பிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…

Sachin Tendulkar

இந்திய விளையாட்டுக் களத்தில், அதிலும் கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் நிச்சயமாக ஒரு ஒளிவீசும் ரத்தினம் தான். தனது ஆட்டமுறைக்கு என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிற, இந்தியாவில் கோடிக் கணக்கானவர்களை பக்தர்களாகவே பெற்றிருக்கிறவர் அவர்.

‘பாரத ரத்னா’ விருதினை அரசு அறிவிக்காமலே விட்டிருந்தாலும் அவருக்கு அந்த அன்பை விடவும் பெரிய விருது எதுவும் இருக்கப் போவதில்லை. இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருப்பதில், அவரது திறமையும் நுட்பமும் மிக்க பங்களிப்பு தலையாய ஒன்று. அதனால் தான், ஓய்வு பெறுவதற்கு முந்தைய தனது கடைசி ஆட்டத்தின் முடிவில், அவ்வளவு பெரும் மக்கள் திரள் முன்னிலையில் அவர் கண்ணீருடன் விடைபெற்ற போது, அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருமே உணர்ச்சி வசப்பட்டார்கள்.

பொதுவாக இப்படிப்பட்ட விருதுகள் ஒருவர் ஓய்ந்து ஒதுங்கி மறக்கப்பட்ட பிறகுதான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சச்சின் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறபோதே, துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறபோதே, இளமை வயதின் விளிம்பில் நிற்கிறபோதே இந்த விருது வழங்கப்படுகிறது. அதுவும், அவர் அவ்வாறு ஓய்வு பெற்ற நாளிலேயே பிரதமர் இதை அறிவிக்கிறார்.

இது நம் நாட்டிற்கு ஒரு மாறுபட்ட அனுபவம்தான். ஆயினும், நாட்டின் மிக உயர்ந்த விருது சச்சினுக்கு வழங்கப்படுவதில் உள்ள சில உறுத்தல்களைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. முதலில் சொல்ல வேண்டியது, இவரோடு சேர்த்து ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டுள்ள மூத்த அறிவியலாளர் சி.என்.ஆர். ராவ் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது.

திட வேதியல் துறை அறிவியலாளரான அவர் இங்கே அடிப்படை வேதியியல் கல்வியைக் கட்டிக்காப்பதில் முன்னின்றவர். அவரது ஆராய்ச்சி நூல்களும், பல ஆய்வு நிறுவனங்களை உருவாக்கிய முயற்சிகளும் நாட்டின் அறிவியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.

இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவருக்கு மட்டுமேயாக இப்போது இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அதையொட்டி அவரைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் நாடு முழுவதும் இப்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால், சச்சின் கழுத்தில் போடப்படும் மாலைகளின் குவியலுக்கு அப்பால் அறிவியலாளரின் சிறப்பு ஓரங்கட்டப்படுவது ஆரோக்கியமானதுதானா? சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கைகள் எழுந்தன.

அடுத்தடுத்து விரைவாக, விளையாட்டுத் துறையினருக்கும் வழங்கத்தக்க வகையில் பாரத ரத்னா விதிகள் திருத்தப்பட்டதிலும், அவர் ஓய்வு பெறுவதையொட்டி உருவான உணர்ச்சிமயமான சூழலுக்காகக் காத்திருந்து அறிவிக்கப்பட்டதிலும் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழவே செய்கிறது.

அரசியல் உள்நோக்கம்தான் இருக்கிறது என்று நேரடியாகக் கூற முடியாவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்றவருக்கு இந்த விருதை அளித்ததன் மூலம் அந்தக் கோடிக்கணக்கானோரின் ஆதரவைத் தன் பக்கம் இழுக்க முடியாதா என்ற உள்நோக்கம் இல்லவே இல்லை என்றும் கூறிவிட முடியாது. இப்படிப்பட்ட உத்திகளில் காங்கிரசார் கரைகண்டவர்களாயிற்றே! ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான சேவைகள் என்ற அடிப்படையில் இல்லாமல், தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டும் நாட்டின் உயர்ந்த விருதை வழங்குவது பற்றிய வினாக்களும் புறப்படத்தான் செய்கின்றன.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சச்சின் அங்கே மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறாரா? விளையாட்டுத் துறையில் மலிந்திருக்கிற பிரச்சனைகள் பற்றியோ, நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பற்றியோ கருத்துக் கூறியிருக்கிறாரா? நாடாளுமன்றத்திற்கு வெளியே, ஐபிஎல் தில்லுமுல்லுகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் இதர சமூக நிகழ்ச்சிப்போக்குகளிலும் எந்த அளவுக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்? 1992ல் அயோத்தி அக்கிரமத்தைத் தொடர்ந்து மும்பையில் மதவெறிக் கும்பல் சூலாயுதங்களோடு தெருவில் இறங்கியபோது, சுனில் கவாஸ்கர் அவர்களைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களுக்கு அரணாக நின்றது நினைவுக்கு வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக விளம்பரச் சரக்காகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர் சச்சின். விளையாட்டின் மூலமாகவும் விளம்பரங்களின் மூலமாகவும் கோடிக் கணக்கில் பணம் ஈட்டினார். அதெல்லாம் அவரது திறமைக்கும் புகழுக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவரை அனைத்து இளைஞர்களுக்குமான முன்னுதாரணமாகக் கொள்ள முடியுமா? தலையிடத் துடிக்கும் சமூக அக்கறையோ தட்டிக் கேட்கும் அரசியல் விழிப்புணர்வோ இல்லாத தலைமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே கார்ப்பரேட் பிரம்மாக்களின் திட்டம்.

அதைக் கட்டமைக்கிற வேலைக்கு இந்த நட்சத்திரமும் பயன்படுகிறாரே என்ற ஆதங்கம், சமுதாயத்தை அரசியல்படுத்த விரும்புகிற எவருக்கும் ஏற்படவே செய்யும்.கிரிக்கெட் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு, நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளும் தேசிய விளையாட்டும் கூட கடைக்கோடிக்கு ஒதுக்கப்பட்டதிலும், ஒற்றை ரசனையில் சமுதாயத்தை வார்க்கிற உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கனவான்களின் செயல்திட்டம் இருக்கிறது.

தெரிந்தோ தெரியாமலோ அதற்கும் சச்சின் போன்றோர் உதவுகிறார்கள்.இதைச் சொல்வதால், சச்சின் என்ற கிரிக்கெட் நட்சத்திரத்தின் தனித்துவமான அசத்தல் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. விளையாட்டுத் துறை சார்ந்த அந்தச் சாதனைகளுக்கான உயர்ந்த அங்கீகாரம், இப்படிப்பட்ட விருதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

ஏன், விளையாட்டுத் துறையைப் பிடித்துள்ள பல்வேறு நோய்களிலிருந்து அதனை மீட்பதற்கான உயர் பொறுப்புகளை, அதற்கான வயது இருக்கிறபோதே வழங்கலாமே? அது அவரைப் பெருமைப்படுத்தியதாகவும் இருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிசிசிஐ) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளை மீட்கலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துமே… அணியில் விளையாடிக் கொண்டிருந்தவர் என்ற முறையில் பல்வேறு பிரச்சனைகளில் அவரது மவுனம் புரிந்து கொள்ளத் தக்கதுதான்.

இனியேனும் சமுதாயத்தைக் கண்கொண்டு பார்ப்பாரா? மனம் திறந்து பேசுவாரா? மாற்ற முயல்வோருக்குத் தோள் கொடுப்பாரா? அப்படியெல்லாம் செய்வாரானால் ரத்தினம் பல மடங்கு ஒளி வீசும். பாரதம் பார்க்கத்தான் போகிறது…

* பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பட்டியல்

* நன்றி – தீக்கதிர் நாளிதழ்

About அ, குமரேசன்

 • தூயவன் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் ஏற்புடையவை. கட்டுரை ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 • M.venkatasubramanian

  சச்சின் பாரத ரத்னா விவகாரத்தில் நிதானம் தேவை. இன்றைய இளைஞர்களை வென்றெடுக்க இது உதவுமா? கண்டிப்பாக அவரது பங்களிப்பை பாராட்டலாம்.

  • லீப்நெக்ட்

   சச்சின் இன்றைய இளைஞர்களுக்கு‍ எந்த விதத்தில் உத்வேக சக்தியாக இருக்கிறார் என்று‍ கூறுங்கள் பார்‌ப்போம்.

   சச்சின் என்பவர் தன்னை அரசியலுக்கு‍ அப்பாற்பட்டவராக காட்டிக் கொண்டிருக்கலாம்.. ஆனால், அவரது‍ உழைப்பு யாருக்கு‍ நலன் சேர்க்க வேண்டுமோ அவர்களுக்கு‍ சேவகம் செய்தது, செய்து‍ கொண்டிருக்கிறது, செய்யும்…. உண்மையில் யாரும் அரசியலுக்கு‍ அப்பாற்பட்டவர்கள் கிடையாது‍ என்பது‍ உண்மை..

 • V.Thuyavan

  இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் தங்கள் நலனுக்காக எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள் என்பது உண்மைதான். கார்ப்பரேட், காங்கிரஸ் அரசியலை நோக்கி நாம் கை நீட்ட வேண்டும். ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில் சச்சினை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சச்சினை நோக்கி ஒரு கூர்மையான அரசியல் உணர்வுபடைத்த மனிதராகச் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு விமர்சனங்களை முன்வைப்பது, நமது கூடுதல் எதிர்பார்ப்பாக எனக்குப்படுகிறது. இந்த அளவுகோல்படி யாரை வேண்டுமானாலும் நாம் விமர்சிக்க முடியும்.
  மராட்டிய நவநிர்மாண் சேனா மும்பையில் வெறியாட்டம் நடத்தி பிற மாநிலத்தவர் வெளியேற வேண்டும், மும்மை மராத்தியர்களுக்கே என்று வெறி முழக்கமிட்டபோது, அதற்கு எதிராக “மும்பை இந்தியர் அனைவருக்குமானது” என்று சச்சின் சொன்னதை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.
  மற்றொரு விசயம் சி.என்.ஆர்.ராவுக்கு விருது கொடுத்ததையும், அறிவியல் நோக்கோடு அரசு கொடுத்தது என்று சொல்ல முடியுமா? காங்கிரஸின் கை தேர்ந்த அரசியல் உள்நோக்கம் அதிலும் இருக்காதா? எனவே சச்சினை நோக்கி சுட்டுவதாக மட்டும் விமர்சனம் இருப்பது ஏனோ அந்நியப்படுத்துவதாகப்படுகிறது.

 • Sathish

  When central govt. announced ‘Bharatha Ratna’ for Sachin Tendulkar and Roa, now many of different people of different background is recommending to give ‘Bharatha Ratna’. Indian Hockey association asked to give award to Late. Dyanchand and some BJP people asking to give award to Former prime minister of India Atul Bihari Vajpayee.