ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி அறிவியல் இயக்கம் ஆய்வறிக்கை …

நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்படி வந்தது?

பொருளாதார விரிவாக்கத்திற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 15.2.2017 ல் கூடியது. இக்கூட்டத்தில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதலீட்டை அதிகரிப்பது, பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்ய அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்தியாவில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டில் முன்னோட்டம் …

வானக்கன்காடு பகுதியில் 92 -93 களிலும், கருக்காகுறிச்சி, நல்லான்கொல்லை, வடகாடு ,கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் 2006ம் ஆண்டுகளிலும் இதற்கான முன்னோட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் ஆழ்குழாய் மூலம் துளையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இப்பணியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் மேற்கொண்டு வருகிறது.

மீத்தேன், ஈத்தேன், ஷேல் கேஷ் அனைத்தின் வடிவம்…

கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் இணைவுதான் ஹைட்ரோ கார்பன். மீத்தேனின் வேதி இணைவு கார்பனும் ஹைட்ரஜனும் தான். மொத்தத்தில் பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் மொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன் ஆகும்.

பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சாதகம் ….

2016க்கு முன்புவரை மீத்தேன், பெட்ரோலியம், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் எடுப்பதற்கு தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் ஆனால், 3.3.2016க்குப் பின்பு ‘ஹைட்ரோ கார்பன்’ என்ற பெயரில் ஒரே அனுமதியில் எந்த எரிபொருளும் எடுக்கலாம். அந்த அடிப்படையில் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்ற திட்டம் அனுமதி பெற்றுள்ளது.

மீத்தேன் எடுப்பதே தவறா?

மீத்தேன் எடுப்பதே தவறு எனக் கூறுவது அறிவுடமையாகாது. ஆனால் அப்படி எடுக்கும்போது கிடைக்கும் பயனைக் காட்டிலும் அதனால் விளையும் பாதகங்கள் அதிகம் என்றால் எடுப்பது தவறுதான்.

புவிப் பந்தில் புதைந்து கிடக்கும் படிம எரிபொருள் அனைத்தையும் எடுத்துப் பயன்படுத்தினால் இந்தப் புவி எந்த உயிரும் வாழத் தகுதியற்ற கோளமாக மாறிவிடும் எனபதையும் மனதில் கொள்ள வேண்டும் மீத்தேன் எடுக்க வேண்டுமென்றால் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் இந்த நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். இந்த நீர் மிகவும் அதிக அளவில் வரக்கூடியது மட்டுமல்ல மிக அதிகமான உப்புகள் உள்ள உப்புநீர் ‘புரடுயூஸ்டு வாட்டர்’ என அழைக்கப்படும் இந்த கழிவு நீர் பெரும் பிரச்சனையாக மாறும்.

டெல்டா மாவட்டங்களின் ஏன் செயலாக்குகிறார்கள்?

காலங்காலமாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் போது அடித்து வரப்பட்ட மரங்கள், தாவரங்கள் படிந்து, படிந்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் மக்கி, இறுகி கட்டி தட்டி தொன்மபடிமங்களாய், திட மற்றும் திரவ வாயு வடிவங்களில் மண்ணில் படிந்திருக்கும். அதன் வாயு வடிவம்தான் மீத்தேன். சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து சுமார் 1.5 கோடி ஆண்டுகள் முன்புவரை வாழ்ந்து மடிந்த உயிர்ப்பொருட்கள்தாம் இப்படி மாற்றம் அடைந்துள்ளன. அதற்குப் பிறகு பூமிப் பந்தைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடிவிட்டபடியால், மடியும் உயிர்ப்பொருள் ஆக்சிஜனுடன் இணைந்து சாம்பல் போலாகி விடுகின்றது. எனவே 1.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரையிலோ இனிமேலோ நிலக்கரியோ, பழுப்பு நிலக்கரியோ, எண்ணெய்யோ எரிவாயுவோ உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கான சூழல் இல்லை.

நெடுவாசலில் என்ன நடக்கிறது?

நெடுவாசல் பகுதியில் உள்ள கருக்காகுறிச்சி ஊராட்சி மன்றத்தில் கருக்காகுறிச்சி, நல்லான்கொல்லை ஆகிய கிராமங்களிலும், வடகாடு ,கோட்டைக்காடு, வானக்கன்காடு ஆகிய பகுதிகளிலும் இதற்கான ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் வானக்கன்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் முறையாக பராமரிக்கப்படாததால் கச்சா எண்ணெய் வழிந்துகொண்டிருக்கிறது. இது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு என மக்களிடம் ஓஎன்ஜிசி நிறுவனம் நிலம் பெறவில்லை.???

எண்ணெய் எடுப்பதற்கு என அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், அரசு நிறுவனம் அல்லாமல் தனியார் நிறுவனமான ஜெம் இப்பணியில் ஈடுபட உள்ளது !!!

வறட்சி மிகுந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓரளவு செழிப்பான பகுதி நெடுவாசல். காவிரி ஆற்றுப் பாசனம் பொய்த்த நிலையில் ஆழ்குழாய் தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதானத் வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. தற்போது 300 முதல் 400 அடியில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களுக்கு எந்தவொரு விளக்கத்தையும் மத்திய அரசோ, ஓஎன்ஜிசி நிறுவனமோ தரவில்லை.

மேலும் விவசாயம் நலிந்து வரும் சூழலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்குவது சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலத்தை பாதிக்கும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இப்பகுதி மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. மாறாக நீராதாரத்தை மென்மேலும் சுரண்டுவதற்கும், விவசாயம் முடங்குவதற்கும், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முடக்குவதற்கும், சுற்றுச்சூழல் கேட்டிற்குமே வழிவகுக்கும்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடவேண்டியதாகும். மக்களுக்கு பாதகமானது.