ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !…

தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் வேஷத்திற்கு பின்னணி பாடகனாக அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.

எந்த ஆர்மோனியப் பெட்டியை தொட்டாலே அடி விழும் என்று பயந்தானோ அந்த சிறுவன் வளர்ந்ததும், இந்த உலகின் தலை சிறந்த இசைக்கோர்வையாகிய, சிம்ஃபனி எனப்படுகிற பல்வேறு இசைக்கோர்வைகளை வெளிக் கொணர்ந்த லண்டன் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா உள்ளே நுழைகிறார். ஆளும், உடையும், சற்றே சுமாரான தோற்றமும், அங்கே வாத்தியக் கருவிகள் இசைப்போரை சற்றே ஏளனமாக பார்க்க வைக்க, ஒரு சிறிய புன்சிரிப்போடு கைகளை அசைக்கிறார், அசந்து போன வாத்தியக் கருவிகள் இசைப்போர் தங்கள் கையிலிருந்ததை அப்படியே கீழே வைத்து விட்டு எழுந்து நின்று கை தட்ட தொடங்குகிறார்கள். கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

இங்கிலாந்து மட்டுமே இசையின் பூர்வீகம், மேலை நாடுகளிலிருந்து மட்டுமே சிம்ஃபனி கம்போஸர்கள் சாத்தியம் என்று கர்வம் கொண்டிருந்தோருக்கு, தெற்கு ஆசியாவின், இந்தியாவில், தமிழ்நாட்டின் பண்ணைபுரத்திலிருந்து இசையால் பதில் சொல்லி திரும்புகிறார். இன்று வரை இசைத்துறையின் உச்சபட்சம் என்று கருதப்படுகிற சிம்ஃபனி இசைத்தவர் தெற்காசியாவில் அவரைத் தவிர்த்து வேறு யாருமில்லை.

அந்த அண்ணன், பஸ் போகாத ஊருக்கு கூட பாட்ட கொண்டு போய் சேர்த்த எங்கள் பாவலர் வரதராஜன்.

அண்ணனின் அடிக்கு பயந்து ஆர்மோனித்தை தொட பயந்த சிறுவன்தான் இன்று இசைக் கருவிகளை தன் வசப்படுத்தி, இசையை மழையென பொழிய வைத்து, இசையால் இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த ”எங்கள் ராஜா”.

ஆம் அவர் என்றும் எங்கள் ராஜாதான். இசையால் என்ன செய்து விட முடியும் என்று நினைத்திருந்தோருக்கு, இசையால் எல்லாம் செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியவர். காதலைச் சொல்ல, கோபத்தை வெளிப்படுத்த, அமைதியாய் இருக்க, ஆர்ப்பாட்டாமாய் ஆட, சோகப்பட, சொக்க வைக்க என அத்தனையும் இசையால் எமக்களித்தார் ராஜா.

ஓர் அதிகாலைப் பொழுது, ஆள் அரவமற்ற ஒரு சாலை, மெல்லிய பனி மூட்டம், லேசான குளிர், ஒரு பேருந்து பயணம் மற்றும் இளையராஜாவின் இசை என்று கற்பனை செய்து கொண்டு இதில் இளையராஜாவின் இசையை மட்டும் கழித்து விட்டுப் பாருங்கள் அது உயிரற்ற வெறும் பயணமாக மட்டுமே இருக்கும்.

1970களின் மத்தியில் இனி தமிழில் இசைக்க யாருமில்லை என்று தமிழகத்தின் ரசிகர்கள் அனைவரும் ஹிந்தி பாடல்களை ரசிக்க தொடங்கினார்கள், அந்த நேரத்தில் வெளி வந்தது அன்னக்கிளி திரைப்படைத்தின் இசைப் பேழை. அன்றைக்கு திரும்பிய ரசிகர்கள்தான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக வடக்குப் பக்கம் திரும்பி பார்க்க விடாமல் இசையால் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார் ராஜா.

சரி ஏதோ கொஞ்சம் கிராமத்து பக்கமென்பதால் கிராமியப் பாடல்கள் கை வரும் ஆனால் வெஸ்டர்ன் எல்லாம் தேறாதுப்பா என்றோருக்கு, ப்ரியாவில் பதிலளித்தார். வெஸ்டர்ன் கூட கத்துக்கலாம் கர்நாடக சங்கீதம்னா சும்மாவாப்பா என்றோருக்கு சிந்து பைரவியில் பதிலளித்தார்.

புதுப்புது முயற்சிகள் ஒவ்வொரு பாடலிலும் செய்து கொண்டேயிருப்பது இவரை இன்னும் புத்துயிர்ப்பாக வைத்துக் கொண்டு இருக்கிறது. ஒரு நிஜம், ஒரு நிழல் ஆனால் இரண்டும் சேர்ந்து பாட வேண்டும் எனும் போது, தொழில் நுட்பம் அதிக அளவில் வளர்ந்திராத கால கட்டத்திலேயே “என் கண்மணி இளமாங்கனி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே…” என்றொரு பாடல் வழங்கினார். இதில் என் கண்மணி உனைப் பார்த்த்தும் சிரிக்கின்றதே என்பதை முதலில் பதிவு செய்து, பின் இளமாங்கணி சிரிக்கின்றதே என்பதை இரண்டாவதாக பதிவு செய்து இரண்டையும் ஒரே ட்ராக்கில் இணைக்கும் வேலையை செய்து முடித்தார்.

ஆரோகணம் (ச ரி க ம ப த நி ச), அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதில்லாமல் பாடல் அமைக்க முடியாது என்றிருந்ததை உடைத்து. சிந்து பைரவியில் “கலை வாணியே உனைத்தானே அழைத்தேன்” என்றொரு பாடலை ஆரோகணத்தில் மட்டுமே செய்து முடிக்க இசைஞானியின்றி வேறு யாரால் சாத்தியம்?!!.

மிகச்சவாலாக கருதப்பட்ட, வர்ணம் எனும் கர்நாடக இசையை மிக லாவகமாக ”நின்னுக்கோரி வர்ணம்” பாடலில் பயன்படுத்தி பாமரனையும் முணு முணுக்க வைத்தது, என இப்படி ஒன்றிரண்டு அல்ல ராஜாவின் ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு புதுமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

அவர் முதலில் பாடிய பாடலான “வாடி என் கப்பக்கிழங்கே” பாடலை எருமை மாடு கத்துவது போல் இருக்கிறது என்று சொன்ன அன்றைய தமிழகத்தின் தலை சிறந்த பாடகருக்கு “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” என்று பாடலாலே பதிலளித்தவர்.

வெறும் பாடல்கள் மட்டுமே இசையென கருதிக் கொண்டிருப்போருக்கு, பின்னணி இசையிலும் இளையராஜா எனும் மாமேதை தன் முத்திரையை பதித்து வந்து கொண்டிருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நூறாவது நாள் சேஸிங்க் காட்சியில் உறைய வைக்கவும், மெளன ராகத்தின் காதல் காட்சிகளில் உருக வைக்கவும், வைதேகி காத்திருந்தாள் சோக காட்சிகளில் அழ வைக்கவும், கரகாட்டக்காரன் ”சொப்பனசுந்தரி கார யாரு வச்சிருந்தா?” காமெடியில் சிரிக்க வைக்கவும், இன்னும் வார்த்தைகளில் வெளிக்கொணர்ந்திட முடியாத எத்தனையோ உணர்வுகள் இவரின் கை அசைப்பிற்கு வாத்தியக்கருவிகளிலிருந்து வெளி வந்து, பல்வேறு படங்களுக்கான பின்னணி இசையை “முன்னணி இசையாக” மாற்றி காட்சிகளை நம் மனதில் ஒட்ட வைத்திருக்கிறது.

வேறோர் புகழ் பெற்ற வயலினிஸ்டை கொண்டு ”ஹே ராம்” படத்திற்கான பாடல்களை பதிவிட்டு, பாடல் காட்சிகளையும் ஒளிப்பதிவு செய்த பின் அந்த கூட்டணி முறிந்து போக, அந்த படத்திற்கான காட்சிகளை அப்படியே வைத்து புதிய இசையை அதனுடன் ஒன்ற வைத்தவர் ராஜா. மெட்டுக்கு பாட்டெழுதலாம், பாட்டிற்கு மெட்டமைக்கலாம், காட்சிகளுக்கு இசையமைத்த்து என்பது அப்பப்பா அபாரம். நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என்றொரு பாடலில், கமல் பியானோ வாசிப்பது போன்றொரு காட்சி க்ளோஸ் அப்-பில் காட்டப்படும். அதையாவது மாற்றி விடவா என கமல் கேட்க, எதற்கு தேவையில்லாத செலவு என அதன் அடுத்த கட்டைகளை பயன்படுத்தி இசையமைத்தாராம் ராஜா.

ஒரு கண் தெரியாத கதாநாயகி, கதாநாயகனிடம் வண்ணம் என்றால் எப்படி இருக்குமென்று கேட்க பின்னணியில் கோரஸ் ஒலிக்கத் தொடங்குகிறது “தான தம் தம் தான தம் தம் தான தம் தம் தென்றல் வந்து தீண்டும் போது” என்கிற பாடலும், அதன் பின்னணி இசைக்கோர்வைகளை விடவும் ஒரு சிறந்த பாடலை, பார்வையற்றவர்களை இசையால் உணர வைத்ததைப் போல உதாரணம் சொல்லி விட இயலுமா நம்மால்.

கொட்டாங்குச்சியின் டொக் டொக் சத்தமும், விரல்களின் சொடக்கு சத்தமும், ஜாக்கிங்க் செல்லும் ஷீ கால்களின் சத்தமும், காதிற்கினிய இசையாக மாற்ற ராஜாவால் மட்டுமே சாத்தியமில்லையா.

என்றேனும் தனித்து விடப்பட்ட நள்ளிரவு வேளையில், ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே தூங்கிப்போகலாம் என்று முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முயற்சியில் தோற்று பல இரவுகள் சிவராத்திரியாக மாறிப்போக வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் உறங்கச் செய்யவும், உறங்க விடாமல் செய்யவும் என்பது ராஜாவால் மட்டுமே சாத்தியம்.

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், உலகின் தலை சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் 9 வது இடம் பிடித்தவரும், இசைத் துறையின் உச்சபட்சம் என்று கருதப்படுகிற சிம்ஃபனி இசையை இசைத்த ஒரே தெற்காசியாவை சேர்ந்தவரும் என இசையை வசப்படுத்திய ஆளுமையுமானவரும் என்றுமே இளையராஜா தான்.

இளையராஜா இன்றி இந்த உலகை கற்பனை செய்து பார்ப்பதே வண்ணங்களின்றி வெறுமையாக பார்ப்பது போல் உள்ளது.

… இந்த உலகின் மிக அழகான விஷயம் என்பது அமைதி. அடுத்து இசை. அதுவும் ரஜாவின் இசை.

About முத்தழகன்

 • charles

  முத்தழகன் சார்

  இளையராஜா என்னும் இசை ராட்சசன் பற்றிய உங்களின் கட்டுரை அபாரமாக இருந்தது . சிம்போனி பற்றிய விளக்கங்களும் அபாரம் . ஆனாலும் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாத ஒரு நுனிப்புல் மேயும் கூட்டம் எப்போதும் சவடால் பேசிக் கொண்டே அலையும் . ‘ வார்த்தை விருப்பம்’ உள்ளே சென்று பாருங்கள் . இளையராஜா பற்றிய சாடல்களும் மறுத்தல்களும் சாரல் மழை போல பொழியப்பட்டிருக்கும்.

  ஆனால் ஒரு வார்த்தை என்றாலும் திருவார்த்தை சொன்னீர்கள் – இளையராஜா இசை வெறுப்பவர் ‘இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத ஜடம்’ என்று!

 • இளையராஜா இன்றி இந்த உலகை கற்பனை செய்து பார்ப்பதே வண்ணங்களின்றி வெறுமையாக பார்ப்பது போல் உள்ளது…….

  • முத்தழகன்

   நன்றி . . . .. . Anonymous

 • கேட்க கேட்க தெகட்டாத இசைஞானியின் இசையைப் போன்ற ஒரு கட்டுரை…………சூப்பர்……………..

  இளையராஜா இன்றி இந்த உலகை கற்பனை செய்து பார்ப்பதே
  (……………………) வண்ணங்களின்றி வெறுமையாக பார்ப்பது போல் உள்ளது.சூப்பரு……ஆனால் (இசை ரசிகர்களுக்கு) என்று ஏழுதி இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்……….

 • ஜான்பால்.எஸ்.

  இளையராஜா மீதான உங்களின் அளவற்ற காதல் ஒவ்வொரு வார்த்தையிலும் நிரம்பி வழிகிறது… ரசிகன் என்பதை கடந்து வழிபடும் நிலையை நோக்கி நீங்கள் நகர்வது அப்பட்டமாய் வெளிப்படுகிறது. அவர் உங்களுக்கு புனிதராக தெரிவதாலேயே, அவரை விரும்பாதவர்களை இசை அறிவற்றவர்கள் என்பது அபத்தமானது. அதற்கு சாதிய முத்திரை குத்த துணியும் உங்கள் முயற்சி பாசிசத்தின் கூறாகவே எனக்கு படுகிறது. # இசையால் என்ன செய்து விட முடியும் என்று நினைத்திருந்தோருக்கு, இசையால் எல்லாம் செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியவர். # ஆம் உண்மை தான்.. அந்த திமிர் தான் பெரியாரை எட்டி தள்ள வைத்தது….

 • anuvijay

  மிக அருமை… 🙂

 • திரு முத்தழகன்,
  இளையராஜாவை விமர்சித்தால் அவர்களுக்கு இசை ஞானம் இல்லை, இசைப் பக்குவம் பத்தாது, அவர்கள் ஞான சூனியங்கள் போன்ற முத்திரைகள் குத்தி அவர்களை புறக்கணிப்பது ஒரு தப்பிக்கும் மனோபாவம். காரணம் உங்களிடம் என் கேள்விக்கான பதில் இல்லை.

  சிம்பனி பற்றி தெளிவாக நீங்கள் சொல்லியிருப்பதாக நீங்களே கூறுவது வேடிக்கைதான். (அதாவது சிம்பனி இசை என்றால் என்ன என்று எனக்கு எதுவுமே தெரியாது என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டீர்கள்.) மேலும் நீங்கள் “தெளிவாக” கூறியிருக்கும் கருத்து விக்கியில் இருக்கிறது. ரவி ஷங்கர் சிம்பனிக்கு உதவினார் என்பதை ஆணித்தரமாக முன்வைக்கும் நீங்கள் இளையராஜாவின் சிம்பநிக்கான ஆதாரம் எங்கே என்று கேட்டால் அது இருக்கிறது ஆனால் எனக்குத் தெரியாது என்ற ரீதியில் பதில் சொல்கிறீர்கள். இளையராஜா எனக்கு முன்னே “தோன்றி” (வந்து என்ற வார்த்தை சரியானது என்று நினைக்கிறேன்.) நான் இதைச் செய்தேன் என்று சொன்னாலும் நான் நம்பப் போவதில்லை என்று உங்களிடம் இல்லாத பதிலுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்.நல்லது. வேறென்ன செய்யமுடியும்?

  ராஜாவின் சிம்பனி இசையை கேட்ட யாராவது இருக்கிறார்களா? அதை எவ்வாறு சிம்பனி என்று நாம் கூறுகிறோம்? தடாலடியாக ஒருவர் ஒரு சாதனையை நான் செய்தேன் என்று சொல்லும்போது அதற்க்கான ஆதாரம் எங்கே கேட்பது இயல்பான ஒன்றுதானே? நான் ஒரு விஞ்ஞானி அல்லது அஸ்ட்ரோநாட் என்று சொன்னால் நீங்கள் அதை உடனே அப்படியே மறு பேச்சின்றி ஏற்றுக்கொள்வீர்களா?

  எந்தவிதமான ஆதாரங்களும் சான்றுகளும் இல்லாத ஒரு சாதனையை யாருமே எதிர் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது பாசிச சிந்தனை அன்றி ஆரோக்கியமானது அல்ல. நானும் மற்றவர்கள் போல ராஜா ராஜாதான் என்று சொல்லியிருந்தால் எனக்கு இசை ஞானம் இல்லை என்று முடிவு செய்திருப்பீர்களா?

  இளையராஜாவின் சிம்பனி ஒரு உறுதி செய்யப்படாத தகவல். அதைப் பற்றி அவரே அதிகம் பேசுவது கிடையாது. மேலும் ஹிந்தி இசையை தமிழ்நாட்டைவிட்டு இளையராஜா துரத்தினார்(இது எவ்வளவு தூரம் உண்மை என்பதும் விவாததிற்குரியது.) என்பது ஒரு சம்பிரதாயமான கருத்து. நீங்கள் ஒரு சராசரி ராஜா ரசிகனின் இசை ரசனையை வைத்துக்கொண்டு அவரை துதி பாடும் வெகு சாதாரமான கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். இதில் புத்திசாலித்தனமான பார்வை எங்கும் தென்படவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை.

  உங்களின் பொறுமைக்கு நன்றி. இளையராஜாவின் சிம்பனி சி டி வந்தவுடன் அந்த லிங்கை எனக்குக் கொடுத்தால் நலமாக இருக்கும். அப்போது இந்தக் கட்டுரை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

  • முத்தழகன்

   kaarigan kisco

   சரி. ரவி சங்கர் சிம்ஃபனி பண்ணினாரா இல்லையா??????

   • திரு முத்தழகன்,
    நீங்கள் உங்களின் மேலும் என் கருத்தின் திசையை வேண்டுமென்றே வேறு பக்கம் திருப்புகிறீர்கள்.

    ரவி சங்கர் சிம்பனி அமைத்தார் அல்லது அதற்கு வெறும் உதவி செய்தார் என்பது இங்கே முக்கியமல்ல. எதுவாக இருப்பினும் இந்தியாவின் சிம்பனி தொடர்பு பற்றி பேசும் போது முதலில் வரவேண்டிய பெயர் ரவி ஷங்கர். இளையராஜா அல்ல. அந்தத் தகுதி ரவி ஷங்கருக்கு இருக்கிறதே தவிர இளையராஜாவுக்கு கொஞ்சமும் கிடையாது. ஏனென்றால் இளையராஜாவின் சிம்பனி ஒரு திட்டமிடப்பட்ட வதந்தி. ரவி சங்கரோ சிம்பநியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர். இளையராஜா சிம்பனி அமைத்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். எங்கே அது என்று எங்களைப் போன்றவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் அதை கேட்டிருக்கிறீர்களா? அல்லது அதை கேட்ட யாரையாவது உங்களுக்கு தெரியுமா? அதை நீங்கள் எப்படி சிம்பனி என்று உறுதியாக சொல்கிறீர்கள்? இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல முடியும்? உங்களின் ராஜா ரசனையை விட்டு வெளியே வந்தால்தான் இதற்குரிய நியாயமான விடையை உங்களால் காண முடியும்.

  • முத்தழகன்

   திரு kaarigan kisco

   இந்த லிங்கை படிச்சி பாருங்க . . . . . . . .

   http://webhome.idirect.com/~rlevy/current_question.html

 • தங்களின் பொறுமையான பதிலுக்கு நன்றி. நீங்கள் சிம்பனி என்றால் என்ன என்று சொல்லியிருக்கிறீர்கள். பிறகு இளையராஜாதான் முதலில் இதைச் செய்த ஆசியர் என்ற ஒரு வரியை கொடுத்துள்ளீர்கள். ஆனால் அந்த சிம்பனிக்கான ஆதாரம் யாரோ எவரோ விக்கிபீடியாவில் எழுதும் இந்த ஒரு வாக்கியம்தான் என்பதே அவரின் சிம்பனியை கேள்விக்குரியதாக்கி விடுகிறது. இது ஒன்றே போதும் என்று ராஜா ரசிகர்கள் நினைப்பது வாடிக்கையே. மற்றபடி தன் காலத்திற்குப் பிறகு தான் படைத்த சிம்பனி இசையை ராஜா பரிசளிக்கப் போகிறார் என்று சொல்வதெல்லாம் ஒரு நியாயமான ஆரோக்கியமான விவாதத்திற்கு ஒத்துவராத அபத்தங்கள். மேலும் அமிதாப் பச்சன், வைகோ இன்னும் பல பிரபலங்கள் யாருமே கேட்டேயிராத சிம்பனி இசையைப் பற்றி வியந்து பேசுவதை எப்படி ஒரு முக்கியமான தகவலாக முன்வைக்க முடியும்?

  மேலும் புதிய பரிதி என்பவர் கூறியிருக்கும் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். ஏனென்றால் எனக்குத் தோன்றியதும் அதுவேதான்.

  • முத்தழகன்

   kaarigan kisco

   சிம்ஃபனி என்றால் என்னவென்று இவ்வளவு சிரமப்பட்டு விளக்கியதை கூட ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இல்லை. மேலும் ரவி சங்கர் சிம்ஃபனி செய்யவில்லை என்பதை இப்போது ஒத்துக் கொண்டீர்கள் என்றே கருதுகிறேன்.

   இளையராஜாவே உங்கள் முன்னால் தோன்றி நான் சிம்ஃபனி அமைத்தேன் என்றாலும் அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நாளை இளையராஜாவின் காலத்திற்கு பிறகு, அந்த சிம்ஃபனியே வெளியானாலும் இது இளையராஜாவின் சிம்ஃபனி இல்லை, வேறு யாரோ செய்த சிம்ஃபனியை இளையராஜாவின் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப் போகின்றீர்கள்.

   புதிய பரிதியின் கருத்துக்கள் அபத்தமானவை, இசை குறித்த கருத்தாழமிக்கவை என்று எதுவுமில்லை அதில். அதில் உங்களுக்கு உடன்பாடென்றால் உங்களுக்கும் அதே பதிலே . . . . . . . . . . . . . . . .

   கொஞ்சம் இசை குறித்து தெரிந்திருப்போர் (அ) இசை ரசனை உள்ளவர்கள் இங்கே விவாதித்தால் அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும். இல்லையென்றால் அவர் ஹிந்திக்கு போகல, ஜப்பானுக்கு போகல, சிம்ஃபனி போடல என்றே நீளும்.

   • புதிய பரிதி

    //ஏன் ஹிந்தி திரை உலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தமுடியவில்லை? உலக அளவில் அவரது பாடல்களைக் கொண்டு செல்வதற்கு என்ன தடை இருக்கிறது?// என்றுதான் கேட்டிருக்கிறேன். ஹிந்திக்குப் போகலன்னு கேட்கவில்லை இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது.. இப்போது யூடியூபில் செம ஹிட் அடித்த ஹங்கனம் ஸ்டைல் இந்தியப் பாடல் அல்ல ஆனால் இந்தியாவில் பிரபலமடைந்திருக்கிறது.. பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

    //கொஞ்சம் இசை குறித்து தெரிந்திருப்போர் (அ) இசை ரசனை உள்ளவர்கள் இங்கே விவாதித்தால் அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும்// அதே போல் நீங்களும் கொஞ்சம் இசைத் திமிர் குறைத்தால் எங்களைப் போன்ற எளியவர்களின் கருத்துக்களை என்ன சொல்ல வ்ருகிறோம் என்று புரிந்துகொண்டு பதில் தர முடியும்.. இதுவும் விவாதமாக இருக்கும்

    • முத்தழகன்

     அன்புக்குரிய புதிய பரிதி

     //ஏன் ஹிந்தி திரை உலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தமுடியவில்லை? உலக அளவில் அவரது பாடல்களைக் கொண்டு செல்வதற்கு என்ன தடை இருக்கிறது?// இந்த கருத்து உண்மைதான். தமிழ், மலையாளம், தெலுங்கு அளவிற்கு ஹிந்தி படங்கள் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த படங்களில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.

     சமீப காலங்களில் ராஜ்குமார் சந்தோஷி, பால்கி போன்றோரின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். கொஞ்சம் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

     ஆனால் ஒரு படத்திற்கு பாடல்களை விடவும், பின்னணி இசையே முக்கியம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதனால்தான் உலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் 9 வது இடம். இல்லை 9 தவறு அவருக்கே முதல் இடம் கொடுத்திருக்க வேண்டும், அந்த அளவிற்கு அவர் அப்படி இப்படி என்று நான் புகழ்ந்திருந்தால் ஒரு வேளை கண்மூடித்தனமாக புகழ்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். உள்ளதை சொன்னது ஒரு குற்றமா?

     http://www.tasteofcinema.com/2014/the-25-greatest-film-composers-in-cinema-history/

     //கொஞ்சம் இசை குறித்து தெரிந்திருப்போர் (அ) இசை ரசனை உள்ளவர்கள் இங்கே விவாதித்தால் அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும்// இந்த வரிகளை நான் பயன்படுத்தியது தவறுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இசை ரசனை இருக்கும். எனக்கு ராஜாவின் இசை பிடித்தது போல் இன்னொருவருக்கு வேறோர் இசையமைப்பாளரின் இசை பிடித்திருப்பதில் தவறில்லை. அது அவரவர் உரிமை. விருப்பம் என்பது சரிதான்.

     ஆனால் என்னுடைய கருத்துக்களிலிருந்து நான் பின்வாங்கப்போவதில்லை, ஹிந்தி திரை உலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை, உலக அளவில் அவர் பாடல்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால், எப்படி 9-வது இடம் கிடைத்தது என்பதையும் நீங்கள் கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும். (உடனே அந்த வெப்சைட் போலி, அது போன்றொரு கருத்து கணிப்பு யார் வேண்டுமானாலும் வெப் தொடங்கி வெளியிடலாம் என்று வாதிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஓரளவிற்கேனும் அதில் இசையமைப்பாளர்களின் பட்டியல் சரியாகவே இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்)

     இளையராஜா இதுவரையிலான இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் முதல்வர் + உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் . . . . . . . . . . . 🙂

    • மகிழ்நன்

     //இப்போது யூடியூபில் செம ஹிட் அடித்த ஹங்கனம் ஸ்டைல் இந்தியப் பாடல் அல்ல ஆனால் இந்தியாவில் பிரபலமடைந்திருக்கிறது.. பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது..//

     இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குறானு அப்பாவி போலவே கேக்குறான்னு ஒரு பாட்டு அது கூட பிரபலடையலை….

     • புதிய பரிதி

      இப்ப யாரும் சாதி பார்க்கவில்லை என்று எங்குமே சொல்லவில்லை… எனது கேள்வி எல்லாம் இளையராஜாவின் பாடல் தமிழ்நாடு தாண்டி ஏன் பிரபலமைடையவில்லை . அதன் காரணம் என்ன? என்று ப்ராக்ரசிவாக ஆராய்வதுதான்.. சாதியின் பொருட்டே இளையராஜா வெளியில் பிரபலமாகவில்லை என்று சொல்வீர்களானால்.. தமிழகத்தில் யாரும் சாதி பார்க்கவில்லை அதனால் தமிழகத்தில் மட்டும் பிரபலமடைந்திருக்கிறார் என்று கூறுவது போல் உள்ளது.. இளையராஜாவின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும் என்கிற மொன்னையான கருத்தில் இருந்து வெளிவரும் போது மட்டுமே அவரது இசை குறித்து ஆராயவும் விவாதிக்க முடியும்.. அந்த நிலை மாற்றுவில் கூட இருக்காது எனும் போது இதைப் பற்றி பேசுவது வீண்… இதற்கு மேலும் இங்கே நேரத்தை விரயம் செய்ய முடியாது..

      நன்றி

 • vinoth

  மிக அழகிய வடிவம் …

  • முத்தழகன்

   நன்றி வினோத் . . . . . . .

 • R.Raja Ram

  நன்றாக, ரசித்து எழுதியிருக்கீங்க!! இன்னும் ஏதாவது ஒரு பாடலை மட்டும் எடுத்து, அதனது சிறப்பினை , வாத்தியங்கள் உபயோகம், பாடகர்கள், அவர்களின் குரல் வளம், இப்படி எழுதுங்கள்!!

 • புதிய பரிதியின் எதிர்வினையை கட்டுரையாளர் கவனத்தில் கொண்டு பதில் கொடுப்பார் நம்புகிறேன். – எந்தவொரு தனி நபரும் விமர்சனத்துக்கு உரியவர்தான். இருப்பினும், ரசிக மனம் ஒரு விசயத்தை வியப்பதற்கும், ஆய்வாளர்களின் பார்வைக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கும். முன்னது, ஒருவன் செயல்பட ஊக்கமளிக்கும், பின்னதுதான் அவர் மேம்பட வாய்ப்பளிக்கும். இந்த விசயத்தில் மட்டுமல்ல, திறைத்துரையில் எழுந்த பல்வேறு சர்ச்சைகளில் – ரசிகர் குரலுக்கும், நேர்மையான விமர்சனத்துக்கும் இடமளிக்கும் பணியை மாற்று தளம் செய்து வந்திருக்கிறது. முதல் முறையிலேயே நேர்கோடுகளை வரைவது எல்லோருக்கும் கைவருவதில்லை. திருத்தி வரைவதில் பிழையுமில்லை. ஒருவருக்கொருவர் பங்களித்து வளர்வதற்காகத்தானே எல்லாமும்.

  நன்றி!

 • அது ஏன் ராஜாவைப் பற்றி எழுதும் போது ராஜூ முருகன் மாதிரி ரொமேண்டிசைஸ் செய்யாமல் யாரும் எழுத மாட்டேன் என்கிறார்கள்… மேலே ஒருவர் ரவிசங்கர் தான் முதலில் சிம்பனி அமைத்தார் என்று ஒரு தகவலைச் சொல்லியுள்ளார் அதைப் பற்றி எதுவும் பேசக் காணோம்..

  //ஓர் அதிகாலைப் பொழுது, ஆள் அரவமற்ற ஒரு சாலை, மெல்லிய பனி மூட்டம், லேசான குளிர், ஒரு பேருந்து பயணம் மற்றும் இளையராஜாவின் இசை என்று கற்பனை செய்து கொண்டு இதில் இளையராஜாவின் இசையை மட்டும் கழித்து விட்டுப் பாருங்கள் அது உயிரற்ற வெறும் பயணமாக மட்டுமே இருக்கும்.// எவ்வளவு அபத்தமான ஒரு ஸ்டேட்மெண்ட். இளையராஜாவின் பாடல் இல்லாதபோதும் அது ரம்மியமான பொழுதாக இருக்க முடியும்.. அங்கே இளையராஜாவிற்குப் பதிலாக பிராங்க் சினாட்ரா பாடல் என்றோ பாரதியின் கவிதை என்றோ காதலியின் நினைவு என்றோ வைத்துக்கொண்டாலும் அது ரம்மியமான பொழுதே.. கையில் ஒரு தேனீர் கோப்பையோ மது நிறைந்த குவளையோ கூட அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அப்பொழுதை ரம்மியமாக்கும். இது எதுவுமே இல்லாமல் வெறும் அந்த சூழல் ஏற்படுத்தும் ஓசையே போதும் அந்த ரம்மியத்தை உணர…

  //ராஜா மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு இரண்டு காரணங்களே இருக்க வாய்ப்புள்ளது.

  இசை குறித்த எந்த அடிப்படை அறிவுமற்ற, வெறுமனே பீற்றிக் கொள்கிற ஜடமாக இருக்க வேண்டும்.
  இந்த படிநிலை சாதிய கட்டமைப்பின் சாதி எனும் சாக்கடையை மூளையில் ஏற்றியவராக இருக்க வேண்டும்//

  இப்படி ஒரு முட்டாள்த்தனமான கருத்தை மாற்று தனது தளத்தில் வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது.. சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார் அம்பேத்கர் கூட விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் அல்ல என்பதே ஒரு முற்போக்காளரின் கருத்தாக இருக்கமுடியும்.. இப்படி கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்களைத் தாக்கும் போக்கு ஒரு வித பாசிசத் தன்மையின் வெளிப்பாடே.. இதற்கும் குண்டுவைப்பவர்கள் ஒன்று பாகிஸ்தான் முஸ்லீம் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் … இல்லை இந்திய முஸ்லீம் தீவிரவாதிகளாக இருக்கவேண்டும் என்கிற கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  உண்மையில் ராஜாவின் ரசிகராக அவரது இசையின் ரசிகராக இருப்பின் தமிழ்நாட்டிற்குள் ஹிந்தி இசையை வரவிடாமல் செய்த ராஜாவால் ஏன் ஹிந்தி திரை உலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தமுடியவில்லை? உலக அளவில் அவரது பாடல்களைக் கொண்டு செல்வதற்கு என்ன தடை இருக்கிறது? கடைசியாக வெளிவந்த சித்திரையில் நிலாச்சோறு படப் பாடலும் உன் சமையலறையில் படத்தின் பாடலும் ஏன் வெற்றி அடையவில்லை? என்பதை ஆராய்ந்து எழுதியிருக்கவேண்டும். அதுதான் ராஜாவிற்கும் ராஜாவின் இசைக்கும் நல்லது…

  இசைஞானி இளையராஜாவே சொன்னது போல் ”இசை என்பது ஞானம் அல்ல தந்திரம்தான்”..

  • முத்தழகன்

   அன்பு நண்பர் puthiyaparithi

   //ராஜாவைப் பற்றி எழுதும் போது ராஜீ முருகன் மாதிரி . . . . . .. . // ராஜூ முருகன் எழுத்துக்களை நான் படித்ததில்லை. ஒரு வேளை ஜெமோ மாதிரி எழுதியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பாரு பரிதின்னு என்று நெனைக்கிறேன்.

   //மேலே ஒருவர் ரவிசங்கர் தான் முதலில் சிம்பனி அமைத்தார் என்று ஒரு தகவலைச் சொல்லியுள்ளார் அதைப் பற்றி எதுவும் பேசக் காணோம்.. // ரவி சங்கர் சிம்ஃபனி அமைத்தாரா? சிம்ஃபனியில் சிதார் இசைக்கருவி வருமா? சிம்ஃபனி என்றால் என்ன? என்று எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் ராஜாவிற்கு முன்னே ரவி சங்கர் சிம்ஃபனி அமைத்தார் என்கிற உங்களுடைய மேலோட்டமான பதிலுக்குதான் அந்த முதல் பதில்.

   // ஓர் அதிகாலைப் பொழுது, ஆள் அரவமற்ற சாலை . . . . . .. . // இதில் ராஜா பாடலுக்கு பதிலாக நீங்கள் கொடுத்திருக்கின்ற லிஸ்ட் எதுவும் தேவையில்லை. இதில் வறுமையின் கொடூரத்தில் சிக்கி, வேலை தேடி, வயிற்றில் பசியோடு அந்த பேருந்தில் செல்லும் ஓர் இளைஞனால் மேற்கூறிய எதையும் ரசிக்க முடியாது என்பதை நானும் அறிவேன்.

   //இப்படி ஒரு முட்டாள்த்தனமான கருத்தை மாற்று தனது தளத்தில் வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது.. சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார் அம்பேத்கர் கூட விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் அல்ல என்பதே ஒரு முற்போக்காளரின் கருத்தாக இருக்கமுடியும்.. // இதில் அம்பேத்கரை இழுத்ததிலிருந்தே இரண்டாவதற்கான பதில் அடங்கியுள்ளது. சொல்லும் போது கூட காந்தியும், நேருவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லாமல் அம்பேத்கரை இழுத்திருக்கிறீர்கள் அல்லவா? எந்த ஒரு பொது தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று பின்னூட்டம் இட்டிருந்தால் உங்கள் கருத்தை வரவேற்றிருந்திருப்பேன். அதை விடுத்து அம்பேத்கரை இழுத்ததிலிருந்தே இரண்டாவது பதிலுக்கான விடை கிடைக்கிறது.

   ஒரு இசையமைப்பாளரை இசையமைக்க அழைத்தால் மட்டுமே இசையமைக்க முடியும், இந்த எளிய கருத்துக்களை புரிந்து கொண்டால் ஏன் ஹிந்தியில் செய்யவில்லை, ஹாலிவுட்டில் செல்லவில்லை என்று அபத்தமாக கேட்டுக்கொண்டு இருக்க மாட்டீர்கள்.

   //உலக அளவில் அவரது பாடல்களைக் கொண்டு செல்வதற்கு என்ன தடை இருக்கிறது?// மற்ற தமிழ் பாடல்கள் உலக அளவில் ஹிட் ஆனதா என்று தெரியவில்லை. ஆனால் BEP, MIA, Gonja sufi போன்ற வெளிநாட்டு bands ராஜாவின் பாடல்களை பயன்படுத்தியிருக்கின்றார்கள். ”உனக்கும் எனக்கும் ஆனந்தம்” என்கிற பாடலை BEP band ரீ மிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்றால், கிட்டத் தட்ட ராஜாவின் அதிகமான பாடல்களை கேட்டே செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

   //சித்திரையில் நிலாச்சோறு படப் பாடலும் உன் சமையலறையில் படத்தின் பாடலும் ஏன் வெற்றி அடையவில்லை?// 1000 படங்கள் 5000ற்கும் மேற்பட்ட பாடல்கள், இதில் 5000 பாடல்களும் வெற்றியடைய சாத்தியமில்லை. இது அனைவரும் அறிந்ததே. ஒரு இசையமைப்பாளரிடமிருந்து இசையை வெளிக்கொணரும் திறமை இயக்குநருக்கு வேண்டும். இயக்குநரின் தேவையை பொறுத்தே இசையமைப்பாளர் தன்னுடைய பாடல் மற்றும் இசையை வெளிக்கொணர முடியும். பின்னணி இசை இதற்கு விதிவிலக்கு. உன் சமையலறையில் படத்தில் கூட ”இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சி சாப்பிட” என்கிற பாடல், கவாலி என்ற ஃபார்மெட்டில் உருவாக்கப்பட்டது. பொதுவாக இந்த ஃபார்மெட்டில் காதல் பாடல்களைத்தான் உருவாக்குவதுண்டு. ஆனால் ஒரு சமையல் பாடலை அந்த ஃபார்மெட்டில் உருவாக்கியிருக்கிறார். இது கூட ஒரு புது முயற்சிதானே?

   //இசைஞானி இளையராஜாவே சொன்னது போல் ”இசை என்பது ஞானம் அல்ல தந்திரம்தான்”..// இசை என்பது தந்திரம்தான், ச ரி க ம ப த நி யை மாற்றி மாற்றி போடும் தந்திரம்தான், அந்த தந்திரம் எல்லோருக்கும் கை கூடி வராது.

   நன்றி வணக்கம் . . . . . . . . . . .

   • //ஒரு வேளை ஜெமோ மாதிரி எழுதியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பாரு பரிதின்னு என்று நெனைக்கிறேன்.//

    தனிப்பட்ட தாக்குதல் இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை என்ற போதும் சொல்கிறேன்.. நான் ஜெமோவின் எல்லா எழுத்தையும் கொண்டாடியது கிடையாது.. ஜெமோவின் அபத்தமான அபுனைவை எல்லா சமயங்களிலும் அதிகபட்ச பகடிக்கு உட்படுத்தியே வந்திருக்கிறேன்..

    இது தனிப்பட்ட தாக்குதல் இல்லை என்றால், தான் எழுதும் அனைத்துக் கட்டுரைகளிலும் ரொமேண்டிசத்தன்மை அதிகம் கொண்டவர் என்பதாலேயே ராஜூமுருகனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் எதன் எடுத்துக்காட்டாக ஜெமோவைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்..

    \\ராஜாவிற்கு முன்னே ரவி சங்கர் சிம்ஃபனி அமைத்தார் என்கிற உங்களுடைய மேலோட்டமான பதிலுக்குதான் அந்த முதல் பதில்//

    //மேலே ஒருவர் ரவிசங்கர் தான் முதலில் சிம்பனி அமைத்தார் என்று ஒரு தகவலைச் சொல்லியுள்ளார் அதைப் பற்றி எதுவும் பேசக் காணோம்..//

    நான் எழுதியிருப்பதை கவனமாக படித்துப்பாருங்கள்.. ரவிசங்கர் சிம்பனி அமைத்தார் என்று ஒருவர் ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார். அது சரியா தவறா என்று யாரும் விவாதிக்காமல் ராஜா ராஜாதான் என்று புகழ்ந்துகொண்டே இருக்கிறீர்கள் (நான் பின்னூட்டம் இடும் வரை அதைப் பற்றி யாருமே பேசவில்லை என்பதை கவனத்தில் கொள்க) என்று தான் சொல்லியிருக்கிறேன்.. இங்கே ரவிசங்கர் சிம்பனி அமைத்தார் என்று நான் சொல்லவில்லை ஒருவர் சொல்லியிருக்கிறார் அதற்கு எந்த வினையையும் ஆற்றாமல் வெறும் புகழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்களே ராஜா ரசிகர்களே என்றுதான் கேட்டிருக்கிறேன்..

    //அம்பேத்கரை இழுத்ததிலிருந்தே இரண்டாவதற்கான பதில் அடங்கியுள்ளது. சொல்லும் போது கூட காந்தியும், நேருவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லாமல் அம்பேத்கரை இழுத்திருக்கிறீர்கள் அல்லவா? எந்த ஒரு பொது தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று பின்னூட்டம் இட்டிருந்தால் உங்கள் கருத்தை வரவேற்றிருந்திருப்பேன்..//

    யாரை நாம் பெரிதாக மதிக்கிறோமோ அவர்களைத்தான் இது போன்ற எடுத்துக்காட்டுக்கு எடுத்தாளமுடியும்.. இதற்கு மோடியும் ராஜபக்சேவும் கூட விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்கள் அல்ல என்று சொல்ல முடியுமா.. அப்படிச் சொல்வேனே ஆனால் நான் மோடியையும் ராஜபக்சேவையும் பெரிதும் மதித்திருக்கிறேன் என்று பொருள்… பெரியார் அம்பேத்கர் போன்ற அவ்வளவு பெரிய அறிவாளிகளே விமர்சனத்திற்கு உரியவர்கள் எனும் போது ராஜா விமர்சனத்திற்கு உரியவர்தான் என்று சொல்லியிருக்கிறேன்.. நான் காந்தியையும் நேருவையும் அவ்வளவு பெரிய அறிவாளிகளாக நினைக்காததே அவர்களைச் சொல்லாததற்கு காரணம்..

    //எந்த ஒரு பொது தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று பின்னூட்டம் இட்டிருந்தால் உங்கள் கருத்தை வரவேற்றிருந்திருப்பேன்..// அம்பேத்கரும் பெரியாரும் பொதுத்தலைவர்களே.. அவர்களை நீங்கள் பொதுத்தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் ஒன்று செய்யமுடியாது

    //அதை விடுத்து அம்பேத்கரை இழுத்ததிலிருந்தே இரண்டாவது பதிலுக்கான விடை கிடைக்கிறது.// இதுவும் என்னைப் பற்றிய தனிப்பட்டத் தாக்குதலே… சாதியின் பொருட்டு நான் ராஜாவை விமர்சிக்கிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.. உங்களது கற்பனைக்கு நான் பதில் சொல்லமுடியாது.. எனது சாதி குறித்தான பார்வையை உங்களிடம் விளக்கிச் சொல்ல இழிவாக இருக்கிறது… உடனே பாருங்கள் இவன் எங்களிடம் எல்லாம் சாதி பற்றி விளக்கிச்சொல்வதை இழிவாக கருதுகிறான். இவன் சாதியப் பார்வை கொண்டவன் என்று திமிரவேண்டாம்.. ஒரு நேர்மையாளன் தான் எவ்வளவு நேர்மையாளன் என்று எடுத்துரைக்கும் நிலையை இழிநிலை என்றே கருதுகிறேன்.. இப்படிக் குறிப்பிட்டதற்கு தங்களது விளக்கத்தைச் சொல்லியே ஆகவேண்டும்..

    அடுத்து உங்களது கருத்துக்களிலேயே முரண் இருக்கிறது

    //ஒரு இசையமைப்பாளரை இசையமைக்க அழைத்தால் மட்டுமே இசையமைக்க முடியும், இந்த எளிய கருத்துக்களை புரிந்து கொண்டால் ஏன் ஹிந்தியில் செய்யவில்லை, ஹாலிவுட்டில் செல்லவில்லை என்று அபத்தமாக கேட்டுக்கொண்டு இருக்க மாட்டீர்கள்.//

    என்று சொல்கிறீர்கள் அடுத்த வரியிலேயே வெளிநாட்டு பேண்ட் எல்லாம் ராஜா பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இதில் இருந்து இசை நன்றாக இருக்கும் பட்சத்தில் அழைக்கவேண்டிய அவசியம் இல்லை அது பிரபலமடைந்துவிடும் வெளிநாட்டுக்காரர்கள் எடுத்து பயன்படுத்துவார்கள் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்…

    இல்லை என்ன இருந்தாலும் கூப்பிடனும் என்றால் இந்தக்கதையைத் தான் உங்களுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.

    “எங்க மாஸ்டர் நல்லா சூப்பரா சமைப்பார்”

    “அப்ப ஏன்பா பக்கத்து ஊரு விழாவுக்கு சமைக்கிறது இல்ல”

    “கூப்பிட்டா சமைக்கமாட்டாரா”

    “ஏம்பா கூப்பிடல”

    “நல்லா சூப்பரா சமைச்சா கூப்பிட்டிருக்க மாட்டாங்களா?”

    இதுதான் நீங்கள் சொன்ன அழைத்தலுக்கான விளக்கம்.. மேலும் ஏன் ராஜா அங்கே செல்லவில்லை என்று கேட்கவில்லை ஏன் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் கேட்டிருக்கிறேன்.. (ஒரு நான்கு பேண்ட் அவர் பாடலைப் பயன்படுத்தியதே அவரால் அதிகபட்சம் ஏற்படுத்த முடிந்த பாதிப்பு என்று வாதிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்) இந்தியாவில் பாதிப்பேற்படுத்த மைகெல் ஜாக்சன் இந்திய மொழிகளில் இசை அமைக்கவில்லை..

    //1000 படங்கள் 5000ற்கும் மேற்பட்ட பாடல்கள், இதில் 5000 பாடல்களும் வெற்றியடைய சாத்தியமில்லை.// ஆனால் கடைசியாக வந்த ஹிட் பாடல் ஆல்பம் என்று யோசித்தால் எது என்று யோசிக்கவேண்டும்.. ஒருவர் 5000 பாடல்கள் போடுகிறார் அதில் கடைசி நூறு பாடல்கள் வெற்றி பெறவில்லை என்றால் அவர் அதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றே அர்த்தம்.. இது ஆவரேஜ் போட்டு எடுக்க விளையாட்டில் பெறும் புள்ளிகள் கிடையாது…

    //”இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சி சாப்பிட” என்கிற பாடல், கவாலி என்ற ஃபார்மெட்டில் உருவாக்கப்பட்டது. பொதுவாக இந்த ஃபார்மெட்டில் காதல் பாடல்களைத்தான் உருவாக்குவதுண்டு. ஆனால் ஒரு சமையல் பாடலை அந்த ஃபார்மெட்டில் உருவாக்கியிருக்கிறார். இது கூட ஒரு புது முயற்சிதானே?//

    இந்த பொறப்புத்தான் நல்ல காதல் செஞ்சிட கிடைச்சதுன்னு போட்டா அது காதல் பாடலுங்க இதுக்கு நீங்க பாடலாசிரியரத்தான் பாராட்டனும்.. இல்லப் பாட்ட எழுதினதுக்கு அப்புறம் தான் ட்யூன் போட்டாங்க என்றாலும் ராஜாவே சொன்னது போல் எல்லா பார்மட்டும் எல்லா மூடுக்கும் ஒத்துவரும்.. அதனால மூடை மாத்திப் போட்டதை எல்லாம் புது முயற்சின்னிங்கன்னா….. ரொம்ப கஷ்டம் தான்….. இன்னொன்னு அது கேக்குற மாதிரியா இருந்தது… இளையராஜாவின் பாடல்களில் இருக்கும் நல்ல விசயங்களில் ஒன்று உச்சரிப்பு அந்தப் பாட்டில் தமிழ் பட்டப்பாட்டை பாட ஒரு வாய் போதாது…

    , //அந்த தந்திரம் எல்லோருக்கும் கை கூடி வராது// எல்லோருக்கும் கைகூடி வந்தால் அது தந்திரம் கிடையாது அது சாதாரணம்…

    இறுதியாக

    நீங்கள் ஒரு கருத்தைப் பதிவிட்டுவிட்டீர்கள் என்பதற்காகவே அதையே பிடித்துத் தொங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. எனது சேட் பாக்சில் நீங்கள் வந்து ராஜாவின் இசையைப் பற்றி பேசியதற்கும் இங்கு வந்து பேசியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது… உங்களது பதிலில் எனது கருத்துக்களை எப்படியாவது மறுத்துவிட வேண்டும் என்கிற துடிப்பு மட்டும்தான் இருக்கிறது.. அது என்னைத் தனிப்பட்டுத் தாக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.. மேலும் நீங்கள் எனது சேட் பாக்சில் வந்து சொன்னது போல் ”உங்களுக்கு ராஜாவைப் பற்றி விமர்சனம் இருந்தாலும் அவரது ரசிகர் என்பதால் அதைப் பற்றி வெளியே சொல்லாமல் இருக்கலாம் ஆனால் என்னால் அப்படி இருக்கு முடியாது” இது ஒரு விவாதக் களமாக இருக்கும் என்று நம்பியே கமண்ட் இட்டேன்.. விதண்டாவாதக் களமாக இருக்கும்பட்சத்தில் இனி இந்தப்பக்கம் வராமல் இருப்பதையே விரும்புகிறேன்..

    • முத்தழகன்

     உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் ஏதேனும் நிகழ்ந்திருந்தால் மன்னிக்கவும். எதையும் பிடித்து தொங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்கள் அம்பேத்கரை பெரிதாக மதிப்பதற்கும்/மதித்துக் கொண்டிருப்பதற்கும் நன்றிகள்.

     • புதிய பரிதி

      //ஏதேனும் நிகழ்ந்திருந்தால்// இந்த மாதிரி மலுப்பல் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.. நீங்கள் தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டது தவறு என்று ஒப்புக் கொள்ளவேண்டும். மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இது போன்று வேறெவரையும் தனிப்பட்டுத் தாக்குதல் தொடுக்க மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும். அப்படி தாக்குதல் நிகழவில்லை என்றால் நான் எனது கமண்டில் கேட்ட விளக்கங்களைத் தரவேண்டும்.

      //அம்பேத்கரை மதித்தலுக்கு நன்றிகள்// எதற்கு நன்றி நீங்கள் என்னை என்னவாக சித்தரிக்க முயலுகிறீர்கள். அம்பேத்கர் உங்களுக்கு மட்டுமே உரிமையானவரா.. எங்கள் தலைவரை மதித்ததற்கு நன்றி என்பது போல் நீங்கள் சொல்வதன் மூலம் நான் அந்நியன் அதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவன் என்கிற அர்த்தம் வெளிப்படுகிறதே

      • முத்தழகன்

       //நான் எனது கமண்டில் கேட்ட விளக்கங்களைத் தரவேண்டும்//

       தனிமனித தாக்குதல் எதுவும் தொடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. இருப்பினும் உங்கள் மனம் புண்படும்படி ஆகியிருந்தால் அதற்கு மன்னிப்பு. இதை பலமுறை விளக்கி விட்டேன் ஒரு வேளை நாம் ஒரு X எழுத்தாளரைப் பற்றி முன்னமே ஓரிருமுறை பேசியிருந்தால் அந்த X எழுத்தாளர் போல் எழுதியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரோ என்று கேட்டிருந்திருப்பேன் அவ்வளவுதான் என்று. அதற்காக அந்த X எழுத்தாளரை உங்களுக்கு பிடித்திருக்க வேண்டும் என்றெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் மிகவும் வெறுக்கிற நபராக கூட அந்த X எழுத்தாளர் இருக்கலாம் தவறில்லை.

       இந்த கட்டுரைக்கு எந்த சம்பந்தமுமின்றி அம்பேத்கரை இழுத்து வந்து அவர் நான் மிகவும் மதிக்கும் தலைவர் என்றீர்களே அதற்காக அந்த நன்றி. அவர் எங்கள் தலைவர் என்கிற தொணியில் இல்லை. இந்த இடத்தில் வேறு எந்த தலைவரை சொல்லி அவர் நான் மிகவும் மதிக்கும் தலைவர் என்றிருந்தாலும் இதே நன்றிதான் சொல்லியிருந்திருப்பேன்.

       //இல்லை என்ன இருந்தாலும் கூப்பிடனும் என்றால் இந்தக்கதையைத் தான் உங்களுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.

       “எங்க மாஸ்டர் நல்லா சூப்பரா சமைப்பார்”

       “அப்ப ஏன்பா பக்கத்து ஊரு விழாவுக்கு சமைக்கிறது இல்ல”

       “கூப்பிட்டா சமைக்கமாட்டாரா”

       “ஏம்பா கூப்பிடல”

       “நல்லா சூப்பரா சமைச்சா கூப்பிட்டிருக்க மாட்டாங்களா?”

       இதுதான் நீங்கள் சொன்ன அழைத்தலுக்கான விளக்கம்..//

       நல்ல கதைதான். சிந்திக்கும் விதமாக இருந்தது. மாஸ்டர் சூப்பரா சமைச்சும் ஏன் சமைக்க கூப்பிடலங்கிறது. இந்த உலகம் முழுசும் நல்லா சமைக்கிற மாஸ்டர்ஸ் 25 பேர செலக்ட் பண்ணும் போது நான் சொல்ற மாஸ்டரும் அதுல வராரே எப்டி????????? அவர் உலகத்துலயே நல்லா சமைக்கிற மாஸ்டர்ஸ்ல ஒருத்தரா இருக்கிறதுனாலதான?

       // ஒருவர் 5000 பாடல்கள் போடுகிறார் அதில் கடைசி நூறு பாடல்கள் வெற்றி பெறவில்லை என்றால் அவர் அதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றே அர்த்தம்.. இது ஆவரேஜ் போட்டு எடுக்க விளையாட்டில் பெறும் புள்ளிகள் கிடையாது…// ஆவரேஜ் போட்டு எடுக்க முடியாதுதான், ஒத்துக்கிறேன். ஆனா இன்னமும் ”ஓநாயும் ஆட்டுக்குட்டி”யும் மாதிரியான படத்திற்கு பிரமாதமான பின்னணி இசை வழங்க முடிகிறதே எப்டி? பாடல்கள் மட்டுமே ஒரு இசையமைப்பாளரின் தகுதி இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று கருதுகிறேன்.

       //இந்த பொறப்புத்தான் நல்ல காதல் செஞ்சிட கிடைச்சதுன்னு போட்டா அது காதல் பாடலுங்க இதுக்கு நீங்க பாடலாசிரியரத்தான் பாராட்டனும்..// சோக இசைக்கென பயன்படுத்தப்பட்ட ஷெனாயை சந்தோஷத்திற்காக பயன்படுத்தினார் என்றால். இதுல என்ன இருக்குது ஷேனாய் ஊதுறவர் கொஞ்சம் சந்தோஷமா ஊதினா சந்தோஷம்ங்கிற மாதிரி இருக்குது.

       //இளையராஜாவே சொன்னது போல் இசை ஒரு தந்திரம்// இளையராஜா நிறைய தடவை நான் ஒண்ணுமே கிடையாது, மியூசிக் பண்ணவே தெரியாது, சும்மா பண்றேன்னு சொல்லியிருக்கார் உடனே பார்த்தியா, அவரே சொல்லிட்டாரு, அதனால அவருக்கு இசை தெரியாதுன்னு ஆயிடுமா?????

       எப்பாடுபட்டேனும் ராஜாவை சிறந்த இசையமைப்பாளர் இல்லை என்று நிரூபித்து விட துடிக்கிறீர்கள். ஹிந்தியில் பாதிப்பு, உலக அளவு, லேட்டஸ்ட் ஹிட்ஸ் என்று ஆனால் அது சாத்தியமாகாது. மேலும் ஹிந்தியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, உலக அளவில் பாடல்களை கொண்டு செல்ல இயலவில்லை என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் இளையராஜா எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற கருத்தை திணிக்க முயல்கிறீர்கள். இது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இல்லை. ஹிந்தி திரையுலகம் என்ன இசையின் தரத்தை அளவிடக்கூடிய அளவுகோலா?????? அங்கே பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம்தான் இசையமைப்பாளரின் திறமை நிர்ணயிக்கப்படுமா?????? . . . . . . . . . .

       உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் 9-வது இடம் என்பதை மீண்டுமொருமுறை நினைவூட்ட விரும்புகிறேன். இதுவே இறுதியானது அல்ல. வேறொரு பட்டியல் வரலாம். அதில் வேறோர் இசையமைப்பாளர் இடம் பெறலாம். ஆனாலும் இன்று வரை இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ராஜா.

       இதைத்தான் கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

 • uma bharathi

  அருமையான பதிவு. தினமும் இளையராஜா அவர்களை பற்றி சிலாகித்து பேசும் உங்களிடமிருந்து இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்.//நூறாவது நாள் சேஸிங்க் காட்சியில் உறைய வைக்கவும், மெளன ராகத்தின் காதல் காட்சிகளில் உருக வைக்கவும், வைதேகி காத்திருந்தாள் சோக காட்சிகளில் அழ வைக்கவும், கரகாட்டக்காரன் ”சொப்பனசுந்தரி கார யாரு வச்சிருந்தா?” காமெடியில் சிரிக்க வைக்கவும், இன்னும் வார்த்தைகளில் வெளிக்கொணர்ந்திட முடியாத எத்தனையோ உணர்வுகள்// இவற்றில் உங்களின் உணர்வுகளையே உணரமுடிகிறது. தினமும் இளையராஜா பற்றி பேசும் போது வருகின்ற ஆர்ப்பரிப்பு இந்த கட்டுரையில் இல்லையென்பதே என் கருத்து. உங்கள் பதிவில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை எதிர்பார்க்கிறேன்

 • arul

  super

 • “இசைத் துறையின் உச்சபட்சம் என்று கருதப்படுகிற சிம்ஃபனி இசையை இசைத்த ஒரே தெற்காசியாவை சேர்ந்தவரும் என இசையை வசப்படுத்திய ஆளுமையுமானவரும் என்றுமே இளையராஜா தான்.”

  மன்னிக்கவும்.இது உண்மைக்கு முரணானது. முதலில் இளையராஜா சிம்பனி அமைத்தாரா என்பதே விவாததிற்குரியது. அப்படி இருந்தாலும் அது ஏன் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது என்ற புதிருக்கு விடை இல்லை. இதைத் தாண்டி இளையராஜாவுக்கு (சிம்பனி அமைத்தார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலுமே) முன்பே ரவி ஷங்கர் (சிதார் இசைஞர்) அதை செய்துவிட்டார். இதோ நீங்களே படியுங்கள்.

  In October 1970 Shankar became chair of the department of Indian music of the California Institute of the Arts after previously teaching at the City College of New York, the University of California, Los Angeles, and being guest lecturer at other colleges and universities, including the Ali Akbar College of Music.[12][32][33] In late 1970, the London Symphony Orchestra invited Shankar to compose a concerto with sitar. Concerto for Sitar and Orchestra was performed with André Previn as conductor and Shankar playing the sitar.[4][34]
  கீழே உள்ளது ரவி ஷங்கரின் சிம்பனி இசையின் விபரங்கள். இதைப் போன்ற தெளிவான ஆதாரங்கள் ராஜாவின் சிம்பனி பற்றி இருந்தால் தெரிவிக்கவும்.

  http://www.discogs.com/Ravi-Shankar-Andr%C3%A9-Previn-London-Symphony-Orchestra-Concerto-For-Sitar-Orchestra/release/1615843

  • முத்தழகன்

   http://en.wikipedia.org/wiki/Ilaiyaraaja

   kaarigan kisco அவர்களே

   an opening sonata or allegro
   a slow movement, such as adagio
   a minuet or scherzo with trio
   an allegro, rondo, or sonata

   இவைதான் சிம்ஃபனியினுடைய கட்டமைப்பு. Franz Joseph Haydn தான் சிம்ஃபனி இசையின் தந்தை. மேற்கூறிய நான்கு விஷயங்களும் ஐரோப்பிய பாரம்பரித்திற்கு ஏற்றாற் போல வடிவமைக்கப்பட்டது. 21ம் நூற்றாண்டில் சிம்ஃபனி அமைப்பவர்கள் கூட இதே கட்டமைப்பு மற்றும் இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் இந்திய வாத்தியக்கருவிகளை பயன்படுத்தும் பட்சத்தில் அது fusion music, அதை சிம்ஃபனி என கருத முடியாது. உதாரணத்திற்கு திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் எலக்ட்ரிக் கிடார் பயன்படுத்த முடியாது.

   //In 1993 he organised a full symphony performed by the Royal Philharmonic Orchestra in London and thus became the first Indian to compose a full symphony, with Ravi Shankar being the only other Indian to do so. He is also the first Asian to compose a full symphony performed by the Royal Philharmonic Orchestra.//

   http://en.wikipedia.org/wiki/Ravi_Shankar

   //In late 1970, the London Symphony Orchestra invited Shankar to compose a concerto with sitar. Concerto for Sitar and Orchestra was performed with André Previn as conductor and Shankar playing the sitar.//

   இந்த இரண்டு தகவல்களும் கொடுக்கின்ற செய்தி என்னவென்றால் இளையராஜா சிம்ஃபனி அமைக்க அழைக்கப்பட்டார். ரவி சங்கர் சிம்ஃபனியில் சிதார் இசைக்க அழைக்கப்பட்டார். இதை நீங்களே தெளிவு படுத்தியிருக்கின்றீர்கள். //Concerto for Sitar and Orchestra was performed with André Previn as conductor and Shankar playing the sitar.// இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதன் படி பார்த்தால் André Previnதான் அந்த சிம்ஃபனிக்கு சொந்தக்காரர்.

   மேலும்

   //The website of the Ravi Shankar Foundation provides the information that “The symphony was written in Indian notation in 2010, and has been interpreted by his student and conductor, David Murphy.”[50] The information available on the website does not explain this process of “interpretation” of Ravi Shankar’s notation by David Murphy, nor how Ravi Shankar’s Indian notation could accommodate Western orchestral writing.//

   சிம்ஃபனி இசைக்குழுவை வைத்து எதை வாசித்தாலும் அது சிம்ஃபனி ஆகி விடாது. ராஜா கூட நிறைய படங்களில் அதிகமான வாத்தியக்கருவிகளை சிம்ஃபனி ஆர்கஸ்ட்ராவில் பயன்படுத்தி பின்னணி இசையை அமைத்திருப்பார். அதில் மேற்கத்திய கருவிகளும் வட இந்திய தென்னிந்திய கருவிகளும் பயன்படுத்தப்படிருக்கும். ஆனால் அது கூட சிம்ஃபனி ஆகி விடாது.

   ஒரு இசைக்குழுவில் ஒருவர் ஒரு வாத்தியக்கருவியை இசைக்கிறார் என்றால் அவரே அதை கம்போஸ் செய்தவர் ஆகி விட மாட்டார். யார் கம்போஸ் செய்கிறார்களோ அதாவது நொட்டேஷன்ஸ் எழுதுகிறார்களோ அவரே அந்த இசைக்கு சொந்தக்காரர். ஹரிப்ரசாத் செளராஸ்யா மிகச்சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஆனால் அவரை வைத்து Nothing But wind ஆல்பம் உருவாக்கிய இளையராஜாவே அந்த ஆல்பத்தின் பிதாமகன்.

   சிம்ஃபனியும் அதைப்போன்றுதான். சிம்ஃபனியை பொறுத்த மட்டில் Notations எழுதி conduct ம் செய்ய வேண்டும் அல்லது Noations மட்டுமாவது எழுதி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் சிம்ஃபனி அமைத்தவராக அங்கீகரிக்கப்படுவார். அப்படி பார்த்தால் ராஜா ஒருவரே London Royal Philharmonic Orchestra in Royal Albert Hall-ல் சிம்ஃபனி அமைத்த ஆசியாவின் ஒரே நபர்.

   அமிதாப்-ன் பேட்டி 2.32 நொடியிலிருந்து கவனியுங்கள்

   http://www.youtube.com/watch?v=bljsl63X-Jw

   வை.கோ வின் பேச்சில் 7.34 நொடியிலிருந்து கவனியுங்கள்

   http://www.youtube.com/watch?v=9PQucV40__4&feature=kp

   சிம்ஃபனி இசைக்கென ஒரு கட்டுப்பாடு, பாரம்பரியம் உள்ளது. சிதார், வீணை, உடுக்கை,தவில், நாதஸ்வரம், தாரை தப்பட்டை போன்ற இசைக்கருவிகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் இதை அங்கே பயன்படுத்திக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் அது சிம்ஃபனி என்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

   ஒரு கலைஞனுக்கு தனது படைப்பை வெளிக்கொணரவும், வெளிக்கொணராமல் இருக்கவும் முழு உரிமையுள்ளது. தன் வாழ்நாளுக்குப் பிறகு இந்த சிம்ஃபனியை மக்களுக்கு பரிசளிக்க உத்தேசித்துள்ளார் என்று கேள்விப்பட்டேன்.

 • கதிரவன்

  இளையராஜாவின் ரசிகர்கள் கண்டிப்பாக இதை உணர்ந்திருப்பார்கள்.. இது பலமுறை நடந்திருக்கிறது… கண்டிப்பாக அடுத்த பாடல் முடிந்தவுடன் தூங்கிவிடவேண்டும் எண்ணுகையில் மணி 1.00 தாண்டியிருக்கும்… அவரை பற்றி நாம் அனைவரும் அறிந்தே…. ஆனால் அவரின் இசையினால் எற்படும் உடல்வேதியியல் மாற்றங்களை உணர்வுபூர்வுடன் பதிவுசெய்தமைக்கு தம்பி முத்தழகனுக்கு வாழ்த்துக்கள்..

  “என்றேனும் தனித்து விடப்பட்ட நள்ளிரவு வேளையில், ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே தூங்கிப்போகலாம் என்று முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முயற்சியில் தோற்று பல இரவுகள் சிவராத்திரியாக மாறிப்போக வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் உறங்கச் செய்யவும், உறங்க விடாமல் செய்யவும் என்பது ராஜாவால் மட்டுமே சாத்தியம்”

 • தங்களது ‘இளையராசா’ பதிவை வாசித்த மகிழ்வைப் பகிர்கிறேன். நல்லதை எங்கு கண்டாலும் வாழ்த்த வேண்டும் – பாராட்ட வேண்டும். இப்படியானவர்களால்தான் தெளிவாகக் குறைகளையும் சுட்டிக் காட்டும் சனநாயக விமர்சனங்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாது ஆற்றலாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட்டு கௌரவப்படுத்தப்பட வேண்டும்.
  இசை கட்புலனூடக அறிப்பட முடியாததொன்று ஆனால் செவிகளுக்கூடாக நேரடியாக மண்டையை அடைந்துவிடக்கூடியதுமான நுண்ணசைவைக் கொண்டது. மனிதருக்கானதான ‘மானுட மனவுணர்வை’ உந்தித் தள்ளும் ஆற்றல் கொண்டது. இதனால் உந்தப்பட்ட பலரும் அந்த இசைப் பிறப்பாக்கலின் மூலத்தை அறிய ஆவல் கொள்வது யதார்த்தம். இப்படியாக உலகில் பலரை நாம் அறிந்து கொண்டவாறே பயணப்படுகிறோம்.
  எமக்கான ‘இசை’ அடையாளத்தை ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடா!’ எனும் கனவை வெற்று வார்த்தைகளாக உளறாமல் நிகழ்த்திக் காட்டி வாழ்பவர் எங்கள் ‘இசைஞானி இளையராசா’
  “இளையராஜா இன்றி இந்த உலகை கற்பனை செய்து பார்ப்பதே வண்ணங்களின்றி வெறுமையாக பார்ப்பது போல் உள்ளது. என்னதான் இருந்தாலும் என தொடங்கி ராஜா மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு இரண்டு காரணங்களே இருக்க வாய்ப்புள்ளது.

  இசை குறித்த எந்த அடிப்படை அறிவுமற்ற, வெறுமனே பீற்றிக் கொள்கிற ஜடமாக இருக்க வேண்டும்.
  இந்த படிநிலை சாதிய கட்டமைப்பின் சாதி எனும் சாக்கடையை மூளையில் ஏற்றியவராக இருக்க வேண்டும்.
  … இந்த உலகின் மிக அழகான விஷயம் என்பது அமைதி. அடுத்து இசை. அதுவும் ரஜாவின் இசை.” என்ற தங்களது வரிகளுடன் நானும் உடன்படுகிறேன்.
  இளையராசா எனும் எங்கள் இசைராசாவே – நீர் நீடுவாழ்க! சாதனைகளைத் தொடர்க!!

 • முத்தழகன்

  நன்றி சிந்தன். ராஜாவை பற்றி முழுமையாக ஒரே கட்டுரையில் எழுத வேண்டும் என்பது கடல் நீரை பாட்டிலுக்குள் அடைக்க சொல்வது போன்றது. ஒரு பெரிய மெகா சீரியல் அளவுக்கு எழுதலாம், எழுதிகிட்டே இருக்கலாம். சம காலத்தின் மகத்தான கலைஞன் . . . . . . . . . .

 • Bhagath

  அருமையான பதிவு. ராஜாவின் பாடலை போன்றே ரசனையான பதிவு.

  • முத்தழகன்

   நன்றி தோழர் பகத் 🙂

 • முதழகன் முதலில் உங்கள் ரசனைக்கு பாராட்டுக்கள். செம்மயா எழுதியிருக்கீங்க … இளையராஜாவின் அத்தனை பரிணாமத்தையும் ஒரே கட்டுரையில் கொண்டுவர முடியாது. இருப்பினும், இந்த எழுத்துக்கள் ஒரே நேரத்தில் பரவசத்தையும், பிரம்மிப்பையும் கொடுக்கின்றன.