இதழ்கள் இளைஞர் முழக்கம்

அந்நிய மூலதனம் : எள்ளளவு வரத்தும் இமய அளவு இழப்பும் …

.கனகராஜ்

அவர்கள் எப்போதும் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள். இதைச் செய்துவிட்டால் இந்தியா சுவிட்சமாகிவிடும் என்று பறைசாற்றுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒன்றை புதிதாய் செய்யும் போது இப்படித்தான் பேசுகிறார்கள். ஊடகங்களும் அறிவு ஜீவிகள் எனப்படுபவர்களும் இதற்கு தகுந்தவாறு கட்டமைக்கப்படுகிறார்கள். அதன்பிறகு மக்களிடம் அந்தக் கருத்தை வலுவாக விதைக்கிறார்கள். மக்களும் அதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு பலன் கிடைக்கும் வரை அதைத் தொடர்கிறார்கள். அது அம்பலப்பட்டுப் போகும்போது வேறொன்றிற்குத் தாவுகிறார்கள்.

இப்போதும் அப்படித்தான். அந்நிய நேரடி மூலதனம் அனைத்துக்குமான தீர்வாக முன்வைக்கப்படுகிறது.

அது வேறவாய் :

வங்கிகள் தேசியமயமாக்கப்n பட்டபோது, பொதுத் துறைகள் கட்டமைக்கப் பட்டபோது சோசலிசமே கட்டமைக்கப்பட்டதாக அவர்கள் பீற்றித் திரிந்தார்கள். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்ற ஒரு சில கட்சிகளும், சில அறிவு ஜீவிகளும் மட்டுமே இது சுயசார்புக்கான அரண், சோசலிச கட்டுமானம் அல்ல” என்று கருத்து தெரிவித்தார்கள். அதை நையாண்டி செய்தவர்கள் உண்டு.

பிறகு, இந்திரா காந்தி வறுமையே வெளியேறு, 20 அம்சத் திட்டம், வேலையின்மையே வெளியேறு என்றெல்லாம் சொன்னபோது, வறுமை உடனடியாக வெளியேறிவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்க முயன்றார்கள். ராஜிவ் காந்தி இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துப் போவதாய்ச் சொன்னபோது, பூரித்து புளகாங்கிதம் அடைந்து பாராட்டு மழை பெய்தார்கள். இந்திரா காந்தியை கடுமையாக விமர்சித்த ராம்நாத் கோயங்கா போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழாவின்போது, இந்தியா ராஜிவ் காந்தியின் கைகளில் பத்திரமாக இருக்கும். இனி நான் நிம்மதியாக இறக்கலாம் என்று சொல்லும் அளவிற்குப் போனார்கள்.

இப்போது லாப பெருக்கத்திற்கு இதுவெல்லாம் போதாது என்ற நிலை வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியே கூட ஆவடி சோசலிசம், வங்கிகள் தேசியமயம், பொதுத்துறை பாதுகாப்பு ஆகியவற்றை காலில் போட்டுவிட்டு அந்நிய மூலதனத்தை தலையில் வைத்துக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமல்ல. பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகள் அனைத்திற்கும் இதுவே தாரக மந்திராமாகிப் போனது.அந்நிய மூலதனம் அப்படியே குவிந்துவிட்டால் இப்படி இருக்கும் இந்தியா எப்படியோ மாறிவிடும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.

அம்மாவின் அளப்பு:

சமீபத்தில் செப்.9-10 தேதிகளில் தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதையொட்டி இந்தக் கூச்சல் இன்னொரு உச்சத்திற்கு சென்றது. தமிழ்நாடு சுமார் 2.5 லட்சம் கோடி மூலதனத்தை ஈர்த்துவிட்டதாகவும், இது தமிழக அரசு எதிர்பார்த்த 1 லட்சம் கோடியை விட 1.5 லட்சம் அதிகம் என தமிழக அரசும், பல ஊடகங்களும், அதிமுகவினரும், அதிமுகவின் துதிபாடிகளும் பெருமை பேசித் திரிகிறார்கள்.வளர்ச்சியின் நாயகன் அந்நிய மூலதனத்தை சொடுக்கு போட்டு வரவழைக்கிற அளவிற்கு திறமை மிகுந்தவர் என்றெல்லாம் பேசப்படும் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற “அதிரும் குஜராத்” என்றழைக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 25 லட்சம் கோடி அளவிற்கு மூலதனம் வருவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இதற்காக 21000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள்.

ஆனால், உண்மை என்ன?

2000த்திலிருந்து 2015 ஜீன் வரை 15 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய மூலதனத்தின் மொத்த மதிப்பு 12,93,303 லட்சம் கோடி. இதில் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் சேர்ந்து வந்த தொகை 94,595 கோடி. இப்படி வருகிற மூலதனத்தின் 35 சதவீதம் மொரீசியஸிலிருந்து வருகிறது. மொரீசியஸிலிருந்து வரும் பணம் இந்தியாவில் ஏய்க்கப்பட்ட கருப்புப் பணம் என்பது பொதுவான புரிதல்.

இப்படி வருகிற மூலதனத்தில் 50 சதவீதம் அதிகமாக சேவைத் துறையில்தான் வருகிறது. சேவைத்துறை போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. இந்திய முதலாளிகளின் மிகப் பெரியதும் பழமையானதுமான சங்கமான அசோசம், “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67 சதவீதம் பங்களிப்பு செய்கிற சேவைத்துறையில் கிடைக்கும் வேலைவாய்ப்பு வெறும் 27 சதவீதம் மட்டுமே. உற்பத்தித் துறை இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. 15 சதவீதம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது” என்று குறிப்பிடுகிறது. அது சொல்லாமல் விட்ட ஒரு அம்சம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதம் மட்டும் பங்களிப்பு செய்கிற விவசாயத்துறை 58 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் முதலீடுகள் உற்பத்தித் துறையில் கூடுதலாக வரவேண்டும். விவசாயத்துறையில் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் “தொழிலும் வளர வேண்டும், வேலைவாய்ப்பும் உருவாக வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணமாக இருக்க முடியும்”.

மாறாக, அந்நிய மூலதனம் வரட்டும், எதில் வேண்டுமானாலும் வரட்டும் என்பது நோய் ஒன்றாய் இருக்க, வேறொரு நோய்க்கு மருத்துவம் செய்வது போன்றதாகும். மூலதனம் எதற்கு அந்நிய மூலதனம் என்றாலே வளர்ச்சி, வளர்ச்சி என்றாலே வளமை, வேலைவாய்ப்பு என்ற பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 2008 பொருளாதார நெருக்கடிக்கு முன்பு அமெரிக்காவில் மூலதனமே இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா?. எனவே, மூலதன வருகை மட்டுமே அனைத்தையும் சாத்தியமாக்கிவிடாது.

எந்தத் துறையில் மூலதனம் வரவேண்டும் என்பது மிக முக்கியமான அம்சம். மூலதனத்தால் அரசுக்கு வரி வருவாய் எவ்வளவு வருகிறது? வேலைவாய்ப்பு எவ்வளவு உருவாகிறது? துணைத் தொழில்கள் எவ்வளவு உருவாகிறது? இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பதிலாக உற்பத்தி செய்யப்படுகிறதா? புதிய தொழில்நுட்பம் வருகிறதா? என்பதெல்லாம்தான்.

எதைக் கொடுத்தோம் எதை இழந்தோம்

இந்த அம்சங்களை கடந்தகால அனுபவத்திலிருந்து பரிசீலித்தால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. உதாரணமாக நோக்கியா அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த நிறுவனத்திற்கு 210 ஏக்கர் நிலம் அரசால் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தை ஏக்கருக்கு ரூ.8 லட்சம் என்று விவசாயிகளிடம் வாங்கி பண்படுத்தி, ஏக்கர் வெறும் 4.5 லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. அப்போதும் கூட பத்திரப்பதிவுக் கட்டணம் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. தமிழகமே இருண்ட மாநிலமோ என்று தோன்றுகின்ற அளவிற்கு மின்வெட்டு வியாபித்திருந்த காலத்தில் அதிகபட்சம் 3 நிமிடம் மட்டுமே அந்த நிறுவனத்திற்கு மின்வெட்டு இருந்தது.

இதுதவிர, முதல் 5 ஆண்டுகளுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்த வரிகளில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டது. இது தவிர அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு அந்த நிறுவனத்திற்கு திருப்பிக் கொடுத்தது. அந்தத் தொகை நோக்கியா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்த ரூ. 856 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டுமென்பதுதான் ஒரே நிபந்தனை. இவ்வளவையும் வாங்கிக் கொண்ட அந்த நிறுவனம் 2014ம் ஆண்டு இறுதியில் 10 ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே ஆலையை மூடிவிட்டுச் சென்றது. இந்த ஆலையில் 8 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்தனர்.

இதற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியான ஃபாக்ஸ்கான நிறுவனமும் மூடப்பட்டது. அதில் 22000 பணிபுரிந்தார்கள். அவர்களும் வீட்டுக்கு அனுப்பப்ட்டார்கள். இதில் பெரும்பாலும் மிகக் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்.

இது தவிர, அந்த நிறுவனம் மூடப்பட்ட பிறகு மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் மாநில அரசுக்கு 2430 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வந்ததால் ஓரளவு அந்நியச் செலாவணி ஈட்டியது என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லாமல் போனது.

இத்தகைய நிறுவனங்கள் தமிழகத்திற்குள் வருகிறபோது தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்கின்றன. பாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதை மீறி தொழிற்சங்கம் வைத்ததற்காக, தொழிற்சங்கக் கொடியை ஏற்றச் சென்றததற்காக சிஐடியுவின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவருமான தோழர் அ.சவுந்தரராசனுக்கு கைவிலங்கு போடப்பட்டது. அதேநேரத்தில் வேலை நிலைமைகளும் கடுமையாக மாற்றப்படுகின்றன.

தமிழகத்தில் இத்தகைய மூலதனம் வந்த பிறகு ஏற்கனவே பொதுத்துறையில் இருந்த வேலைவாய்ப்புகள் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் மட்டும் சுமார் 14000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. தனியார் துறையில் சுமார் 18000 வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக 4000 வேலைவாய்ப்பு ஓராண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணியிலிருப்போர்

ஆண்டு               பொதுத் துறை               தனியார் துறை              மொத்த வேலைவாய்ப்பு

31.3.14 அன்று         1428500                           937800                                              2366300

31.3.13 அன்று            1442100                         919600                                              2361700

ஆனால், தனியார் துறையில் வேலைவாய்ப்புகளின் தரம் என்ன நிலையில்யிருக்கிறது என்பதை கீழ்க்காணும் பட்டியல் தெளிவுபடுத்துகிறது. பெரும்பாலான நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலானோர் அத்துக்கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு மாத வருமானம் ரூ. 6000-12000 ஆகவே உள்ளது. உதாரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள 3 கார் உற்பத்தித் தொழிற்சாலைகளில் 55 சதவீதம் மேற்பட்டோர் அத்துக்கூலிகளாகவே பணிபுரிகிறார்கள். இதுமட்டுமின்றி இதற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சிலவற்றில் ஒருவர் கூட நிரந்தரத் தொழிலாளி இல்லை என்ற அவலமும் நீடிக்கிறது. தமிழ்நாடு அரசு இந்தத் துறையில் மூலதனத்தை ஈர்ப்பதற்காகவே ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிர்ப்பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களை பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களாக அறிவித்து வேலைநிறுத்தத்தை தடை செய்துள்ளது.

உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

நிறுவனம் நிரந்தர தொழிலாளர்கள் அத்துக் கூலிகள் மொத்தம் அத்துக் கூலிகளின் சதவீதம்
டேகூ 30 610 640 95.3%
கேபிஐ 0 100 100 100.0
ஊசூ 0 193 193 100
ஆஷி 200 650 850 76.5
பிரைட் ஆட்டோ 80 180 260 69.2
ஜே.கே.எம் 220 824 1044 78.9
யசாகி 125 1675 1800 93.1
யுகால் 152 1170 1322 88.5
மொத்தம் 807 5402 6209 87.0

 

கார் உற்பத்தி நிறுவனங்கள்

நிறுவனம்         நிரந்தரத் தொழிலாளர்கள்     அத்துக் கூலிகள்           மொத்தம்          அத்துக் கூலிகள் சதவிகிதம்

நிறுவனம் நிரந்தர தொழிலாளர்கள் அத்துக் கூலிகள் மொத்தம் அத்துக் கூலிகளின் சதவீதம்
ஹூண்டாய் 301986 3932 5918 66.4
ரெனால்ட் நிசான் 1600 2100 3700 56.8
போர்டு 3009 2212 5221 42.4
மொத்தம் 6595 8244 14839 55.6

எனவே, தவிர்க்க முடியாத நிலையில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை. ஆனால், நம்முடைய செல்வம் முழுவதும் கொள்ளை கொண்டு போகிற, ஆனால் தமிழகத்திற்கு எவ்வித நலனும் பயக்காத அந்நிய மூலதனத்தால் தமிழகத்திற்கு இழப்பே மிஞ்சியிருக்கிறது.

அந்நிய மூலதனத்திற்காக ஆளாய் பறக்கிறபோதே அது வேலைவாய்ப்பை உருவாக்குமா? மாநில அரசு வருவாய்க்கு வழி செய்யுமா? புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருமா? என்பதையெல்லாம் பார்க்காமல் மூலதன வருகை மட்டுமே சர்வலொக நிவாரணி போல சித்தரிப்பது மக்கள் நலன் நாடும் அரசு என்ற கோட்பாட்டிற்கு பொருத்தமற்ற செயலாகவே இருக்கும்.

Related Posts