சமூகம்

அரசு ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாய் ஒரு பெண் !

அத்தியூர் விஜயா – அரசு இயந்திரங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக துணை நிற்பதில்லை சான்றாக இருந்தவர் இருளர் சமூகத்தைச் சேர்ந்த விஜயா.

விழுப்புரம் மாவட்டம் அத்தியூரைச் சேர்ந்தவர் விஜயா. 1993-ம் ஆண்டு திருட்டு வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடும் பொருட்டு புதுச்சேரி காவல்துறையினர் விழுப்புரம் வந்திருந்தனர். 17 வயதான விஜயாவையும் அவரது பெற்றோர்களையும் விசாரிக்க வேண்டும் என்று வேனில் அழைத்து சென்றனர். வழியில் ஒரு இட்த்தில் நிறுத்தி விஜயாவை ஆறு காவல்துறையினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்கள்.

விஜயா மனம் தளராமல் காவல்துறையினர் எதிர்த்து நீதிமன்றத்தில் போராடினார். 2006 ம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றம் அந்த ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், 2008-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நமது அதிகார வர்க்கத்தின் மண்டைக்குள் ஆதிக்கம் ஆழமாக பதிந்திருப்பதால், பழங்குடியின மக்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டி விடுவது காவல்துறையின் வழக்கமாகி விடுகிறது. வாச்சாத்தி, வழக்கிலும், ஒன்றும் அறியாத பழங்குடியின மக்கள் சந்தன கட்டை பதுக்கினார்கள் என்று கூறித்தான் அவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. அதே போன்று, நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் உள்ளவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, அவர்களை ஒரு கட்டத்தில் உண்மையாகவே குற்றவாளிகளாக மாற்றிவிடுறது அரசு. “எப்படியும் நான் ஜெயிலுக்கு போகணும். அதுக்கு திருடிட்டு போனா, என் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ்-ஆவது கட்டுவேன்,” என்று நண்பர் ஒருவர் கூறியது பல கேள்விகளை மனதில் எழுப்பியது.

காவல்துறையினரின் பார்வைக்கு விஜயா எப்படி தெரிந்திருப்பார்?

ஒரு பெண், ஏழைப் பெண், இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண். இந்த சமூகம் பல விதமான மதிப்பீடுகள் வைத்திருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு குறைவானவள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண், மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களை விட குறைவானவள், அதுவும் ஏழையாக இருந்து விட்டால் அவளுக்கு இந்த சமூகம் எந்த மதிப்பையும் தருவதில்லை. மூன்று படி நிலைகளில் ஒடுக்குமுறையை சந்தித்து வருகின்றனர் விஜயா போன்ற பெண்கள்.

சரி, மதிப்பே கொடுக்காத பெண்ணோடு வலுக்கட்டாயமாக்க் கூட ஏன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.? கௌரவம் திரைப்பட்த்தில், “அது என்னமோ தெரியலிங்க. எங்க வீட்டு பொண்ணுங்கள் தூக்கிட்டு போகும் போது மட்டும் இவங்களுக்கு சாதி, தீட்டு எல்லாம் தெரிவதே இல்லை,” என்ற கருத்து நினைவுக்கு வருகிறது.

அந்த பெண்ணை துன்புறுத்துவதன் மூலம் தனது உடல் தேவைகளை பூர்த்திச் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட, அந்தப் பெண்ணின் மீது தனக்கு இருக்கும் அதிகாரத்தையும், அதற்கு உறுதியளிக்கப்பட்டிருக்கும் சமூக அங்கீகாரத்தையும் காட்டுவதற்கே இந்த வன்கொடுமைகள் நடைபெறுகின்றன.

ஒரே சமூகத்தை சேர்ந்த ஆணையும் பெண்ணையும் இழிவுப்படுத்த நினைப்பவர்கள் செய்லகளை உற்று கவனிக்க வேண்டும். ஆணை இழிவுப்படுத்த அவனது மீது திருட்டு பட்டம், பெண்ணை இழிவுப்படுத்த பாலியல் வன்கொடுமை. பெண்ணின் சுய கௌரவம் அவளது பிறப்புறுப்பில் இருக்கிறது என்ற மடத்தனமான ஆணாதிக்க சிந்தனையின் சிதறல்கள் தான் இந்த செயல்கள். காவல்துறையும், நீதித்துறையும் மக்களை காப்பதற்காக இல்லை மாறாக அவை அரசின் அடக்குமுறைக் கருவிகள் என்பதையே விஜயா பாதிக்கப்பட்டதை ஒத்த உதாரணங்கள் காட்டுகின்றன. பெண்ணின் உடல் மீது ஒரு பெண்ணுக்கு இருக்கும் உரிமையை விட, சமூக அதிகாரமே கோலோச்சுகிறது.

இச்சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ”இருளர் பெண் தானே, இது ஒரு பெரிய குற்றமா” என்ற மனோபாவம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், நியாயவாதிகள் என்று மார் தட்டிக் கொள்கிற ஊடகங்களுக்கு, ஏன் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இருக்கிறது.

விஜயா இறந்த செய்தியை பத்திரிகைகள் வெளியிட்ட வித்த்தைப் பார்த்தாலே அம்பலமாகும் அவர்களின் நிலைபாடு என்னவென்று. மாலை மலரும், தினகரனும் ”பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட்தாக கூறப்படும் விஜயா”, டைம்ஸ் ஆப் இந்தியா, “ஆறு காவல்துறையினர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்திய பெண் இறப்பு”. எவ்வளவு அகங்காரம் இந்த ஊடகங்களுக்கு? விஜயா பாதிக்கப்பட்டவர் என்பதை அவர் இறந்த பிறகும், இந்த ஊடகங்கள் ஒத்துக் கொள்ளவேயில்லை. தி இந்து ஆங்கில நாளிதழும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் பழங்குடியின பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை செய்தியாக பதிந்திருந்தன. அந்தச் செய்தியிலிருந்த முக்கியமான தகவல் விழுப்புரம் ஆட்சியாளர் அமைத்திருந்த விசாரணை குழு விஜயா காவல்துறையினரால், வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை உறுதி செய்திருந்தது.

டெல்லியில் ஒரு பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் நடந்தால் கொதித்தெழுபவர்களுக்கு, விஜயா போன்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது பொருட்டாகப்படவில்லை. உலக ஊடகங்களில் பேசப்பட்ட வழக்கு வாச்சாத்தி. ஆனால் நம்மோடு பேருந்தில் பயணம் செய்யும் எத்தனை பேருக்கு மலையாளி என்ற சமூகம் இருக்கிறது என்று தெரியும்?

இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களை வளர்ச்சியின் அங்கமாகவும் ஆக்கிக் கொண்டு அதே நேரம், இவர்களது நிலம், வளம், கலாச்சாரம் அழியாமல் காப்பதுமே அரசின் கடமையாக இருக்க வேண்டும். இன்று விஜயா உயிரிழந்து விட்டார். ஆனால், எந்தவித ஆள் பலமும், பண பலமும் இல்லையென்ற போதும், இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று தன்னால் முடிந்த வரை, காவல்துறையை எதிர்த்து போராடினார். இன்னும் வெளி வராமல் பலர் இந்த கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. அவர்களுக்கு விஜயாவின் போராட்டம் ஒரு உத்வேகத்தை அளிக்க வேண்டும்.

Related Posts