இதழ்கள் இளைஞர் முழக்கம்

அனைவருக்கும் வேலை, கல்வி …தாரக மந்திரமாய்.- இரா.வேல்முருகன்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அடிப்படை கோரிக்கைகளான அனைவருக்கும் வேலை, கல்வி மற்றும் சமூக பிரச்சனைகளுக்காக ஏராளமான இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. சோசலிஸ்ட் இளைஞர் அமைப்பாக செயல்பட்ட போது தமிழக அரசே வேலை கொடு அல்லது வேலையில்லா கால நிவாரணம் கொடு, புதிய வேலை வாய்ப்பை உருவாக்கு, அரசு காலிப்பணியிடங்களை நிரப்பு, கல்வியை அனைவருக்கும் இலவசமாக விஞ்ஞானப்பூர்வமாக வழங்கிடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மிகப்பெரிய சைக்கிள் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோயம்புத்தூர் விளாங்குறிச்சியிலிருந்து சென்னை வரை மாநிலத்தலைவர் தோழர். கே.சி.கருணாகரன் தலைமையிலும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து சென்னை வரை நடந்த பயணத்திற்கு மாநில செயலாளர் தோழர்.நன்மாறன் தலைமையிலும் நடைபெற்றது.

இந்த சைக்கிள் பிரச்சாரப் பயணக்குழு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் வழியாக சென்னையை நோக்கி வரவர இந்த கோரிக்கைகள் மீது தமிழக இளைஞர்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டது. இது தமிழகம் முழுவதும் பேசக்கூடிய அரசியலாக மாறியது. இதன் விளைவு அடுத்து நடந்த தமிழக பொதுத் தேர்தலில் அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையாக மாறவேண்டிய கட்டாயமாகியது. இந்த சைக்கிள் பிரச்சாரப் பயணத்தின் விளைவு அடுத்து வந்த அரசாங்கம் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவும், வேலையில்லாத காலத்தில் பத்தாவது, பன்னிரெண்டாவது, இளங்கலை, முதுகலை என முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு மூப்படைந்தவர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்த சைக்கிள் பயணம் தான் தமிழக அரசியலில் முதன்முறையாக அடிப்படையான கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம் முழுவதும் சைக்கிள பயணம் நடந்தது. இந்த சைக்கிள் பயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பயணம் முடிந்த பிறகு தான் 1981 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த மாநாட்டில் சோசலிஸ்ட் இளைஞர் அமைப்பு என்ற பெயரை மாற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாகவும் வெள்ளை கலரில் ஐந்து முனை சிகப்பு நட்சத்திரம் பொரித்த கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாக மாறிய பிறகு தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் அனைவருக்கும் வேலை, கல்வி என்ற கோரிக்கைக்கு புதிய பரிமாணம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வாலிபர் சங்கத்தின் அடுத்து அடுத்து வந்த தலைமை இந்த கோரிக்கையை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் கொண்டு செல்லும் வகையில் பேரணி, கண்டன கூட்டம், முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் இயக்கமாக கொண்டு சென்றதோடு இல்லாமல் மீண்டும் சைக்கிள் பிரச்சாரப் பயணம் நடத்தினார்கள். புதிய வேலை வாய்ப்பை உருவாக்கு, அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடு, தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்து அனைவருக்கும் இலவசமான கல்வியை வழங்கிடு, உணவுக்கான வேலை திட்டத்தை உருவாக்கிடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு சைக்கிள் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோயம்புத்தூரிலிருந்து மாநில செயலாளர் தோழர்.டி.ரவீந்திரன் தலைமையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மாநிலத்தலைவர் தோழர்.அ.பாக்கியம் தலைமையிலும் சென்னை நோக்கி சைக்கிள் பிரச்சார பயணமாக நடைபெற்றது.

இந்த சைக்கிள் பயணம் முந்தைய சைக்கிள் பிரச்சாரப் பயணக்குழு உருவாக்கிய தாக்கத்தை போன்றே இதுவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பயணக்குழு சென்னையில் முடியும் போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அ.தி.மு.க அரசு பஸ்கட்டனத்தை கடுமையாக உயர்த்தியது அதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மறியல் நடைபெற்று மாநில செயலாளர் உள்ளிட்டு ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 888 என்ற வேலைநியமனத்தடை சட்டத்தை ஜெயலலிதா அரசாங்கம் கொண்டுவந்தபோது அதை எதிர்த்து தமிழகம் முழவதும் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடைபெற்றது இந்தப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். வாலிபர் சங்கத்தின் இந்தப் போராட்டத்தின் விளைவு அடுத்து வந்த தி.மு.க அரசு வேலை நியமனத்தடை சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயமேற்பட்டது.

1997 ஆம் ஆண்டு நடந்த மாநில மாநாட்டில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கான போராட்டம் ஆகஸ்ட் 7 அன்று தமிழகம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் சென்னையில் நடந்த மறியலில் மாநில செயலாளர் தோழர்.எஸ்.கே.மகேந்திரன், மாநிலப் பொருளாளர் சி.திருவேட்டை உள்ளிட்டு 57 தோழர்கள் கைது செய்யப்பட்டு 15 மற்றும் 22 நாட்கள் சிறையிலிருந்தனர்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்டிருந்த வறட்சி, வேலையின்மை போன்ற பிரச்சனையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கலவரம் சாதிய மோதலை தடுக்க பிரத்யேகமாக தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க ஏதுவான சேது சமுத்திர கால்வாய்திட்டத்தை உடனடியாக அமல்படுத்து, தொழில் வளர்ச்சியை உருவாக்கு, கிராமப்புற மக்களுக்கு உணவுக்கான வேலை திட்டத்தை உருவாக்கு என கயத்தாறில் துவங்கி பாளையங்கோட்டை வரை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற நடைப்பயணம்.

2005 ஆம் ஆண்டு அனைவருக்கும் சமூக பாதுகாப்பான வேலை வழங்கு, மத்திய அரசே உடனடியாக சேது சமுதிர கால்வாய் திட்டத்தை நிறைவேற்று, அனைவருக்கும் சமமான இலவசமான சமச்சீர் கல்வியை வழங்கு, தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்து, அனைவருக்கும் உணவுக்கான வேலை திட்டத்தை நிறைவேற்று. நவீன இலவச சுகாதார வசதிகளை உறுதிப்படுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 16 அன்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல மாவட்டங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர் .

மேற்கண்ட அதே கோரிக்கைகளை முன்வைத்து 2007 ஆம் ஆண்டு மதுரையில் இருந்து தோழர்.எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் இரமேஸ்வரம் நோக்கியும் விருதுநகரில் இருந்து இராமேஸ்வரம் வரை தோழர்.எஸ்.கண்ணன் அவர்கள் தலைமையிலும், தூத்துக்குடியிலிருந்து இராமேஸ்வரம் வரை தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு அவர்கள் தலைமையிலும், சிவகங்கையிலிருந்து இராமேஸ்வரம் வரை தோழர்.இரா.வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் சைக்கிள் பயணம் நடைபெற்றது. இதன் முடிவாக பிரம்மாண்டமான பொதுக்கூட்டமும் இதன் தொடர்ச்சியாக தலைநகர் டெல்லியில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பாக ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்முழக்கப் போராட்டம் உண்ணாவிரதம் நடத்தி நிதித்துறை மந்திரி பிரனாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ச்சியாக நாம் கையில் எடுத்து போராடியதன் விளைவு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு சேது கால்வாய் திட்டத்தை தூசி தட்டி ஆய்வுக்கு எடுக்கவைத்தது.

இதே போன்று 2008 ஆம் ஆண்டு தமிழகத்தின் மூன்று முனைகளில் இருந்து சென்னை நோக்கி சைக்கிள் பயணம் நடத்தப்பட்டது. அனைவருக்கும் சமூக பாதுகாப்பான வேலை வழங்கு, மத்திய அரசே உடனடியாக சேது சமுதிர கால்வாய் திட்டத்தை நிறைவேற்று, அனைவருக்கும் சமமான இலவசமான சமச்சீர் கல்வியை வழங்கு, தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்து, அனைவருக்கும் நவீன இலவச சுகாதார வசதிகளை உறுதிப்படுத்து போன்ற கோரிக்கைகள் முன்வைத்து நடத்தப்பட்டது. கோயம்புத்தூரில் இருந்து மாநிலத்தலைவர் தோழர்.எஸ்.ஜி.ரமேஷ்பாபு அவர்கள் தலைமையிலும், கன்னியாகுமரியில் இருந்து மாநிலச்செயலாளர் தோழர்.எஸ்.கண்ணன் அவர்கள் தலைமையிலும், இராமேஸ்வரத்திலிருந்து தோழர்.இரா.வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் சைக்கிள்பயணம் துவங்கி இறுதியாக சென்னை வந்தடைந்தது. இந்த போராட்டத்தின் விளைவு இதே காலகட்டத்தில் இந்திய மாணவர் சங்கமும் தொடர்ச்சியாக வலுவாக போராட்டம் நடத்தியது இதன் விளைவு நாம் சைக்கிள்பயணமாக சென்னை வருவதற்கு முன்னால் சமச்சீர் கல்வி நடைமுறையில் கொண்டுவர அரசு முடிவெடுத்தது.

மூன்று முனைகளில். இருந்து நாம் நடத்திய சைக்கிள பயணம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது, அரசின் மீது மக்களுக்கு கோபத்தை நம்மால் உருவாக்க முடிந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் இணைத்து இந்த சைக்கிள் பயணம் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

அனைவருக்கும் சமூக பாதுகாப்பான வேலை வழங்கு, அரசு கட்டமைப்பை வலுப்படுத்தி அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு, நூறு நாள் வேலை சட்டத்தில் நாட்களையும், கூலியையும் உயர்த்தி வழங்கிடு, புதிய தொழில் துவங்கிடு, தனியார்துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி, அனைவருக்கும் முழுமையான இலவசமான சமச்சீர் கல்வியை வழங்கிடு, கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்திடு, தனியார் பள்ளியில் கட்டணத்தை ஒழுங்குபடுத்திடு, கனிம வளங்களை பாதுகாத்திடு, சாராயம், ஊழல் இல்லாத அரசை உருவாக்குவோம் என்ற கோரிக்கைகள் முன் வைத்து தமிழகத்தின் 8 முனைகளிலிருந்து திருச்சியை நோக்கி 22 நாட்கள் 5000 கி.மீ நடைபயணம் நடத்தப்பட்டது . இது தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இயக்கமாகும். இதுவரை வரலாற்றில் நடத்தப்பட்ட நடைப்பயணத்தில் இரண்டாவது பெரிய நடைபயணமாகும். இந்த நடைப்பயணத்தின் போது சுமார் ரூ. 5 லட்சம் வரை பொதுமக்கள் மனமுவந்து நிதியாக அளித்தனர்.1 லட்சம் பிரசுரமும், 10 ஆயிரம் இளைஞர் முழக்கமும் பிரச்சாரமாக மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டது. இந்த நடைபயணம் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வழியாக லட்சக்கணக்கான மக்களிடத்திலும் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படி நமது அடிப்படை கோரிக்கைகளான வேலை, கல்வி, சுகாதாரத்திற்கான இயக்கம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மேற்கண்ட இந்த கோரிக்கைகளுக்காக பல முறை சட்டமன்றம் நோக்கிப்பேரணி, முற்றுகை என பல போராட்டங்கள் நடத்தப்பட்டன 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்றும், அதேபோன்று 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2010 ஆம் ஆண்டு மே மாதத்திலும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் தொடர்ச்சியாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் நாம் நடத்தும் போதெல்லாம் வேலைகுறித்து ஏதாவது ஒரு அறிவிப்பை அரசாங்கம் அறிவித்து மக்களிடம் திசை திருப்பல் வேலையை செய்வது என்பது வாடிக்கையாக இருக்கும்.

ஆனால் வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்ல வேலைக்கான கோரிக்கை என்றால் அது வாலிபர் சங்கத்தின் கோரிக்கை என்ற உணர்வு ஏற்படும் வகையில் இந்த போராட்டத்தை நாம் தொடர்ச்சியாக நடத்துகிறோம். வேலைக்கான இயக்கம் என்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான் என்கிற அடையாளத்தை பெற்றிருக்கிறோம். இந்த அடையாளத்தை மாற்றி இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்த அமைப்பு என்ற பெருமை நமக்கு மட்டுமே இருக்கும். ஏனென்றால்    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மக்களையும் இளைஞர்களையும் நேசிக்கும் அமைப்பு.

இரா.வேல்முருகன்

Related Posts