலும் வழங்கி, அதன் சுமையை குறைபாடுள்ளவர்கள் மீது சுமத்துகிறது. அதாவது நமது அரசுகள் அடித்தட்டு மக்களை மேலும், மேலும் சுரண்டி, பெரும் முதலாளிகள் தொப்பையை வளர்க்க முயற்சிப்பது எந்தவிதத்தில் நியாயமாகும். இதனை நலத்திட்ட அரசு என்றோ மக்களுக்காக செயல்படும் அரசு என்று கூறமுடியுமா?

 

 

 

 

Related Posts