அரசியல்

அடக்குமுறை லத்திகளில் ஆணென்ன, பெண்ணென்ன?

ஆறு நாட்கள் அமைதியாக அறவழிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் என்று சொன்ன அதே வாய் தான் 7-வது நாளில் தீவிரவாதிகள் என சித்தரித்து போராட்டத்திற்கு முடிவுக்கட்டியது. இதில் பலி ஆடுகளாக்கப்பட்டது அப்பாவி மீனவக் குப்பத்து மக்களும், தலித் மக்களும்தான்.

ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என்ற கோரிக்கை வைத்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை காவல்துறை கடந்த 23ம் தேதி தனது முழு அதிகாரத்தை கொண்டு ஒடுக்க முயன்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் “எங்கள் உயிரே போனாலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம்,” என்று சொல்லி கடலை நோக்கிச் சென்றனர். இதைக் கண்ட கரையோரக் குப்பத்து மீனவ மக்கள் துடித்துப் போனார்கள். படித்த இளைஞர்கள் தமிழகத்தின் கோரிக்கைக்காக உயிரையும் தரத் துணிந்துவிட்டார்களே என்று உருகி அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து கடல் வழியாகச் சென்று அவர்களுக்கு உணவுகள் அளித்தனர். இதுதான் மீனவர்கள் செய்த குற்றம். தலித் மக்களைப் பொறுத்தவரையில், உலகின் இரண்டாவது மிக நீளமான, அழகிய கடற்கரையான மெரினாவை சுற்றிக் குடியிருப்பை வைத்திருந்ததே பெரும் குற்றம் போலும்.

மெரினாவைச் சுற்றி இருந்த மக்களை அடித்ததிலும் கைது செய்ததிலுமாவது ஒரு லாஜிக் இருக்கிறது (ஒரு வாதத்திற்காக). ஆனால், சம்பந்தமே இல்லாமல் வடபழனி, பெரம்பூரில் உள்ள சர்மா நகர், பி.வி. காலனி, சிந்தாதிரிப்பேட்டை உட்பட பல தலித் மக்கள் வாழும் பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? சுற்றிச் சுற்றிக் கைது செய்த காவல்துறை மெரினா அருகில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியைத் தொடாதது ஏன் என்பதுதான் விளங்கவில்லை.

முன்னெப்போதும் இல்லாத மெரினாவை ஒரு திருவிழாக் களமாகப் பார்த்து போராட்டத்திற்கு ஆதரவளித்த மக்கள் 23ம் தேதி காவல்துறை நடத்திய தாக்குதலை தொலைக்காட்சியில் பார்த்துக் கொந்தளித்தனர். தாக்குதலைக் கண்டித்து அங்காங்கே மக்களே தாங்களாக வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சில இடங்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டிருக்காலம். அதற்கு முழு காரணம் காவல்துறைதான். போராட்டக்களத்தில் நின்ற மாணவர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவளித்த குப்பத்து மக்கள் மீதும் அப்படியொரு கொடூரத் தாக்குதலை நடத்தாமல் இருந்திருந்தால் இது போன்ற சம்பவமே நடந்திருக்காது.

தாக்குதலுக்கு உள்ளானவர்களை வழக்குரைஞர்கள், மாதர் இயக்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சந்தித்தோம் (144 தடை விதிக்கப்பட்டதற்கு முன்பாக). அந்த மீனவ மக்களும், தலித்துகளும், இரு பகுதிகளையும் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் தெரிவித்த விவரங்கள் நம் மனதைத் தாக்குகின்றன. மிக எளிதாக இந்த எளிய மக்கள் அதிகார பீடங்களின் வன்முறைகளுக்கு இலக்காவது இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப்போகிறது என்ற கேள்வியை எழுப்புகின்றன.

மீனவமக்கள் என்ன சொல்கிறார்கள்?

“மெரினாவில் போராட்டம் தொடங்கிய நாள் முதல் மாணவர்களின் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் அமைதியாக, பணிவாக எங்களிடம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்துக்கொண்டார்கள். பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் எங்களுக்கு உதவி செய்துகொண்டு எங்களை ஆன்ட்டி, அம்மா என்று அழைத்தது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. ஆண்களும் பெண்களும் இரவு பகல் பார்க்காமல் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள் எந்தவிதமான தவறான செயலும் நடக்கவில்லை. போலிஸ்காரர்கள் கொடூரமாகத் தாக்கியதால்தான் மாணவர்கள் ஓடி வந்து அடைக்காளம் புகுந்தனர். அவர்களைக் காப்பாற்றி பத்திரமாக அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். ஏதேதோ ஊர்களிலிருந்து செல்போனில் பேசும் மாணவர்களின் தாய்மார்கள் ‘நீங்க நல்லா இருக்கனும்’ என்று வாழ்த்தினர். மீனவர்களை மட்டமாகப் பார்க்கும் சமுகத்தில் இந்தப் போராட்டத்தினால் தமிழ்நாடு முழுவதிலிருந்து பல மாவட்டங்களிலிருந்து எங்களுக்குச் சொந்தங்கள் கிடைத்தார்கள். காவல்துறையோ எங்களைப் பழிவாங்க எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் எங்கள் மீன் மார்கெட்டை கொளுத்தி எங்கள் வீடு, வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தி பார்ப்பவர்களை எல்லாம் அடித்து துன்புறுத்தியது. இதனால் எங்கள் பகுதியில் பல ஆண்கள் வேலைக்குப் போகாமல் ஊருக்கு வெளியே உறவினர்களின் வீடுகளில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தலித் மக்கள்:

மெரினா கடற்கரையில் ஜல்லிகட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டதன் காரணமாக எங்கள் பகுதி ரூதர் புரம், அம்பேத்கார் பாலம் கூச்சல் குழப்பமாக இருந்தது. அதனைக் காரணம் காட்டி எங்கள் பகுதியை காவல்துறையினர் தாக்கினர். அவர்கள் எறிந்த கற்களால் பல வீடுகளின் கூரை ஓடுகள் உடைந்தன. வீடுகளுக்கு உள்ளே இருந்த குழந்தைகள், வயதானவர்கள் உட்பட பலருக்குக் காயம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட எல்லோரையும் லத்தியால் அடித்ததால், பயந்து போய் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தவர்களை, கதவை உடைத்து உள்ளே புகுந்து அடித்துக் கைது செய்தார்கள். அது மட்டுமல்லாமல் வீட்டு உபயோகப் பொருட்களை சேதப்படுத்தினர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் மண்டை உடைந்து, கை, கால் எலும்பு முறிந்து, ரத்தகாயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களைத் தாக்கிய போலிஸ்காரர்கள் கொன்று விடுவதாக மிரட்டினார்கள், அசிங்கமாகப் பேசினார்கள், சாதியைச் சொல்லி இழிவுபடுத்தினார்கள். இந்த பிரச்சனைக்கு எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் வீடுகளை இழந்தோம். போலீசாரால் அடிக்கப்பட்டோம். ஆனால் எங்களுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகிறது. எங்கள் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. ஒடுக்கப்பட்ட சமுகத்தினர் என்பதால் எங்களை எப்போதுமே ஒடுக்கி வைக்க அரசாங்கம் விரும்புகிறதா? எங்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே எங்களை அச்சுறுத்தும்போது நாங்கள் பயந்து பயந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்படி பாதுகாப்புத் தேடி சென்ற ஒரு இளைஞர் மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் இறந்ததால் இந்த குடியிருப்பு பகுதியே சோகத்திலும் அச்சத்திலும் நிரம்பியுள்ளது.

பெண்களின் வலி: “நாங்கள் பாதுகாப்பு என்று நினைத்த எங்களது வீட்டையே அடித்து நொறுக்கி எங்களை துன்புறுத்திய போலீஸ் மறுபடியும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற அச்ச உணர்விலேயே இருக்கிறோம்,” என்கிறார்கள் இப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். பரிமளா: போராட்டம் நடத்திய மாணவர்களால் நடுகுப்பம் பகுதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் போலீஸ்காரர்கள் எங்கள் பொருட்களையெல்லாம் நாசமாக்கிவிட்டு இதற்கெல்லாம் காரணம் மாணவர்கள்தான் என்று சொல்லச் சொல்லி மிரட்டுகிறார்கள். நாங்கள் பொய் சொல்லமாட்டோம். எங்கள் பிள்ளைகளைப் போலத்தான் அவர்களும். கடந்த 6 நாட்களாக எந்த அசம்பாவிதமும் இங்கே நடக்கவில்லை போலீஸ் வந்ததால்தான் பிரச்சனை ஆரம்பித்தது. மக்களை மக்கள் காப்பாற்ற நினைப்பது ஒரு குற்றமா? தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாச் சொல்றாங்க படிக்கிற புள்ளைகள் தீவிரவாதிகளா? ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று கேட்டது தவறா? எங்களுக்கு எங்கள் பொருட்கள் போனதைப் பற்றிக் கூட கவலை இல்லை. திரும்பவும் சம்பாதிக்கலாம். ஆனா எங்க கண் முன்னாடி அந்த குழந்தைகளை 40 போலீஸ் சுற்றி அடித்து, ரத்த வெள்ளத்தில் மயங்கியவர்களை இழுத்துக்கொண்டு போனார்களே, அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது.”

நடுக்குப்பத்தில் இட்லிக் கடை நடத்தும் பச்சையம்மாள் பாட்டி:

மாணவர்களை பிடிக்கிறோம் என்ற பெயரில் என் வீட்டுக்குள் நுழைந்து, தட்டுமுட்டு சாமன்களை எல்லாம் நொறுக்கி நான் வியாபாரம் பண்ணி சேர்த்து வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை வேறு எடுத்துக்கிட்டாங்க. ஏன் இப்படிப் பண்ணுகிறீர்கள் என்று கேட்ட என்னைத் தகாத வார்த்தையில திட்டி தள்ளிவிட்டுட்டு போனார்கள்.

” ரூதர்புரத்தில் வசிக்கும் பெண்கள்… நாங்கள் என்ன தவறு செய்தோம்? இங்கு கழிப்பறை வசதி கிடையாது. ரோட்டில் உள்ள பொது கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இப்போது அவசரமாக கக்கூஸ் போக வேண்டுமென்று வெளியே வந்தால் போலீஸ்காரர்கள் அடிக்கிறார்கள். அதனால் வயிற்றைப் பிடித்துக்கொண்டு எப்போது அவர்கள் வெளியேறுவார்கள் என்று வீட்டுக்குக் காத்திருக்கிறேன். நாங்களே தினம் தினம் எங்கள் பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்களை இப்படி படாதபாடு படுத்துகிறார்கள். இந்தப் பகுதியில் ஆண்கள் யாரும் வீடுகளில் இல்லை. எல்லாரும் போலீசுக்கு பயந்து வேறு இடங்களில் இருக்கிறார்கள். வேலை செய்ய முடியாமல், வருமானம் இல்லாமல் பட்டினியாகக் கிடக்கிறோம்.

ராணி: 23ம் தேதிதான் என் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துறதா இருந்தோம். திடீரென்று எங்கள் தெருவில் புகுந்த போலீஸ்காரர்கள், வீட்டில் விசேஷம் நடைபெறுகிறது என்று கூட பார்க்காமல், “எங்கடி ஆம்பளங்கல ஒளிச்சி வச்சிறிக்கீங்க,” என்று கேட்டு அசிங்க அசிங்கமாகத் திட்டினார்கள். ஆண் போலீஸ்காரர்கள் மட்டுமில்லை, பெண் போலீஸ்காரர்களும் ஆபாசமாகத் திட்டினார்கள். லத்தியால் கடுமையாக அடித்தார்கள். இதனால் என் கையிலும் வலது கால் தொடையிலும் இரத்தக் கட்டு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் லத்தியால், விசேஷம் நடத்துவதற்காக வாடகைக்குக் கொண்டு வந்திருந்த நாற்காலி, மேசை, சவுண்ட் பாக்ஸ், லைட்டுகளை உடைத்தார்கள். “இனிமே ஸ்டூடன்ட்டுகளுக்கு உதவி பண்ணீங்கன்னு கேள்விபட்டோம், அவங்கள வச்சே புள்ள குடுத்துடுவோம் தேவிடியாக்களா” என்று வக்கிரமாகப் பேசிவிட்டுப் போனார்கள். போகும்போது, தெருவில் நின்றுகொண்டிருந்த வண்டிகளுக்கு தீ வைத்துக்கொண்டே, கண்ணில் பட்ட ஆண்களை உதைத்துக்கொண்டே போனார்கள்.

நீதிமன்றத்தில் நீதிக்கு நின்ற பொதுமக்கள்:

23-ம் தேதியன்று பிபி காலனியில் உள்ள மசூதியில் கட்டுமான பணிக்காக கட்டட வேலை செய்து வந்த என் கணவனை ஒரே கலவரமாக காரணமாக வீட்டுக்கு அழைத்து வரலாம் என்று ஓடிச் சென்றபோது என் கண் முன்னே என் கணவனை அடித்து இழுத்து சென்றனர். இங்குதான் கட்டுமான பணியில் இருந்தார் என்று எவ்வளவோ எடுத்துக் கூறி கெஞ்சினேன். காவல்துறையினர் ஈவு இறக்கமின்றி என் கணவன் உட்பட 9 இஸ்லாமியர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் ஐஸ் அவுசில் உள்ள ஒரு இஸ்லாமிய இளைஞனை முஸ்லீம் என்ற ஒரே காரணத்தினால் கைது செய்துள்ளனர். இதனால் அவர் வீட்டில் நடக்க இருந்த மனைவியின் சீமந்தம் நின்று விட்டது என்றார் அந்த பெண்.

அண்ணாசாலை அரவிந்த்:

கடந்த பிப்ரவரி 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆனால் 23ம் தேதி அரவிந்த் நோட்டீஸ் வைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் வழியில போலீஸ் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளனர். திருமண செலவுக்காக வாங்கிய கடனில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் நீதிமன்றத்திற்கு கட்டி வெளியில வந்துள்ளார். சொந்தக்கார பெண் என்பதால் திருமணம் நிற்கவில்லை.

மைலாப்பூர் ஏகாம்பர பிள்ளை தெரு உள்ள சந்தோஷ் ஒரு துப்புறவு தொழிலாளி. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை. 23ம் தேதி ஊரிலிருந்து தனது வீட்டுக்கு வர இருந்த அண்ணன் இடம் தெரியாமல் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளாகி பதட்டத்தோடு கைபேசியில் பேசியதை கேட்டு பயந்த இவர். இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அண்ணனைத் தேடிச் சென்றார். கருப்பு சட்டை அணிந்திருந்த ஒரே காரணத்தினால் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று கூறி இவரை கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளனர். தற்போது பிணையிலிருந்து வந்த பின்னும் வேலைக்கு செல்லாமல் தினமும் கையெழுத்து போட செங்கல்பட்டு சென்று வருகிறார்.

குழந்தைகளும் மனநிலை:

23-ம் தேதி காலையில் பள்ளிகளுக்குச் சென்றுவிட்ட குழந்தைகள், மதியம் வீட்டுக்கு வந்தபோதுதான் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தார்கள். தங்களது வீட்டுக் கதவு உடைந்திருப்பதையும், டி.வி. உள்ளிட்ட வீட்டுப் பொருட்கள் நொறுங்கியிருப்பதையும் பார்த்து குழப்பமும் அச்சமும் அடைந்தார்கள். மீன் மார்க்கெட் எரிந்துகொண்டிருப்பதையும், சில ஆட்டோக்கள் எரிந்திருப்பதையும் பார்த்து, பயந்து வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டனர். வீட்டிலேயே இருந்த குழந்தைகள், பெரியவர்களை போலீஸ் அடிப்பதைப் பார்த்து பயந்து போனார்கள். சில மாணவர்கள் வீட்டிற்குள் ஒளிந்திருக்க போலீஸ் அவர்களை வெளியே இழுத்து வந்து அடித்ததையும் அந்தக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள். இதனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பக்கத்துப் பகுதிகளிலும் வெளியூர்களிலும் இருக்கிற உறவினர்களின் வீடுகளுக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டோம்.

பள்ளி பாதிப்பு:

போலீஸ் தாக்குதலுக்குப் பிறகு பல குழந்தைகள் இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. பொதுவாகக் குழந்தைகள் போலீஸ்காரர்களாக வேண்டும் என்று விரும்புவார்கள். “நான் பெரியவனானால் போலீஸ் ஆக மாட்டேன், போலீஸை எல்லாம் சுடணும்,” என்று சில குழந்தைகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதில், எந்த அளவுக்கு அவர்களுடைய மனம் கொதித்துப்போயிருக்கிறது என்பதை உணர முடிந்தது. சில பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வாங்கி கொள்ள வற்புறுத்தியதாகவும், பிறகு தலைமை ஆசிரியரிடம் விரிவாக விளக்கமளித்த பிறகே பள்ளிக்கு வர அனுமதித்த்தாகவும் பெற்றோர்கள் கூறினர். தாக்குதல் சம்பவங்களில் குழந்தைகளும் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கும், சோர்வுக்கும் ஆளாகியிருப்பதைக் காண முடிகிறது. பெண் காவலர்களும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள், அடித்தார்கள், வாகனங்களுக்கும் மீன் மார்க்கெட்டுக்கும் தீ வைத்தார்கள் என்று மக்கள் தெரிவித்தார்கள். அடக்குமுறை ஆயுதமாக உத்தரவுப்படி செயல்படுவதில் பாலின வேறுபாடு இல்லை என்று மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டது அதிகார வர்க்கம்.

– ஹேமாவதி.

Related Posts