சாக்ரடீஸ்!

கிரேக்க நாட்டினைச் சேர்ந்த ஒரு தத்துவஞானியும், மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளரும், மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவருமான, உலகின் முதல் தத்துவஞானி என்றும் போற்றப்படுவருமான சாக்ரடீஸ் (Socrates – கிமு 470 – கிமு 399) மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட நாள்.

மரண தண்டனை: –

சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

எண்னற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்ற ச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களை தூற்றி, ஒரு புதுக் கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக் கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்), சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார், புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான்.

இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ்,

என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை.

என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் என்றார்.

சாக்ரடீசின் இறக்கும் தருவாய் ஓவியம்

இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன. நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்தனர்.

இதில் 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும் , 281 பேர் மரண தண்ட னை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக் கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்;  அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச்  செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339 ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது, விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக் கொள்ள வேண்டும்” என்றான் சிறைப் பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின.

About லீப்நெக்ட்