அரசியல்

அன்பிற்கினிய வசந்தா, எனக்களிக்கப்பட்ட தீர்ப்பும் சிறையும் இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம்!

அன்பிற்கினிய வசந்தா,

பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனது பிறந்தநாளன்று இந்தக் கடிதம் உன்னை வந்தடையும் என நம்புகிறேன். நான் இல்லாமல் இந்த பிறந்தநாள் உனக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்காது எனத் தெரியும். இந்த அரசு தான் நம்மைப் பிரித்திருக்கிறது. இந்த அரசு நம்மை அழித்துவிடவும் முடிவு செய்திருக்கிறது. நமது 26 வருட திருமண வாழ்க்கையில், நாம் இருவருமே நமது தனிப்பட்ட செளகரியம் அல்லது வளர்ச்சியைக் குறித்தெல்லாம் சிந்தித்ததில்லை. நமது 36 வருட சேர்ந்திருத்தலும், வாழ்வும் சமூகத்திற்கானதாகவே இருந்திருக்கிறது. இந்த நேரத்தில், மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் அத்தகைய வாழ்வையே நீ தொடரவேண்டும் என்பதையே விரும்புகிறேன். எனது சிறைவாசமும், நான் இல்லாத வெறுமையும் உனது நம்பிக்கையை எந்த விதத்திலும் குறைத்துவிடக்கூடாது. இந்த உனது பிறந்தநாளில், நம்மீது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் இந்த வன்முறையையும், குரூரத்தையும் எதிர்கொள்வதற்கு நீ தயாராக இருக்கவேண்டும்.

எனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பும், சிறைவாசமும் நிச்சயமாக நமக்கு அவமானமில்லை. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு அவமானம். மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை, தலித்துகள், பழங்குடியின மக்கள் மற்றும் ஏதுமற்றுவிடப்பட்ட சிறுபான்மையினர்களின் உரிமைகள், சமத்துவத்திற்கானது நமது வாழ்க்கை. நமது வாழ்வின் மதிப்பை தொடர்ந்து உயர்த்துவோம். உண்மையான ஜனநாயகத்தை நோக்கியது நமது செயல்பாடுகள்.

நமது நம்பிக்கையை சிதைப்பதற்கு அரசு முயற்சித்தாலும், நாம் கனவு காண்பதை அவர்கள் எந்த விதத்திலும் நிறுத்திவிடமுடியாது. என்னை சிறைப்படுத்தியே வைத்திருப்பதற்காக அவர்கள் போடும் பொய் வழக்கு, புனையப்பட்ட தீர்ப்பு, இன்னும் பல முறைகேடான வழிகள் உன்னை எந்த விதத்திலும் நம்பிக்கை இழக்க வைக்கவோ, உடைத்துவிடவோ கூடாது. என்னைப் பொறுத்தவரை, உனது பிறந்தநாள் முக்கியமானது. எப்பொழுதையும் போலவே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.

” எளிய மக்களின் உரிமைகளுக்காக, எளிய வழிகளில் போராடும் சாதாரணமானவர்கள் நாம். நமது நம்பிக்கைகளையும், அன்பையும், கனவுகளையும் ஏன் இத்தனை பிரமாண்டமான அரசு ஆபத்தில் வைத்திருக்கிறது? யாருக்காவது நாம் தீங்கிழைத்துவிட்டோமா?

ஏன் நமது வாழ்வில் இத்தனை அத்துமீறல்? ஏன் நமது கனவுகளும், நம்பிக்கைகளும் சிதைக்கப்படுகின்றன? நமது கனவுகளின் மீது நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகளை எதிர்த்து நமது வாழ்க்கையை நம்மால் வாழமுடியுமா? இந்த நேரத்தில் உனக்கும், எனக்கும் எது பலத்தை அளிக்கமுடியும்?”

இந்த பிறந்தநாளில் உனக்கு நான் எதைத்தர முடியும்? என்னிடம் தருவதற்கு எதுவுமில்லை. நிலையான அதே அன்பைத்தவிர.. பள்ளி நாட்களில் நாம் சந்தித்தபோது நம்மிடம் உருவான அதே அன்பு இப்பொழுதும் இருக்கிறது அப்படியே. இந்த வாழ்க்கை முழுவதற்குமான அன்பை நீ நிறையவே அளித்திருக்கிறாய். இளம்பருவ காதல் நாட்களில் நாம் கண்ட கனவுகள் இன்னும் நிலைத்திருக்கின்றன.

எனது சுதந்திரத்திற்காக போராடுவதற்கு நீ தனித்து விடப்பட்டிருக்கிறாய். இருண்டுவிட்ட இந்த நாட்களில் நம்பிக்கைகளையும், கனவுகளையும் மட்டும் இழந்துவிடாதே.

இது வெற்று வார்த்தைகள் கிடையாது. அலங்காரத்திற்காக, சமாதானப்படுத்துவதற்காக எழுதப்படும் வார்த்தைகளல்ல. நமது நம்பிக்கைகள் வெற்று காலியிடமல்ல என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது. நமது நம்பிக்கைகள், சிந்தாந்த ரீதியாக வலுவிழந்ததில்லை. நாம் வெல்வோம்.

சிறையின் சுவற்றுக்குப் பின்னாலிருந்து இந்த பிறந்தநாளில் உன்னை வாழ்த்துகிறேன். உனது அன்பிற்கு மறுபடியும், நானும் எனது வாழ்வும் சமர்ப்பணம். உனதன்பின் காரணமாகவே, இந்த கனவுகளையும், நம்பிக்கையையும் துணிவோடு தாங்கியிருக்கிறேன். கலங்கரை விளக்கமாய் நீ அளிக்கும் அன்பால்தான் மக்களுக்கான வாழ்வு நீள்கிறது.

அன்புடன் உன்,

சாய்

(GN Saibaba, Delhi University professor)

Related Posts