ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது!

ஆயிஷா நடராஜன் என பிரபலமாக அறியப்படும், எழுத்தாளர் இரா.நடாராஜன் சிறுவர் இலக்கியங்கள், கல்வி குறித்த புத்தகங்கள் ஏராளம் எழுதியுள்ளார். அடுத்த தலைமுறைக்கு விஞ்ஞான அறிவூட்டுவதற்காக தன்னை அற்பணித்துக் கொண்ட அவருக்கு 2014 ஆம் ஆண்டுகான ‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்று இணையம், தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

2014ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கர் விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

இரா. நடராசன் பற்றி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள விபரங்கள்:

ஆயிஷா இரா, நடராசன் (பிறப்பு 1964)

தமிழில் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள் என அனைத்து தளங்களிலும் இயங்கிவரும் முன்னணி எழுத்தாளர் என்றாலும் குறிப்பாக சிறுவர் இலக்கிய படைப்பாளியாக கடந்த இருபதாண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார், இவரது ஆயிஷா எனும் குறுநாவல் (பள்ளிக்கூட சிறுமியின் துயரக்கதை) தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களை அது முன்மொழிந்தது,

• நாகா, மலர் அல்ஜிப்ரா,ரோஸ், ஒரு தோழனும் மூன்று நண்பர்களும், ஒரு தோழியின் கதை,ரஃப் நோட்டு போன்றவை சிறுவர்களுக்கான இவரது நாவல் படைப்புகள்,

• சர்க்கஸ் டாட்காம், பூஜ்ஜியமாம் ஆண்டு, விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்,பூமா, விண்வெளிக்கு ஒருபுறவழிசாலை. ஆகியவை இவரது அறிவியல் புனை கதைகள்,

• பார்வையற்ற குழந்தைகளும் வாசிக்கும் வண்ணம் தமிழின் முதல் முயற்சியாக இவரது ‘பூஜ்ஜியமாம் ஆண்டு’ நாவல் பிரைல் மொழியிலும் வெளிவந்துள்ளது,

• நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா உட்பட சிறுவர்களுக்கான முப்பத்தாறு அறிவியல் நூல்களை இதுவரை படைத்திருக்கிறார்,

• நவீன பஞ்சதந்திர கதைகள். நத்தைக்கு எத்தனைக் கால் போன்றவை குழந்தைகளுக்கான நவீன கதையாடல்,

• உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன். நீ எறும்புகளை நேசிக்கிறாயா. ஃபீனிக்ஸ் (அறிவியல் நாடகங்கள்) .நம்பர் பூதம். குண்டுராஜா 1.2.3.இரவு பகலான கதை போன்றவை அவரது சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்புகள்

• டார்வின். பாரடே. மேரிகியூரி.கலீலியோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்கள் மேடையேற்றும் ஓரங்க நாடகங்களாக இவர் படைத்துள்ளார்.

• ஆயிஷா, ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் எனும் நாவல் உலகப்பெண் விஞ்ஞானிகள், வரலாறு மறந்த விஞ்ஞானிகள் ஆகிய அறிவியல் நூல்கள் உட்பட இவரது பல சிறுவர் இலக்கிய படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கொங்கனி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

சிறந்த கல்வியாளராக அறியப்பட்டுள்ள இவர் சமீபத்தில் எழுதிய ‘இதுயாருடைய வகுப்பறை’ எனும் புத்தகம் சென்னை புத்தக கண்காட்சி உட்பட தமிழகத்தின் புத்தக கண்காட்சிகளில் தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

ஏற்கனவே தனது கணிதத்தின் கதை நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றவர்,கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் ‘புத்தகம் பேசுது‘ மாத இதழின் ஆசிரியர்.

  • vimalavidya

    congratulations to Shri.Natarajan and his contributions- He needs 48 hours per day- such a hard work gave plenty of treasures to tamil readers-vimalavidya@gmail.com