அன்பின் கொடி போதாது அருவிப் பொன்மகளே!

‘பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே’ என்கிறாள் அருவி. ஆனால் அருவிக்கு இருக்கும் பரந்த மனப்பான்மை இவ்வுலகில் எல்லா குற்றங்களையும் சமூக அவலங்களையும் கையாளப் போதுமானதா? இந்த உலகே அன்பால் கட்டப்பட்டது என்பதும், மனிதர்கள் எல்லோரும் தமது சமூக நிலையைத் தாண்டி அடியாழத்திலே அன்பால் கட்டுண்டவர்கள் என்பதும் சரியா?

ஒரு பெண் அவளறியாமல் அடைந்த நோய்க்கு நிபந்தனையின்றி வெளியே துரத்தும் தாய் தகப்பன், அடைக்கலமாக வந்த இடத்தில் மகள் வயதிருப்பவளை வல்லுறவுக்கு உட்படுத்தும் ஒரு கிழப் பன்றி, உபன்யாசம் எனும் பெயரில் அறிவீனத்தைப் பரப்பி வயிருவளர்க்கும் ஒரு சொறிநாய், தொழிலாளர்களின் வறுமையை ஈவிரக்கமின்றி இச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பிணந்தின்னி. இவர்கள் எல்லோரும் வருந்துவதால் தூய்மையாகி விடலாம் என்றால் வரலாற்றில் நெடுங்காலம் முன்பே மதங்கள் சொர்க்க வாசலைத் திறந்து வைத்துக் காத்திருக்கின்றனவே? இவ்வளவு காலம் ஏன் அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கிறோம்? ஏன் வெவ்வேறு வழிகளில் அவற்றைக் களைய முயன்று கொண்டிருக்கிறோம்?

சமூகத் தீமைகளுக்கும், கீழ்மைகளுக்கும், குற்றங்களுக்கும் அதை இழைத்த தனிமனிதர்களைப் பொறுப்பாக முடியாது என்று நாம் கூறுவது அவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் சமூகக் கட்டமைப்பு நம் கண்ணிலிருந்து மறைந்து போய்விடக்கூடாது, அதை மாற்றாமல் தனிமனிதர்களை தண்டிப்பது மட்டும் பயனளிக்காது எனும் அர்த்தத்தில் தானே தவிர, அருவி சொல்வது போல் அறவியல் பார்வையில் அல்ல.

இப்போது மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். இந்த உலகே அன்பால் கட்டப்பட்டது என்பதும், மனிதர்கள் எல்லோரும் தமது சமூக நிலையைத் தாண்டி அடியாழத்திலே அன்பால் கட்டுண்டவர்கள் என்பதும் சரியா? இல்லை. அது நமது ஆழ்மன நல்விருப்பம். வெற்றுக் கற்பனாவாதம். புறவுலகம் ஒருபடித்தானதல்ல. பல்வேறு பிரிவுகளாய்ப் சிதறிக்கிடக்கும் ஒரு கலவையான தொகுப்பு என்பதை உணர்ந்துகொண்டு திட்டவட்டமான சிந்தனையோடு அணுகுவதே இலக்கை அடைய உதவும். அப்படியான ஆழமான தேடல் இல்லாத மேலோட்டமான புரிதல் காரணமாகத்தான் திருநங்கைகளை பிரதான பாத்திரமாக வைத்தாலும் பொது உளவியலில் இருந்து விலகாத மலினமான பகடிகள் படத்தில் இடம்பெறுகிறது. துப்பாக்கி வைத்திருக்கும் வரை அருவியிடம் எவனும் நெருங்கி வர மாட்டான், அவள் நியாயம் கேட்கப்படாது, பின்னர் அன்பென்னும் பேராயுதம் கொண்டு அவள் அனைவர் மனசாட்சியையும் திறந்து விடுகிறாள் என்பது போன்ற, ஏற்கனவே அடித்துத் துவைத்துக் காலாவதியாகிப்போன கருத்தாக்கங்கள் படத்தின் ஆதாரமான கருத்தாகத் திகழ முடிகிறது. அப்படியெனில், அன்பு என்பது வெற்றுப் பிதற்றல் எனும் முடிவுக்கு வர வேண்டுமா? வேண்டாம். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்போம். இவ்வுலகுக்கு அன்பை போதித்த அல்லது போதிப்பது போன்று பாசாங்கு செய்த எவராலும் இங்கே நிரந்தரமான, நீடித்த நல்வாழ்வை அனைவருக்கும் வழங்கும் வழிவகைகளை கண்டு சொல்ல இயலவில்லை. அப்படியொரு மாற்றத்தை படைக்க விரும்பி அது நோக்கி ஒரு சிறு அடியேனும் நகர்ந்த எவரும் அன்பை முதன்மைக் கைக்கருவியாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் தான் உலகில் எல்லா உயிர்களையும் மெய்யாகவே அன்பால் ஆரத்தழுவிக் கொண்டவர்கள். சுருக்கமான சில ஒப்பீடுகளை சொல்ல வேண்டுமென்றால் தெரசாவும் சே குவேராவும். புத்தரும் மார்க்ஸும்.

படத்தின் முதன்மையான பலமான அம்சங்கள் அதன் குறைகளை மூழ்கடித்து ஒரு குழப்பமான மயக்க நிலைக்கு நம்மைக் கொண்டு சென்று விடுகின்றன. பாத்திர வடிவமைப்பில் இருக்கும் கச்சிதம், சம்பவங்களை அதன் நேரவரிசையில் அல்லாமல் கலைத்துப் போடுவதன் மூலம் சுவாரசியத்தைக் கூட்டுகின்ற, பார்வையாளனை முழுவதுமாக நம்புகின்ற கதைசொல்லும் முறை (Non-linear என்பர்), இருந்ததா இல்லையா என்று தெரியாத வகையில் துருத்திக்கொண்டு நிற்காத ஒரு ஆர்ப்பாட்டமான இசை, சுவையான பல காட்சிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப்பெண். இன்னும் எக்கச்சக்கமான நேர்மறை அம்சங்களுக்கு மத்தியில், பாத்திரங்கள் கதைக்குள்ளாக பயணிக்கையில் சில சட்டென அவற்றின் நம்பகத்தன்மையை இழந்து விடுதல், படைப்பாற்றலுக்குப் பஞ்சமில்லாத ஒரு குழு மீட்பு நடவடிக்கை, விசாரணை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கும் விதம், படம் நமக்கு அறிவிக்க.விரும்பும் செய்தி, இன்னும் சில உறுத்தினாலும் நாம் முன்னர் பட்டியலிட்ட நேர்மறைகள் அவற்றை விழுங்கிவிடுகின்றன. எனவே ஒரு ‘ஃபீல் குட் மூவி’ என்ற தோற்றம் ஏற்பட்டுப் போகிறது.

ஆக, அருவி புதிய முயற்சியா என்றால் தொழில்நுட்ப வகையில் ஆம், உள்ளடக்கம் எனும் வகையில் இல்லை என்பதே என் கருத்து. இருப்பினும் இப்படம் தமிழ் சினிமாத்துறையில் புதிதாக உருவாக்கி வளர்ந்துவரும் நேர்மறையான மாற்றங்களின் அறிகுறிகளில் ஒன்று. அப்பாதையில் மேலும் ஒரு அடி முன்னேற்றம். கருத்தியல் தளத்தில் இதுபோன்றதொரு நல்ல விவாதத்தை உருவாக்கத் தகுதியான, அழகியல் அம்சங்களிலிலும், தொழில்நுட்ப வகையிலும் அபத்தமான பிழைகளில்லாத, ஒரு அற்புதமான திரை அனுபவத்தை அளிக்கும் படைப்பு. அதற்காகவே அருவியை ஆரத்தழுவி வரவேற்போம். அதோடு அன்பு, மனிதாபிமானம் போன்ற மேலோட்டமான சார்புடைய கருத்தாக்கங்கள், ஃபிராய்டிய, இருத்தலியக் கண்ணோட்டங்களிலிருந்து விடுவித்துக்கொண்டு உண்மைக்கு நெருக்கமாக வர, நேரடியாகச் சொன்னால், மார்க்ஸை நெருங்கி வர படைப்பாளிகளைக் கோருவோம்.

பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது, அவர்கள் சமூக விலக்கம் செய்யப்படுவது தீவிரமான விவாதப் பொருளாகி வந்திருக்கும் இச்சூழலில் அருவி முன்வைக்க விரும்பும் முன்னுதாரணம் ஆபத்தானது. அருவி நல்லவள், மேன்மையானவள். ஆகையால் தன்னைத் தீவிரமான துன்பதுக்குள்ளாகிய எல்லோரையும் மன்னிப்பாள். ஆனால் அருவிக்கே கூட நாம் அவ்வாறு வழிகாட்ட முடியாது. ஒரு பெண் தனக்கிழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும், தன்னை வருத்திய எவரையும் சமூகத்தின் முன் அம்பலப்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றே நாம் வழிகாட்ட முடியும். உள்ளபடியே அது தான் அன்பு செய்தல். தன் போல பாதிக்கப்பட வாய்ப்புள்ள அனைவர் மீதும் அன்பு செய்தல். அருவி செய்தது அதுவல்ல.

– இராகேஷ்.

About ஆசிரியர்குழு‍ மாற்று

  • Stalin

    ஃபிராய்டியம்,இருத்தலியம் குறித்தான கட்டுரைகள் எதுவும் இத்தளத்தில் படித்ததாக நினைவில்லை.இக்கட்டுரையிலும் எங்கும் அதனை தொட்டுப் பேசவில்லை. குறைந்தது அக்கண்ணோட்டங்களிலிருந்து விடுபட எதாவது பரிந்துரைகளாவது கொடுங்கள் தோழர்?!