சமூகம்

அசைவை ஏற்படுத்தாத அரசாணை எண்:92

தனியார்மய பொருளாதார கொள்கையின் விளைவாய் கல்வி பிரி.கே.ஜி துவங்கி பி.எச்.டி. வரை கடைவிரிக்கப்பட்டு பல இலட்சங்கள் விலை பேசபடுவதை நடைமுறையில் அறிகிறோம். சாதாரண ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை கைவிடுவதற்கு கடந்த 1960-70 களில் கூறிய கருத்துக்களை இப்போது வேற மாதரி கூற வேண்டியிருக்கிறது. அப்போது எந்த விதமான வசதி வாய்ப்புகளும் இன்றி, குறிப்பிட்ட தூரங்களில் கல்வி நிலையம் இல்லாமல், கல்வியறிவின் முக்கியத்துவம் தெரியாமல் சாதாரண குழந்தைகள் தங்கள் கல்வியை கைவிட்டனர். இன்றைக்கு நிலை மாறியிருக்கிறது. மூலை முடுக்கெல்லாம் தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்து இருக்கின்றன, இவர்கள் கொள்ளையடிக்க வகுத்த வளர்ச்சி கல்வியை கைவிடும் கட்டாயத்திற்கு அழைத்து செல்கிறது. கலைக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்புகள், தொழில் நுட்பம், ஐ.டி.ஐ, பள்ளிகள் எல்லாவற்றையும் தனியார் கையில் கொடுத்து கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தி இருக்கின்றன நம்முடைய மத்திய மாநில அரசுகள்.

தனியார் கல்வி நிறுவனங்கள் கல்லூரிகளை நடத்துவத்றகு அனுமதியை மட்டும் பெற்று அரசின் உத்தரவுகள், விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், என அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. கடந்த செப். 1 2012 அன்று தமிழக அரசு அரசாணை ஆணை எண். 92யை வெளியிட்டது. அந்த அரசாணையில் சுயநிதி பொறியியல், மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் (சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட) பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு நீதியரசர் என்.வி. பால சுப்பிரமணியம் அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிக்கான பயிற்று கட்டணத்தை அரசே செலுத்தும் என்கிறது அரசாணை 92ன் சாராம்சம். இவ்வகை கல்லூரிகளில் அந்தந்த கல்லூரிகளின் இயக்கம் சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப கல்வி இயக்கம், மருத்துவ கல்வி இயக்கம், கல்லூரி கல்வி இயக்கம், போன்றவை தனது நிர்வாகத்திற்குட்பட்ட சுயநிதி கல்லூரிகளிடமிருந்து மாணவர்களின் எண்ணிக்கை, கட்டண விபரங்களை சேகரித்து தொகுத்து அம்மாணவர்களுக்கு தேவைப்படும் தொகையினை ஆதிதிராவிட நல ஆணையத்திடமிருந்து தங்களுடைய நிர்வாகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும்.

அம்மாணவர்கள் ஒற்றை சாளர கலந்தாய்விற்கு செல்லும்போது அவர்களின் சாதிச் சான்றிதழும், வருமானச் சான்றிதழும் சரிபார்க்கப்பட் வேண்டும். பெற்றோர்களின் மாத வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். சேர்க்கைக்கு மாணவர்கள் கல்லூரியை நோக்கி வருகிறபோது அவர்களின் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுந்த சான்றிதழ் இருப்பின் அம்மாணவர்களிடம் பயிற்றுக் கட்டணம் வசூலிக்காமல், வற்புறுத்தாமலும் அவற்றை பெற்று சம்மந்தப்பட்ட இயக்கத்திற்கு கல்லூரி நிர்வாகம் கொடுக்க வேண்டும் என அரசாணை தெளிவுபடுத்துகிறது.

மேலும், நிர்வாக ஒதுக்கீட்டில் செல்லும் ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களாக இருப்பின் இந்தச்சட்டம் அவர்களுக்கும் பொருந்தும். 2012-2013 ஆம் ஆண்டு கல்விக்கட்டணம் மாணவர்கள் செலுத்தியிருப்பின் இவற்றை சம்மந்தபட்ட இயக்கத்தில் இருந்து கல்லூரி நிர்வாகம் பெற்று மாணவர்களிடம் திரும்பி ஒப்படைக்கம்படி அந்த அரசாணை சுட்டிக்காட்டுகிறது. நடப்பதென்னவோ திரைமறைவு வேலைகள் தான், தனியார் கல்லூரிகளில் அரசின் உத்தரவுகள் செல்லமுடியாத இரும்பு கோட்டைகளாக இருக்கிறது. அமல்படுத்த சக்தி வாய்ந்த முயற்சி எடுக்கப்படவில்லை. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடிய பிறகு நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிக்கு மட்டும் நடைமுறையில் உள்ளது, கடந்த 2012-2013ஆம் கல்வியாண்டுக்கு தமிழகம் முழுவதும் செயல்படுத்த 420.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கியது போக மீதிப்பணம் செலவு செய்யப்படாமல் உள்ளது.

மேற்படி பணத்தை அரசாணை விதியை பயன்படுத்தி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடம் இருந்து பெறுவதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் தயாராக இல்லை. அரசு நியமித்த குழுவோ சில ஆயிரம் நிர்ணயம் செய்ய, தனியார் நிறுவனங்கள் அதைவிட மும்மடங்கு பாய்ந்து சில இலட்சங்களை பருவத்தேர்வுக்கு நிர்ணயம் செய்கின்றன. வசூலிக்கின்றன. அரசின் உத்தரவு அலட்சியப்படுத்தப்படுகிறது. அரசும் மெளனமாகி கிடக்கிறது. அரசாணை 92 பற்றி
தனியார் கல்வி நிறுவனங்களில் கேள்வி எழுப்பும் மாணவர்கள் தாக்குதல் உள்ளாகின்றனர், தனிமைப் படுத்த படுகின்றனர். அச்சுறுத்தல் அரங்கேறுகிறது.

மதுரை மருத்துவம் மற்றும் செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் அரசாணைக்கு எதிராக மாணவர்களிடம் பணம் வசுலிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை மாவட்டம் பொறியியல் கல்லூரிகள், கரூர் மாவட்டம, கரூராம்பாளையம் பொறியியல் கல்லூரிகளில் அரசு கொடுத்த பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்த நிலையும் நீடித்த பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது. சீரான முறையில் இந்த தொக மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திற்கு செல்வதற்கு சரியான அளவில் நிர்வாகம் முயற்சி செய்யாமல் 479.87 கோடி ரூபாய் 2013-2014 ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்குவது என்ன பயன்? இவை அனைத்து தரப்பு கல்லூரிகளுக்கும் செல்லாமல் இந்த திட்டம் வெற்றியடையாது. ஏற்கனவே, தனியார் கல்லூரிகளில் பேருந்துக் கட்டணம், விடுதி கட்டணம், புத்தகக்கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம் என இலட்சங்கள் வசூலிக்கப்படுகிறது. பயிற்று கட்டணம் என அரசு வழங்குவது சொற்பத் தொகையே இதற்கும் சேர்த்து வழங்கப்பட்டால் பெற்றோர்களின் சுமையும் குறையும்.

உயர்கல்வி கற்றோரின் விகிதமும் கூடும். இவற்றை செயல்படுத்துவது தற்காலின மருந்தே தவிர. நிரந்தரமானது அல்ல ஆகவே கூடுதல் கல்லூரிகளை அரசு துவக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

இந்த அரசாணை அரசு செயலாளரின் உத்தரவின் பேரில் தொழில் நுட்ப கல்வி ஆணையர், மருத்துவ கல்வி இயக்குநர், சட்டக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர், உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை, சட்டத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர், பழங்குடியினர் நல இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், அனைத்து கல்லூரி இயக்ககம் செயலாளர்கள், அனைத்து சுயநிதி கல்லூரி நிர்வாகிகளுக்கு கடந்த 11.09.2012 அன்று அனுப்பட்டு இருக்கிறது. அரசாணை அனுப்பியவர்கள் இவற்றை அமல்படுத்த எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை. பொறியியல் கல்லூரி தவிர்த்து எந்த கல்லூரியிலும் இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.

சம்மந்தப்பட்ட இயக்கத்திற்கும் பணம் பகிர்ந்து கொடுக்கவில்லை. கல்வி நிறுவனங்களும் தங்களுடைய நிர்ணயிப்பின் படியே வசூலிக்கின்றன, மேற்படி அரசாணையை வெளியிட்ட அரசு, இந்த ஆணை முழுமையாக செயல்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியை ஓரளவு தடங்கல் இல்லாமல் பயில்வதற்கான ஆற்றல் வாய்ந்தது என அறியுமா?

Related Posts