உங்கள் வாழ்வில் நிழல் உள்ளதா?

நிழலும், குளிர்ச்சியும் உங்கள் வாழ்வில் உள்ளதா?

வெயில் காலத்து மதியப் பொழுதில், சாப்பிடும் முன் கை கழுவ தண்ணீர் குழாயைத் திருகுகையில் என்ன தோன்றும் உங்களுக்கு?

என்ன கேள்வி இது என்று இப்போது தோன்றலாம். எனினும், அப்போது என்ன தோன்றும் என்று கொஞ்சம் யோசித்துவிட்டுத்தான் வாசிக்கத் தொடருங்களேன்.

யப்பா! கொதிக்குதே என்று சொல்லிவிட்டு அடுத்த விநாடியே நிச்சயம் சாப்பிடப் போயிருப்பீர்கள். சாப்பிடத்தானே கை கழுவப் போனேன், இதில் கவலைப்பட என்ன இருக்கு என்கிறீர்களா?

சரி. இப்போது கட்டுரையைத் துவங்குவோம். அந்தத் தண்ணீரில் கொதிக்கும் சூட்டோடு சேர்ந்துவேறுஎன்ன இருந்திருக்கும்? இளகிப்போன நெகிழியின் (பிளாஸ்டிக்) வேதிக் கலவைகள் கலந்திருக்குமா?

இப்படியெல்லாம் பார்த்தா, சாப்பிட மட்டுமில்லேங்க, வாழவே முடியாதுங்க! என்று வாயார நீங்கள் சொல்வது நன்றாகவே கேட்கிறது. ஆம், உண்மைதான். கையே கொதித்துப் போகும் அளவிற்கான வெப்பம் அந்த நீரில் ஏறிப்போயிருக்கும் எனில், இளகிப்போன நெகிழியின் (1) வேதிப்பொருட்கள் நீரில் எவ்வளவு கலந்திருக்கும்? இப்படியாக நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு செயல்களிலும் அமைதியாய் மறைந்து, அநேக ஆபத்துகள் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆபத்தும் நமது அறிவிற்கு எட்டும் போதெல்லாம், நாம் எழுப்பும் குரல் என்னவென்றால், இதையெல்லாம் பார்த்தா வாழவே முடியாதப்பா என்பது தான்.

இக்குரல் சரிதானா? நமது வாழ்விற்கும், ஆரோக்கியத்திற்கும் இக்குரலால் பயன் கிடைக்கிறதா? எத்தனை ஆபத்துகள் இருப்பதாய் தெரிந்தாலும், நடைமுறைப் பழக்கங்களை மட்டும் மாற்றவே மாட்டேன், அது முடியாது, சாத்தியமல்ல, வேலைக்காகாத வெட்டிப் பேச்சுக்காரர்கள் சொல்லும் வார்த்தைகளையெல்லாம் கேட்டால் வாழவே முடியாது என்பதுதானே பெரும்பாலோரின் வழக்காக இருக்கிறது இப்போது.

தூக்கையும், செம்பையும் ஒரு பையில் வைத்து தூக்கிக் கொண்டு கடைக்குச் சென்று இட்லியையும், சாம்பாரையும் வாங்கி வந்து சாப்பிட்ட காலம் இப்போது அநாகரீகமான காலமாக நமக்குப்படுகிறது. நாகரீகமாய் என்ன செய்கிறோம் இன்று? மெல்லிய நெகிழிப் பையில் (பிளாஸ்டிக் பை) கொதிக்கும் நேநீரை பார்சல் வாங்கிக் கொண்டு வந்து, ருசித்து ருசித்து பருகுகிறோமே, இளகிப்போய் வெந்து உருகியிருக்கும் அந்த நெகிழியை ஒரு முறையாவது அறிவு கொண்டு பார்த்திருப்போமா? உங்கள் ஆரோக்கியத்தைவிடவும் அந்த தேநீரின் சுவையும், தேவையும் முக்கியமா உங்களுக்கு?

இட்லியையும், சாம்பாரையும் இன்னும் எல்லா விதமான உணவுப் பொருட்களையும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த உடனேயே உணவகங்களில் பார்சல் கட்டி வைத்துவிடுகின்றனர். வாடிக்கையாளர்கள் வந்து வரிசையில் காத்து நின்றால், நேர விரயம் ஆகிவிடுமல்லவா, எனவே நான்கைந்து மணி நேரத்துக்கு முன்பே கட்டி வைத்து விடுகின்றனர். கை வீசிக்கிட்டுப் போனோமா, காசைக் கொடுத்தோமா, வாங்கிச் சாப்பிட்டோமா, தூக்கி வீசினோமான்னு தான் நாமும் சாப்பிடப் பழகியிருக்கிறோம். கேட்டால் நேர விரயம் என்றோரு காரணமும் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. அப்படியெனில், உங்கள் ஆரோக்கியத்தை விடவும், அழகிய வாழ்வை விடவும் அத்தணை சேமிப்புக்குள்ளானதா உங்களின் நேரம்? ஆரோக்கியம் பாதுகாக்கவும் கூடவா நேரம் இல்லாமல் போய்விட்டது?

சரி தாங்க, நான் மட்டுமா பயன்படுத்துறேன், எல்லாருந்தானே என்றொரும் சாக்குப் போக்கு நம்மிடம் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். நமது ஆரோக்கியம் நமது கையில் என்பதையும், நமது வாழ்வை நாமே தான் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும் எவ்வாறு மறக்க இயலுகிறது நம்மால்? அதிகம் வேண்டாம், ஒரு பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால், நமது வாழ்வில் இருந்த நல்ல பழக்கங்களையும், சூழலியல் குணங்களையும் நம்மால் எப்படி மறக்க முடிந்தது? இப்போ மட்டும் என்னங்க, கெட்ட குணங்களா எங்ககிட்ட இருக்கு என்று யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.

ஆம். நிச்சயம் அது கெட்ட குணம் தான். நெகிழிப் பைகளால் சுற்றுச் சூழலுக்கும், நமது வாழ்விற்கும் கெடு என்று தெரிந்த பிறகும், அக்கொடும் தீங்கோடு எப்படி நம்மால் சமரசமாக முடிகிறது? உணவோடு கலந்து இரசித்து உண்கிறோமே, எப்படி முடிகிறது? மெல்லிய தோல் கொண்ட காய்கறி மற்றும் பழ வகைகள் முதல் சூடான உணவுப் பொருட்கள் வரை எல்லாவற்றையும் நெகிழியில் இட்டு அதில் உள்ள பெட்ரோலியத்தையும் சேர்த்துச் சாப்பிடுகிறோமே, பச்சிளம் குழந்தைகளுக்கும் பாசத்துடன் கொடுக்கிறோமே, அது நேசமுள்ள செயல்தானா? அறிவார்ந்த நமது பகுத்தறிவுக்குப் பொருத்தமானது தானா?

ஒரு நாள் வாழ்வை மொத்தமாய் கொஞ்சம் நினைவில் மீட்டு ஒரு பட்டியலிட்டுப் பாருங்களேன். காலையில் பல் துலக்கும் நைலான் பல்துலக்கி துவங்கி, நெகிழியில் பால், நெகிழிக் குழாயில் நெகிழிக் குடத்தில் தண்ணீர் எனத் தொடர்ந்து, நெகிழி டப்பாவில் மதிய உணவு கட்டியெடுத்துச் செல்லுதல் என நீண்டு, நெகிழிப் பைகளில் பல மாதங்களாக அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை மாலை நேரத்து சிறு பசிக்காக சாப்பிடுவது என இடைவெளியின்றி நம்மை விரட்டும் நெகிழியை ஒரு முறையாவது கொஞ்சம் முறைத்துப் பாருங்களேன்! அங்கெங்கிணாத படி, அன்றாட வாழ்வின் அனைத்திலும் அரியாசணை போட்டு அமர்ந்திருக்கும் அந்த ஆபத்தை, அறிவுக் கண்ணை அகலத்திறந்து ஆக்ரோசத்துடன் பாருங்களேன். உங்களை விட்டு ஒடிப்போகத் துவங்கியிருக்கும் நிச்சயம்.

நாகரீகம் என்ற பெயரில் அதிகரிக்கும் மற்றொரு பெரும் கொடும் ஆபத்து என்ன தெரியுமா? வீட்டின் குளிர்பதனப் பெட்டியை (பிரிட்ஜ் தாங்க) கொஞ்சம் திறந்து பாருங்கள். நெகிழிப் பைகள் எல்லா வர்ணத்திலும் எல்லா அடுக்குகளிலும், கதவுகளிலும் அதன் அனைத்து இடுக்குகளிலும் நிச்சயம் இருக்கும் பல வீடுகளில். ஒரு எழுமிச்சம் பழத்தை நறுக்கி கொஞ்சம் மட்டும் பயன்படுத்துவர்கள், மீதியை ஒரு நெகிழிப் பையில் போட்டு வைத்துவிடுவார்கள். மிச்சப்படுத்துகிறார்களாம். தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளை மட்டுமல்ல இஞ்சி, பச்சை மிளகாய் என்பதோடு, கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் கூட இப்படித்தான் நெகிழிப் பைகளில் போட்டு, நன்றாக சுத்திவைத்து, நீண்ட காலம் சேமித்து வைத்து, கெடாமல் பயன்படுத்துகிறார்களாம்.

ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்துகையில், அதன் நன்மை தீமைகளைத் தெரிந்து நன்மை அதிகப்படுத்தி, தீமைகளைத் தவிர்த்து அப்பொருளைப் பயன்படுத்துவது தானே அறிவுடமையாக இருக்க முடியும்? அப்படியெனில், நெகிழியை குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்துவது சரியா, தவறா எனத் தெரிந்து கொள்ள ஏன் முனைப்பு காட்டவில்லை நம்மில் பலர்? ஆம், அது பெருந்தீங்காகும். உணவுப் பொருட்களை விசம் கலந்த பொருட்களாக மாற்ற, நெகிழியில் சுத்தி குளிர்பதனப் பெட்டியில் வைக்கும் ஒரு செயலே போதுமானது. தக்காளியை பெட்ரோலில் போட்டு பாதுகாக்கும் செயலை நம்மில் யாரேனும் செய்வோமா? ஆனால், அதைத்தானே வீட்டில் பல்லாயிரம் ரூபாய் செலவில் செய்துகொண்டு இருக்கிறோம்!

சூட்டிலும், குளிர்ச்சியிலும் நெகிழி மீண்டும் இளகி அதனுள் இருக்கும் வேதிப்பொருட்களை தானாக வெளியிடும் என்பது பள்ளிப் பாடத்தின் அறிவியலில் நாம் அறிந்திராத செய்தியா? மறந்துவிட்டோமா அல்லது மதிப்பெண் இல்லாத வினா என்பதால் மதிப்பிழக்கச் செய்துவிட்டோமா? அல்லது அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக வாழ்க்கையை மாற்றப் போகிறோமா? நெகிழியும் அறிவியலில் கண்டுபிடிப்பு தானே என்று யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், போர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்தான் இன்றைய நெகிழியென்று, அவர்களிடம் அன்பாய் சொல்லுங்கள். ஆம். வாழ்வையும், பூமியையும் வளப்படுத்தும் பொருட்களையே நாம் அறிவியலென்று கொண்டாட இயலும். இல்லையெனில் அதை அழிவு என்றே அழைத்திட வேண்டும். பெரும் முதலாளிகளின் இலாபத்துக்காகவும், நுகர்வோர் கலாச்சாரத்தை தூண்டுவதற்காகவும் கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அனைத்துமே நிச்சயம் அழிவுதான். அறிவியல் அல்ல. அல்லவே அல்ல.

நமது பூமி மட்டுமல்ல, நமது வாழ்வு மொத்தமும் நெகிழியாலும், அதன் ஆபத்துகளாலும் சூழப்பட்டிருப்பது உங்களுக்கு நன்கு தெரியும் தான். ஆனால், உணர்ந்துள்ளீர்களா என்பது தான் கேள்வி? உணர்ந்துள்ளீர்கள் என்றால், இக்கேள்விக்கான பதில் உணர்ந்துள்ளோம் என்ற ஒற்றை வார்த்தையாக மட்டும் ஒருபோதும் இருக்காது.

செயல்களால் பதில் அளிக்கத் துவங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நல்லது. வாழ்த்துகள்…

Polyethylene balls
Polyethylene balls

1) நெகிழி முதன் முதலில் 1862-ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes) என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் “பார்க்ஸ்டைன்” (Parkesine) என்ற பெயரிட்டார். முற்காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள் கொண்டு “செராடின்” என்ற நெகிழியும், சிலவண்டு, பூச்சிகளில் இருந்து “ஷெல்லாக்” வார்னிஷும் செய்யப்பட்டன. பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869-ல் ஜான் ஹயாத் (John Wesley Hyatt) என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது. 1907-ல் லியோ பேக்லாண்டு (Leo Baekeland) என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், ‘டுபாண்ட் அமெரிக்க நிறுவனம்’ (DuPont) வெடிபொருள் நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது. 1913-ல் கட்டுவதற்கான நெகிழி உருவானது. 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.

About இளைஞர் மு‍ழக்கம்