Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 2

முதல் பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-1/

பணமதிப்பிழப்பினால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்:

1.   புதிய பேமண்ட் வங்கிகளின் உருவாக்கம்:

கால்பந்தாட்டப் போட்டி துவங்கிய அரைமணிநேரம் வரையும் ஒரு அணியால் எந்த கோலும் போடமுடியவில்லையாம். உடனே தனக்கு வசதியாக, எங்கேபந்து போகிறதோ, அதுதான் கோல்போஸ்ட் என்று அவ்வணி வாதிட்டதாம். அதேபோன்றுதான் ஊழலையும் கருப்புப்பணத்தையும் ஒழிப்பதற்கென்று சொல்லிவிட்டு, பின்னர் பணமில்லாப் பரிவரத்தனைக்கு மாறுவதற்காகத்தான் பணமதிப்பிழப்பு திட்டத்தைக் கொண்டுவந்தோம் என்று கோல்போஸ்டை மத்தியரசு திடீரென்று மாற்றியமைத்தது. அதனால் ஆறு புதிய மொபைல் பேமண்ட் வங்கிகள் உருவாகின. அதற்கான விளம்பரத்திற்கு மட்டுமே 6500 கோடி ரூபாயை புதிய நிறுவனங்கள் செலவு செய்திருக்கின்றன. நவம்பர் 9ஆம் தேதி பேடிஎம் நிறுவனத்தின் முழுபக்க விளம்பரத்திலும், அதற்கடுத்தநாள் ஃப்ரீ சார்ஜ் நிறுவன விளம்பரத்திலும் மோடியின் புகைப்படத்துடன் அவருக்கு நன்றி சொல்லினர். மொபைல் பண பரிவர்த்தனைகள் உயரும் என்கிற நம்பிக்கையில், ஃப்ரீ சார்ஜ் என்கிற நிறுவனத்தை ஆக்சிஸ் வங்கி வாங்கியது, மொபிகுவிக் என்கிற நிறுவனத்தின் 11% பங்குகளை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வாங்கியது.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாக மொபைல் பணப்பரிமாற்ற வங்கிகளெல்லாம் முடிந்தவரை சர்வீஸ் சார்ஜ், பரிமாற்ற சார்ஜ், அந்த சார்ஜ், இந்த சார்ஜ் என்று மக்களிடமிருந்து பணத்தை உரிஞ்சி எடுத்தன. மக்களுடைய பணத்திற்கு பாதுகாப்பு இல்லாதவகையில், யார் வேண்டுமானாலும் மக்களின் பணத்தைக் கையாளும் அனுமதியை மறைமுகமாகப் பெறமுடியும் என்பது இதுபோன்ற பணப்பரிமாற்ற வங்கிகளின் மூலம் மாறியது. பணமதிப்பிழப்பு திட்டத்தின் ஒராண்டு நிறைவேறுகிற இவ்வேளையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அளவிலும் எண்ணிக்கையிலும் மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 8க்கு முன்னரான நிலைக்கு சென்று விட்டது (நன்றி: Business Standard பத்திரிக்கை). நவம்பர் 8ஆம் தேதி இரவு வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு, அடுத்தநாள் காலையே மொபைல் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தயாராக இருந்தனர் என்பதும் பணமதிப்பிழப்பு திட்டம்குறித்து எதுவுமே தெரியாமல்தான் இதையெல்லாம் செய்தார்கள் என்பதும் நம்பும்படியாகவே இல்லை.

2.   கிராமப்புற பொருளாதார வீழ்ச்சி:

பணமதிப்பிழப்பு திட்டத்தினால், நாடுமுழுவதிலும் மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்தது. இதனால் கிராமப்புறப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 2014 மற்றும் “2015 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியிலிருந்து கொஞ்சமேனும் மீண்டுவந்துகொண்டிருக்கிற வேளையில், பணமதிப்பிழப்பு திட்டத்தினால் மீண்டும் மோசமாகிவிட்டது. 2016இல் பருவநிலை மாற்றம் ஏற்படும் தருவாயில்தான் பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டு அனைத்தியும் சீரழித்தது. விவசாயக்கூலித் தொழிலாளர்களின் கூலியும் ஆண்டிறுதியில் குறையத்துவங்கியது.” என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிமன்ஷு. விவசாயமும் அதனைச்சார்ந்த மற்றனைத்து கிராமப்புற பொருளாதாரமும் பணத்தினால்தான் செயல்படுகின்றது. வங்கிக்கணக்குகள் கூட இல்லாத மக்களிடம் பணமில்லாப்பரிவர்த்தனையெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. நாட்டின் ஜிடிபியும் வெகுவாகக் குறைந்து 5.7% அளவிற்கு வந்திருக்கிறது. அதிலும் காலாண்டில் தயாரிக்கப்படும் ஜிடிபியானது, முறைசாரா துறைகளைக் கணக்கெடுக்காததால், உண்மையான ஜிடிபி 5.7% த்தை விடவும் மிகக்குறைவாக இருக்கக்கூடும். முறைசாரா தொழில்கள் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரியளவு பாதிக்கப்பட்டவை.

3.   நலிவடைந்துவிட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்கள்:

விவசாயத்திற்கு அடுத்தபடியாக கடுமையாக பாதிக்கப்பட்டவை சிறு, குறு தொழில்களும், தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் தான். “ஒராண்டு ஆனபின்னும் இன்றளவும் எங்களால் அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை. பணமதிப்பிழப்பிற்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிட்டால், உற்பத்தியளவு 30-35 சதவீதத்திற்கு குறைந்துவிட்டது. இதற்கிடையில் ஜிஎஸ்டி வேறு நடுவில் வந்து, சிறிய உற்பத்தியாளர்களை வியாபாரப் போட்டியிலிருந்தே வெளியே துரத்துகிறது” என்கிறார் இராஜஸ்தானின் வியாபார மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் இணைத்தலைவரான அருண் அகர்வால்.

இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறைகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையும் ஒன்று. 2013இல் எடுக்கப்பட்ட 6வது பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 5.85 கோடி சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளில் 13.1 கோடி தொழிலாளர்கள் பணியிலிருந்தனர்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) நடத்திய ஆய்வில், பணமதிப்பிழப்புக்குப் பின்னர் வேலைசெய்யும் அல்லது தீவிரமாக வேலைதேடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை (labour participation rate – LPR) வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவைப் போன்ற அதிக மக்கள்தொகையுள்ள நாட்டில், ஒரு சதவிகிதம் குறைந்தாலே அது அயாயகரமான நிலையை எட்டியிருக்கிறது என்று பொருள். கடந்த ஆண்டு ஜனவரி-அக்டோபர் மாதங்களில் 46.9% ஆக இருந்த LPR, பணமதிப்பிழப்பை அறிவித்தவுடன் 44.8% ஆக குறைந்தது. அது மேலும் குறைந்து இந்த ஆண்டின் ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் 44.3% என ஆனது. கடந்த ஆண்டுகளில் இதே மாதங்களில் இருந்ததைவிடவும் மிகக்குறைவான LPR ஆகும்.

LPRஐத் தாண்டி, வேலையிழப்பும் அதிகரித்திருக்கிறது. இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் மட்டுமே சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் ஏரத்தாழ 20 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர்.

“ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் மட்டும் 15 இலட்சம் தொழிலாளர்களும், மே-ஆகஸ்ட் மாதங்களில் மேலும் 5 இலட்சம் தொழிலாளர்களும் வேலையிழந்திருக்கின்றனர். ஆகமொத்தம் 20 இலட்சம் பேருக்கு புதிதாக வேலையில்லாமல் போயிருக்கிறது”

என்கிறார் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான மகேஷ் வியாஸ்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் கடன்வாங்கும் சக்தியும் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், பணமதிப்பிழப்பிற்குப் பின்னர் அத்தொழில்துறை வளரவேயில்லை என்றும் மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. 2015 நவம்பரில் 4.85% ஆக இருந்தது 2016 நவம்பரில் 3.35% ஆகவும், 2015 டிசம்பரில் 4.46% ஆக இருந்தது 2016 டிசம்பரில் 1.7% ஆகவும் அதளபாதாளத்திற்கு கொண்டுபோயிருக்கிறது.

நாட்டின் அதிகமான மக்களுக்கு வேலைதரும் சிறு, குறு, நடுத்தர தொழிற்துரையை நலிவடையச் செய்து, வேலைவாய்ப்பை காலிசெய்து, அத்தகைய தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்தமுடியாத நிலைக்குக் கொண்டுசென்ற பெருமை பணமதிப்பிழப்புத் திட்டத்தையே சேரும்.

4.   விசைகுறைந்துபோன விசைத்தறி தொழில்:

இந்தியாவிலிருக்கும் 25 இலட்சம் விசைத்தறிகளில், நான்கில் ஒரு பங்கு விசைத்தறிகள் மகாராஷ்டிராவிலிருக்கும் பிவந்தி என்கிற நகரில் தான் இருக்கின்றன. பெரும்பாலான விசைத்தறி உரிமையாளர்கள் சராசரியாக 12-24 தறிகளை வைத்துக்கொண்டு தொழில்நடத்திவருகின்றனர். அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களில் 85% பேர், உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வேலைக்காக தற்காலிகமாக இடம்பெயர்ந்தவர்கள்தான்.

பணமதிப்பிழப்புத் திட்டத்தினால், பிவந்தியின் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுவந்த 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். வேலையில்லாததால் தற்காலிகமாக தங்கியிருந்த தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. பணமதிப்பிழப்புக்குப் பின்னர், பிவந்தியில் இயங்கிவந்த விசைத்தறி தொழிற்சாலைகளில் பாதிக்கும் மேல் முழுவதுமாக மூடப்பட்டன. அதனால் மேலும் பலர் வேறு வேலையைத் தேடி இடம்பெயரத் துவங்கினர். மீண்டுவரமுடியாத நிலைக்கு பிவந்தியின் விசைத்தறி தொழில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

(பணமதிப்பிழப்பினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலதுறைகளை அடுத்த பகுதியில் காணலாம்)

தொடரும்…

-இ.பா.சிந்தன்

About இ.பா.சிந்தன்